பருவ கால மாற்றம் -பறவை- உயிரினங்கள் |Seasonal change -Birds-creatures

தொடர் : 49 “சமகால சுற்றுசூழல் சவால்கள்” – முனைவர். பா. ராம் மனோகர்

பருவ கால மாற்றம்!பறவை, உயிரினங்கள்
தடம் (தடு )மாற்றம்!

உலக வெப்பமயம், எதிர் பாராத மழை, புயல், வெள்ளம், போன்ற பருவ கால மாற்றங்கள், சமீப காலத்தில் நம்பூமியில், தொடர்ந்து பல பாதிப்புகளை, ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளை நாம் கண்டு வருகிறோம்!. இதனால் மனித இனம் பல்வேறு துன்பங்கள் சந்தித்து வருகிறது. வளர்ச்சி என்ற ஒரு வார்த்தை, இந்த பிரச்சினைகளை தடுத்து அலட்சியம் செய்துவிடுகிறது என்றாலும் மிகையாகாது.

நம் மனிதர்களை மட்டும் அல்லாமல், பறவை போன்ற பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை நம்மில் பெரும்பாலோர் அறிவது இல்லை. அவ்வாறு அறிந்தாலும், பூமியில், நம்முடைய இருப்பு, வாழ்வினை பற்றியும் மட்டுமே நாம் கவலை கொள்கிறோம்!நம்மோடுஇணைந்து, வாழ்கின்ற மற்ற உயிரினங்கள் பற்றிய அக்கறை, மிகவும் குறைவு. அவை நேரடியாக சமீப காலத்தில் பருவ மாற்றங்கள் காரணம் ஆக அதிகம் பாதிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக வலசை போகும் பறவைகள், துருவ பகுதியில் உள்ள விலங்குகள் துன்ப ப்படுவது இயற்கை சுற்று சூழல் ஆர்வலர்களை மிகவும் கவலை கொள்ள செய்திருக்கிறது.

உயிரினங்களின் இனத் தொகை, வாழிடம், உணவு, இன பெருக்க நிலை ஆகியவற்றை இந்த பருவ கால மாற்றம் பாதித்து வருவதை, அறிவியல் வல்லுநர்கள், அறிந்து வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெங்குயின், ஆமைகள் இனப்பெருக்கம் முழுமையாக, சிக்கலில் உள்ளது.

பெருங்கடலில் உள்ள திமிங்கிலங்கள், வளி மண்டல கார்பன் ஈர்க்கும் தன்மை கொண்டவை. அவை இறந்த பின்னரும் கூட,, இந்த பசுமை குடில் வாயு, அவற்றின் சடலத்தினால் கடலின் அடியிலும் உறிஞ்சப் பட்டு, சூழல் சமநிலை பேண உதவி செய்கின்றன. ஒரு திமிங்கிலம் 0.062 மெகா டன்கள் கார்பன் ஆண்டில் உறிஞ்சுகின்றன. மற்ற பாலூட்டிகள் வௌவால், உயிரின வேற்றுமை நிர்வகிக்க, விதை பரவல் மூலம் தன் பணி ஆற்றுகின்றன. சாகா மான் இனம், புல் பகுதிகளில் வாழ்ந்து, காட்டு தீ பரவாமல் தடுக்கின்றன. கழுகுகள், விலங்கு சடலங்கள் உணவாய் எடுத்துக் கொண்டு, விலங்கு மூலம் பரவும்
நோய்கள் மனித இனத்திற்கு பரவாமல் தடுப்பது இவற்றின் முக்கியத்துவம் அறியசெய்கிறது.

பருவ கால மாற்றம் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள் மூலம்

நாம், வலசை போகும் உயிரினங்கள், பறவைகள் போன்றவை, உலக வெப்பம் உயர்வு பெற்று வரும் இந்த நிலையில் பாதிகப்பட்டு வருவது அறிய இயலும். குறிப்பாக, மிதவை உயிரினங்கள் அதிகம் ஆகிவிட்டது. குளிர் நீர் கோபி போடுகள் என்றநுண் மிதவை (சிறிய கிறஸ்டேசியன் ) உயிரினங்கள், வெப்ப நீர் சிற்றினங்களை இடம் பெயர செய்துவிட்டு, மீன்கள் விரும்பும் உணவின் பற்றாக்குறை ஏற்படுத் திவிடுகின்றன. இதன் காரணமாக இளம் மீன்கள் எண்ணிக்கை குறைந்து, குறிப்பாக கடல் ஈல் போன்றவை, கடல் பறவை குடியிருப்பு பகுதியில் முழுவதும் இல்லாமலே போய்விட்டது. வசந்த காலம் மாற்றம், கடல் அலைகள் உருவாகும் நிலை மாற்றம் ஆகியவை கூட கடல் பறவைகள் வாழ்க்கையினை பாதிக்கின்றன. எல் நினோ பருவ மாற்றம் நிகழ்வில் தூண்டப்படும், வறட்சி
காரணமாக, சிறு பெங்குயின் பறவைகள் உணவு தேட வெகு தொலைவு தூரம் செல்வது தெளிவாகிறது. மேலும் அவற்றின் இனப்பெருக்க நிலை, திருப்தி தருவதாக இல்லை.

நீர் காக்கை (SHAGS) போன்ற பறவைகள், அளவில் சற்று பெரிதாக, கடற்கரை பகுதியில் வசிப்பவை ஆகும். இவை அதிக வெப்பத்தின் காரணமாக, மிகுந்த எண்ணிக்கையில் இறந்துவிடுகின்றன. மேலும் கடல் மட்டம் உயர்வதால், கடல் பாறை பகுதியில் கூடு கட்டி வசிக்கும் பறவைகள் அதிகம் இறக்கின்ற தகவல் அதிர்ச்சி தருகிறது.குறிப்பாக அல்பட்றாஸ் பறவைகள் (லாய்சன் மற்றும் கருப்பு கால் அல்படிராஸ் பறவைகள் ), ஹவாய் தீவுகளில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்பவை, அவற்றின் 60% வாழிடங்களில் 2 மீட்டர் உயரத்திற்கு, கடல் மட்டம் உயர்கின்ற நிலை காணப்படுகிறது. அதிக குளிர் ஏற்படுவதால், பிளமிங்கோ
எனப்படும் பூ நாரை, பிட்டேர்ன் எனப்படும் சிறு கொக்குகள், RED SHANK எனப்படும் (இங்கிலாந்து )சேறு துழாவும் சிறு நீர் பறவைகள், பாதிக்கப்பட்டு இறக்கின்றன. வட ஆள் காட்டி (NORTHERN LAPWING ) பறவை, இனப்பெருக்கம் பாதிப்பு அடைந்துள்ளது. கொல்லி பறவைகள் (RAPTORS) எனப்படும் கழுகு, பருந்து போன்றவையும் உணவு உயிரி பற்றாக்குறை காரணமாக, அதிக வெப்பம் ஆகிய முக்கிய காரணங்களினால் , அவற்றின் வேட்டை ஆடும் திறன் குறைந்து போய்விட்டது.ஆப்பிரிக்கா -பேலியார்டிக் வலசை போகும் பறவை தகை விலான் ஆகும். (BARN SWALLOW) அதன் குஞ்சு பொறித்த பின்னர் அவற்றின் பறவைகள் வளர்ச்சி குறைந்துள்ளது. அமெரிக்ககுருவிகள் வலசை போகும் நிலையில், அதிக வெப்பம் காரணமாக, குஞ்சு பொரிப்பு பாதித்துவிட்டது. மேலும் GREAT REED WARBLER என்ற பெரிய நாணல் கதிர்க்குருவி பறவை, இது போல் பாதிக்கப் பட்டாலும், அவற்றை தனியாக வளர்த்து இனப்பெருக்கம் செய்வது சற்று நம்பிக்கை தருகிறது.

குளம்பு கால் உயிரினங்கள், பல குறிப்பாக நில பாலூட்டிகள், அதிக வெப்பம், வறட்சி, மழை குறைவு ஆகியவற்றால் ஒட்டுண்ணி நோய்களால் துன்பங்கள் அடைகின்றன. உணவு, நீர் பற்றாக்குறை மேலும் அவற்றை பாதித்தநிலை வேதனை தருகிறது. ஆசிய யானைகள், சிங்கம் போன்றவை தொற்று நோய்கள் அடைந்து, பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றன. அதிக வெப்பத்தின் காரணமாக, உயர் மன அழுத்தம் இவ்வகை பாலூட்டிகள் விலங்குகளுக்கு ஏற்படுகிறது. அதனால் இனப்பெருக்கம் குறைவு, இனத்தொகை எண்ணிக்கை குறைவு ஏற்படுகிறது போட்ஸ் வானா நாட்டில், ஆப்பிரிக்கா யானைகள் குறைந்துவருவது உண்மை. சமீபத்தில் 300யானைகள் நீர் உயிரி நச்சு பொருளால் (CYANO BACTERIA ) பாதித்து இறந்தன. இரானிய சிறுத்தை, கோபி கரடி, பழுப்பு கரடி, சிங்கம், ஆசிய, ஆப்பிரிக்கா யானைகள், ஆகிய அரிய உயிரினங்கள், வெப்ப உயர்வு காரணமாக வாழிடம் குறைந்து, அவற்றின் இனத்தொகை பாதிக்கப் பட்டுள்ளது.
திமிங்கிலங்கள், அவற்றின் உணவு கடல் சிறு உயிரினங்கள் குறைவு காரணமாக பாதிக்க பட்டுள்ளன.

அதிகமாக துருவப் பகுதிகளில் பனி உருகி வருவதால் சீல், கடல் சிங்கம், பிரச்சினைகளை சந்திக்கின்றன. குறிப்பாக காஸ்பியன், இளம் பழுப்பு சீல் விலங்குகள், எளிதில் வேட்டையாடப்படும் பரிதாப நிலை உள்ளது.2100 ஆம் ஆண்டுக்கு முன்னர் துருவ கரடி இனம் முழுமையாக அழிந்து விடும் அபாயம் இருக்கிறது. வெவ்வேறு வகை திமிங்கில இனங்கள் பனிப்பாறைகளுக்குள் சிக்கி வாழிடம் குறைவு ஏற்பட்டு அழிகின்றன. ஊர்வன உயிரினங்கள், ஆமை, முதலைகள் போன்றவை அதிக வெப்பம் காரணமாக, இனபெருக்கத்தில், பாலினம் விகிதம் மாறுபடும் சூழல் ஏற்பட்டு, பெண்பால் உயிரினங்கள் மட்டும் அதிகம் பிறக்கின்றன. எலும்பு மீன்கள், முட்டை இடுவது, வளர் சிதை மாற்றம் பாதிப்பு, அதிக வெப்பம் காரணமாக உருவாக்கிவிட்டது. மேலும் அவசியம் இல்லாமல், வலசை என்ற இடம்பெயர்ச்சி நிகழ்கின்றது.

பருவ கால மாற்ற விஞ்ஞானி கோலின் கால் பிரைத் என்பவர் “பருவ கால மாற்ற விளைவுகள் நிறைய உயிரின சிற்றினங்கள் அழிய, பாதிக்க காரணம் என்பதை உறுதி செய்வதனால்,உலகம் முழுவதும் ஒருங்கிணைந்து உரிய
நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து நாடுகள் முன் வரவேண்டும் “என்கிறார். மற்றும் ஒரு அறிவியல் அறிஞர் அமி பிராங்கில் என்பவர்,”பருவ கால மாற்ற பாதிப்பு, குறிப்பிட்ட பறவை, விலங்குகள் சிற்றினங்கள் அழிவு மட்டும் அல்ல, அவை சார்ந்த இயற்கை சூழல் பாதிப்பு தொடர்ச்சியாக அவற்றால் நாம் பெறும் வளங்கள் பாதிப்பு என்பதை, அது பூமி வலை பாதிப்பு என்றும் உணர்ந்து உடனடியாக உலக அளவில் செயல் பாடுகள் துவக்கி வலசை போகும் உயிரினங்கள் பாதுகாக்க வேண்டும் “என்கிறார்.

உலகம் பல பிரச்சனைகள் சந்தித்து வரும் நிலையில், நம் நாட்டில், உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வுகுறைவு ஆகும்.அவற்றின் உண்மையான சூழல் பங்களிப்பு, தொடர்ந்து நம் இயற்கை வளம் நாட்டு மக்கள் அடைகின்ற பயன்கள், அவற்றை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மேலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தடம் மாறி,தடுமாறி செல்லும் மற்ற பறவை உயிரினங்கள் போல் மனித இனம் வெப்ப நிலை உயர்வு மாற்றத்தால், நிச்சயம் பாதிக்காமல் இருக்க சிந்திப்போம்!

 

எழுதியவர் 

முனைவர். பா. ராம் மனோகர்.

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *