எது வன்முறை தத்துவம்?
என்.குணசேகரன்

ஒரு நாடு 58 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறை, ‘ஆமாம்; தவறு நடந்துவிட்டது’ என்று தற்போது ஏற்றுக் கொண்ட வேதனையான வினோதம் நடந்துள்ளது.

அரை நூற்றாண்டு கடந்த பிறகு தவறை ஒப்புக் கொண்ட அந்த நாடு இந்தோனேசியா. 1965-66 ஆண்டுகளில் அன்றைய இந்தோனேசிய அரசாங்கமும், இராணுவமும் அமெரிக்காவின் உதவியோடு, கம்யூனிஸ்டுகள் மீது கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதை முன்னின்று அரங்கேற்றிய அமெரிக்க சி.ஐ.ஏ. நிறுவனமே “இருபதாம் நூற்றாண்டில் நடந்த மிக மோசமான படுகொலை” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

தற்போதைய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ 12 நிகழ்வுகளை குறிப்பிட்டு, அதில் கம்யூனிஸ்ட் படுகொலை நிகழ்வையும் சேர்த்து,” மிக மோசமான மனித உரிமை மீறல்; மிக வருத்தத்திற்குரிய நிகழ்வு” என்று தெரிவித்தார். “வருத்தம்” தெரிவிப்பதற்கே அரை நூற்றாண்டு ஆகியிருக்கிறது!

அதிலும் பத்தோடு பதினொன்றாக கம்யூனிஸ்டுகள் படுகொலையை இணைத்து வருத்தம் தெரிவித்தனர். இதுவும் மக்களின் தொடர் வற்புறுத்தலால்தான் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படுகொலைகளை நிகழ்த்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் அனைத்து வகைகளிலும் நேரடியாக ஊக்கமளித்தது. அமெரிக்கப் பெரும் கார்ப்பரேட் மூலதன நலன்களை எதிர்ப்பவர்களை அழித்து விடுவோம் என்ற அச்சுறுத்தலை உலகிற்கு தெரிவிக்க இந்த இந்தோனேசிய படுகொலை அமெரிக்காவிற்கு பயன்பட்டது.

இந்தோனேசியா மட்டுமல்ல, உலகம் முழுக்க இந்த இரத்த வேட்டையை அமெரிக்க முதலாளித்துவம் நிகழ்த்தி உள்ளது. குறிப்பாக, 1970-களில் தென் அமெரிக்க நாடுகள் மீது ஒடுக்குமுறையும், வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டன. அர்ஜென்டினா, பொலிவியா, பரகுவே, உருகுவே, பிரேசில், சிலி என பல நாடுகளில் இதுபோன்ற கொடூரங்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.

மார்க்சியத்தின் மீது பழி

வன்முறையையும்,முதலாளித்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. வன்முறை எப்போதும் ஆளும் உடைமை வர்க்கத்திடமிருந்தே வருகிறது.இது வரலாறு எடுத்துரைக்கும் பாடம். ஒரு நாட்டின் வளங்களை அபகரித்து, உழைப்புச் சுரண்டலை அதிகரித்து,தங்களது மூலதனத்தை பெருக்கிக் கொள்ள வன்முறை ஆயுதம் முதலாளித்துவத்திற்கு அவசியமானதாக உள்ளது.

உண்மை இவ்வாறிருக்கும்போது, மார்க்சியம் வன்முறையை தூண்டும் தத்துவம் என்ற அபத்தமான கருத்தை முதலாளித்துவம் ஆழமாக பொது சிந்தனையில் பதிவு செய்துள்ளது.தங்களது வன்முறையை மறைக்க மார்க்சியத்தின் மீது பழி சுமத்துவது முதலாளித்துவ,ஆளும் வர்க்கங்களின் வாடிக்கை.

தொழிலாளர்களின் போராட்டங்கள் நடக்கும்போது மார்க்சியம் தூண்டி விடுவதாக மார்க்சிய எதிர்ப்பாளர்கள் கூறுவது வழக்கமான ஒன்று.இந்த வாதத்தை நீட்டி முழக்கி, மார்க்சியம் வன்முறை தத்துவம் என்று அவர்கள் பேசுவதுண்டு.ஒரு பலனை அடைவதற்கு எந்த வழிமுறைகளையும் பின்பற்றக்கூடிய தத்துவம் மார்க்சியம் என்று அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழக ஆளுநர் மார்க்சியம், வர்க்கப் பகைமைகளை ஏற்படுத்தி, மோதலை தூண்டி விடுகிறது என்றார். மார்க்சியம் வன்முறை தத்துவம் என்கிற கருத்தையே அவர் புகுத்த முயற்சித்துள்ளார்.மார்க்சியம் வன்முறையை தூண்டுகிற தத்துவம் என்கிற கருத்தினை ஏராளமான அறிவுஜீவிகளும் தங்களை அறியாமல் விமர்சனமின்றி உள்வாங்கிக் கொண்டு பேசுகின்றனர்.

இப்படி கூறுகிறவர்கள் மார்க்ஸ் வன்முறையை தூண்டினார் என்பதற்கான ஆதாரங்களை முன்வைப்பதில்லை; மார்க்சின் மேற்கோள் எதையும் எப்போதும் அவர்கள் அளித்ததில்லை.இந்த கருத்து ஆழமாக வேரூன்றி இருப்பதற்கு முக்கிய காரணம் முதலாளித்துவ அறிவுத்துறையினர்தான்.

முதலாளித்துவம் ஈவிரக்கமற்றது

வரலாற்றில் மனிதர்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவிப்பதிலும், கொடூரமான அரசு அடக்குமுறையை ஏவி, போராட்டங்களை ஒடுக்குவதிலும் முதலாளித்துவம்தான் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து வந்துள்ளது. இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் கூற முடியும்.

தங்களது இலாப வேட்டைக்காக உலகைக் கூறு போட்டுக் கொள்ள வேண்டுமென்கிற வெறித்தனத்தில்தான்,முதலாம் உலகப் போர் நடந்தது.இதில்

கோடிக்கணக்கான மக்கள் ,குறிப்பாக,உழைக்கும் மக்கள்,உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரிலும் இது நடந்தது.

இரண்டாம் உலகப் போர் முடியும் கட்டத்தில், ஹிரோஷிமா,நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்தியது.ஹிரோஷிமாவில் வாழ்ந்த 3,50,000 பேரில், சுமார் 140,000 பேரும், நாகசாகியில் குறைந்தது 74 ஆயிரம் பேரும் மாண்டு போயினர். முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத குணம் வன்முறை என்பதற்கான இரத்த சாட்சியமாக இந்த அணுகுண்டு வீச்சு அமைந்தது.

மார்க்சியத்தை மாய்ந்து மாய்ந்து எதிர்ப்பவர்கள் ஏன் இந்த வரலாற்றுக் கொடூரங்களை பேசுவதில்லை? ஏன் இதை மறைக்க முயல்கிறார்கள்?ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவை நியாயம்தான் என்று அமெரிக்க மக்களையே அமெரிக்கா நம்ப வைத்துள்ளது ‘நல்ல விளைவு ஏற்படுத்துவதற்காகதான் இந்த பேரழிவு’ என்று அவர்களது ஊடக, பிரச்சார பலத்தை பயன்படுத்தி, மக்களை நம்ப வைத்துள்ளனர்.

ஈராக்கில் அமெரிக்கா தொடுத்த போர்களும் அழிவை ஏற்படுத்தியது.போருக்கு முன்னதாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் மருத்துவ வசதி கிடைக்காமல் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.இதனைப் பற்றி அன்றைய ஐக்கிய நாட்டு அவைக்கான அமெரிக்க தூதர் மேடெலைன் அல்பிரட் என்ற பெண்மணியிடம் நிருபர்கள் கேட்டபோது “இந்த விலை கொடுக்க வேண்டி வந்தது; இது தேவையானதுதான் (Worth it) “என்று அலட்சியமாக குறிப்பிட்டார்.

தங்களுடைய சொத்து, மூலதன நலனைப் பாதுகாக்க எந்த வழிமுறையையும் ஈவிரக்கமின்றி மூர்க்கத்தனமாக பின்பற்றக் கூடியது முதலாளித்துவம்.

ஆனால். போராடுகிற உழைக்கும் வர்க்கத்தையும் அவர்களுக்கு துணை நிற்கும் மார்க்சிய தத்துவத்தையும் வன்முறை தத்துவம் என்று பொய் பிரச்சாரத்தை மிகவும் திறமையாக செய்து வருகின்றனர்.இருப்பினும், மார்க்சிய தத்துவத்தை பயில்கிற இளம் தலைமுறை இந்த பொய் பிரச்சாரத்தை நம்பிடாமல் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். முதலாளித்துவத்தின் தன்மைகளை உணர்ந்து, அதிலிருந்து இந்த உலகம் மீள்வதுதான் இந்த உலகை பொன்னுலகமாக மாற்றுவதற்கான வழி என்பதை உழைக்கும் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

வன்முறை, பலாத்காரம், சர்வாதிகாரம், பாசிசம், ஜனநாயக அழித்தொழிப்பு அத்துணைக்கும் மொத்த உருவம் முதலாளித்துவமே!

மார்க்சிய தத்துவ கோட்பாடுகளில் மகத்தான மனிதநேயமே அடிநாதமாக விளங்குகிறது. மார்க்சியம் உயர்த்திப் பிடிக்கும் சோசலிச உலகில்தான் உண்மையான அமைதியும், சமாதானமும் நிலவும்.

(தொடரும்)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 5 – என்.குணசேகரன்”
  1. முதலாளித்துவத்தின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டியுள்ளது கட்டுரை.
    தற்கால நிகழ்வுகளுடன் பொருத்திய இருப்பது கட்டுரையாளரின் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *