மார்க்சியம் எதை சிதைக்கிறது?
என். குணசேகரன்

மார்க்சிய சிந்தனை இந்தியாவை சிதைத்து விட்டது என்று தமிழக ஆளுநர் பேசியது புதிய விஷயம் அல்ல; அவர் சொந்தமாக சிந்தித்து, ஆய்வு செய்து சொன்ன கருத்தும் அல்ல. மார்க்சியம் தோன்றிய காலத்தில் இருந்து மார்க்சிய எதிரிகள் பல கோணங்களில் மார்க்சியத்தின் மீது இப்படிப்பட்ட தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முகவுரையில் மார்க்ஸும் ஏங்கல்சும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றனர்:

“ஒரு பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது – அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும், ஜார் அரசனும், மெட்டர்னிக்கும், கிஸோவும் , பிரெஞ்சுத் தீவிரக் கொள்கையினரும், ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.”

கிட்டத்தட்ட இதே போன்ற கம்யூனிச, மார்க்சிய எதிர்ப்புக் கூட்டணிகள் எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன. அந்தக் கூட்டணியின் அங்கமாக ஆளுநர் ரவி போன்றவர்களின் குரல்கள் ஒழித்து வருகின்றன.

உண்மையில் மார்க்சியம் எதை சிதைத்து விட்டது என்று இவர்கள் அலறுகிறார்கள்? ஆளுகின்ற, சுரண்டல் கூட்டத்தின் முழுமையான மேலாதிக்கத்தையும், அது தங்கு தடையின்றி அதிகாரம் செலுத்துகிற சுதந்திரத்தையும் மார்க்சியம் சிதைத்து விட்டது; இன்னமும் சிதைத்துக் கொண்டு வருகிறது என்பதால்தான் வெறித்தனமான இந்த எதிர்ப்பு ஆவேசம்.

சமூகத்தில் இடைவிடாது நிகழ்ந்து வரும் ஒரு மோதலின் வெளிப்பாடுதான் மார்க்சிய எதிர்ப்பு.

இந்த மோதலுக்கான அடிப்படை பிரச்சனைகள் என்ன? இந்த உலகை யார் மேலாண்மை செலுத்துவது? உற்பத்தித் துறை உள்ளிட்ட அனைத்திலும் சமுக அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும்? இவையே சமூகத்தில் நடக்கும் போராட்டத்திற்கான அடிப்படை .

இந்தப் போராட்டம் தனி நபர்களுக்கு இடையில் நடப்பதாக கருத முடியாது; இது வர்க்கங்களுக்கிடையே நடப்பது. இந்த வர்க்கப் போராட்டம்தான் வரலாற்றை மாற்றி வருகிறது என்பது மார்க்சின் கண்டுபிடிப்பு. “… சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்பது ‘கம்யூனிஸ்ட் அறிக்கை”யின் துவக்க வரிகள்.

வரலாற்றில் சொத்துடனை வர்க்கங்கள்,உடமையற்ற வர்க்கங்களை எப்போதுமே அடக்கி ஒடுக்கி தங்களை நிலைநிறுத்தி வந்துள்ளன. உடைமையற்ற நிலையில், உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிற வர்க்கங்கள் தொழில் தளங்களில் போராட்டம் நடத்துவதோடு கருத்தியல் தளத்திலும் போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. இந்த கருத்தியல் போராட்டத்திற்கு மார்க்சியம் வழிகாட்டும் தத்துவமாக உள்ளது.

இந்த பெரும்பான்மை உழைக்கும் வர்க்கங்களின் போராட்டம் ஆளும் வர்க்கத்தின் அதிகார மேலாதிக்கத்தை சிதைத்து வருவது இயல்பானதே.

இந்தியாவை மார்க்சியம் சிதைத்து விட்டது என்று ஆளுநர் கூறுவதன் உண்மையான பொருள் என்ன? இந்தியாவில் மூடத்தனங்கள் நிரம்பிய பழமைவாத கருத்தியலுடன் இருந்த இந்திய நிலப்பிரபுத்துவம், நவீன முதலாளித்துவம் ஆகிய சக்திகள் தங்குதடையற்ற மேலாதிக்கத்தையும், அதிகாரத்தையும் செலுத்துவதற்கு முட்டுக்கட்டையாக உழைக்கும் வர்க்க இயக்கங்கள் இருந்து வந்துள்ளன. தொழிற்சங்க, விவசாய இயக்கம் உள்ளிட்ட வலுவான மக்கள் இயக்கங்கள் பெரும் தடை கற்களாக ஆளுகிற கூட்டத்திற்கு இருந்து வந்துள்ளன.

