தொடர் 41: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 41: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

 

 

“ மாண்புமிகு” நீர் ஆதாரங்கள்!
மறந்து போய்விட்ட மாநகர மக்கள்!!

“மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர் “….. ஆம், புயல், வெள்ளம், மழை, எல்லாம் கடந்த பின்னர் ஓரிரு நாட்களில் மக்கள் தங்கள் துன்பங்கள், பிரச்சினைகளுக்கு ஒரு தற்காலிக நேர்மறை தீர்வு கிடைத்து, வாழ்வாதாரம் மீளப்பெற்றுவிட்டால், எல்லாம் மறந்து இயல்பாக ஆகிவிட, அடுத்த பிரச்சனை வருவது வரை, சிந்தித்து பார்ப்பதில்லை.

பொதுவாக இயற்கை ரசிப்பது நம் அனைவரின் இயல்பு! அதிலும் நீர்வீழ்ச்சி போன்ற மலை வாழ்விடங்களில் உள்ள அருவி, ஆறுகள், ஏரி, குளம் ஆகிய நீர் ஆதாரங்கள் பார்க்க, ரசிக்க மட்டும் அல்ல, பாழ்படுத்தவும், நம் மனித இனம், சிறிதளவும் தயங்கியதில்லை. அதே போல் அவை இருக்கும் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள், வணிக, நிறுவனங்கள், அலுவலகங்கள், அமைக்க துவங்கி, தத்தம் வாழ்க்கைக்கு வருவாய் ஈட்ட முயல்கின்றனர். நீரின் அரிய தன்மை, முக்கியத்துவம், சிக்கனம், எல்லாம் அறிந்தும் நாம் மாறவில்லை. நகரங்களில் செயற்கை நீரூற்று கண்டு மகிழ்கிறோம், கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகிறோம்.

எனினும் பல்லாண்டுகளாக, நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யும் முன் அரசியல்வாதி, ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கீழ்நிலைபணியில் ஈடுபடுவோர், பயன்படுத்துவோர் என்ற பொதுமக்கள் ஆகியோர் சிந்தித்து திட்டமிடுவதில்லை. உலகமயமாக்கம் மற்றும் அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கணினி வழி வாழ்க்கை மூலம் மனித செயல்பாடுகள் மாறியது. இதனால் வருவாய் பெருக்கம், நகரங்களில் குடியிருப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற மாற்றங்கள் வர துவங்கியது. நகரம் விரிவடையும் நிலையில், மனிதர்களின் அடிப்படைத்தேவை நீர், என்பதை பற்றி உணர்ந்தாலும், அவற்றின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு அதன் மேல் தம் வாழிடங்களை அமைத்துக் கொண்டு, அதனை தேடும் நம் மனித நிலை பரிதாபம்!

தொழில்நுட்பம் கற்ற நாம் இயற்கை அறிவியல் பற்றிய அறிவினை புறம் தள்ளியது மட்டுமே, இன்றைய அவல நிலைக்கு காரணமாக இருக்கிறது.சென்னை மாநகரத்தில் 1906 ஆம் ஆண்டில் 474(ஏரி, குளம் )நீர் நிலைகள் இருந்து வந்ததாக தகவல் உள்ளது. ஆனால் 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 43 மட்டும் இருப்பதாக கூறும் நிலை
அதிர்ச்சி அளிக்கிறது. நுங்கம்பாக்கம், அல்லிகுளம்,ஏரிகள் வேளச்சேரி, கோயம்பேடு, விருகம்பாக்கம், மத்தியபகுதி சென்னை ஆகிய இடங்களிலும் நீராதாரங்கள் அழிக்கப்பட்டு, சுற்றுலா தலம், குடியிருப்பு, அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், என்று மாறிவிட்ட நிலையில் மழை வெள்ளம்வரும் போது மட்டும், அது பற்றி சிந்திப்பதால் என்ன பயன்??

இது ஒரு புறமிருந்தாலும், இயற்கை ஆதாரங்கள் இழப்பு, பற்றாக்குறை இருக்கும் நிலையில் சமூகத்தில் வன்முறை, சமமற்ற பங்கீடு, சமூக விரோதிகள் பெருக்கம், சுகாதார பிரச்சனை, வறுமை ஆகிய கூடுதல் காரணிகள், அதனைஒட்டி உருவாகிறது. இத்தகைய நேரடி சமூக, சூழல் பொருளாதார, நகர மக்களின் வாழ்க்கையில் தேவையற்ற தகவமைப்புகள் ஏற்படுத்தி கொண்டு அடிப்படை வாழ்வில் போராட வேண்டியுள்ளது. உலகில் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட 422 நகரங்களில் 383 ல் இந்த வகை முரண்பாடு போராட்ட நிலை காணப்படுகிறது. மேலும் நாகரீக வளர்ச்சி காரணத்தினால், மனித வாழ்க்கையில் நுகர்வு தன்மை அதிகம் ஆகி,பொருட்களின் குவியல் தளம் ஆக இல்லங்கள் மாறிவிட்டன. அதனால் திடக் கழிவுகள் பெருக்கம் ஆகி அவை நீராதாரங்கள், கழிவு நீர்கால்வாய், வெள்ள வடிகால் ஆகியவற்றில் கொட்டப்பட்டு, மழை வெள்ள பிரச்சனை தீவிரம் அடைந்து வருகிறது. நம் ஒவ்வொரு வீட்டு வடிகால் வாய்க்கால் தூய்மை பேணுதல், நெகிழி, பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்வது அவசியம் என்பதை நாம் உணரவேண்டும்.

நகரங்கள், மாநகரங்களாக, பெரு மாநகரங்களாக மாறி வரும் நிலையில், பல்வேறு வசதிகள் பொது மக்கள் தத்தம் வசிக்கும் பகுதியில் பெற அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முனைந்து வருகிறது. எனினும் இயற்கை பேரிடர் நேரிடும்போது அவற்றை சந்திக்க தயார் நிலையில் மக்கள் இருப்பதும் மிகவும் அவசியம் ஆகும். சென்னையில் நகரமயமாக்கம், கடந்த 40 ஆண்டுகளில் 20 மடங்கு, அதிகம்
ஆகிவிட்டது என பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (INDIAN INSTITUTE OF SCIENCE ) ஆய்வுகள் மூலம் அறிந்த தகவலை குறிப்பிடுகிறது. தாழ்ந்த பகுதியில் கட்டிடங்கள் உருவாக்க அனுமதி அளித்த நிலை, அங்கு முறையான நீர் வெளியேற்றம் செய்யும் கால்வாய் இல்லாத நிலை, போன்ற காரணிகள் வெள்ள நீர் தேங்க வழி வகுத்து விட்டது. இதில் நன்கு கற்றரிந்தவர்கள், கல்வியில் பின்தங்கியோர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை என்பது உண்மை.

சமீபத்தில் சென்னையில் “மிக் ஜாம் “புயல் காரணமாக ஏற்பட்ட பெரு மழை அளவு மிக அதிகம். புயல் உருவாகும் போது கடல் மட்டம் உயர்ந்து, ஆற்று, மழை நீர் கலந்து
கடலில் கலக்க வரும்போது, கடல் நீர் எதிர்த்து செல்வது, வெள்ளத்தினை உருவாக்கிய நிலை, அதிக பாதிப்புகள் ஏற்பட காரணம் ஆகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக பல செயல்பாடுகளான, மீட்பு பணி, நிவாரண உதவி, உணவு உடைகள் விநியோகம் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. எனினும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சரியாக, ஆராய்ந்து திட்டமிடப்படாத, நகர மயமாக்கம், பேரிடர் எதிர் கொள்ளும் போது பிரச்சனைகள் வர வாய்ப்பு ஆகிவிட்டது. சரி!நாம் எப்போதும் “ஆடி பெருக்கு” ஆற்று நீர் வரும்போது வழிபாடு செய்வது, ஆற்றில் நீர் வருகையில் மலர் தூவி வரவேற்பது போன்ற சடங்கு, சம்பிரதாயங்கள், சரியாக மேற்கொள்ள கொடுக்கும் முக்கியத்துவத்தினை, விட அந்த நீர் வழியில் கழிவுகள் போடுதல், தடை செய்து ஆக்கிரமிப்பு செய்வது தவிர்த்து விடுவதற்கும்முக்கியத்துவம் தர முயற்சி செய்யலாம்.

அடிப்படையில் நீர் பகுதியில் மென்மேலும் ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக கடுமையாக சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொண்டு வரவேண்டும். மாநகர் சுற்று சூழல் பிரச்சினைகள், இயற்கைக்கு எதிர் விளைவுகள் ஏற்படுத்தும், தொடர்ந்து மக்கள் பாதிக்க வாய்ப்புகள் ஒவ்வொரு மழை காலத்திலும் வராமல் இருக்க அரசுத்துறைகளிலும் மன மாற்றம் வருவது அவசியம். மாநில அளவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம் உருவாக்க வேண்டும். அங்குள்ள
பணியாளர்கள், மழைகாலத்திற்கு வெகு முன்னரே, திட்டமிட்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணி, மக்கள் பாதுகாப்பு பற்றிய செயல்பாடுகளில் கவனம்
செலுத்த இயலும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு எடுக்க வேண்டும். புதிய வளர்ச்சி, கட்டிடங்கள் அமைத்தல் போன்ற திட்டங்கள், மாநிலத்தின் அனைத்து நகரங்களில் பரவலாக, ஏற்படுத்தும்போது சீரான வளர்ச்சி மாநிலம் முழுவதும் சென்று சேரவும் ஒரு வாய்ப்பு உள்ளது.

அங்கும் நீர், வளம் பொருந்திய நிலம் பசுமை பகுதிகளை இயன்ற வகையில் தவிர்த்து செயல் மேற்கொள்வது நன்று. நகரங்களுக்கு அருகில் திட்டமிட்டு துணைக்கோள் (SATTELITE TOWNSHIP) உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். நீர் ஆதாரங்கள் முறையாக பாதுகாக்கப்பட உரிய விழிப்புணர்வு மட்டுமின்றி, நீர் சூழல் சார்ந்த குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு, சட்ட பூர்வ ஒழுங்கு நடவடிக்கைகள் முறையாக, சற்று கடுமையான தண்டனை முறைகள், பின் பற்ற அரசு சிந்தித்து செயல்பட முடிவு எடுக்கலாம். மழை நீர் சேகரிப்பு திட்டங்கள் கட்டாயம் குடியிருப்பு பகுதியில்
மேற்கொள்வது மட்டுமின்றி அவற்றின் உண்மை, நிரந்தர கட்டமைப்பின் வலிமை ஆகியவை உள்ளாட்சி நிர்வாகம் கண்காணி ப்பது அவசரம், அவசியம் ஆகும்.

பொது மக்கள் நீர் தேவை பற்றி கோடை காலத்தில் போராட்டம், மழை காலத்தில் வெள்ள நீர் வடிய போராட்டம் என்ற இரண்டிலும் உள்ள முரண்பாடுகளை உணர்ந்து சரியான வழியில் செயல்படும்போது, மாசு கலவாமல், சிக்கன சேமிப்பு நீர் பயன்பாடு ஏற்படும். அப்போது “மாண்புமிகு நீர் ஆதாரங்கள் உண்மை மதிப்பு எல்லோராலும் உணர்வு பூர்வமாக அறிய வாய்ப்புகள் பெருகும். நீர் சேமிக்க, சிக்கனம் செய்து பயன்பாடு, ஆக்கிரமிப்பு தவிர்த்தல் போன்ற சூழல் நேய நேர்மறை தீர்வுகள் அனைவரும் பின்பற்ற முயற்சி செய்வோம், சிந்தித்து செயல்படுவோம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *