உலக மாநாடுகள் கூடினால்
உண்மை நிலை உடன் மாறிடுமா!!?
சுற்று சூழல் பிரச்சனைகள், பாதிப்புகள், உலகம் முழுவதும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டே இருந்துவருவது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்! ஆனால் இவற்றை பற்றி சிந்தித்து பேசுவதாலும், காரணங்கள்,
கண்டு வருந்துவதால் மட்டும், மனித இனத்திற்கு பயன் ஏற்பட்டுவிடுமா!? தீர்வுகள் பற்றியும், அதனை செயல் படுத்த அனைத்து நாடுகளில் திட்டமிட முனைவது மிக முக்கியம் அல்லவா!? ஆம், 1971 ஆம் ஆண்டில் பசுமை அமைதிக் குழு (GREEN PEACE) வின் ஆறு நபர்கள் மற்றும் அவர்களின் ஒரு பயண படகு மட்டும் முதலில் உலகத்தின் கவனத்தினை “மனித இனம் வளர்ச்சி என்ற பெயரில் அறிவியல் தொழில்நுட்பம், பயன்படுத்திய பக்க விளைவாக, வாழ்வு சிக்கல், துன்பங்களை இயற்கை சூழல் மாசுபடுகள் சந்திக்கின்ற நிலை உள்ளது “என கருத்து கூறி ஈர்த்தனர்.
எனினும் 1968 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டிலும், சமூக சூழல், உயிரின கோளம், மகளிர், ஆரோக்கியம், மனித வசிப்பிடங்கள் பற்றி மைய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. குறிப்பிட்ட சில சிறு, உள்ளூர் சூழல் கோட்பாடுகளை தவிர இயற்கை உலகம், மற்றும் மனித இனத்திற்கு இடையில்,
வளர்ச்சியினால், சூழலில் ஏற்படும் சிக்கல்கள், தீர்வுகள் பற்றி விவாதம் செய்து முழுமையான மாற்றம் கொண்டு வர உலக நாடுகளின் தலைவர்கள் கூடி பெரும் சூழல், அறிவியல் தொடர்பான மாநாடுகள் 1972 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆம் முதலில் ஸ்டாக்ஹோம் நகரில் (ஸ்வீடன் ) இந்த உலக நாட்டு தலைவர்கள் (UNITED NATIONS CONFERENCE ON HUMAN DEVELOPMENT) கூடி கருத்தரங்கம் நிகழ்ந்தது.
அப்போதுதான் ஜூன் 5 ஆம் நாள், உலக சுற்று சூழல் தினம் ஆண்டு தோறும் அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் அமைந்துள்ள
ரியோ டி ஜெனிரோ நகரத்தில் “புவி உச்சி மாநாடு “(EARTH SUMMIT) கூட்டப்பட்டு, பல்வேறு முக்கிய சுற்றுசூழல் பாதுகாப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் 1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது அமர்வு, உலகின் “நீடித்த நிலை வளர்ச்சி பயன்பாடு”என்ற மையக் கருத்தின் அடிப்படையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது. தொடர்ந்து 2002 ஆம் ஆண்டில், தென் ஆப்ரிக்க நகரமான ஜோஹனஸ்பர்க் நகரில் அதே சூழல் பாதுகாப்பு மையக் கருத்தினைக்கொண்டு, புவி உச்சி மாநாடு மீண்டும் நடைபெற்றது. காற்று மாசு, நீர் மாசு பிரச்சனை உலக நாடுகளில் தீவிரமாகும் நிலை ஆய்வு, விவாதம் செய்யப்பட்டது. ஆனால் ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இந்த மாநாடு முக்கிய மக்கள் பிரச்சனை, சுகாதாரம், ஏழ்மை ஆகியவற்றிற்கு சரியான தீர்வு இல்லை என்று எதிர் குரல் எழுப்பி, மாநாட்டின் நிறைவு தோல்வி என்று கூறினார்கள்.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள், ஐக்கிய நாடுகளின் பருவ கால மாற்றம் பற்றிய கூட்டம் டர்பன் நகரில், நிகழ்ந்த நிலையில், சூழல் பயன்பாட்டாளர், நாடுகளின் ஒத்தகருத்து இணைத்து, செயல்கள் மேற்கொள்ளுதல் போன்ற அடுத்த
கட்ட நடவடிக்கை துவங்கியது. ரியோ மாநாட்டில் 100 நாடு அரசுகளின் 108 தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மகளிர், இளைஞர், உள்ளூர் மக்கள் இணைந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், உள்ளூர் நிர்வாகம், விவசாயம், வணிகம் சார்ந்த நபர்கள், அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள், சிறு குழுக்களாக மாநாட்டில்
பங்கு பெற்றனர். எனவே முக்கிய உலக தலைவர்கள் ஒரு அரசுகள், துறை அலுவலர்கள் தனி குழு, மற்ற நிலையில் உள்ளவர்கள் பல்வேறு சிறு, சிறு குழுக்கள் கூடி, விவாதம் செய்யும் நடை முறை வந்தது.மேலும் பல்வேறு நாடுகள் ஒரு மாநாட்டினை அரங்கேற்றினாலும், உலகின் வடபகுதி நாடுகள், அல்லது வளர்ந்த நாடுகள் சூழல் நுகர்வு தன்மை அதிகம் கொண்டிருக்கின்றன. தென் திசை நாடுகள்
மக்கள் தொகை அதிகம் கொண்டு விளங்குகின்றன.
எனவே மாநாடு தீர்மானங்கள் உருவாக்குவதில், கருத்து ஒற்றுமை மிக குறைவாக இருப்பது தெளிவாகிறது குறிப்பாக AGENDA 21,ரியோ மாநாட்டில், சூழல் பாதிப்புகளை எதிர்த்து, ஏழ்மை, நோய் போன்றவற்றை குறைக்க, உலக நாடுகள் ஒருங்கிணைய, ஒருவருக்கு ஒருவர், தேவை, பொறுப்புகள் ஆகியவற்றை, பொது நலன் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு பல மேலை நாடுகள் ஒப்புதல் அளிக்காத நிலை வருத்தம் தருகிறது. இதனால் சுற்றுசூழல் பாதுகாப்பு பிரச்சினைகள் விவாதம், தீர்வு காணுதல், ஏழை நாடுகள் நிதி உதவி, போன்றவற்றில், வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் ஆகியவற்றிற்கு இடையில் கருத்து வேற்றுமை நிலவி வருவது தொடர்ந்து
வருகிறது. எனினும் ஆறு முக்கிய செயல்பாடுகள், இந்த உலக உச்சி மாநாடுகள் நடத்தும்போது பின்பற்றப்படுகிறது. அதாவது உலக அளவில் செயல்பட தீர்மானம்
ஒருங்கிணைப்பு கொண்ட சிந்தனை பொது பிரச்சனைகள் ஏற்றுக்கொள்ளுதல்
உலக தலைமை உருவாக்க முயற்சி நிறுவன, அரசு வளம், திறன் கட்டமைத்தல்
அனைத்து நாடுகள் உள்ளடக்கிய, உலக அளவில் நிர்வாகம் செய்வதை சட்ட பூர்வ நடவடிக்கை ஆக்குதல்.
சமீபத்தில், COP 28 என்ற உலக சூழல் உச்சி மாநாடு, ஐக்கிய அரபு குடியரசு, துபாய் நாட்டில், நவம்பர் 30 ஆம் நாள் முதல் டிசம்பர் 13, 2023 ஆம் ஆண்டு நடை பெற்றது. இதன் முக்கிய மைய கருத்தாக 2025 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்ப நிலை 1.5°C க்கு கீழ் குறைக்க அனைத்து நாடுகள் முடிவு செய்ய கூடியது.2021 ஆம் ஆண்டு கிளாஸ்க்கோ நகரில் கூடிய மாநாட்டில் படிவ எரி பொருள் குறைக்க, அதனை ஈடு கட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு, நிதி உதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. எனினும் துபாய் COP 28 மாநாடு பருவ கால மாற்றம், வெப்ப உயர்வு பற்றி விவாதம் செய்யும் நிலையில் 200 நாடுகள் கலந்து கொண்ட கூட்டத்தின் தலைமை டாக்டர். சுல்தான் அஹமத் அல் ஜாபர் ஏற்றார்.
உலகம் முழுவதும் பருவ கால மாற்றம் விளைவுகள், பாதிப்பு நீங்க, உலக அளவில் படிவ எரி பொருள் நிலை (GLOBAL STOCK TAKE) அறிய வேண்டும். இதனை COP28 செயலாளர் சைமன் ஸ்டேல் “அனைத்து நாடுகள், பெரும் உலக வணிக நிறுவனங்கள் சிந்தித்து, தாமதம் இல்லாமல் முடிவு எடுக்க “கோரிக்கை விடுக்கிறார். ஆனால் பருவ கால மாற்ற பேரிடர் அபாய இழப்பு, நிதி பற்றி மட்டும் தீர்மானம், மற்றும் படிவ எரி பொருள் குறைப்பு பற்றிய உறுதிஅற்ற நிலை தொடர்ந்து இருப்பது வேதனை. இந்த மாநாட்டில் 124 நாடுகள் மட்டும் ஒப்பந்தத்தில், ஒருமித்து கையொப்பம் இட்டன. உலக அளவில் சுற்றுசூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு நிலை அறிந்து, விவாதம் செய்வதும், தீர்வு காணும் என்ற எண்ணத்தில் உலக தலைவர்கள் கூடும் மாநாடுகள், பல ஆண்டுகள், அவ்வப்போது நடைபெற்று வருவது மகிழ்ச்சி!
ஆனால், பணக்கார நாடுகள் அல்லது வளர்ச்சி பெற்ற நாடுகள், எப்போதும் தங்கள் ஆளுமையினை, வளரும் நாடுகள் மீது செலுத்தி, அவர்களின் வளர்ச்சிக்கு, தடை ஏற்படும் அளவில் சுற்று சூழல் பாதுகாப்பு செயல் முறைகள் அவர்கள் மட்டும் பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். மேற்கு நாடுகள் தங்கள் நிலையில் மாற்றம் செய்ய எவ்வித கடும் முயற்சி செயல்பாடுகள் மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்க இசைவதில்லை. படிவ எரி பொருள் குறைப்பு மற்றும் பசுமை தொழில்நுட்பம் பயன்பாட்டில், எப்போதும் கீழை நாடுகள் மீது சுமை ஏற்றப்படும், வழி முறைகள் இயற்றப்படும்,இந்த மாநாடுகளின் வழக்கம் ஆகிவிட்டது.
உலக அளவில் சுற்று சூழல் பிரச்சினை, பருவ கால மாற்றம் பேரிடர்கள் தொடர்ந்து சமீப காலமாக நாம் கண்டு வருகிற இந்த அவசர, அபாய காலத்தில், மனித இனத்திற்குள், பல்வேறு நாடுகளுக்கு இடையில் ஒற்றுமை ஏற்பட முயற்சி அனைத்து உலக நாட்டு தலைவர்கள் சிந்தித்து செயல் பட வேண்டியது அவசியம் ஆகும்.சம வாய்ப்புகள் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் நிலை வரவேண்டும், “.உலக அளவில் சிந்தித்து, உனது அளவில் செயல்படு!”(Think Globally, Act locally) என்ற கோட்பாடு, உலகின் ஒவ்வொரு பகுதியில், செயல்படுத்தினால், நம் பூமி பருவ கால மாற்றம் விளைவுகள், பேரிடர்களை ஓரளவு எதிர் கொண்டு, பெரும் பாதிப்புகள் சற்று குறைவாக நிகழ, வாய்ப்புகள் உண்டு. மாநாடுகள் மட்டும் தீர்வுகள் அல்ல, செயல்கள் தொடர்ந்து வர மனப்பான்மை அனைவருக்கும், ஏற்படுவது அவசியம் ஆகும்! நம்பிக்கை கொள்வோம்!!!
************************************************************************
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
வாசிப்பு பொழுதுபோக்குக்காக அல்ல?
வாசிப்பு வாழ்க்கையை சீர்படுத்த என்பதற்காக வெளியிடப்பட்ட புத்தகங்கள்!