முழுமுதல் அதிகாரத்துடன் நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் ஆட்சி செலுத்தும் நிலையை மார்க்சிய இயக்கம் சிதைத்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

சிதைந்து போன மனுஸ்மிருதி கனவு

ஆர் எஸ் எஸ் இந்திய நாட்டின் அரசியல் சட்டமாக மனுஸ்மிருதி இருக்க வேண்டுமென்ற கொள்கை கொண்டது. சூத்திரர், பஞ்சமர் போன்ற நால்வருண அமைப்பின் அடித்தட்டு மக்களும், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களும் அடிமைகளாக வாழ்கிற ஒரு இந்திய சமூகம்தான் அவர்கள் காண விரும்பிய அமைப்பு.

இந்த அமைப்பின் அடித்தளத்தில் முதலாளித்துவப் பாதையில் செல்லும் நாடாக இந்தியாவை உருவாக்க அவர்கள் விரும்பினர். அவர்களது நோக்கத்தை சிதைத்த பெருமை முற்போக்கு இயக்கங்களுக்கு உண்டு.

1920- ஆம் ஆண்டுகள் முதற்கொண்டு எழுந்த தொழிலாளர், விவசாயிகள் இயக்கங்கள் உழைக்கும் மக்களின் உரிமைகளை மையப்படுத்திய சட்டங்கள் உருவாக பெரும் அழுத்தத்தை அளித்தன.

அனைத்து மதத்தினரும், சாதியினரும், வேறுபட்ட பண்பாடுகள் கொண்டவர்களும் விடுதலை இயக்கத்தில் கைகோர்த்து களம் கண்டனர். இதனால் ஒரு மதம் சார்ந்த அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க முடியாமல் போனது.

மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. மார்க்சிய கண்ணோட்டம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள் இணைந்து செயல்பட்டதால் ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசாக இந்தியா உருவானது.

நமது அரசியலமைப்பு சட்டம் , ஜனநாயக சிவில் உரிமைகள்,பெண்களுக்கு சம உரிமை, சமூக நீதி, பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித், பழங்குடி மக்களுக்கு விசேட உரிமைகள் என பல முற்போக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதனால் மத அடிப்படையில் ஒரு வர்ணாசிரம, சர்வாதிகார நாட்டை உருவாக்க விரும்பிய ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் விருப்பங்கள் சிதைந்து விட்டன. இதற்கு மார்க்சிய கருத்தியலும் பங்களிப்பு செலுத்தியுள்ளது. அன்று சாத்தியமாகாமல் போய்விட்ட கனவை இன்று நனவாக்க இந்துத்துவாவாதிகள் வெறித்தனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்திய நாட்டில் இந்து பெரும்பான்மைவாதிகள் அனைவரும் மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள் என்பது வெளிப்படையானது. உலகின் பல நாடுகளில் பல பகுதிகளில் இயங்கி வரும் இஸ்லாமிய, கிருத்துவ தீவிரவாத அமைப்புகளும் மார்க்சியத்தை எதிர்க்கின்றனர்.

இதற்குக் காரணம், மார்க்சியம் மத எதிர்ப்பு தத்துவம் என்கிற கொச்சையான புரிதல்; அத்துடன், முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கு மத வேறுபாடின்றி சுரண்டப்படும் வர்க்கங்களை மார்க்சியம் ஒன்று சேர்க்கிறது இதற்காகவும் மத தீவிரவாதிகள் மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள்.

மத அடையாளம் சார்ந்த தீவிரவாத கொள்கை அடிப்படையில் மக்களை ஒன்று சேர்க்க வர்க்க ஒற்றுமை நிகழ்ச்சி நிரல் என்றுமே தடையாக இருந்திடும்.

ஆனால் மானுட விடுதலைக்கு தேவையானது வர்க்க ஒற்றுமையே. இந்த உண்மையை மார்க்சியம் என்றும் உயர்த்திப் பிடிக்கிறது.

‘தொழிலாளி வர்க்கம் புரட்சிகரமானதாக இருக்க வேண்டும்; இல்லாவிடில் அது ஒன்றும் இல்லாமல் வெறும் சுரண்டப்படுகிற வர்க்கமாக மட்டும் நீடிக்கும்’ என்று தொழிலாளி வர்க்கத்திற்கு போதித்தவர் மார்க்ஸ்.

(தொடரும்)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 2 thoughts on “சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 1 – என்.குணசேகரன்”
  1. இந்திய சுதந்திரப் போராட்டத்தையே மதவாதிகளின் தளமாக மாற்ற நடந்த முயற்சியை முறியடித்தது தொழிலாளி வர்க்கத்தின் தொடர் போராட்டங்கள்….

  2. தொடரை முழுவதுமாக படித்த பிறகே கருத்திடல் சிறப்பாக இருக்கும். என்றாலும் தொடக்கம் சிறப்பாக இருக்கிறது. கொச்சையான புரிதல் என்பதைவிட தவறான புரிதல் என்பதே சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *