மார்க்சியம் “மறைந்து போன” தத்துவமா?
என்.குணசேகரன்

“மார்க்சியம் காலாவதியாகி விட்டது; அது தோல்வியடைந்த தத்துவம்” என்றெல்லாம் மார்க்சிய எதிரிகள் பேசுவது வழக்கமானதுதான்.

அநீதிகளின் மொத்த உருவமாக இருக்கும் ஒரு சமூகத்தை ‘சகித்துக்கொண்டு வாழுங்கள்’ என்று மார்க்சியம் போதிக்கவில்லை; சில ஒழுக்க போதனைகளை மேலோட்டமாக சொல்லி விட்டுப் போகிற தத்துவமாகவும் அது இருந்ததில்லை; மாறாக, அநீதியான, சுரண்டல் சமூகத்தை அடியோடு மாற்றும் கடமையை மார்க்சியம் பேசுகிறது.

இதனால், இதர தத்துவங்களை விட மாற்றத்திற்கான தத்துவமான மார்க்சியத்தின் மீது கடும் எதிர்ப்பு, காட்டாற்று வெள்ளமாக இருந்து வருகிறது. ஆளும், மேல்தட்டு வர்க்கங்களின் இந்த எதிர்ப்பாற்றில் எதிர்நீச்சலடித்து மார்க்சியம் முன்னேறி வருகிறது.

தமிழக ஆளுநர் மார்க்சியம் மடிந்து போன தத்துவம் (“dead “) என்று பேசினார். அது மட்டுமல்ல; மார்க்சியம் மறைந்து போன (“gone”) தத்துவம் என்றும் புறக்கணிக்கப்பட்ட தத்துவம் (“abandoned “) என்றும் தாக்குதல்களை தனது உரையில் அடுக்கிக் கொண்டே சென்றார்.

வேடிக்கை என்னவென்றால் ‘இறந்து போனது’ என்று அவர் கருதுகிற தத்துவத்தை அவர் வலிந்து வலிந்து மறுத்துப் பேசியதுதான்.

மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் இதழில் எழுதிய கட்டுரைகளைக் குறிப்பிட்டு அவர் ‘விளக்கங்கள்’ அளித்தார். மார்க்சிசம் மடிந்து போன தத்துவம் என்று கருதுகிற ஆளுநர் “மடிந்து போன, மறைந்து போன” தத்துவத்தின் ஆசிரியர் எழுதிய எழுத்துக்களைப் பற்றி எதற்காக இவ்வளவு பேச வேண்டும்? மார்க்சின் எழுத்துக்களை சிரமப்பட்டு வரிக்கு வரி விளக்கி மறுக்க வேண்டிய அவசியம் என்ன?

இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்; மார்க்சியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னமும் மக்கள் சிந்தனையை கவ்விப் பிடிக்கும் தத்துவமாக அது விளங்குகிறது. இந்த உண்மை காரணமாகவே, தமிழக ஆளுநர் போன்ற மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மார்க்சின் எழுத்துக்களை மேலோட்டமாக வாசித்து, அவதூறு செய்கின்றனர்.

மார்க்சிசம் தழைத்த நாடுகளிலேயே அதனை மக்கள் புறக்கணித்து விட்டதாகவும் அங்கெல்லாம் மார்க்சிஸ்ட்கள் என்று யாருமில்லை என்றும் போகிற போக்கில் ஆளுநர் கூறுகின்றார். சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை மையமாக வைத்துத்தான் இந்தக் கருத்தை அவர் கூறுகிறார். ஆக, அவரது உரையின் நோக்கம் மார்க்சிய தத்துவம் புறக்கணிக்க வேண்டிய தத்துவம் என்ற கருத்தை பிரச்சாரம் செய்வதுதான்.

இதேபோன்று, தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் தோல்வியடைகிற போதெல்லாம் மார்க்சியத்திற்கு எதிர்காலம் இல்லை என்று பலர் பேசுவதுண்டு. மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்ததை முன்வைத்து மார்க்சியம் இந்தியாவில் நிராகரிக்கப்பட்டது என்று பலர் பேசி வருகின்றனர்.

தொடரும் வரலாறும், மார்க்சியமும்

மானுட வரலாற்றில் முற்போக்கு மாற்றங்களை கொண்டு வந்த பல புரட்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. 1789-இல் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சி, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அது, நிலப்பிரபுக்கள், மன்னர்கள் ஆதிக்கம் செலுத்திய அன்றைய பிரான்சில் எழுந்த மாபெரும் புரட்சி.

அந்தப் புரட்சியின் போது “அனைத்து மக்களும் சமம்” என்று சமத்துவ இலட்சியத்தை மக்கள் முழங்கினர். “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் புரட்சிகரமான முறையில் ஆளுகிற கூட்டத்தை வீழ்த்தினர்.

