நூல் அறிமுகம்: ’மனாமியங்கள்’ – புற உலகை அறியாத அப்பாவிப் பெண்களின் அக உலகை விவரிக்கும் சல்மாவின் நாவல் – பெ.விஜயகுமார்.தமிழ் இலக்கிய வானில் கவிஞராகப் பரிணமிக்கும் சல்மா புனைவிலக்கியத்திலும் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார். ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’, ‘பச்சை தேவதை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை கொணர்ந்துள்ள சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘மனாமியங்கள்’ எனும் இரண்டு நாவல்கள், ’சாபம்’ எனும் சிறுகதைத் தொகுப்பு அவரின் புனைவிலக்கிய வெற்றிக்குச் சாட்சியமாக இருக்கின்றன. ’கனவுவெளிப் பயணம்’ சல்மாவின் சிறந்த பயண நூலாகும். சல்மாவின் ‘இழப்பு’ சிறுகதை ‘கதா-காலச்சுவடு’ போட்டியில் பரிசு பெற்றுள்ளது. சேனல்-4 தயாரிப்பில் சல்மாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘சல்மா’ எனும் ஆவணப்படம் நூற்றுக்கும் மேற்பட்ட உலகப் படவிழாக்களில் திரையிடப்பட்டு பதினான்கு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஃபிராங்பர்ட், லண்டன், பெய்ஜிங் புத்தகக் கண்காட்சிகளில் சல்மா பங்கேற்றுள்ளார். சல்மாவின் படைப்புகளை முன்வைத்து ‘நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு ’சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு மலையாளத்திலும்,  ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கடலான் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

தமிழ்ப் புனைவிலக்கியத்தில் இஸ்லாமியர் வாழ்வியலைச் சித்தரித்துள்ள தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகீர்ராஜா, கரீம், ஆகியோர் வரிசையில் இடம் பெறும் சல்மா இஸ்லாமியப் பெண்களின் சமகால வாழ்வைப் படம் பிடித்துக் காட்டி அவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’  ‘மனாமியங்கள்’ (கனவுகள்) நாவல்கள் இரண்டும் வெளியுலகை அதிகம் அறிந்திராத இஸ்லாமியப் பெண்களின் அக உலகை விவரிக்கும் நாவல்களாகத் திகழ்கின்றன.

“உறக்கத்தில் வந்த மனாமியத்தில் அம்மாவின் அழுகுரலும் ஆசியா நன்னியின் புலம்பலும் கேட்டன. உறக்கத்தில் தன்னைத் துரத்திக் கொண்டிருக்கிற கனவுகளின் அழுத்தம் தாளாமல் திடுக்கிட்டு விழித்தவளுக்கு, அறைக்குள் கிடந்த இருள் பயத்தை உண்டாக்கிற்று”. ஆம்; கனவிலும், நனவிலும் பயமும், துயரமும் துரத்திட சாஜிதா எனும் சிறுமி சந்திக்கும் சொல்லொண்ணாத சோகங்களை ’மனாமியங்கள்’ நாவல் சொல்லிச் செல்கிறது. சாஜிதா மட்டுமல்லாது அவளின் தாய் மெஹருன்னிசா (மெஹர்), நன்னி (பாட்டி) ஆசியா, நன்னி சுபைதா, குப்பி (அத்தை) பர்வீன் என்று அனைவருமே ஆணாதிக்க அடக்குமுறையாலும், மதவொழுக்கம் என்ற பெயரில் சுமத்தப்படும் கட்டுப்பாடுகளாலும் வாழ்வைத் தொலைத்தவர்களாக  நாவலில் நிற்கிறார்கள். ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் வரும் வஹிதா கதாபாத்திரம் ஒரு காவியநாயகி போல் செவ்வியல் படைப்பாகத் திகழ்கிறாள். ’மனாமியங்கள்’ நாவலின் சாஜிதா கதாபாத்திரம் அந்தளவுக்கு பரிணமிக்காவிட்டாலும் வாசகர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் படைப்பாகும்.

ஹசன்-.மெஹர் தம்பதிகள் தங்களின் குழந்தைகள் சாஜிதா, அஷ்ரப்புடன் ஓரளவு வசதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகிறார்கள். ஹசனின் ஹஜ் யாத்திரைக்குப் பின்னர்தான் பிரச்சனை முளைக்கிறது. ஹசன் இளைஞனாக இருந்தபோது வாழ்வின் அனைத்துச் சுகங்களையும் சுகித்து வளர்ந்தவன் தான். அப்போது புதுத் திரைப்படங்கள் தியேட்டரில் திரையிடப்பட்டதுமே நகரத்துக்குச் சென்று காண்பதோடு காசட்டுகளை வாங்கி திரைப்படப் பாடல்களைக் கேட்ட வண்ணமே இருப்பான். உற்சாகமும், பாட்டமும் சொல்லி மாளாது. சவுதிப் பயணமும், ஹஜ் யாத்திரையும் அவனிடம் தலைகீழ் மாற்றங்களை உண்டாக்கின. அதற்குப் பிறகு அவனது தோற்றமும், செயலும் ஒடுங்கிப் போய் வயதான மனிதனைப் போல வாழ்க்கையில் பிடிப்பற்றவனாக மாறி விட்டான். எந்நேரமும் அறிவுரை, அறவுரைதான். “பெண்கள் பாத்திஹா ஓதக்கூடாது. சபுர் கழிவுக்கு வெளியே போகக் கூடாது. சினிமா பார்க்கக் கூடாது. தெருவுல நிக்கக் கூடாது. வீட்டவிட்டு வெளியே போனா புர்காவுல கண்ணுகூடத் தெரியக் கூடாது. லிப்ஸ்டிக் போடக் கூடாது. நல்லவிதமா ஜோடிக்கக் கூடாது. டிவி. பார்க்கக் கூடாது. வெளிநாட்டுச் சேலை கட்டக் கூடாது. தர்காவுக்கு போகக் கூடாது. நிரோத் போடக் கூடாது. பிள்ளையக் கழிக்கக் கூடாது. கர்ப்பத்தடை பண்ணக் கூடாது” என்று அவன் விதித்த தடைகள் ஒன்று இரண்டல்ல. தன்னுடைய நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிக்கிறான். ஷரியத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வான். தனது தவறுகளைத் தவறு என்று ஒப்புக் கொள்கிறவனாக அவன் இருக்கவில்லை. குரானில் இருக்கிறது, ஷரியத்தில் இருக்கிறது என்று எதையும் நியாயப்படுத்துவான். மதமும், மார்க்கமுமே அவனுக்கு எல்லாமாக இருந்தது.

ஹசனின் ஆணாதிக்க மனோபாவமும், அதீத மார்க்கமும் வீட்டின் அமைதியைச் சீர்குலைத்தன. குருவிக் கூட்டைக் கலைத்தது போல் ஆனது. ஹசனின் பிடிவாதமும், மூர்க்கத்தனமும் அவன் தங்கை பர்வீனையும், தாய் சுபைதாவையும் பாதித்தன. பர்வீனின் கணவன்  ரஹீம் செய்யும் தவறினாலயே பர்வீன்-ரஹீம் தாம்பத்தியம் தோல்வியுறுகிறது.. தன்னுடைய ஆண்மையின்மையை பர்வீன் அறிய வந்த நொடியில் ரஹீம் அவளைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். பெண்களுக்கே உரிய நிதானத்துடன் பர்வீன் பிரச்சனையை அணுக நினைத்தாள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்ற அவளின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாமல் இல்வாழ்க்கையை ரஹீம் சூன்யமாக்கினான். வாழாவெட்டி என்ற அவப்பெயருடன் பர்வீன் தாய்வீடு திரும்புகிறாள். ஏற்கனவே அந்த வீட்டில் இரு கண்களிலும் பார்வையை இழந்து தனித்து வாழும் அவளின் சின்ன நன்னி அமீனாவுடன் சேர்ந்து வாழ்கிறாள்.

மகள்  பர்வீனின் அவலத்தை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சுபைதாவுக்கு இடியென இறங்குகிறது அடுத்த பிரச்சனை. மகன் ஹசன், மருமகள் மெஹர் தாம்பத்தியத்திலும் விரிசல் உண்டாகி ஹசன் இரண்டாம் தாரமாக கதீஜாவை மணம் முடிக்கிறான். கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறும் மெஹர் தன்னுடைய வயதான தாய் ஆசியா வீட்டில் தஞ்சம் புகுகிறாள். கணவனைப் பழிவாங்கிட ’குலா’ (மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மணமுறிவு) கொடுக்கிறாள். இதைச் சற்றும் எதிர்பாராத ஹசன் வெறிகொண்டவன் ஆகிறான். ஆண்கள் நான்கு முறை திருமணம் முடிக்கலாம் என்று ஷரியத் கூறுவதாகச் சொல்லி தன்னுடைய தவறை நியாயப்படுத்துகிறான். மெஹர் கொடுத்த ‘குலாவை’ அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிள்ளைகளை மெஹரிடமிருந்து பிரிக்கிறான். சாஜிதா வளர்ந்த பெண் என்பதால் தந்தையின் கட்டுப்பாடுகளையும் மீறி தாயைப் பார்க்க வருகிறாள். அஷ்ரப் சிறுவன் என்பதால் தந்தை சொல்லை மீறித் தாயைப் பார்க்க வருவதற்குத் தயங்குகிறான்.

மகனைப் பார்க்க முடியாத துயரம் மெஹரை வாட்டுகிறது. மெஹரின் வாழ்வு பாழானது குறித்து அவளின் தாய் ஆசியா கோபத்தில் நிதானம் இழக்கிறார். எந்நேரமும் ஹசனைத் திட்டிக்கொண்டே இருக்கிறார். மகளின் வாழ்வைச் சீரழித்தவனைப் பழிவாங்கிட எண்ணுகிறார். தன்னுடைய தூரத்து உறவுப் பையன் அபிபுல்லாவை மணக்கச் சொல்லி மெஹரை நாளும் அணத்திக் கொண்டே இருக்கிறார். வேறுவழியின்றி மெஹர் ஒத்துக் கொள்கிறாள். ஹசனைப் பழிவாங்க தான் கொடுக்கும் அடுத்த அடி என்ற நினைப்பு; இதுவரை தொலைத்திருந்த வாழ்வு மீண்டும் திரும்பக் கைகூடும் என்ற ஆசை; பிள்ளைகளைப் பார்க்க முடியாத ஏக்கம்; தாய் ஆசியாவின் ஓயாத புலம்பல் இவற்றின் காரணமாய் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு அபிபுல்லாவுடன் வாழ்ந்திட கொச்சின் நகருக்குச் செல்கிறாள். அவளால் அங்கும் நிம்மதியாக வாழ முடியவில்லை. பிள்ளைகளின் நினைப்பு அவளை எந்நேரமும் வாட்டுகிறது. சாஜிதாவுக்கு உடல்நலமில்லை என்று கேள்விப்பட்டதும் அபிபுல்லாவிடமிருந்து விடைபெற்று ஊர் திரும்பிவிடுகிறாள். மனமெல்லாம் பிள்ளைகளின் நினைவில் இருக்கும் மெஹருடன் வாழ முடியாது என்ற முடிவுக்கு வரும் அபிபுல்லா அவளை உடனே அனுப்பி வைக்கிறான்.

நாவல் முழுவதும் மனம் பொருந்தாத் தம்பதிகளையே பார்க்கிறோம். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற நினைப்பில் நடக்கும் திருமணங்களும் வெற்றியில் முடிவதில்லை. ஜாதகம் இன்னும் என்னென்னமோ பொருத்தங்கள் பார்த்து முடிவாகும் மணங்களும் முறிந்து விடுகின்றன. மனமொத்து இணையும் காதலர்களை இச்சமூகம் வாழ விடுவதில்லை. காதல் பறவைகளைக் கொடூரமாகப் பிரிக்கின்றனர். பெற்ற பிள்ளைகளையே கொல்வதற்கும் தயாராகின்றனர். மதவெறி சாதிவெறி ஆணவத்தில் நடக்கும் இவ்வன்முறையை கௌரவக் கொலை என்றழைப்பது மிகப் பெரிய கேலிக்கூத்து. இவ்வாறான சமூகத்தின் அச்சு அசலான பிரதிநிதியாக நாவலில் ஹசனைப் பார்க்கிறோம். சாஜிதாவின் கல்விக் கனவுகளை அவன் நாசப்படுத்துகிறான். ஆண்-பெண் இருபாலர் படிக்கும் கல்லூரியில் மகளைச் சேர்க்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான். அத்தை பர்வீன் உதவியின்றி சாஜிதா கல்லூரியில் சேர்ந்திருக்கவே முடியாது. மருத்துவப்படிப்பில் ஆர்வமிருந்த சாஜிதாவின் ஆசையை ஹசன் நினைத்திருந்தால் நிறைவேற்றியிருக்கலாம். அஷ்ரப்பின் கல்வி குறித்தும் ஹசன் பிற்போக்குத்தனமாகவே முடிவெடுக்கிறான். நவீன கல்வியை மறுத்து அவனுக்கு மதரஸ்ஸா கல்வியை மட்டும் அளிக்க விரும்புவது வன்முறையன்றி வேறென்ன?

குழந்தைத் திருமணம், கல்வி மறுப்பு, பெண்ணடிமைத்தனம், சுதந்திரக் காற்றும், வெளிச்சமும் இல்லாத வீடுகள் என்று இருண்மையில் வாழும் இஸ்லாமியக் குடும்பங்களை நாவல் முழுவதும் காண்கிறோம். என்ன உண்பது, உடுத்துவது, எங்கு செல்வது, என்ன செய்வது, எதைப் படிப்பது என்பதையெல்லாம் பெண்களால் முடிவெடுக்க முடியாது.  ஆண்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதும், இச்சைகளைப் பூர்த்தி செய்வதும் மட்டுமே பெண்களின் கடமை! இதுவே வீடுதோறும் நடந்தேறும் அலங்கோலம்! நன்னி சுபைதா, அம்மா மெஹர், மகள் சாஜிதா என்று மூன்று தலைமுறைப் பெண்களும் ஒரே மாதிரி வாழ்க்கையை வாழப் பணிக்கப்படுகிறார்கள். அதுதான் தங்களுக்கு விதிக்கப்பட்ட நசீப் என்று அவர்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.

தோல்வியில் முடிந்த திருமணத்தால் பாலியல் சுகத்தை இழந்த பர்வீன் சுயஇன்பத்தை நாடவேண்டிய  சோகத்துக்குத் தள்ளப்படுகிறாள். அவளின் சின்ன நன்னி அமீனா பார்வை இழந்தவள் என்பதால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதையும் இருளில் கழிக்கிறார். பர்வீன், அமீனா இருவர் வாழ்விலும் இருள் சூழ்ந்துள்ளது. பர்வீன் சுயஉதவிக் குழுவில் சேர்ந்து வாழ்வைச் சற்றே அர்த்தமுள்ளதாக்க எடுக்கும் முயற்சிக்கும் அண்ணன் ஹசன் தடை போடுகிறான். வெளி உலகின் அறிமுகம் கிடைத்ததும் நம்பிக்கையின் கீற்று பர்வீனுக்குத் தென்படுகிறது. தாசில்தார், மருத்துவரான அவரின் மனைவி,  சுய உதவிக் குழுக்களின் மேற்பார்வையாளர் மூர்த்தி என்று நல்ல அறிமுகங்கள் பர்வீனுக்குக் கிடைக்கின்றன.

மூர்த்தியுடனான உறவு பர்வீனைச் சற்றே சலனப்படுத்துகிறது. மூர்த்தியுடனான போன் உரையாடலை கண்காணிக்கும் அளவிற்கு அவளின் தனிப்பட்ட வாழ்வில் ஹசன் தலையிடுகிறான். அதையும் மீறி இன்னொரு போன் வாங்கி மூர்த்தியுடன் தொடர்பு துண்டித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறாள். இந்த நல்ல நண்பர்களின் உதவியின் மூலமே பி.எஸ்சி. படிப்பதற்காக சாஜிதாவை பர்வீனால் கல்லூரியில் சேர்க்க முடிகிறது. விடுதியில் தங்கிப் படிக்கும் சாஜிதாவைப் பார்க்க அடிக்கடி கல்லூரிக்கும் வருகிறாள். தந்தை ஹசனின் எதிர்ப்பையும் மீறி படிப்பை முடிக்கும் உறுதியுடன் சாஜிதா இருக்கிறாள். தடைகளை எல்லாம் தாண்டி வாழ்வில் முன்னேறிட வேண்டும் என்ற வேட்கை சாஜிதா, பர்வீன் போன்ற பெண்களிடம் இருப்பது நம்பிக்கையளிக்கிறது. ஆனால் நாவலின் இறுதியில் நடக்கும் ஒரு விபரீத நிகழ்வு அந்த நம்பிக்கை வீணாகி விடுமோ என்ற பதற்றத்தை  ஏற்படுத்துகிறது. ஜெஸி என்ற பெண் உடன் பயிலும் மாணவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் என்பதற்காக அந்தப் பையனை அடித்துப் போட்டு ஜெஸியை வீட்டில் சிறைப் பிடித்து வைத்துள்ளனர் என்ற செய்தியை ஊரிலிருந்து அம்மா மெஹர் போனில் பதற்றத்துடன் கூறுகிறாள். ஜெஸ்ஸிக்கு நேர்ந்ததைப் போன்று தன்னுடைய படிப்பும் முடிவுக்கு வந்து விடுமோ என்று சாஜிதா கலக்கம் அடைகிறாள் என்ற சோகத்துடன் நாவல் முடிகிறது. நாவலுக்குள் கூட்டை உடைத்துக் கொண்டு வெளிவரத் துடிக்கும் புதுமைப் பெண்களாக சாஜிதா, பர்வீன் போன்றவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். அவர்களின் மனாமியங்கள் நனவுகளாகட்டும்!

இந்த நாவல் தமிழ்ச் சமூகத்தில் ஆண்-பெண் உறவில் தேவைப்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் குறித்து வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது. எல்லா மதங்களுமே ஆணாதிக்கத்துக்கு ஆதரவாகவும், பெண்ணடிமைத்தனத்திற்கு துணைபோவதாகவும் இருக்கின்றன என்பதை அறிவோம். அதிலும் இஸ்லாம் இன்னும் ஒருபடி மேலே சென்று பெண்களை புர்காவுக்குள் மறைத்து வைத்து, கல்வியை மறுத்து, வாழ்வின் அனைத்துச் சுகங்களுக்கும் தடையாக இருப்பது வருந்தத்தக்கது. தமிழ்ச் சமூகத்தில் சாதி, மத வேறுபாடின்றி பெண்கள் குடும்ப வன்முறைகளுக்குள்ளாவது அன்றாடச் செய்தியாகி உள்ளது. சட்டம் அளிக்கும் பாதுகாப்புகளை எல்லாம் தாண்டி ஆண்களின் குடிப்பழக்கம், பாலியல் வக்கிரங்கள், ஆணாதிக்க மனோபாவம் என்று சிக்கித் தவிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு ஆண்கள் மத்தியில் ஏற்படும் மனமாற்றத்தால் மட்டுமே உறுதிப்படும். ’ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வோம்’ எனும் பாரதியின் முழக்கம் நடைமுறைக்கு வருவதே ஆண்-பெண் உறவில் ஆரோக்கியமான மாற்றங்களைச் சாத்தியப்படுத்தும்.

வீடே உலகமென வாழும் பெண்களுக்கு ஆண்கள் எதைப் பரிசாகக் கொடுக்கிறார்கள்?

“கள்ளிச் செடிகள் மட்டும்தான் / நம் வாழ்க்கை முழுவதற்குமான

மலர்ச் செண்டுகளாய் /அனுப்பப்படுகின்றன.”

எனும் சல்மாவின் கவிதை வரிகளே ஆண்கள் வழங்குகின்ற பரிசு  எதுவெனச் சொல்கின்றன…!

பெ.விஜயகுமார்.

                   —————————————————–