வளம் குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள்!
எட்டிடுவோமா எல்லா இலக்குகளையும்!
மனித இனம், வளர்ச்சி அடைய பல்வேறு அறிவியல் பூர்வ தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து, அவற்றின் வழியில் வாழ்க்கை வசதிகள் மேம்படுத்திக்கொண்டு வருகிறது. குடியிருப்பு, உணவு, பொருளாதார உயர்வு, போன்ற அடிப்படை தேவைகள் மட்டுமின்றி, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மனித வாழ்வில், நவீன மயம், ஏற்பட்டு எளிமையான நிலை, விரைவுதன்மை, மகிழ்ச்சி பொழுதுபோக்கு போன்ற அனைத்து நிலைகளில் அறிவியலின் ஆளுமை அதிகரித்து வருகிறது. எனினும், இந்த அறிவியல் வளர்ச்சி, இயற்கை, பூமி, காற்று, நீர், தாவரங்கள், மற்ற உயிரினங்கள் ஆகிய
இன்றியமையாத, கூறுகளை பாதிக்கிற பிரச்சனை பற்றி நாம் சற்று அலட்சியம் கொண்டு செயல்பட்டு வருவது நீண்ட நாட்களாகவே உள்ளது. ஆனால் இயற்கை பாதுகாப்பு கொண்ட, நிலைப்பு தன்மையுடன் கூடிய வளர்ச்சி அல்லது நம் வளத்தினை குன்றாமல் தொடர்ந்து வளர்ச்சி பெற (Sustainable Development ) என்ற கோட்பாட்டினை பின்பற்றி நம் உலகம் செயல் திட்டங்கள் உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட வளம் குன்றா வளர்ச்சி அடைய குறிக்கோள்கள் தேவை அல்லவா?
வளம் குன்றா வளர்ச்சி திட்ட குறிக்கோள்கள் 2012 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோ, நகரில் நடைபெற்ற பன்னாட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு மாநாட்டில் உருவாக்கப்பட்டன. சூழல், அரசியல், பொருளாதார, சவால்கள் நிறைந்த இந்த நவீன உலகில் 17 குறிக்கோள்கள், வெவ்வேறு நாடுகள் பின்பற்றி செயல்பட திட்டமிட்டு தீர்மானம்நிறைவேற்றப்பட்டன.
அவையாவன
1. ஏழ்மை நீக்கம்
2. பசி போக்குதல்
3. சுகாதார, ஆரோக்கியம்
4.தரமான கல்வி
5.பாலினம் சம நிலை
6. தூய நீர், சுகாதார நிலை
7. தூய ஆற்றல்
8. நல்ல பணி &பொருளாதார வளர்ச்சி
9. தொழிற்சாலை
கண்டுபிடிப்பு, கட்டுமானம்
10.சமமற்ற
நிலை குறைதல்
11. நிலையான நகரங்கள், மக்கள்
12. பொறுப்புடைய நுகர்வு தன்மை
உற்பத்தி
13. பருவ
கால மாற்றம் செயல்
14. நீர் அடியில் உயிரினங்கள்
15. நிலத்தில்
உயிரினங்கள்
16. சமாதானம், நீதி
வலிவான நிறுவனம்
17. குறிக்கோள் அடைய பங்கு தாரர் ஒருங்கிணைப்பு. ஆகியன ஆகும்.
வளம் குன்றா வளர்ச்சி குறிக்கோள்களை பின்பற்றி செயல் திட்டங்களை நிறைவேற்ற 192 நாடுகள் முடிவு செய்தன. எனினும் 2015 ஆம் ஆண்டுதான், இவை துவக்க ப்பட்டன. இதற்கென ஐக்கிய நாடுகள் சபை அமைப்பில் ஒரு துணை பொது செயலாளர் அமினா ஜே. முகமது பொறுப்பு ஏற்றார். 2030 ஆம் ஆண்டுக்குள், SDG என்ற வளம் குன்றா வளர்ச்சி குறிக்கோள்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
நம் இந்திய நாடு, இந்த குறிக்கோள்கள் அடிப்படையில் செயல்பட 2017 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்தியா இதில் 120 வது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் கேரளா மாநிலம் முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், சிக்கிம், மற்றும் பஞ்சாப், குஜராத், மகாராஷ்ட்ரா, கோவா உத்தரகாண்ட், கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஓரளவு இந்த குறிக்கோள்களை செயல்படுத்த முனைந்து வருகின்றன. ஆனால், பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட்,மேகாலயா, அசாம், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த 17 குறிக்கோள்களை செயல்படுத்தும் நிலை, குறைவாக, தொய்வு நிலையில் உள்ளது. சண்டிகார், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேச மாநிலங்களில் சற்று முன்னேற்ற நிலை உள்ளது.2021 ஆம் ஆண்டு தரவுகளின் படி, ஏழ்மை, பசி, ஆரோக்கியம், சமமற்ற நிலை குறைப்பு, நகர வசதி ஆகிய சுற்று சூழல் நிலை குறிக்கோள்கள்
பெரும்பாலும் முறையாக, செயல்படுத்தப் படவில்லை.
2022 ஆம் ஆண்டு தகவல்களின் படி, தரமான கல்வி, நல்ல பணி &பொருளாதார நிலை, தொழில், சமமற்ற நிலை குறைப்பு, நிலத்தில் உயிரின வாழ்வு போன்ற வற்றில் பல மாநிலங்களில் பின் தங்கியுள்ளது. 2021 தரவுகள் படி ஏழ்மை ஒழிப்பில் நம் தமிழ் நாடு முதல் இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. இதே போல்
தமிழ் நாடு, பசி நீக்கம், சுகாதாரம், நல்ல பணி மற்றும் பொருளாதார வளர்ச்சி,, அமைதி, நீதி, வலுவான நிறுவனம் ஆகிய குறிக்கோள்களில், முதல், இடத்தினை பெற்ற நிலை பெருமை தரக்கூடியது. பாலினம் சமநிலை மற்றும் தரம் உள்ள கல்வி ஆகியவற்றில் கேரளா மாநிலம் முதன்மை அடைந்துள்ள நிலை பாராட்ட படவேண்டியதாகும். நீர் கிடைக்கும் நிலையில் கோவா முதல் இடம், தமிழ் நாடு
இரண்டாவது இடங்களை முறையே பெற்றுள்ளன.
தொழில் வளர்ச்சியில் குஜராத் மாநிலம், தரமான நகரம் குறிக்கோளில் பஞ்சாப், பொறுப்புள்ள நுகர்வு தன்மையில் திரிபுரா, பருவ கால மாற்றம் செயலில் கேரளா, ஒடிசா மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. வளம் குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள் பின்பற்றி செயல் படுத்தி, வரும் பல்வேறு மாநிலங்களின் திட்டங்கள், ஒவ்வொன்றையும் இந்திய அரசின் “நிதி ஆயோக் “கண்காணித்து, வருகிறது. எனினும் அவற்றின் தரத்தினைமேம்படுத்த முறையாக ஊக்கம், தரப்படும் நிலை இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இதுவரை பெறப்பட்ட தரவு தகவல்களின் படி, குறிப்பிட்ட மாநிலங்களில் வளர்ச்சி நோக்கிய குறிக்கோள்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் விரைவு தன்மை, பல மாநிலங்களில் தொய்வு உள்ளது.
குறிப்பிட்ட மாநிலங்களில், பல்வேறு மத, சாதி ரீதியான வேறுபாடுகள், இன வேற்றுமை, மொழி வேற்றுமை, கல்வி இல்லாத நிலை, பெண் அடிமைதனம் ஆகிய விரும்பதகாத காரணிகள், SDG என்ற வளம் குன்றா வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதில், தடைகள் ஏற்படுத்தி வருகின்றன என்பதில் ஐயமில்லை. மேலும் ஒன்றியஅரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதி, வளர்ச்சி திட்டங்களை முறையாக மாநில அரசுகள் செயல்படுத்த குறைவாக இருக்கிறது. இதனையும் நாம் சற்று உற்று நோக்குதல் அவசியம் ஆகிறது. குறிப்பாக தென் இந்திய மாநிலங்கள் இந்த குறிக்கோள்களை அடைந்து வருவதில் திருப்திகரம் என்றாலும், ஒருங்கிணைந்த நம் நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து மாநிலங்களிலும் மேலும் சுற்று சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகள் மேம்படுத்த வேண்டிய நிலை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும்!
ஏழ்மை, பசி, ஆரோக்கியம், சுகாதார நிலை, ஆற்றல் பயன் பாடு, நல் வேலை வாய்ப்பு, பாலின சமநிலை, தரமான கல்வி, வளம் குன்றா நகர வாழ்க்கை போன்ற குறிக்கோள்கள் பற்றிய செயல்பாடுகள் நம் நாட்டின், சில நகரங்களில், மாநகரங்களில் சிறப்பாக இருக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் கிராமங்கள்,பழங்குடி மக்கள் வாழும் பல்வேறு, மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மிக, மிக, குறைவாக இருக்கும் நிலை நாம் அறிந்த ஒன்றுதான்!
இந்த நிலையில், இயற்கை சூழல் பாதுகாப்பு, இயல்பான வளர்ச்சி ஆகிய இரண்டையும் சமமாக கருத வேண்டும்.
வளர்ச்சிக்காக இயற்கை அழித்து விட்டு நகரங்களை உருவாக்க முனைவது அறிவார்ந்த செயல் ஆக இருக்காது. மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார நிலை, உயர்வு பெற, கார்பொரேட் நிறுவனங்கள், ஊக்குவிப்பு மேற்கொள்வது, சமநிலை, ஜனநாயகம் பேணுவதில், நிச்சயம் சிக்கல்கள் ஏற்படுத்தும். உலக அளவில் பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி, பெல்ஜியம், ஆகிய ஐரோப்பிய நாடுகள் வளம் குன்றா வளர்ச்சி 17 குறிக்கோள்களை அடைவதில், முன்னணி வகிக்கின்றன. எனினும் சோமாலியா, தெற்கு சூடான், லைபிரியா, மத்திய ஆப்பிரிக்கா குடியரசு, சாட் தீவுகள் போன்ற நாடுகள் இதில் மிகவும் பின்தங்கி உள்ளன. நம் இந்தியா போன்ற, வளர்ச்சி நிலை அடைந்து வரும் தென் கிழக்கு ஆசிய நாடுகள், “வளம் குன்றா வளர்ச்சி “ குறிக்கோள்களை, செயல்பட செய்ய, சமநிலை கொண்டு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம், அவசரம் இருந்து வருகிறது.
இயற்கை சூழல் சமநிலை மற்றும் வளர்ச்சி என்பதை இரு கண்கள் போல் எண்ணவேண்டியது முக்கியம் ஆகும். இந்த எண்ணங்கள், அரசியல்,அரசு நிர்வாகம், பொருளாதார நிபுணர்கள், அறிவியல் வல்லுநர்கள்,வணிகர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக தொண்டு நிறுவனம், பொது மக்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து கொள்ள வேண்டும். அந்த எண்ணங்கள் அடிப்படையில் செயல் திட்டங்களை உருவாக்க முயற்சி செய்யும் நிலை வரவேண்டும்.
சிந்திப்போமா!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.