கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள்
காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ?
மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது வாழிடம், குடியிருப்பு, வீடு மற்றும் அலுவலகம், பல்வேறு காரணங்களுக்கான கட்டிடங்கள், தேவை என்பதை நாம் அறிவோம்!
அவற்றை உருவாக்க உதவும் சிமெண்ட் என்பது தான் நம் பல்வேறு நகர, மாநகர வளர்ச்சிபெற தற்போதைய நவீன கால அடிப்படை காரணி அல்லவா!? மேலும் கற்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் ஒட்டு பொருள் “சிமெண்ட் “ என்ற வேதிபூச்சு பொருள் உற்பத்தி பற்றியும், அதன் விலையேற்றம் பற்றி நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அவை உற்பத்தி செய்யும் போது, அது தொடர்பான தொழிற்சாலைகள் காற்றில், வளி மண்டலத்தில் வெளியேற்றும் “பசுமைக் குடில் வாயுக்கள் “ உலக வெப்ப மயமாதல் என்ற சூழல் பிரச்சினை அதிகரிக்க
ஒரு முக்கிய காரணி ஆகும்.
சிமெண்ட் உற்பத்தி தொழில், என்பது உலகில் இரண்டாவது மிகப் பெரிய தொழிற்சாலை , பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ் காரணி ஆகும்.உலக சிமெண்ட் மற்றும் காண்கிரீட் சங்கத்தின் கூற்றின் படி, இந்த ஒரு தொழில் மட்டுமே 5-8% சதவீதம் உலக பசுமைக் குடில் வாயுக்கள் (GREEN HOUSE GASES )உமிழ்வதாக தெரிகிறது. ஐக்கிய நாடுகளின் பருவ கால மாற்ற ஆய்வுக் குழு (UNFCC )2016 ஆம் ஆண்டு அறிக்கைப் படி பசுமை குடில் வாயு உமிழ்வில் சிமெண்ட், 5.63% மற்ற தொழில் 3.75%, ஆற்றல் மின் உற்பத்தி 1.88% என்ற அளவில் உள்ளதாக ஒரு அறிக்கையில்தகவல் தெரிவிக்கிறது..உலகில் சீனா நாடு மட்டும் மிக அதிகமாக சிமெண்ட் உற்பத்தியில் 54% அளவிற்கு இருந்து முன்னணி வகிக்கிறது.
நம் இந்திய நாடு 8% மட்டும் உற்பத்தி செய்து இரண்டாம் நிலையில்(2020 ஆண்டின்படி) உள்ளது. மேலும் இந்தியா சாதாரண போர்ட் லேண்ட் சிமெண்ட் மட்டும் 27%,(OPC ), போஸ்சாலோனா போர்ட் லேண்ட் சிமெண்ட் (PPC),65% அளவிலும், போர்ட்லேண்ட் ஸ்லக் சிமெண்ட் (PSC) மற்றும் 1% வேறு வகை சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிலையில் தற்போது தொழிற்சாலைகள் செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்பு கற்கள், ஜிப்சம் என்ற வேதிப்பொருள், எரி சாம்பல், ஸ்லக் கழிவு ஆகியவை கலந்து உருவாக்கப்படுகிறது. சாதாரண OPC போர்ட்லேண்ட் சிமெண்ட் சுண்ணாம்பு மட்டும் கலந்துள்ளது. PPC, PSC போன்ற சிமெண்ட் வகைகளில் சுண்ணாம்புக்கு மாற்றாக தொழிற்சாலை கழிவு, குறிப்பாக எரி சாம்பல் (நிலக்கரி எரித்து மின்சார உற்பத்தி நிலையங்களைலிருந்து) மற்றும் கசடு (SLAG -இரும்பு தொழிற்சாலைகளிலிருந்து) உபயோகித்து உருவாக்குகின்றனர்.