அடிமைத்தனமும், மூடத்தனமும், அநீதிகளும் நிலவிய அன்றைய சமூகத்தில் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற இலட்சிய முழக்கங்கள் மிகப் பெரிய முன்னேற்றமாக திகழ்ந்தன. ஆனால், பிரெஞ்சு புரட்சி முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.

அதன் காரணமாக, அந்தப் புரட்சி முன்வைத்த ஜனநாயக முழக்கங்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவது சரியானதா? தமிழக ஆளுநர் வெளிப்படையாக அவ்வாறு சொல்வாரா?

இன்று உலக நாடுகளில் ஜனநாயக உணர்வும் ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கங்களும் வளர்ந்துள்ளன. வாக்குரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் சட்ட அமைப்புகள், ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. ஜனநாயக சட்டங்கள் அரசாங்கங்களை வழிநடத்தும் நெறிமுறைகளாக மாறியுள்ளன. ஜனநாயக மீறல்கள் பல நடக்கிற போது மக்களின் எதிர்ப்பியக்கங்களும் நடக்கின்றன.

இதற்கெல்லாம் அடித்தளமிட்டது பிரெஞ்சு புரட்சியும், 18,19-ஆம் நூற்றாண்டுகளில் உலகின் பல பகுதிகளில் நடந்த மக்கள் புரட்சிகளும்தான். பிரெஞ்சு புரட்சி முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தாலும், மானுட வரலாற்றை சமத்துவ, ஜனநாயக இலக்குகளை நோக்கி செல்வதற்கான உந்துதலை பிரெஞ்சு புரட்சி அளித்துள்ளது.

ஆனால், வரலாற்றின் இயக்கம் அத்துடன் முடிவடையவில்லை. பிரெஞ்சு புரட்சி எட்டாத இலக்குகளை அடைய வேண்டிய தேவை நீடிக்கிறது. லெனின் எழுதினார். “பிரெஞ்சு புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றை நுணுகிப் பயிலும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமான புரட்சி என்று ஏற்றுக் கொள்வார்கள். இந்த பிரெஞ்சு புரட்சி முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டது.”

நிலப்பிரப்புக்கள், மன்னர்களின் ஆட்சியை பிரஞ்சு புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. எனினும் முதலாளித்துவம் அதிகாரத்தில் அரங்கேறும் நிலை ஏற்பட்டது. பெரும் சொத்து படைத்த சிறு கூட்டம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டுகிற சமூக அமைப்பு உலகில் நிறுவப்பட்டது. எனவே பிரெஞ்சு புரட்சியின் சமத்துவ இலக்குகளை எட்டுகிற மாற்றங்கள் மானுடத் தேவையாக நீடிக்கின்றன. இதற்கு மார்க்சியம் சரியான தத்துவமாக பயன்படுகிறது.

பிரெஞ்சு புரட்சியின் போது, 1791-ல் குடிமக்களின் உரிமைப் பிரகடனம் என்ற பிரசித்தி பெற்ற ஜனநாயக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே போன்று ஒரு பிரகடனத்தை வியட்நாம் புரட்சியாளர்கள் ஹோசி மின் தலைமையில் காலனிய ஆட்சிக்கு எதிராக போராடிய போது 1945-ல் வியட்நாம் விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். இது வியட்நாமில் கம்யூனிஸ்ட்கள் சோசலிச வெற்றியை சாதிக்க இட்டுச் சென்றது. மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் 1917-ல் நடந்த ரஷிய சோசலிசப் புரட்சி சாதித்தது. இவ்வாறு வரலாறு தொடர்வதை விளக்கிக் கொண்டே போகலாம்.

சமத்துவ இலட்சியங்களை ஜீரணிக்க முடியாதவர்கள், வரலாற்றைத் திரித்து மாற்றங்களுக்கான பெரு முயற்சிகளுக்கு ஏற்பட்ட தோல்விகளை கொண்டாடுவார்கள். உலக வரலாற்றையும், மார்க்சிய தத்துவ வரலாற்றையும் ஒரு சேர ஆய்வு செய்கிறவர்கள், மார்க்சியம் தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி வருகிறது என்பதையும், இடையில் ஏற்படுவதெல்லாம் தற்காலிக சறுக்கல்கள் என்பதையும் அறிவார்கள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 2 – என்.குணசேகரன்”
  1. ஆளுநனியின் பேச்சுக்கு சரியான பதில் இக்கட்டுரை சொல்கிறது. முரண்பாடுகள் வெளியே வந்தால்தான் வளர்ச்சி காணமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *