“நான் உன் கடவுளைத் தின்பவன்” – நூல் அறிமுகம்
அதிகாரத்தின் வேர்களை அசைத்துப் பார்க்கும் அறச்சீற்றம்
சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் கவிதை என்பது வெறும் அழகியல் சார்ந்த வெளிப்பாடாக மட்டும் நின்று விடாமல், அது ஒரு கலகக் கருவியாகவும், வரலாற்றின் சாட்சியமாகவும் மாற வேண்டியத் தேவை இருக்கிறது. அந்தத் தேவையை மிகச் சரியாகப் பூர்த்தி செய்திருக்கிறது டாக்டர் சாக்ய ஜெ மோஹனின் “நான் உன் கடவுளைத் தின்பவன்” கவிதைத் தொகுப்பு. இந்நூல் பெயரிலேயே ஒரு பெரும் அதிர்வையும், கேள்வியையும் முன் வைக்கிறது.
“நான் உன் கடவுளைத் தின்பவன்” என்பது வெறும் ஆவேசச்சொல் அல்ல; அது ஆயிரக்கணக்கான ஆண்டுகால உணவுப் பண்பாட்டையும், அதன் மீது திணிக்கப்பட்ட புனிதங்களையும், அந்தப் புனிதங்களின் பெயரால் நடத்தப்படும் ஒடுக்கு முறைகளையும் தோலுரித்துக் காட்டும் ஒரு தத்துவார்த்த முழக்கம் ஆகும்.
புத்தரது போதனைகளையும், அவரது தம்மத்தையும் அடியொற்றி, அநீதிக்கு எதிராக மௌனம் காப்பது அறம் அல்ல என்பதையும் இந்நூல் உரக்கச் சொல்கிறது.
இந்நூலில் உள்ள பெரும்பாலான கவிதைகள் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கின்றன;குறிப்பாக ஆரிய திராவிட முரண்களை, அதன் பண்பாட்டுக் கூறுகளை கட்டுடைத்து புதிய திசையை நோக்கி கை நீட்டுகிறது. வரலாற்றை வெறும் தகவலாக மட்டும் பார்க்காமல் ஒடுக்குமுறை நிகழ்ந்த இடங்களைத் தேடி நம்மை விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றன.
ஹரப்பா நாகரிகம் முதல் சமகால மாட்டு அரசியல் வரை ஆரிய ஊடுருவல்களையும்,அதனால் ஏற்பட்ட சமூகச் சிதைவுகளையும் கவிதைகளைக் கொண்டு வரலாற்று ரீதியாக அணுகுகின்றன.
ஹரப்பாவின் நகரநாகரீத்திற்குள் ஆரியர்களின் ஊடுருவல்களை “கள்ளர் ஊடுருவல்” என நூலாசிரியர் உறுதியாகப் பதிவு செய்கிறார்.
ரிக்வேத காலத்து விருந்தோம்பல் முறைகளை சுட்டிக்காட்டி,வேதகால விருந்தோம்பலில் “இளம் பசுக்கறி” முக்கிய உணவாக இருந்ததையும், இந்திரன் மாடு திருடுவதில் கெட்டிக்காரன் என்றும்,ஆரியர் வருகைக்குப் பின்பே மாட்டுக்கறி, இந்திய உணவு பண்பாட்டில் கலந்தது என்றும் உறுதியாக வாதிடுகிறார்.
மேலும் இன்று மாட்டிறைச்சியின் பெயரால் நடத்தப்படும் கும்பல் கொலைகளின் அரசியலையும் இந் நூலின் ஆசிரியர் கடுமையாகச் சாடுகிறார்.
குஜராத் மாநிலத்தின் உன்னா சம்பவம், தஞ்சையின் கீழவெண்மணியில் நிகழ்த்தப்பட்ட பெருந்துயரம் போன்ற பல்வேறு வரலாற்று வடுக்களை பதிவு செய்யும் கவிதைகள், இன்றளவும் தொடரும் ஜாதிய ஆணவத்தையும், அரச பயங்கரவாதத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
உடல் உறுப்புகளைக் கொண்டு வர்ணங்களை பிரித்த மனுவின் கோட்பாட்டை “ஆரிய பிகாசோ ” என்னும் கவிதையின் மூலம் கடுமையாகச் சாடுகிறார். குந்தியின் “நியோக”முறையை ஆரிய பண்பாட்டின் பலர்பால் உறவு முறையாகவும்,பெண்ணின் சுதந்திரத்தை யோனி விதிகளை உடைத்த ஒன்றாகவும் ஆசிரியர் காண்கிறார். மல்லிகை எனும் பாத்திரம் வழியாக வர்ணப் பாகுபாடுகளைக் கடந்து புத்த அறத்தை தழுவும் பெண்ணின் பயணத்தை “அறச்செல்வி வாழியவே” கவிதை காட்டுகிறது.
குந்தி, மல்லிகை போன்ற பாத்திரங்களின் ஊடாக பெண்களின் அதிகாரத்தையும், அவர்களின் மீதான வர்ணாசிரம கட்டுப்பாடுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்கிறது. இந்த கவிதை தொகுப்பானது சனாதனம், பாசிசம் மற்றும் கார்ப்பரேட் மதவாதம் போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளை மக்களுக்கு அடையாளம் காட்டி அவற்றுக்கு எதிராக ஒரு “அறிவாயுதத்தை” ஏந்த நம்மை வெகுவாக தூண்டுகிறது.
அமெரிக்க கருப்பு இன மக்களின் அடிமைமுறை வரலாறு, ஹிட்லரின் நாசிசக் கொடுமைகளும் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. ஒரு யூதப் பெண்ணை முத்தமிட்டதற்காக ஜெர்மானிய” ஆரியப்படை வீரனுக்கு மரண தண்டனை விதிக்கும் நாசிச விதியைச் சுட்டிக்காட்டி இனத்தூய்மை வாதத்தின் கொடூரத்தையும் தோலுரித்துக்காட்டுகிறது.
டாக்டர் சாக்ய ஜெ மோஹனின் ஒவ்வொரு கவிதை வரிகளும் மிகவும் கூர்மை கொண்ட பேராயுதமாக உள்ளது; அவை அதிகாரத்தின் பீடங்களை நோக்கி எவ்வித சமரசமும் இல்லாது நேராகப் பாய்கின்றன. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு வாசகனின் கைகளிலும் இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஆவணமாக இந்நூல் திகழ்கிறது.
மானுடத்தின் மீதான அன்பும், அநீதிக்கு எதிரான அறச்சீற்றமும் கொண்ட “நான் உன் கடவுளைத் தின்பவன்” நூல் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு புதிய விவாதத்தை தொடங்கும் என்பதில் ஐயமில்லை.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | நான் உன் கடவுளைத் தின்பவன் |
| ஆசிரியர்: | டாக்டர் சாக்ய ஜெ மோஹன் |
| வெளியீடு: | வேரல் புக்ஸ் |
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: | ![]() வடலூர் ஆதிரை கவிஞர், திரைப்பட இயக்குநர் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