மேலும் PPC, PSC சிமெண்ட் உற்பத்தி மூலம் மிகக் குறைவாக கார்பன் உமிழ்வு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. சாதாரண OPC சிமெண்ட் உற்பத்தியில் இந்நிலை இல்லை. புது தில்லியில் உள்ள கான்வி என்ற மேலாண்மை நிறுவன ஆய்வின் படி, சிமெண்ட் நுகர்வு வளர்ச்சி,6.6% அதிகரித்து வருவதாக தெரிகிறது. 2030 ஆம் ஆண்டில், நம் நாட்டின் சிமெண்ட் தேவை 660மில்லியன் டன்கள் ஆக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
சிமெண்ட் தொழில் மூலம் வரும் GHG கார்பன் உமிழ்வு பெரும்பாலும் (90%) க்லிங்கர் எனப்படும் ஒரு திடப்பொருள் தயாரிப்பு முறையில் மட்டும் ஏற்படுகிறது. களிங்கெர் என்பது சுண்ணாம்பு கற்கள் மூலம் இரண்டு வித எரிப்புகள், 1. சுண்ணாம்பு கால்சினேஷன் 2. அடுத்து நிலக்கரியினை சுண்ணாம்பு மாற்றம் பெற உலையில் எரித்தல், ஆகிய வெவ்வேறு நிலைகளில் உருவாகிறது. மேற்கண்ட எரிப்புகள் அதிகம் கார்பன் உமிழ்கின்றன. 10% உமிழ்வு மின்சாரம் பயன்பாட்டில் ஏற்படுகிறது. டெல்லி, அறிவியல், சுற்று சூழல் ஆய்வு மையம், 2030 ஆண்டுக்குள் வளி மண்டல l கார்பன் குறைப்புக்கு திட்டம் தீட்டி வருகையில்,, நம் நாட்டு சிமெண்ட் உற்பத்தி ஒரு புறம் 660 மில்லியன் டன்கள் ஆகும் என்று முரண்பாடு கொண்ட நிலை சற்று வருத்தம் ஆக உள்ளது. ஏனெனில் அந்த அளவு சிமெண்ட் உற்பத்தி , உருவாக்க உள்ள வளி மண்டல கார்பன் உமிழ்வு எதிர் காலத்தில் அதிகம் ஆக வாய்ப்பு உள்ளது.
பல்வேறு சிமெண்ட் கம்பெனிகள் அவற்றின் உற்பத்தி வழியில், விரும்பாத பக்க விளைவுகள் ஆக மாறி வரும் கார்பன் உமிழ்வு,2030 அல்லது 2035 ஆம் ஆண்டுக்குள் குறைப்பு செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக குறிக்கோள் கொண்டு செயல்படுகின்றன. 2050 ஆண்டு நிறைவில், முழுவதும் குறைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் CSE ஆய்வின் படி 2019-20 ஆண்டு நிலை ஒப்பீட்டின் படி, அந்த இலக்கு சரியான செயல்பாட்டிலிருப்பினும்,1.5 மடங்கு உமிழ்வு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிமெண்ட் தொழில் மூலம் GHG கார்பன் உமிழ்வு, நம் நாட்டில் அல்ட்ரா டெக், CACC & அம்புஜா, SHREE, டால்மியா ஆகிய நான்கு கம்பெனிகள் அதிகமாக 45% நிகழ்வதாக பதிவு உள்ளது. அந்த நிறுவனங்கள் சிமெண்ட் உற்பத்தி முன்னணியாக இருப்பது மட்டும் அல்ல!, கார்பன் உமிழ்வு நிலையிலும் முன்னணி வகிப்பது வேதனை தரும் தகவல் ஆகும்.
சிமெண்ட் தொழில் மூலம் கார்பன் உமிழ்வினை 2030 ஆம் ஆண்டுக்குள் குறைக்க பல்வேறு வழி முறைகள் உருவாக்கி வைக்கபட்டுள்ளது. குறிப்பாக, வெவ்வேறு தொழில் நுட்ப முறைகள்
1.கார்பன் சேகரித்து சேமிப்பு (CARBON CAPTURE UTILISATION, STORAGE ) பயன்பாட்டு முறை
2. மின்சார உலை செயல்பாடு.
3. கார்பன் உமிழ்வு தவிர்க்கும் Lc3 சிமெண்ட் தயாரித் தலில் ஈடுபடுதல்.
ஆகியன ஆகும்.
எனினும்,2030 ஆம் ஆண்டுக்குள் இந்த புதிய வகை சிமெண்ட் தயாரித்து விற்பனைக்கு வரும்போது அப்போது அதற்கு பிறகு உள்ள பத்து ஆண்டுகளுக்கு கார்பன் குறைப்பு நெறிமுறை இலக்கு வைத்து செயல்படவேண்டும். L c 3 சிமெண்ட் என்பது களின்க்கர் எனப்படும் கால்சியம் கொண்ட களிமண் மற்ற கலவை சிமெண்ட் தூளினை விட மிக குறைவாக சேர்க்கப் பட்ட சிமெண்ட் ஆகும்.எனவே கார்பன் உமிழ்வு குறையும். சிமெண்ட் தயாரித்தலில் மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் சேர்த்து அதனை உருவாக்குதல் நன்று. சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் உற்பத்தி செய்வதை முற்றிலும் நம் நாட்டு சிமெண்ட் தயாரிப்பில், அதிக பட்சம் 35% மட்டும் எரி சாம்பல் கலக்கப்படுகிறது. ஆனால் கனடா நாட்டில் 50-60% எரி சாம்பல் கலந்து சிமெண்ட் தயாரிக்கின்றனர். ஐரோப்பிய நாட்டு நெறிமுறைகள் படி 36-55% கலப்பு
அனுமதிக் கபட்டுள்ளது. மேலும் எரி சாம்பல் கலப்பு பற்றி நம் நாட்டில் ஆய்வு மேற்கொண்டு சிமெண்ட்டின் தரம் உயர்த்த இயலும்.
க்ளின்க்கர் என்ற சிமெண்ட் இடைநிலை பொருளுக்கு மாற்றாக வேறு பயன்படுத்தி சிமெண்ட் தயார் செய்யும் திட்ட நுணுக்கங்கள் பற்றி அறிய வேண்டும். சிமெண்ட் தயாரித்தலின் போது வெப்ப மாற்று வீதம் (THERMAL SUBSTITUTION RATE )அதிகரித்தல் முறையில் க்ளிங்கெர் உருவாகும்போது, மாற்று எரிபொருள் அல்லது வளம் குன்றா வளர்ச்சி பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கலாம். சமீப காலமாக நம் உற்பத்தியில் 5%TSR மட்டும் உள்ளது. இதனை 2030 ஆம் ஆண்டுக்குள் 30% ஆக உயர்த்த இலக்கு உள்ளது. மகிழ்ச்சிகரமாக, ACC சிமெண்ட் மற்றும் அரியலூர் டால்மியா நிறுவனங்கள் 15-30% வரை தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள நிலை வரவேற்கதக்கது
சிமெண்ட் உற்பத்தியில் டயர், பயோமாஸ்,, துணி, மரம், மற்ற தொழில் நிறுவன கழிவு, பதப்படுத்திய நகராட்சி திட கழிவுகள், போன்றவை உபயோகம் உள்ளவை ஆகும். ஆனால் திட கழிவு முறையாக பிரித்து பராமரிப்பு செய்வதில்லை என்பது வருத்தம் தருகிறது. ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் இதற்கு உதவலாம்.. சிமெண்ட் உலைகளில் மின்சாரம், மாற்று ஆற்றல் பயன்படுத்தி தயாரிக்க இயலும் நிலக்கரி பயன்படுத்த தடை விதிப்பதும், நன்று. நிலக்கரி விலையேற்றம் ஒரு புறம் பிரச்சனை ஆகிவிட்டது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆற்றல் சேமிப்பு மசோதா தாக்கலில், புதிய மாற்றம் “மாற்று அல்லது புதுப்பிக்கப்படும் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் படி அனைத்து தொழில் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதனை ஒட்டி சிமெண்ட் நிறுவனங்கள் மாற்று எரி பொருள் பயன்பாடு மேற்கொள்ள முன் வருவது நன்று.OPC, PPC, PSC, போன்ற சிமெண்ட் உற்பத்தியில் GST 28%அரசு விதிக்கிறது. மேலும் கார்பன் உமிழ்வு குறைப்பு சிமெண்ட் உற்பத்திக்கு அரசு சலுகைகள் தர வேண்டும்
அப்போது மட்டுமே சிமெண்ட் உற்பத்தியில் விலை குறையும். கார்பன் அதிகரிப்பு என்பது வளி மண்டலத்தில் உலக வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அதற்கு சிமெண்ட் தொழில் ஒரு காரணம் என பொது மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். ஆனால் உரிய வழிமுறைகள்,பின்பற்றப் பட்டால் காற்றின் தரம் மேம்படும் வாய்ப்புகள் உள்ளன. அதுவரை இது ஒரு சுற்று சூழல் சவால் ஆகும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.