தொடர் 42: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 42: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

 

 

 

பாசிப் பூக்களும், பாதுகாப்பற்ற
நன்னீர் நிலைகளும்!

 

மாலை நேர நடை பயிற்சிக் காக, வழக்கம் போல் அருகில் உள்ள பூங்காவுக்கு, அன்று சென்றிருந்தேன். அங்கு உள்ள ஒரு சிறு குளம், சற்று மாறுபட்ட தோற்றம் கொண்டிருந்தது. பல நாட்கள் அதில் மிக குறைவான அளவில் நீர், மற்றும் ஒரு சில நீர் பறவைகள் மட்டும் காணப்பட்ட நிலையில் இப்போது, நீரின் அளவு கூடியிருப்பதும், ஆனால் அந்த அந்த நன்னீர் பரப்பில் பசுமை படலம் போர்த்தியிருப்பது, வேறுபட்ட தோற்றம் கொண்டு எனக்குள் சிறிது அச்சத்தை
ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையில்லை. ஆம், பசுமை பாசி, அடர்ந்த படலம் ஆகிவிடும் நிலை , வெகு சீக்கிரம் வர வாய்ப்பு உள்ளது.. ஆல்கா (ALGAE) எனப்படும் பசும் பாசிப்பூக்கள், அடிப்படையில் ஒரு தாவரம் என்றாலும் அவை ஒளிசேர்க்கை செய்யும் அதிக திறன் கொண்டது. ஆனால் அவற்றின் இன தொகை நன்னீர் பகுதியில்
பெருகிவிட்டால்,, அதுவே அந்த சூழல் மாசு பட்டு, மற்ற உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்பட்டு, அழிந்து விடும் அபாயம் இருக்கிறது.

ஆல்கா எனப்படும் பசுமை பாசி, தாவரம் நீர் பகுதியில், உள்ள, ஒளி சேர்க்கை செய்யக்கூடியது. இதற்கு வேர், தண்டு, இலை இல்லை. உட்கரு உடைய, பல செல்கள்
கொண்டவை. பெரும்பாலும், ஆல்கா பாசி பூக்கள் படரும் நிலையில், சயனோபாக்டீரியம், டைனோ பிளாஜெல்லேட், டையாட்டம்ஸ், ஆகிய பாசி சிற்றினங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சயனோபாக்டீரியம் நீல பசும் பாசி ஆகும். இவற்றின் வகை நாஸ்டாக், ஆசிலட்டரியா, மைக்ரோசிஸ்டிஸ், ஸ்பைருலினா, அனாபேனா, போன்றவை உள்ளன.

டைனோ பிளாஜெல்லட் பிஸ்டரியா, நோக்ட்டிலுக்கா, ஆகிய பாசிகள், வேறு உயிரினங்கள் சார்ந்து வாழ்கின்றன. மேற்கண்ட பாசி தாவர சிற்றினங்கள் பெரும்பாலும் அதிகம் பெருக துவங்கிவிட்டால், நச்சு வேதி பொருட்கள் வெளியிட
கூடியவை. அவை முறையே சயனோபாக்டீரியா மைக்ரோசிஸ்டின், அடுக்ஸின், சக்ஸிட்டோக்ஸின் குவானோடாக்ஸின், ஆகிய நச்சுக்கள் டைனோ பிளாஜல்லட் பாசி
சக்ஸிடோசின், பிரவ்டோக்ஸின், செனா டாக்ஸின் போன்ற நச்சு பொருட்கள், டை ஆட்டோம்ஸ் பாசி, டோமியோக் அமில பொருள் உற்பத்தி செய்கிறது. இவ்வாறு வெளியேற்றம் செய்யப்படும் நச்சு பொருட்கள், நன்னீர் ஆதாரங்களை அழிக்கிறது. அதாவது அங்குள்ள நீர்தாவரம், உயிரினங்கள் மிதவை உயிரிகள்,பூச்சிகள், தவளை, மீன், பறவை, O2 ஆக்ஸிஜன் இல்லாமல் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

இத்தகைய, பிரச்சனை,அதிக அளவு ஊட்டச்சத்து நீர் நிலைகளில் சேருதல், உயர்வெப்ப நிலை, அதிக அங்கக இறந்த பொருட்கள், மெதுவான நீர் ஓட்டம், அதிக ஒளி,நீரின் கலங்கல் தன்மை போன்றவையாலும் ஏற்படுகின்றன. நம் நாட்டின் தலைநகரம் புது டெல்லிக்கு அருகில்யமுனை ஆற்றின், சமவெளி பகுதியில் ஹொக்லா பறவை சரணாலயம் அமைந்துள்ளது. இப்பகுதி உத்தர பிரதேச மாநிலம் சார்ந்த வனங்கள், நீர்நிலை ஆதாரம் ஆகும்.

ஆனால், விரைவான நகர மயமாக்கம், தொழில் மயம், சுத்திகரிக்க படாத கழிவு ஆகியவை இந்த நன்னீர் ஏரியில் கலந்த நிலையில், ஆக்சிஜன் குறைந்து COD, BOD,உயிரி ஆக்சிஜன் தேவை அதிகரித்து விட்டது. அங்குள்ள நீர் தாவரங்கள், உயிரினங்கள்(HYDRILLA, VALLISNERIA, AZOLA ) ஆகியவை பாதிக்கப் பட்டன. நீர் பறவைகள், வாத்து வகை, கொக்கு, நாரை ஆகிய பறவைகள் உணவு பற்றாக்குறை
காரணமாக வேறு இடம் நோக்கி சென்றன. இவ்வாறு பல இடங்களில் நன்னீர் ஆதாரங்கள் பாதிக்கப் பட பல்வேறு காரணங்கள் இருப்பினும், கழிவுகள் உற்பத்தி ஆகும் இடத்தில், பிரித்து மேலாண்மை செய்யும்போது, அவை நேரடியாக நன்னீரில் கலக்கும் வாய்ப்புகளை தவிர்க்க இயலும்.

நன்னீர் ஆதாரம் என்பது ஒவ்வொரு சமவெளி பகுதியில் உயிர் போன்று சூழலில் முக்கிய பங்கு வகிப்பது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில், மொத்தம் 58.2 மில்லியன் ஹெக்டர் சதுப்பு அல்லது ஈர நிலங்கள் காணப்படுகின்றன. 151,815 குளங்கள் இங்கு உள்ளதாக தகவல் இருக்கிறது. அவை பெரும்பாலும் உள்ளாட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்யும் நிலையிலும் உள்ளது. எனினும் அவற்றை முறையாக கண்காணித்து,மாசுகள் ஏற்படாமல் இருக்கசெய்யவேண்டும். ஆனால் அத்து மீறிய ஆக்கிரமிப்பு, மீன் பிடி குத்தகை பிரச்சினை வரும்போது குளத்தின் உயிர் தன்மை அறியாமல் பாழடிப்பு செய்தல், அரசியல் வேற்றுமை காரணம், ஆகியவையினாலும் நாகரீகம், குப்பையினை குளங்களில் விடுகையிலும் இயற்கை ஆதாரம் பாதிக்கப்படுகிற நிலை, உருவாகிறது. குளங்கள், ஏரிகள காண்கிரீட் கட்டிட காடுகளாக மாற்றம் செய்ய மனித மனங்கள் துடிக்கின்றன. பின்னர் கோடை காலத்தில் நீர் பற்றாக்குறை, மழை காலத்தில் வெள்ள நீர் பற்றிய முரண் சிந்தனை! குளங்கள் என்பதை ஒவ்வொரு கிராம, நகர் பகுதியில் அந்த ஊரின் உயிர் ஆதாரம், பெருமையாக, மக்கள், ஊராட்சி நிர்வாகம், இளைஞர்கள் எண்ணி, ஆண்டு தோறும் தூர் எடுத்து ஆழப்படுத்தி, நீர் நிரப்பவும், அதில் கழிவு கால்வாய் தொடர்பு இல்லாமல் இருக்க பராமரிப்பு செய்யும் நிலை வரவேண்டும். விவசாய நிலங்களை பாசனம் செய்யும் நிலை இருந்தாலும், உரம், பூச்சி மருந்து பயன்பாடு குறைவாக இருப்பின் நன்று.ஏனெனில், அதன் வேதி நச்சு பொருட்கள் குளத்தின் நீரின் தன்மை மாறுபட தூண்டுபவை ஆக இருக்க வாய்ப்புள்ளது.

ஈரநீர் ஆதாரங்கள், சதுப்பு நிலங்களை முழுவதும் நிர்வாகம் செய்யும் கடமை, பொறுப்பு,இந்திய அரசின் சுற்று சூழல், வனம் மற்றும் பருவ கால மாற்றம் அமைச்சகம் துறைகள் சார்ந்த பணிகள் ஆகும். ஆனால் மீன் வளம், ஆற்றல், நீர் மேலாண்மை-பொதுப்பணித்துறை, விவசாயம் வருவாய் நிர்வாகம், உள்ளூர் ஊராட்சி,ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த நிலையில் பாதுகாப்பு தரவேண்டிய நிலை
உள்ளது. இவற்றை பாதுகாக்க 1857 ஆம் ஆண்டு இந்திய மீன்சட்டம், முதல்,1986 ஆம் ஆண்டு சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் என பத்துக்கு மேற்பட்ட சட்டங்கள் நடை முறையில் இருக்கின்றன. ஆனால் அவற்றை பற்றிய விழிப்புணர்வு போதுமானவையா என்பது கேள்விக்குறியாகும். ஈர/சதுப்பு நிலங்களை கண்காணித்து பராமரிக்க மாநில அரசின் நிர்வாகத்தின் மூலம் “மாநில ஈர நில ஆணையம் என்ற (TAMILNADU STATE WETLANDS AUTHORITY )அமைப்பு
உருவாக்கப் பட்டது. இந்த ஆணையம், சதுப்பு ஈர நில பாதுகாப்பு, மேலாண்மை சட்டம்,2017ன் படி விழிப்புணர்வு, மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

தேசிய அளவில் நீர் பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்த முனைகிறது. இந்த
அமைப்பு, ஈர நிலங்கள் பட்டியல், ஆவணங்கள் உருவாக்க முயன்று, அவற்றை கண்காணித்து, பாதுகாப்பு, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் செய்கிறது. சமீப காலத்தில், சென்னை மாநகரமும்,தென் மாவட்டங்களில், மழை வெள்ள பாதிப்புகள், 2023 ஆண்டின் மறையாத வடு, தழும்பு ஆக மக்கள் மனதில் நிற்கும் என்பது திண்ணம். ஆனால், நீர் என்பது இயற்கை கொடை அதன்
இயற்கை இருப்பிடங்கள், நம்மால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு, எல்லாம் தொழில் நுட்பம் மூலம் மாற்றம் செய்ய இயலும், என்ற நவீன அறிவியல் திட்டங்கள், நகர மயம்
வளர்ச்சி பெறுவதற்கு மட்டும் வழி வகுத்து வருகிறது. இயற்கை அறிவியலுடன் நவீன அறிவியல் தொழில் நுட்பம் ஒருங்கிணைந்த நிலையில் வளர்ச்சி தொடர்ந்து சென்றால் மட்டும், நகர வாழ்க்கை நம் மனிதர்களுக்கு எளிதாக அமையும்.” பாசி பூக்கள்” போன்று ஒளி சேர்க்கைக்கு உதவி செய்யும், இயல்பான நீர் தாவர பெருக்கம், குளம், ஏரி நீர் ஆதாரங்களை, நாம் புரிந்து கொள்ளாமல் குப்பை, நெகிழி,, அதிக ஊட்டச் சத்து வீட்டு கழிவுகள் அங்கு பெருக்கி அழிக்கும்போது வருத்தம் ஏற்படுகிறது.

நான் அன்று கண்டு வேதனை கொண்ட குளம், இன்று மழையினால், நீர் மட்டம், உயர்ந்து தாவரங்களும் அழுகி, விரும்பத் தகாத, நாற்றம் உருவாகி விட்ட அவல நிலை, நீர் ஆதாரங்கள் பற்றி மேலும் உணர்வு பூர்வ அறிவியல் அறிவு தேவை என்பதை தெளிவாக்குகிறது. இத்தகைய, சூழல் இடர்பாடு, தனி மனித தவறு அல்ல!ஒரு சமுதாய அமைப்பு, செய்த பிழை, அதில் பொது மக்கள், கற்றரிந்தவர்கள், அலுவலர்கள், அரசியல் பெருமக்கள் அனைவரும் பொறுப்பு கொண்டுள்ளோம். இனியாவது இயற்கை பற்றி
புரிந்து செயல்பட முடிவு எடுப்போம்!!

 

 

 

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *