Samakaala Nadappukalil Marksiyam Series 4 - N. Gunasekaran சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 4 - என்.குணசேகரன்மார்க்சியம் “தூண்டி விடும்” தத்துவமா?
என்.குணசேகரன் 

“எங்களுக்கு வேறு வழி இல்லை..
“எங்களது ஊதியம் மிகவும் குறைவு;.விலைவாசியோ மிக அதிகம்;”
“.. அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்துள்ள இந்த  வாய்ப்பைப்  பயன்படுத்தி,எங்களது ஒன்றுபட்ட போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்…
“அரசாங்கத்தை அடிபணிய வைப்போம்'”…
இது பிரான்சில், பாரிஸ் தெருக்களில் குவிந்த தொழிலாளர்களின் போராட்டக் குரல்கள்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மேற்கொண்டு வரும் ஓய்வூதியவெட்டு உள்ளிட்ட பொருளாதார தாக்குதல்களுக்கு எதிராக வரலாறு காணாத அளவில் 35 லட்சம் தொழிலாளர்கள் திரண்டு பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இன்று,உலகின் பல பகுதிகளில் ஆளுகிறவர்களின் வாழ்வாதார பறிப்புக்  கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் வலுமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தியாவிலும் ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து லட்சக்கணக்கான தொழிலாளர்களும்,விவசாயிகளும் மாற்று கொள்கை முழக்கங்களை எழுப்பி,டெல்லியில் சங்கமிக்க தயாராகி வருகின்றனர்.

பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கிட வரிச் சலுகைகள், கடன் தள்ளுபடி,பங்கு மார்க்கெட் தில்லுமுல்லுகள்,கடும் உழைப்பு சுரண்டல் என அனைத்து முறைகேடுகளுக்கும் அரசாங்கங்கள் வழிவகை செய்கின்றன.இதன் நேரடி விளைவாக,பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீளமுடியாத வாழ்வாதார நெருக்கடியில் சிக்குண்டு தவிக்கின்றனர்.

தீராத முரண்பாடு
ஆளும் கூட்டங்களுக்கும் ,உழைக்கும் மக்களுக்குமான இந்த முரண்பாடு தீராத ஒன்றாக நீடித்து வருகிறது.இது,மோதலுக்கும்,போராட்டங்களுக்குமான சூழலை ஏற்படுத்துகிறது.சமூகத்தில் நிலவும் இந்த முரண்பாடுதான் தவிர்க்க இயலாத வகையில் போரட்டப் பாதைக்கு  உழைக்கும் மக்களை உந்தித் தள்ளுகிறது.

யார் தூண்டி விட்டாலும், தூண்டி விடவில்லை என்றாலும் தொடர்ந்து போராட்டமும் எதிர்ப்பும் அன்றாட நிகழ்வுகளாக நிகழ்ந்து வருகின்றன.இதில் வெறுப்பும்,கொதிப்பும்,  கோபமும் அடைபவர்கள் ஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்களே.

இந்தப் பின்னணியில்தான் தமிழக ஆளுநர் வெளிப்படுத்திய ஒரு கருத்தினை பரிசீலிக்க வேண்டும்.அவர்  பேசுகிறபோது,”இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையில் மார்க்சியக் கோட்பாடு நிரந்தரப் பகைமைகளை உருவாக்கிவிடுகிறது” என்றும், மார்க்சியம், சமூகத்தில் நிரந்தர மோதலை தூண்டிவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

மார்க்சிற்கு முன்பே, வரலாறு நெடுகிலும் முரண்பாடுகளும், மோதலும் இருந்து வந்துள்ளன.இந்த வரலாற்றை மறைக்க இயலாது.

உலக வரலாற்றில் மனிதர்கள் மனிதர்களுக்கு அடிமையாக இருந்த காலத்தில் அடிமைகள், எஜமானர்களுக்கு எதிராக போராடி இருக்கிறார்கள்.கி.மு. 71-73 காலங்களில் ஸ்பார்டகஸ் தலைமையில் நடந்த அடிமைகளின் போராட்ட வரலாறே இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. 

இந்தியா உள்ளிட்டு எல்லா நாடுகளிலும் நிலப்பிரபுக்கள்,மன்னர்கள் ஆதிக்கத்திற்கு எதிராக பண்ணை அடிமைகளும் விவசாயிகளும் போராடி இருக்கிறார்கள்.

இதனை எல்லாம் மார்க்ஸ் தூண்டிவிட்டார் என்று தமிழக ஆளுநர் சொல்வாரா?

வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டை மறுப்பவர்கள் மாற்றத்தை ஏற்காதவர்கள்; மனிதரை மனிதர் அடிமையாக்கும் சமூகமுறை மாறிடக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள்;அந்த அடிமை,சுரண்டல் முறையை மனதார  ஆதரிப்பவர்கள்.

சுரண்டல் கொடுமைகளிலிருந்து பெரும்பான்மை மக்கள் விடுதலை அடைகிற மானுட விடுதலை லட்சியத்தை அடியோடு அவர்கள் எதிர்க்கின்றனர். எனினும், விடுதலை நோக்கி மானுடம் பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது. 

இந்திய ரிஷிகள்
தமிழக ஆளுநர் பேசுகிற கூட்டங்களில் ஒரு கருத்தை இடைவிடாமல் கூறிவந்துள்ளார்.’இந்தியாவை உருவாக்கியது, ரிஷிகள் முனிவர்களின் சிந்தனைதான்’ என்று பேசுவது அவரது வழக்கம்.

சார்வாகம், உலோகாயதம், பூதவாதம் என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிற பொருள் முதல்வாத சிந்தனையை அன்றைக்கு பரப்பி வந்தவர்களும் முனிவர்கள்தான். அவர்கள் கடவுள் மறுப்பு நாத்திகக் கருத்துக்களை பரப்பி வந்தள்ளனர். ஆளுநர் இவர்களையெல்லாம் ஞானிகளாக கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்! ஏன் என்றால் இவர்கள் வர்ணாஸ்ரமம், அடிமைத்தனம், கடுமையான  வன்முறையடன் கூடிய ஒடுக்குமுறை கொண்ட சமூக ஒழுங்கினை எதிர்த்தவர்கள். 

மார்க்ஸ் நவீன காலத்தில் இயக்கவியல் பொருள்முதல் வாதம் என்கிற வளர்ச்சி பெற்ற பொருள்முதல் வாதத்தை உருவாக்கினார். ஆனால், அன்றைய தொன்மைக்காலத்தில் பொருள் முதல்வாத இயக்கவியல் கூறுகள் கொண்ட சிந்தனைகளை இந்திய பொருள் முதல்வாத தத்துவ ஞானிகள் பரப்பி வந்தனர். தமிழகத்தில் பூதவாதிகள் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். இதற்கான குறிப்பு மணிமேகலை காப்பியத்தில் வருகிறது.

இன்று மார்க்சியத்தை எதிரிகள் வேட்டையாடுவது போன்றே அன்றைக்கும் அவர்கள் எதிர்ப்புக்கும், கேலிக்கும், சமூக புறக்கணிப்புக்கும் ஆளானார்கள். ஆனால் அவர்கள் சிந்தனை இந்திய சிந்தனையின் பிரிக்க முடியாத அங்கமாக அமைந்துள்ளது. அவர்களது குரல்களும் போராட்ட, கலகக் குரல்களே. அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல்கள், அவை. எனவே ,இந்திய வரலாறு நெடுக வர்க்கப் போராட்டம் கருத்தியல் துறையிலும் களத்திலும் நடந்து வந்துள்ளது.

 1883-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரையில் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்:

“அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும்,அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. 

 “ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது…”

பகுத்தறிவு, அறிவியல் சார்ந்த இந்த சித்தரிப்பு இன்றைய சமகால நடப்புகளிலும் தெட்டத் தெளிவாக வெளிப்படுகிறது.

மேலும், இந்த வர்க்க போராட்டத்தின் எதிர்காலத்தைப் எங்கல்ஸ் எழுதுகிறார்:

…..இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்.”

மார்க்சிய எதிரிகள் எவ்வளவு புலம்பினாலும், சுரண்டல் விடுதலையை நோக்கி, பாட்டாளி வர்க்கம் முன்னேறுவதை தடுத்து நிறுத்த இயலாது.

( தொடரும்)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 4 – என்.குணசேகரன்”
  1. முனி காலத்திலும் முற்போக்கும், வர்க்க போக்கும் இருந்தன என்பதையும், ஆளும் வர்க்கம் தனக்கு தோதான அம்சங்களை எடுதாளுகின்றன, அதில் ஒரு பகுதிதான் ஆளுநர் ரவியின் அடாவடி பேச்சு என்பதனை பொருத்தமாக விளக்கி உள்ளீர் தோழர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *