சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் – ஐ.முரளிதரன் | Samaaniyanin Natkurippu Series | Rosakkaran Tamil Short Story | www.bookday.in

சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் – ஐ.முரளிதரன்

சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன்

பாபுவைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பாபு எங்கள் தெரு வின் நாய். வெறும் தெரு நாய் என்று மட்டும் அவனைக் கடந்து விட முடியாது. பாபு அந்த தெருவில் இருக்கும் போது பாபு தான் அந்தத்தெருவின் காவலாளி. முதன் முறையாக நாங்கள் அந்த தெருவில் குடியேறிய போது நான் புது ஆள் என்பதால் “ இரண்டு கோரைப் பற்கள்” வெளியே தெரிய விரட்டு விரட்டு என்று விரட்டியவன் பாபு.

ஆனால் ஒரு திகைப்பான விசயம் பாபுவுக்கும் அம்மாவுக்கும் இடையே இருந்த உறவு தான். அம்மாவுடன் பாபு தொடக்கத்தில் இருந்தே நன்றாக பழகியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“எப்டிமா உன்னய மட்டும் அவன் கொறைக்காம இருக்கயான்” என கேட்டப்போது…

“ அன்பா பாக்கனும் டா ஒங்கப்பன மாரி திருட்டு முழி முழிச்சா தொரத்தாம என்ன செய்வயான்” என்றாள்.

நாங்கள் குடியிருந்தது ஒரு பழைய அய்யர் வீடு . ரெண்டு தலைவாசல் இருந்தது. பின்பக்க வாசலில் சிறிய தோட்டமும் அதைச்சுத்தி பெரிய “மந்தைக்காடும்” இருந்தது. பழைய வீடு என்பதால் “உப்புத்தண்ணிக்கு” என போர்வெல் கிடையாது. ஆனா கிணறு இருந்தது. வந்த புதிதில் கிணற்றில் நீர் இரைத்தாலும் அது தண்ணிக்கு கைமாறாக இரைக்கும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டதால் அதை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம். அதனால் தெரு முக்கில் இருக்கும் “உப்புத்தண்ணி” டேங்கில தான் மத்த புழக்கத்துக்கு எடுக்க வேண்டும். சில நேரங்களில் நான் எடுப்பேன். பல நேரங்களில் அம்மா தான் எடுப்பார். அதுவும் இரவு நேரங்களில் அம்மா செல்லும் போது பாபு தான் அவளுக்கு துணை.

அம்மா தண்ணிக் குடத்துடன் நடந்து வரும் சத்தம் கேட்டதும் பாபு வேகமாக ஓடி வந்து அம்மாவுடன் நடப்பான். தண்ணீர் எடுத்து முடிக்கும் வரை வீட்டுக்கும் குழாய்க்குமென ஒரு பாடிகார்டை போல நடந்து வருவான். சில நள்ளிரவு நேரங்களில் தண்ணி எடுக்க போகும் போது “நானும் வர்றேன்மா” என்றால்

“வேணாம்டா நீ வந்தா தண்ணி எடுக்க விடமாட்ட”…..” போதும் போதும் னு யென் உசுர எடுப்ப”…”அதான் பாபு இருக்கான்ல போயிக்கிறேன்” சொல்லிடும். இது மாதிரி சமயத்துல “ பாபு வாழ்க!!” என்று மனசுக்குள் சொல்லி விட்டு தூங்கி விடுவேன்.
இப்படியாக பாபுவுக்கும் அம்மாவுக்கும் ஆன உறவு வலுப்பட்டிருந்தது. பாபு அவ்வப்போது உரிமையுடன் வீட்டிற்குள் வந்து “லொள்” என குரைத்து தனக்கான உணவை உண்டு செல்லும் பழக்கமும் உருவாகியிருந்தது.

வார வாரம் வீட்டில் கறி எடுப்பது வழக்கமான விசயம். அப்படி எடுக்கும் போதெல்லாம் அம்மா பாபுவுக்கு என்று கறி சோறு பிசைந்து வைக்கும் பழக்கம் இருந்தது. சில நேரங்களில் ஊட்டி விடும் பழக்கமும்‌‌.

நாய் என்றால் மனிதர்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம் உண்டு. வீட்டில் மிஞ்சியதை தின்பதற்கு வளர்க்கப்படும் பிராணி என்கிற பொதுப் புத்தி. அதுவும் தெரு நாய் என்றால் சொல்லவே வேண்டாம். பெரிய பெரிய வீடுகளில் வளர்க்கப்படும் வெளி நாட்டு நாய்கள் கொஞ்சம் விதி விலக்கு. நாய்க்கு கூட வர்க்கம் இருப்பது நம்ம நாட்டில் தான்.
பணக்கார நாய், ஏழை நாய், தெரு நாய். வளர்க்கப்படும் இடத்திற்கேற்ப நாய்க்கு வர்க்கம் வந்து விடுகிறது.

அம்மா ஊட்டி ஊட்டி வளர்த்ததால் என்னவோ தெருவில் அத்தனை பேரை விடவும் அம்மாவிடம் பாபுவுக்கு அன்பு அதிகம். அம்மாவுக்கும் தான்.

பாபுவுக்கு தெருவில் ஏதாவது ஒரு வீட்டில் சோறு கிடைக்கும் தான். இருந்தாலும் பாபுவிடம் பிடித்த குணம் அவனது “சுயமரியாதை”.
நாய்க்கு நன்றி மட்டும் தான் இருக்கனுமா? சுயமரியாதை எல்லாம் இருக்க கூடாதா.
இருக்கலாம்.

பாபு ஏதாவது ஒரு வீட்டின் வாசலில் உட்கார்ந்திருக்கும் போது யாராவது “ச்சீ போ” என விரட்டி விட்டால் போதும் “அம்புட்டுத்தான் பயபுள்ளைக்கு ரோசம் பொத்துகிட்டு வந்திடும்” …
அடுத்து அவங்க வீட்டில் கரி சோறே போட்டாலும் போய் வாய் வைக்க மாட்டான்‌.
அந்த அளவுக்கு உணர்வுள்ள ஒருவன் பாபு.

பாபுவுக்கு காதலியும் உண்டு. அவள் பெயர் “ஜனனி” ஆம்‌. திடீரென ஒரு நாள் பாபு ஒரு பெட்டை நாயுடன் தெருவுக்குள் வந்தான். ஒன்றாக இருவரும் சுத்தினார்கள். அம்மாவிடம் வந்து பாபு அம்மாவின் கெண்டங் கால்களில் தனது வயிறால் தேய்த்து, முகத்தை மேலே பார்த்து நாக்கை நீட்டி தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி, வாலை சட சட சட வென ஆட்டம் போட்டு வெட்கப்பட்டு “ங்யங் ங்ய்ங ங்யங்” என முனங்கினான்‌.

“ச்செரி ச்செரி” ….” நல்லா அழகா இருக்கா என்றவாறே அம்மா தான் அந்த பெயரை வைத்தாள் “ஜனனி” அப்பறம் என்ன?

இரண்டு பேரும் தெருவில் ஒன்றாக சுத்தினாங்க. ஒன்றாக “குரைத்தார்கள”
அந்த தெருவுக்கு குடும்பமா காவல் காத்தாங்க. இரவு நேரங்களில் திடு திடு வென ஓடிப்பிடித்து விளையாடினார்கள்.

இதுக ரெண்டும் ஓடியதால் பயந்த சிலர் இந்த “நாய்க்கு வந்த பவுச பாரு” என அங்கலாய்த்தனர்.
தன் மகனுக்கு பெண் கிடைக்காத சோகத்தில் இருந்த ஒரு பெண்.

“இது கூட ஒரு பொட்டை ய பிடிச்சு குடும்ப நடத்துது” என பெரு மூச்சு விட்டவளை நிமிர்ந்து பார்த்து பாபு “வெவ் வொவ் வொவ்” ….”வொவ் வொவ் வொவ்” என கத்தினான்.

எனக்கு பாபு வின் பாசை எல்லாம் தெரியாது ஆனால் பாபு இப்படி சொல்லியிருக்கலாம் “ ஏண்டா மனுசப் பயலுகளா உங்கள மாதிரியாடா நாங்க சாதி , மதம், சாஸ்திரம் பாத்துகிட்டு கெடக்கோம்”….”எங்களுக்கு காதல் ங்கிறது விளையாட்டு எங்களுக்கு பிடிச்சா பிடிச்சவங்க கூட சுத்துவோம்”…..” எங்களுக்கு சடங்கும் இல்ல சம்பிரதாய மும் இல்ல நாங்க எந்த பொட்டை நாயையும் “கள்ளிப் பால் ஊத்தி கொல்றது இல்ல”….” ஆம்பள நாய் தான் பொறக்கனும் னு கோவில் வாசல்ல கிடக்கிறது இல்ல”….”எங்க எண்ணிக்கைய நாங்க பாலினத்தில சரியா வச்சு வாழ்ந்துட்டு இருக்கோம்”…..”உங்களைச் சரி பண்ணுங்கடா” என கூறியிருக்கலாம். நாலு வொவ் கங்கு இத்தனை பெரிய விளக்கமா என பார்க்க வேண்டாம். எல்லாம் ஒரு யூகம் தான்.

நாட்கள் சென்றது “பாபு” அப்பாவாகும் நாளும் வந்தது. “ஜனனி” கர்ப்பமாக இருந்தாள். சில நாட்களிலேயே வயிறு உப்பி இருந்தது. ஒரு பிள்ளைத்தாச்சியை கவனிப்பது போல அம்மா “ஜனனி”யை கவனித்தாள். ச்சே அவளும் பிள்ளைத் தாச்சி தானே.
அந்த தருணங்களில் எல்லாம் பாபு அம்மாவை நன்றி கொண்ட கண்களில் பார்வையிடுவான்.

ஒரு நாள் தெருவுக்குள் வந்த ஒருவனைப் பாத்து பாபு குரைக்க. இருட்டில் பயந்து போனவன் ஆத்திரத்தில் கையில் கிடைத்த செங்கலை எடுத்து எறிந்தான். அது நேராக படுத்திருந்த “ஜனனியின் வயிற்றில் போய் “தொலக்” கென்று விழுந்தது. “ப்ச்” எப்படி சொல்வது அந்த கொடுரத்தை “அவ்….அவ்….” என ஜனனி அலறினாள்‌.

பயத்தில் கல்லால் எறிந்தவன் ஒரு வீட்டிற்குள் நுழைந்து கேட்டை பூட்டிக் கொண்டான். பாபு கத்திய கத்தில் தெருவே கூடியது.

ஆனால் “பாபு” பார்ப்பவரை எல்லாம் துரத்தினான். வெறி பிடித்தவனைப் போல “இரண்டு கோரைப் பற்களும்” தெரிய குலை நடுங்கும் அளவிற்கு முகத்தை மாற்றினான்.

“ நாசமா போற மனுசங்களா உங்களால தானடா எனக்கு இந்த நிலம” என்பது போல இருந்து அவனது கோபம்.

எல்லோரும் போக பயந்த வேளையில் அம்மா செய்தியறிந்து பாபு வின் அருகில் போனாள்.
“வேண்டா க்கா பாபு கடிக்க வர்றயான்” என பக்கத்து வீட்டு சித்தி எச்சரித்தும் அம்மா போனாள்.

முதலில் “கெர் கெர்” என்றவன் பின்பு அமைதியானான். “ ஒண்ணுமில்ல டா ஒண்ணுமில்ல அம்மா அழுதாள்.
அம்மாவோடு பாபுவும் அழுதான்.
தெருவில் சிலர் அழுதார்கள். சிலர் “உச்” கொட்டினார்கள்‌. சிலர் “ச்சே பாவம்” என்றார்கள்.

அப்பா முனிசிபல் ஆபிசுக்கு சொல்லி “ஜனனியை” தூக்கி சென்றார்கள். தூக்கிச் சென்ற வண்டியின் பின்னால் பாபு ஓடினான்.
இரண்டு நாட்களுக்கு பின்பு “பாபு” மட்டும் திரும்பி வந்தான்.

வந்த நாளில் இருந்து சரியாக சாப்பிடாமல் கிடந்தான். அவனுக்கு பிடித்த “கரி” சோறு கூட உண்ணவில்லை.

அம்மா ஒரு நாள் அவனிடம் உட்கார்ந்தாள். வீட்டின் வாசலில் படுத்திருந்தவனின் முதுகை தடவியவாறே “ எல்லாரும் இந்த மாதிரி ஒரு சூழல கடந்து தான்டா வர்றோம்” … “ அதுல மனுசனா இருந்தாலும் சரி” …”எனக்கும் உன்னை மாதிரி ஒரு சூழல் வந்திச்சு உனக்காச்சும் யாரோ ஒருத்தன் எனக்கு”…என அம்மா சேலையால் வாய் பொத்தி அழுதாள்.
பாபு அம்மாவின் முட்டியில் தன் வலது காலை வைத்தான்‌.

“ எல்லாஞ் சரியா போகும் டா”

உள் வீட்டின் ஜன்னல் வழியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா சொன்னதில் ஏதோ இருந்தது. புரிந்தும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பாபுவுக்கு நன்றாக புரிந்தது போல. இன்னும் சொல்லப்போனால் அவன் அம்மாவின் கண்ணீரை உணர்ந்து இருந்தான்.

அம்மாவின் கண்களைப் பார்த்த பாபு திடீரென எழுந்தான். வாலை வேகவேகமாக ஆட்டினான். “ங்கய்…ங்கய்…என முனங்கியவாறு அம்மாவின் முகத்தினை நக்க தொடங்கினான்‌. அம்மா அவனுக்கு சாப்பாடு பிசைந்து வைத்து அவனை சாப்பிட வைத்தாள்.

அடுத்த நாள் அம்மாவைப் பார்க்க பாபு வந்த போது அவனை விடாப்பிடியாக பிடித்து “கிணத்தடிக்கு” இழுத்துச் சென்று குளிக்க வைத்தாள்.

பாபு நிறம் வெள்ளை. ஆனால் ரோட்டிலும் ,சேத்திலும் புரண்டு புரண்டு பாபு வின் நிறம் இது தான் என சொல்ல முடியாத சூழலில் இருந்தான். அம்மா அவனை தேய்த்து தேய்த்து குளிக்க வைத்தாள். தேங்காய் நாரை போட்டு “வர் வர் வர்” என இழுத்தாள். அவன் மீது அப்பியிருந்த அத்தனை நிறமும் நுரையோடு கலந்து வெளியேறிக் கொண்டிருந்தது. நுரையின் நிறத்தை பாபுவுக்கு கொடுத்து விட்டு பாபுவின் மீதிருந்த நிறத்தை நுரை எடுத்துக் கொண்டிருந்தது தான் உண்மை.

ஈரத்தோடு பாபு உடலை ஒரு “குடுகுடுப்பை” யாக சிலுப்பு சிலுப்பினான். அவன் மேலிருந்த நீர் எல்லாம் பனிச்சாரல் போல அவ்விடத்தில் பறந்து விழுந்தது.

ஒரு “வெள்ளை வேட்டி” போல குளித்து முடித்ததும் பாபு காட்சியளித்தான்‌. அம்மா அத்தோடு நிற்கவில்லை. நன்கு துவட்டிய பின்பு அம்மா வைக்கும் சிகப்பு நிற “வட்டம் பொட்டினை” பாபு வின் நடுநெத்தியில் வைத்து “பொட்டைக் கழுதயா பொறந்திருக்கனும்” என கொஞ்சினாள்.

அடுத்தடுத்த நாட்களில் பாபுவுக்கு அம்மா மட்டுமே பெரும் துணையாகிப் போனான். பாபு எங்கள் வீட்டில் ஒருவனாகி போனான். தெருவில் உறங்கினாலும் அவன் எங்கள் வீட்டு நாயாகிப் போனான்.

அம்மாவும் பாபுவும் நிறைய பேசிக் கொண்டார்கள். நானும் அப்பாவும் வெளியே சென்று விடும் சமயங்களில் பாபு தான் அம்மாவின் பேச்சுத்துணை. இப்படியாக பாபு அம்மாவின் இரண்டாம் மகனான்.

ஒரு நாள் வீட்டுக்குள் நுழைந்ததும் கொடியில் காய்ந்து கீழே விழுந்த அம்மாவின் சீலையில் பாபு உருண்டு விளையாடிக் கொண்டிருத்தான்.

அம்மா பாத்ததும் பக்கத்தில் இருந்த குச்சியால் ஒரு போடு ஓங்கி போட்டாள் “சடார் “ என… “ச்சீ நாயே எம்புட்டு தைரியம் உன் நாய் புத்திய காட்டிட்டல” என்றாள்.
அலறி அடித்தவாறு பாபு வீட்டை விட்டு ஓடினான்.

