சமூக வளர்ச்சியை முன்னெடுப்பது எது ?
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு,வேலூர் புரட்சி.வேலூர் புரட்சி 1806 ஆம் ஆண்டு மே மாதத்தில் துவங்கி,பின்னர் ஜூலை மாதத்தில் வெடித்தது.
அன்றைய பிரிட்டிஷ் ராணுவ தலைமை புதிய இராணுவ விதிமுறைகளை கொண்டு வந்தனர்.இராணுவ வீரர்கள் சீருடைகளில் இருக்கும் போதும், அணிவகுப்பின் போதும் திருநீறு,நாமம் போன்ற மத,சாதி குறிகளை வெளிப்படுத்தக் கூடாது என்றும்,முகத்தை சுத்தமாக மழித்திருக்க வேண்டுமென்றும் விதிகளை கொண்டு வந்தனர்.முன்பாக, வீரர்களின் தலைப்பாகையை மாற்றி, வட்டமான,விலங்குத் தோலாலான பட்டை கொண்ட தொப்பி அணிய வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தனர்.
இதனை இந்து,இஸ்லாமிய மத நம்பிக்கையின் மீதான தலையீடுகளாக இராணுவ வீரர்கள் கருதினர்.1806 மே 6ஆம் தேதி வீரர்கள் ஆயுதங்களை ஏந்த மறுத்தனர். மே 7ஆம் தேதி புதிய தலைப்பாகை அணிய மறுத்தனர். இதனால் 10 இஸ்லாமிய வீரர்கள் 11 இந்து மதம் சார்ந்த வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.அவர்களுக்கு சவுக்கடி,பணி நீக்கம் என தண்டனை கொடுக்கப்பட்டது.
கோட்டையை கைப்பற்றிய வீரர்கள்
1806 ஜூலை 10 அன்று இந்திய வீரர்கள் ஆயுத, வெடி மருந்து கிடங்குகளுக்கு சென்று, துப்பாக்கிக் குண்டுகள் ஆயுதங்களை கையகப்படுத்தி, ஐரோப்பிய அதிகாரிகளையும்,ஐரோப்பிய வீரர்களையும் சுடத் தொடங்கினர். ஐரோப்பிய குடியிருப்புகளை தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவங்களின் போது 15 ஐரோப்பிய அதிகாரிகளும் 119 ஐரோப்பிய வீரர்களும் கொல்லப்பட்டனர். வேலூர் கோட்டை,இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இது நீடிக்கவில்லை.
ஆங்கிலேயர்கள் மிகக் கொடூரமான கொலைவெறியுடன் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள், பீரங்கி வாயில் வைத்து உடல் சிதறி கொல்லப்பட்டவர்கள், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டவர்கள் என சுமார் 800-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.பெரும் உயிர்ப்பலிகளுக்கு இடையே மீண்டும் வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வேலூர் புரட்சி பிந்தைய காலங்களில் நடைபெற்ற பல எழுச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.இது 1857ஆம் ஆண்டில் நடந்த இந்திய ராணுவ வீரர்களின் மகத்தான எழுச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்தது.
இதற்கான வரலாற்றுக் காரணங்களை மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தால்தான் துல்லியமான மதிப்பீட்டிற்கு வர இயலும்.எதிர்கால படிப்பினைகளுக்கும் இது அவசியம்.
மார்க்சிய மதிப்பீடு
பேரா. கா.அ. மணிக்குமார்”முதல் விடுதலைப் போரின் முன்னோடி: வேலூர் புரட்சி”என்ற கட்டுரையில் இந்த எழுச்சியை ஆராய்கிறார்.(“தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும்” நூல் : பாரதி புத்தகாலயம் வெளியீடு).
புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/thamizhnaattu-varalaru-paathaigalum-paarvaigalum/
புரட்சிக்குப் பின்னணியாக இருந்த பொருளாதார நிலையையும்,சூழலையும் அவர் விளக்குகிறார்.
“ஆங்கிலேயரின் நிலவரிச் சுரண்டல் கொள்கையினால் கடும் வறட்சி, உணவுப் பற்றாக்குறை என உருவாகியிருந்த கடுஞ்சூழலில், ஆட்சியை இழந்ததால் பாதிக்கப்பட்டிருந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், அவர்களது சந்ததியினர், குறிப்பாக ஆந்திரா, ஒரிஸா மாநிலங்களுக்கிடையேயான பகுதிகளில் கம்பெனி அரசுக்குக் கப்பம் செலுத்தி வந்த கிட்டத்தட்ட பத்துப் பாளையக்காரர்கள்,ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த தருணத்திற்காகக் காத்திருந்தார்கள்.”
இந்த எதார்த்த நிலைமைகளில், இந்திய ராணுவ வீரர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தின் மீது வெறுப்படைந்து இருந்ததை அவர் சுட்டிக்காட்டி, மதம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் விளக்குகிறார்.
“….புதிய இராணுவ விதிகள், தலைப்பாகை, உடை, கிறித்தவ மதமாற்றத்திற்கான முயற்சி என்ற பீதி பரப்பப்பட்டு, அதன் மூலம் தென்னிந்தியாவில் உருவாகியிருந்த மக்களுடைய அதிருப்தியைப் பயன்படுத்தி, ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, மைசூர் சுல்தானின் ஆட்சியை மீண்டும் நிறுவத் திட்டமிடப்பட்டது. தென்னிந்தியப் படை வீரர்களும் அந்நியர் ஆதிக்கக் கொள்கையை வெறுத்து, வட்டார, அதிகாரிகளும், மொழி, சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறியத் திட்டமிட்டனர்.போர் வீரர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்தி இறுதி முயற்சியை மேற்கொள்ள, ஆயுதங்களில் ஒன்றாக மதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.”
அன்றைக்கு ஆங்கிலேய சுரண்டல் கூட்டத்திற்கும்,மக்களுக்குமான முரண்பாடுகள் தீவிரமடைந்ததன் வெளிப்பாடுகளாகவே எழுச்சிகள் வெடித்தன.இவை இறுதியாக இந்திய விடுதலைக்கு இட்டுச் சென்றன.
வர்க்க முரண்பாடுகள் சமூக இயக்கத்தை முன்னெடுக்கின்றன என்ற மார்க்சிய கோட்பாட்டை வேலூர் புரட்சி வரலாற்றிலும் காண முடிகிறது.
வரலாற்றுப் பொருள் முதல்வாதம்
சமூக இயக்கத்தில் அடிப்படையானது பொருளுற்பத்தி.ஒரு சமூகத்தின் உற்பத்திக் கருவிகள்,உற்பத்தி உறவுகள் உள்ளடங்கிய பொருளாதார இயக்கம்தான் சமூகத்தின் அடித்தளம்.உற்பத்தியில் கட்டுப்பாடும் மேலாதிக்கமும் செலுத்தும் உடைமை வர்க்கங்களுக்கும், உழைப்பைச் செலுத்தி வாழும் உடைமையற்ற வர்க்கங்களுக்கும் நடக்கும் வர்க்கப் போராட்டம்,வரலாற்று மாற்றத்தை உந்தித் தள்ளும் சக்தியாக விளங்குகிறது.
பொருளுற்பத்தியும் அவற்றால் எழும் உற்பத்தி உறவுகளும் சமூக இயக்கத்தை தீர்மானிக்கின்றன.எனவே அவை அடித்தளமாக உள்ளன.இலக்கியம், தத்துவம்,பண்பாடு,கருத்துக்கள்,ஒழுக்க வரையறைகள்,மதம்,கலை,நீதி, சட்டம் உள்ளிட்ட அனைத்து சிந்தனை வெளிப்பாடுகளும் பொருளாயத உறவுகளை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் மேல்கட்டுமானமாக உள்ளன.
மார்க்சிஸ்ட்கள் பேசுவது வறட்டுத்தனமான பொருளாதாரவாதம் என்று சிலர் விமர்சிப்பதுண்டு.பொருளாதார சுரண்டலை மறைப்பதற்காகவும் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு.
அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்குமான உறவை எந்திரகதியாக பார்க்க கூடாது என்று ஏங்கல்ஸ் வலியுறுத்தினார்.பொருளாதார காரணி மட்டுமே சமூக இயக்கத்தினை தீர்மானிக்கும் ஒரே காரணி என்று பார்ப்பது, “திசைதிருப்பும் வேலை” “பொருளற்றது”என மார்க்ஸும் எங்கெல்சும் குறிப்பிட்டனர்.
பொருளாதார நிலைமைகள் “இறுதியாக தீர்மானிக்கும் காரணியாக” இருக்கும் என்றும் அரசியல்,கலை இலக்கிய சமய,தத்துவ காரணிகளும் பொருளாதார இயக்கத்தில் வினையாற்றும் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.இந்த தளங்கள் அனைத்திலும் வர்க்கப் போராட்டம் இடையறாது நடக்கிறது.
இந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை பாட்டாளி வர்க்கம் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான சித்தாந்த ஆயுதமாக திகழ்கிறது.
(தொடரும்)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.