தொடர் 34: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 34: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

 திடக்கழிவு மேலாண்மை பிரச்சினை, தீரவே தீராதா!!?

கழிவுகள் என்றும் சரியான முறையில் மேலாண்மை செய்வது மட்டும், ஒரு ஊரில், நாட்டில் சுகாதார, ஆரோக்கிய நிலை மேம்பட மேற்கொள்ள, அரசுத் துறைகளும், பொது மக்களும் எடுக்கும் மறைமுக நடவடிக்கை ஆகும். எனினும் நெடுங்காலமாக நம் நாட்டில் குப்பைகள், அகற்றவும் மேலாண்மை செய்வதும் குறிப்பிட்ட துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் மக்கள் மட்டுமே செய்யவேண்டும் என பலரும் எண்ணிவருகின்றனர். உண்மையில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, நம் வாழ்க்கையில் பல்வேறு பொருட்கள் உருவாக்கி, பயன்படுத்தி வரும் நிலையினை கொண்டு வந்துள்ளது. அந்த பொருட்கள் பயன்பாட்டுக்கு பின்னர், கழிவாக மாறுகையில், மக்கும், மக்காத தன்மை கொண்ட கழிவுகளாக ஆகிவிடுகிறது. மக்கும் குப்பை உரம் ஆக மாற்றம் பெற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை செயல்பாடுகள் எடுத்து வருகிறது. மக்காததிடக் கழிவுகள் நிலை, தொடர்ந்து மேலாண்மை செய்வது கடினமாக அரசுக்கு இருப்பது தெளிவாக தெரிகிறது.

திடக்கழிவு அல்லது குப்பை மேலாண்மை மிகக் கடினமான, தீர்வு காணும் பிரச்சனை என்பது நம் மாநகரங்கள், நடுத்தர நகரங்களிலும் தோற்றம் அளித்து வருவதை நாம்நேரடியாக கண்டு வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு பல நல்ல, திட்டங்கள் “தூய்மை இந்தியா திட்டம் “(SWACH BHARATH MISSION )என்ற பெயரில் துவக்கி, பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல் திட்டங்களை உள்ளூர் நிர்வாகம் மூலமாக நாடு முழுவதும் நிறைவேற்ற பாடுபடுகிறது. எனினும் குறிப்பிட்ட நல்ல மாற்றங்கள், மிக, மிக குறைவுதான்!

2024 மார்ச் 31 தேதிக்குள் பெரும் நகரங்களை தூய்மை ஆக மிளிர வைக்க முயற்சிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.  நெடுங்காலமாக, ஒவ்வொரு நகரத்திலும் குப்பை கிடங்குகளில் குவிந்து கிடக்கும், கழிவுகளை அறிவியல் பூர்வ முறையில் அகற்ற நல்ல தீர்வு பராமரிப்பு முறைகள் பின்பற்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப் படுகிறது. இவ்வாறு குப்பை குவிந்து கிடப்பதால், நாடு முழுவதும் 15000 ஹெக்டர் நகர நிலங்கள் எவ்வித பயன்பாடு இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யும் நிலை உள்ளது. இங்கும் 160 மில்லியன் டன், கழிவுகள் அடைந்து கிடக்கும் அவல நிலை, உண்மையில் வேதனை! ஒவ்வொரு ஆண்டும் 1250ஹெக்டர் நிலம், குப்பை  குவித்து வைக்கும் காரணத்தினால்  நாம் இழந்து போகிறோம் என்ற தகவலை மத்திய பொது சுகாதார சுற்று சூழல் பொறியியல் நிறுவனம் மற்றும் ஒன்றிய நகர வீட்டு வசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலங்கள் குப்பைகளால் நிரப்பப் பட்டால், அதன் வழியாக நல்ல வளம் கொண்ட நிலம், மேற்பரப்பு நீர் ஆதாரம், நிலத்தடி நீர் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டு நச்சு பொருள், புற்றுநோய் காரணிகள் உற்பத்தி ஆகிறது. குறிப்பாக கன உலோகம், ஆர்சனிக்,காட்மியம், குரோமியம், தாமிரம், பாதரசம் ஆகியவை மனித உள்ளுறுப்புகள்,நோய்களால் தொற்றிக்கொள்ள  வாய்ப்புகள் உருவாக்குவது நிரூபிக்கப் பட்டுள்ளது.உலக சுகாதார நிறுவனம் (WHO)புற்று நோய்கள் உருவாக, நிலத்தடி நீர் மாசுக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளது.

 இந்திய அறிவியல் தொழில் ஆய்வு குழுமம் (CSIR ), மற்றும் தேசிய சுற்று சூழல் ஆராய்ச்சி நிறுவனம்(NEERI இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், குப்பை மேலாண்மை பிரச்சனை அதிக நிதி இழப்பு ஏற்படுத்தும் நிலையினை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது. ஆம்!ஹரியானா மாநிலத்தில், குருகிராம் பகுதியில் உள்ள பண்டவரி குப்பை கிடங்கு செயல் பாட்டில் காற்று, நீர், மண் மாசு பாடு போன்றவற்றால் ரூபாய் 148 கோடி இழப்பு ஏற்படுவதும், டெல்லியில் உள்ள, பல்ஸ்வா, காசிப்பூர்,ஹொக்லா, ஆகிய இடங்களில் உள்ள குப்பை மேடுகள், காரணமாக 450 ரூபாய் கோடி இழப்பு என்றும், டெல்லி ஈட்ட, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் NEERI இணைந்து மதிப்பீடு, செய்து அறிவித்துள்ளது. நம் நாட்டில், ஒரு நாளில்,80000 டன் குப்பை கழிவு, எவ்வித பராமரிப்பு, மாற்றம் இன்றி கவனிக்க இயலாத நிலையில் விடப்படுகிறது.2019-20 ஆம் ஆண்டுகளில்,1,50000 டன் திட கழிவு வெளியேற்றம் செய்து, அதில் சேகரிப்பு செய்த 97%அளவில்,47%மட்டும் பராமரிப்பு செய்யும் நிலை இருந்த தகவல் வருத்தம் அளிக்கிறது.27% குப்பைகள் மேடு என்ற கிடங்குகளில்தேங்கி உள்ளது. மீதி கழிவுகள் பற்றிய ஆதார பூர்வ தரவு இல்லை. மேற்கண்ட தகவல் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய ஆண்டு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

40,500 டன் குப்பை சேகரிக்கப்படவில்லை.. பல உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்கும் கழிவுகள், ஊர்களின் எல்லையில் ஆங்காங்கே, எவ்வித பராமரிப்பு இன்றி கொட்டப்படுகிறது. இதற்கு கணக்கீடு இல்லை. மறு சுழற்சி செயல்பாடுகள் மேற்கொள்ளப்படாத இந்த குப்பை, நீர் நிலைகள், வெற்று வீட்டு மனைகள், புறம்போக்கு நிலங்களில் காணப்படுகிற நிலை நாம் அனைவரும் அறிவோம். இவற்றால் நோய்கள் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. “தூய்மை இந்தியா “திட்டம் அதிக விழிப்புணர்வு செயல் பாடுகள் ஒரு புறம் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்!, ஆனால் ஒவ்வொரு நாளும் குப்பை அதிகம் ஆகும் நிலை, அதனை பராமரிப்பு செய்வது கடின நிலை ஆகும். இந்த திட்டப்படி, குப்பை மேலாண்மை தீர்வு மற்றும் அதற்குரிய மேலாண்மை செயல்பாடுகள் மேற்கொள்ள உதவும் கருவிகள், முறைகள் மேம்பாடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

இந்தியாவில் உள்ள 3184குப்பை கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 234 இடங்கள் மட்டும் மீட்டு எடுக்கப்படும் நல்ல நிலையில் அமைந்துள்ளன.8 இடங்களில் மட்டும் அறிவியல் பூர்வ மேலாண்மை நடைபெறுகிறது. “தூய்மை இந்தியா “திட்ட தகவல் படி 1845 குப்பை கிடங்கு நிலைகள் பற்றி, குறிப்பாக நகரங்களில் உள்ள கிடங்குகள், குப்பை பராமரிப்பு அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்துள்ளன. அதன் படி 14 மாநிலங்களில் 10%சதவீதம் அளவிற்கு கூட இப்பணிகளில் எவ்வித முன்னேற்ற நிலை காண்பிக்க இயலாதபடி இருப்பது வருத்தம் மற்றும் வேதனை ஆகும். மேற்கண்ட தகவல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் வரை, ஒன்றிய வீட்டு வசதி நகர்புற மேம்பாடு அமைச்சக மதிப்பீட்டு அறிக்கை சார்ந்தவை ஆகும்.

குப்பை மேடு பராமரிப்பு, மறு சுழற்சி தீர்வுகள் அறிவியல் முறையில் இரண்டு வெவ்வேறு செய்முறைகளில், மேற்கொள்ள இயலும்.

1. உயிரி மூடு முறை (BIO CAPPING)

2.உயிரி அகழ்தல் (BIO MINING ), என்ற இரு முறைகள் மூலம் குப்பை மேலாண்மை செய்து வர இயலும்.

முதல் முறையில் குப்பைகளை எவ்வித கசிவு இல்லாத  அடர் பாலி எதிலீன்  போர்வை கொண்டு மூடுதல் ஆகும். முன்னதாக, சரளை கற்கள், மண், பெரு கற்கள் போன்ற அடுக்குகளை கழிவுகள் மேல் கொட்டி போர்வை மூலம் மூடுவது ஆகும். இது எளிய முறை, ஆனால் தீய விளைவு அதிகம் வரும் வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டாவது முறையில், குப்பை மேடுகளில் நுண்ணுயிர்கள் மூலம் அவற்றில் உள்ள மதிப்புள்ள உலோகங்கள் மற்றும் மறு சுழற்சி பொருட்கள் மீட்டு எடுக்க இயலும். அதன் மூலம் உள்ளூர் நிர்வாகம் வருவாய் பெருக்க முடியும். அகழ்தல், நிலைப்படுத்தல், பராமரிப்பு, பிரித்தல், மீட்பு என பல்வேறு நிலைகள் கொண்ட முறை நீடித்த நிலைப்பாடு கொண்ட சிறப்பு, சூழல் உகந்த முறை ஆகும்.திடக்கழிவு மேலாண்மை விதிகள் -2016 ஆம் ஆண்டின் படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் (NATIONAL GREEN TRIBUNAL )பல்வேறு மாநிலங்களின் அரசுகளை “உயிரி அகழ்தல்”முறை மட்டுமே பின்பற்ற அறிவுரைகள் வழங்கி வருகிறது. சில இடங்களில் மட்டும் அப்பகுதி நிலத்துக்கு ஏற்ற வகையில்,”உயிரி மூடுதல் ” முறை மூலம் மேலாண்மை செய்ய இயலும். ஆனால் அந்த மூடுதல்,15 ஆண்டுகளுக்கு குறையாமல் மூடி வைக்க வேண்டும். பின்னர் அங்குள்ள நிலத்தடி நீர்,காற்று மாசு, (குறிப்பாக மீதேன் அளவு )கண்காணிக்க வேண்டும்.

ஆனால் பயோ மைனிங் என்ற அகழ்தல் முறையே சிறந்த ஒன்றாகும். அரசுத் துறைகள் பல முயற்சி செய்தாலும், குப்பைகள் போடுபவர், நிறுவனங்கள் போன்றவற்றை கண்டிக்க, அறிவுரை கூற, அபராதம் விதிக்க NGT என்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்கப் பட்டுள்ளது. NGT அமைப்பு 7 மாநிலங்களிலிருந்து 28180 கோடி ரூபாய், அபராத தொகை நிலுவையில் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, மட்டும் 12,000 கோடி, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் 10000கோடி ரூபாய் அபராதம் கட்டவேண்டும். பஞ்சாப்,2080 கோடி, டெல்லி 900 கோடி ரூபாய், கர்நாடகா 2900 கோடி ரூபாய் ஆகியவை நிலுவை இருப்பது அதிர்ச்சியே! எனினும், அனைத்து மாநில அரசுகளும், சுற்று சூழல் தர நிர்ணயம் கொள்கை, நடைமுறை செயல்பாடுகள் முறையாக தொடர்ந்து கடைபிடிக்கவில்லை என்பது தேசிய பசுமை தீர்ப்பா ணையம்  கூறியுள்ளது. ஆனால் ஆந்திர மாநிலத்தின் சூர்யா பேட் நகர் மற்றும் தமிழ் நாட்டில் நாமக்கல் நகரமும் குப்பை குறைவு பகுதிகளாக, அறிவிக்கபட்டது மகிழ்ச்சி!.

மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து குப்பை அத்து மீறி போடுபவர்களிடம் வசூல் செய்யவேண்டிய அபராதங்கள் முறையாக வசூல் செய்யப் படவில்லை என்பது NGT என்ற அமைப்பின் ஆதங்கம் ஆகும். குப்பை என்பதை,ஒவ்வொரு வீட்டு கழிவு உரம் ஆக,மாற்ற மறுசுழற்சி செய்ய வேண்டியது தனி மனித பொறுப்பு!

அரசுகள் பல திட்டங்கள் வகுத்தாலும், அவர்களின் அறிவுரைக் கேற்ப செயல்பட முயற்சி செய்வது நம் கடமை ஆகும். குப்பை பிரச்சனை சவால் தீர்வு பெற எதிர் கால நகரங்களில் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்!

நம்பிக்கை கொள்வோம்!

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *