புத்தகத் தலைப்பு:- ஸலாம் அலைக்
ஆசிரியர் :- ஷோபா சக்தி
நூல் வெளியீடு :- கருப்புப் பிரதிகள்
பக்கங்கள் : – 304
விலை. 450 /-
வணக்கம் நண்பர்களே,
ஆசிரியர் ஷோபா சக்தி தற்கால படைப்புலகில் நன்கு அறியப்பட்டவர். அவரது படைப்புகள் இலங்கையில் நடந்த போர்க்கால சூழ்நிலையின் அடிப்படையில், புனைவு நாவல்கள், கதைகள், கட்டுரைகள், போன்ற நூல்களை நமக்குத் தந்தவண்ணம் இருப்பது பாராட்டத்தக்கது. அவரது நூல்களுக்கு அப்பப்போ கடுமையான விமர்சனங்களும் வருவதுண்டு. உண்மையைப் பேசுபவன் எப்போதுமே எதிராளிதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமைகள் , வேற்றுமைகள் உருவாகிவருவதையும் நாம் அவதானிக்கலாம்.
படைப்புகளில் எல்லோராலும் அறியப்பட்ட மிகச் சிறந்த எழுத்தாளர்களுக்கிடையேயும் இத்தகைய தாக்கங்கள் இருந்ததையும், இப்போதும் கூட அவற்றைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. தனிமனித சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் வேண்டும். போர்க்கால நிகழ்ச்சிகளையே மீண்டும் மீண்டும் எழுதுகிறார் ஷோபா என்ற குற்றச்சாட்டைப் பல இடங்களில் (விமர்சனங்களில்) வாசிக்கக்கூடியதாக உள்ளது. தனது எண்ணங்களையும், கண்ட காட்சிகளையும், கேட்ட வாய்மொழிச் செய்திகளையும் மிகத் தத்ரூபமாகக் கையாள்வதில் ஷோபா சக்தி வளர்ந்துகொண்டே இருப்பது அவரது நாவல்களில் தெரிவதை யாராலும் மறுக்க முடியாது.
இந்நூல் இரண்டுவிதமான கதைக்களமாகவே (என்னைப் பொறுத்தவரை) தோன்றுகின்றது. அதாவது போர்க்காலத்தில் ஏற்பட்ட அவலங்கள், கொலைகள், இடப்பெயர்வுகள், வறுமை, உயிருடன் போராட்டம், பயம், அடுத்தகட்ட வாழ்வின் நகர்வுகள், உடமைகளையும், உறவுகளையும் இழந்த நிலையில் துடிப்புகள், இப்படிப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை, அல்லைப்பிட்டியிலிருந்து கொழும்பு வழியாகத் தாய்லாந்து வரைக்கும், பின்னர் அங்கிருந்து அகதிகள் என்ற முத்திரையுடன் (பிரான்சுக்குப் போகும்வரை) கதையை நகர்த்துகிறார்.
அடுத்து அவரது ஐரோப்பிய வாழ்க்கை அங்கு ஏற்படும் மொழி, கலாச்சார, மத, பண்பாட்டு மாற்றங்கள், அதன் நிறைவான மற்றும் எதிர்மறை வாழ்க்கை முறையினை ஒருவன் எப்படி எதிர்கொள்கிறான், அதிலிருந்து விடுபடுகிறானா, அல்லது சார்ந்து போகிறானா என்பதைக் கருத்தில் கொண்டு தனது படைப்பை நகர்த்துகிறார் ஆசிரியர் ஷோபா சக்தி.
கதைமாந்தர்களை நகர்த்தும் போது நாமும் அவர்களுடன் பயணிப்பதாகவே நான் உணர்கிறேன். அவரது படைப்புகளில் நகைச்சுவை உணர்வுகளை பார்க்கலாம். அதுவும் இலங்கை வட, கிழக்கு மாகாண பேச்சுவழக்கு அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் வெளிநாடுகளில் வாழத் தொடங்கியபோது அவர்களை அறியாமலே அந்தந்த நாட்டு மொழி மோகம் கவ்விக் கொண்டதனை யாரும் மறுக்க முடியாது. எந்த ஒரு விடயத்தையும் நாம் தொடர்ந்து செய்யாவிட்டால் அவை நாளடைவில் மறைவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. இதே போலத்தான் மொழி கூட அழியும் அபாயம் உண்டு. (பிறமொழிகளின் ஆதிக்கம்) அதனை நாவல் வழியாக மீட்டெடுக்கிறார் ஆசிரியர். அதனை ஒவ்வொருவரது அனுபவங்கள் கண்டிப்பாச் சொல்லும் என்பதனை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இவற்றை நினைவு படுத்தும் பல வரிகளை ஆசிரியர் ஷோபா சக்தியின் படைப்புகளில் காணலாம். இதில் வரும் **உமையாளை**ப்போல் பாத்திரத்தை நம் கண்முன்னேயும் காணலாம். ஆனால் அதனை அதிகமானோர் மறைக்கவே நினைப்பார்கள். ஆனால் ஷோபா சக்தி அதனை சமூகத்திலிருந்து வெளியே இழுத்து வருகிறார்.
கதைமாந்தர்களில் **ஜெபானந்தன்** தன் உயிரைப் பணயம் வைத்தே தனது இரகசிய மறைவான பிரயணங்களைச் செய்வது போல் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் தாய்நாடு விட்டு ஓடி வந்ததை அவர் மூலம் ஆசிரியர் ஷோபா அவர்கள் கோடுபோட்டுக் காட்டுகிறார். ஷோபா சக்தியின் இப்படைப்பு ஒரு உதாரணம் என்றே சொல்லலாம். இதுபோல் வெளியே வராத பல ஜெபானந்தன்கள் எங்கள் கண்களிலிருந்து மறந்திருக்கலாம், ஆனால் ஒவ்வொரு படைப்பிலும் (நாவல்) ஏதோ ஒரு விதத்தில் அல்லது உருவத்தில் பல படைப்பாளிகள் மூலம் அச்சடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதனையே விமர்சகர்கள், ஒன்றையே மீண்டும் மீண்டும் சொல்வதாகக் குழம்புகிறார்கள்.
இங்கே திருமணத்தின் பின் மகனுடன் அல்லல்படும் தகப்பனார் நிலமையைவிட மிக மோசமான காட்சிகளை நாம் ஐரோப்பாவில் காணலாம்.
தாய்லாந்தில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் வாய்மொழியாகக் கேட்டிருப்போம், ஆனால் அனுபவத்தில் வரும்போது அதன் இடர்பாடுகளையும், அத்துடன் தமிழர்களைப் போல் வேறுபலர் (ஆசியாவுக்குள்ளேயே அகதிகள் வாழ்க்கை) தங்கள் மறைவு வாழ்க்கையை இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதை இந்நூல் மூலமாகத் தருகிறார் ஆசிரியர்.
குறிப்பாக, ஷோபா சக்தியின் ஏனைய நாவல்களுடன் இதனை ஒப்பிட்டுப்பார்க்கவில்லை. **ஸலாம் அலைக் ** கை மட்டுமே பார்க்கிறேன். இந்த நாவலின் தலைப்புக்கூட மொழியில் ஏற்பட்ட ஒரு சிறு அசைவு என்றே விளக்குகிறார். இந்தத் தலைப்புக்கும் நாவலுக்கும் சம்பந்தமே இல்லை என்று நினைக்கிறேன்.
ஆசிரியர் அவர்களின் இந்த எழுத்துப் பணியில் ஒன்றை மட்டும் விரிவாகச் சொல்கிறார். அதாவது மறைக்கப்பட்ட, பலராலும் அறிந்திராத ஒரு நிகழ்ச்சியை ஆய்வு செய்து கற்பனையில் அதற்கு உயிர் கொடுத்து, அதனை ஒரு நாவலாகவோ அல்லது கதையாகவோதான் வாசிப்பாளர்களுக்கு அள்ளி வழங்குகிறார்.
நண்பர்களே, இந்த நாவல் புனைவு என்றாலும் இதில் அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களையும் நாம் காணலாம். இன்னொரு வகையில் சொல்வதானால், இது அவரது சுயசரிதை மற்றும் புனைவுகளே. தெரிந்திராத பல தகவல்களையும், சிறந்த மொழி நடையும் வாசிப்போரை நிட்சயம் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. வாசியுங்கள்… பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றிகள்.