“இனிமே இந்த வீட்டு வாசப்படிய மிதிக்காத” என்றாள்.

“யேம்மா இப்டி அவன அடிக்கிற” ‌….”சீலை தானமா” என்றதும்

“எது சீலையா இது என் முதல் வருசக்கல்யாண நாளுக்கு எங்கப்பா எடுத்த சீலை டா” …”உங்கப்பா எனக்காக பாத்து பாத்து எடுத்த சீலை”

உண்மையில் அது அம்மாவுக்கு மிகவும் பிடித்த சீலை தான்‌. சின்ன வயசில் அந்த சீலையினால் நானும் அடி வாங்கிய நிகழ்வு உண்டு. அம்மாவுக்கு அந்த சீலை மீது அப்படி ஒரு ப்ரியம். அது அப்பாவின் மேலுள்ள காதலும் தான்.

கல்யாணம் ஆன புதிதில் மிகுந்த சிரமத்தில் இருந்த போது வந்த முதல் கல்யாண நாளில் அம்மாவுக்காக அப்பா மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய சீலை என சொல்லுவதுண்டு.

இதற்காக இரண்டு நாட்கள் வீட்டிற்கே சரியாக வரமால் “கொத்தனார்” வேலை பார்த்த விசயத்தையும் அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அம்மா ஒவ்வொரு வருடமும் கல்யாண நாள் அன்று அதைத் தான் கட்டுவாள். அம்மாவிடம் இருந்த ஒரே பட்டுச்சேலை அது தான். அப்பா எத்தனை சேலை எடுத்துக் கொடுத்தாலும் கல்யாண நாள் அன்று அம்மா அதை தான் உடுத்துவாள்‌. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உடுத்துவாள். அதற்காகவே அதை சிறிது நீரில் முக்கிய காயப் போட்டு தேய்த்து வைப்பாள். சாயம் போய் விடக்கூடாது என சோப்பு கூட போட மாட்டாள்.

அதை பாபு படுத்து புரண்டது அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதனால் தான் அடித்து விட்டாள்.

அதற்கு பின்பு பாபு எங்கள் வீட்டில் நுழையவே இல்லை.
ஆனால் அம்மாவை பார்க்க தினமும் வருவான்‌. வீட்டின் வாசலில் நிற்பான். அம்மாவும் அடுத்து அவனை வீட்டுக்குள் கூப்பிடவும் இல்லை. என்ன நினைத்தாளோ.

வீட்டின் வெளியிலேயே சோறு போட்டாள். இரண்டு மூன்று மூறை வந்து தின்றவன். ஒரு வாரத்திற்கு பின்பு திங்கவே இல்லை. சிறிது நாட்கள் இப்படியாக கழிந்தது. பாபுவும் வீட்டுப் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டான்.

திடீரென இரண்டு நாட்களாக
பாபு யார் கண்ணிலும் படவில்லை.
எங்கள் வீட்டோடு இருந்த அந்த காலி மந்தை கிரவுண்டில் ஒரு கெட்ட நாத்தம் வந்ததை அறிந்து தெருவில் சிலர் போய் பார்த்த போது “பாபு செத்துக் கெடந்தான்” அவனது விலா எலும்பில் ஒரு பலமான நாய்க்கடி இருந்தது. ஏதோ ஒரு வெறி நாயுடன் பலமாக சண்டையிட்டு செத்து விட்டான்‌.

அந்த கிரவுண்டிலேயே அவனை குழி தோண்டிப் புதைத்தோம்‌. பால் ஊற்றினோம். சடங்குகள் செய்தோம். ஆனால் அம்மா மட்டும் வரவே இல்லை.

அடுத்த நாள் இரவு அம்மா பாபு வை புதைத்த இடத்தில் “அவளது கல்யாணச் சேலையை” வைத்து விட்டு பின்புற வாசல் வழியாக நடந்து வந்தாள்‌.

அழுதவாறே அம்மா சொன்னாள் “ரோசக்காரன்டா” எம்புள்ளை.

📚எழுதியவர் 

ஐ.முரளிதரன்
கம்பம்
தேனி மாவட்டம்.

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *