சமகால சுற்றுச்சூழல் சவால்கள் (Samakala Sutru Suzhal Savalgal) – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : சமகால சுற்றுச்சூழல் சவால்கள்
தொகுப்பாசிரியர்கள் : எஸ் .விஜயன் , த.வி.வெங்கடேஸ்வரன் , ஆயிஷா நடராசன் ,செ.கா , ஸ்ரீகுமார், டயானா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 24332924 / 8778073949
பக்கங்கள் : 272
விலை : ரூ.400
27 எழுத்தாளர்களின் 28 கட்டுரைகளால் உருவாகியுள்ளது இந்தக் கட்டுரை நூல் .
மார்க்சிஸ்ட் மாத இதழில் வெளியான ஆத்ரேயாவின் முதல் கட்டுரையுடன் தொடங்கி… ஆயிஷா நடராஜன் அவர்களின் இறுதி கட்டுரையுடன்… நூல் நிறைவாக நிறைவு பெறுகிறது! இன்னும் சில முக்கியமான எழுத்தாளர்களின் கட்டுரைகளை வரும் காலத்தில் bookday.in தளத்தில் எதிர்பார்க்கலாம்!
இந்த நூல் அறிமுகத்தின் நோக்கம் 27 எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் முழுவதுமாக அறிமுகப்படுத்துவது அல்ல.
1.நாம் முன்பெல்லாம் ஏசி … Airconditioner.. குளிர்சாதன பெட்டி போன்றவை மூலம் வெளியேறும்CFC எனும் குளோரோ ஃபுளூரோ கார்பன் பற்றியும் அவை ஓசோன் படலத்தில்ஓட்டை போடுவது பற்றியும் கவலையோடு விவாதித்துக் கொண்டிருந்தோம். இன்றுஉலக நாடுகளின் மாண்ட்ரியல் ஒப்பந்தத்தின் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஓசோனின் தடிமம் குறைவது தடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் நமக்கு நம்பிக்கையாக வெளிப்படுத்துகிறது. அதேபோல வருகின்ற காலங்களில் பருவநிலை மாற்றம் அல்லது காலநிலை மாற்றம்.. Climate change என்பதால் நாம் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய சீர்கேடுகளையும் எதிர்கொண்டு களைய முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூல் ஏற்படுத்துகிறது.
வளர்ச்சி -சுற்றுச்சூழல்.. இவை இரண்டிற்கும் இடையில் கவனமாக எப்படி செயல்படுவது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையை ஆத்ரேயாவின் கட்டுரை விளக்குகிறது என்றால் எஸ்.வி. ராஜதுரை அவர்களின் கட்டுரை 150 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் அவர்களும் ஏங்கல்ஸ் அவர்களும் எவ்வளவு தொலைநோக்கோடு சுற்றுச்சூழல் விழிப்புணர்வோடு தங்கள்நிலைபாட்டை வெளிப்படுத்தினர்… அது தற்போது சமகாலத்திலும் எப்படி பொருத்தமாக இருக்கிறது என்பதை ஆழமாக விவாதிக்கிறது.
“பாதுகாப்போம்.. உடன் உயிர்த்து இருப்போம் ..
இந்தப் பிரபஞ்சத்தின் நீல நிற ஒற்றை வட்டப் புள்ளி இது நமக்கு இருக்கும் ..நாம் அறிந்த ஒரே இல்லம்” என்கிறார் காரல் சாகன்!
எல்லாவற்றிலும் லாபம் ஒன்றை மட்டுமே தலையாய குறிக்கோளாக கொண்டு செயல்படும் முதலாளித்துவ உற்பத்தி முறை உள்ள சமுதாயத்தால் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரி செய்ய முடியாது ..எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற சம உடமை சிந்தனையின் பெயரில் செயல்படும் கம்யூனிஸ உற்பத்தி முறை ஒன்றினால் மட்டுமே… லாப நோக்கமின்றி.. மக்கள் நலனை கணக்கில் கொண்டு தீர்வு காண முடியும் என்பதே இந்த நூலில் இருந்து நாம் பெறக்கூடிய அழுத்தம் திருத்தமான.. அறிவியல் பூர்வமான.. ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
2.கட்டுரையாளர் ஒவ்வொருவருமே தங்கள் இடையே ஒரு எல்லையை.. வரம்பை வகுத்துக் கொண்டு கூறியது கூறல்(Repeatation) ஆகக் கூடாது என்பதற்காக தனித்தனியான சிறப்பு தலைப்புகளில்.. தீவிரமான தகவல் தேடல்களில் ஈடுபட்டு ..தரவுகளை தொகுத்து.. புள்ளி விவரங்களுடன்.. தாங்கள் ஆய்வுக்கு உட்படுத்திய நூல்கள் ..கட்டுரைகளின் விவரங்களுடன்.. அதே நேரத்தில் கூடியவரை சுருக்கமாக.. வாசகருக்கு சுவாரசியமாக கட்டுரைகளை.. பிரச்சனையின் தீவிரத்தை உணரும் வண்ணம் நறுக்காக.. நாசுக்காக தெரிவித்துள்ளனர்.. எனவேதான் 272 பக்கங்களையும் இரு தினங்களுக்குள்.. விறுவிறுப்பு குன்றாமல்.. வேகமாக படித்து உள்வாங்க முடிகிறது.
சுற்றுச்சூழல் என்பதை ஒரு பிரச்சனையாக இந்த சமூகம் கருதுகிறதா என்பதே ஒரு பெரிய கேள்வியாகும் .அன்றாட பிரச்சனைகளில் அல்லல்படும் மனித இனம் ..எங்கோ ..எப்போதோ.. யாருக்கோ நடக்கப் போவதை பற்றி இப்பொழுது கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று கூட அலட்சியமாக இருக்கக்கூடும். உலகின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்த ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த நூற்றாண்டில் மனிதன் எதிர்கொள்ளப் போகும் இரண்டு முக்கிய சவால்களாக காலநிலை மாற்றத்தையும், மனிதனால் உருவாக்கப்படும் தொற்று நோய்களைப் பற்றியும் எச்சரித்திருந்தார். ஏற்கனவே கொரோனா தலைவிரித்தாடி இன்றும் பரிணாம வளர்ச்சி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் சீற்றங்களை நாம் எங்கோ எப்போதோ வரும் என்ற நிலை மாறி நொடிக்கு நொடி சந்தித்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளமும் புயலும் இயற்கை சீர்கேடாக இருந்த நிலை மாறி.. இன்று கொடும் வெயில் கூட இயற்கை பேரிடராக பரிணமித்திருக்கிறது. வெயில் மரணங்கள் நம் கண் முன்னே நிகழ்கின்றது.
எனவே இந்த நூலை “காலத்தில்” வெளியிட்ட பாரதி புத்தகாலய சகாக்கள் எல்லோருடைய பாராட்டுக்களுக்கும் உரியவர்கள்!..
3.” இந்த உலகின்… மண்ணின்.. இயற்கையின் சொந்தக்காரர்கள் யாரும் அல்லர். அனைவருமே தற்சமயம் இதனை கையில் வைத்திருப்பவர்கள். இதனால் பயனடைவோர் இந்த பூமியை பூர்வீக சொத்து என்று கருதி அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு மேம்பட்ட நிலையில் தரவேண்டியவர்களே” என்று மூலதனம் நூலின் மூன்றாம் பாகத்தில் மார்க்சிய மூலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அல்கோர் போன்ற புகழ்மிக்க சூழல் செயல்பாட்டாளர்கள் திரை மறைவில் கார்பன் மாசு செய்யும் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு உள்ளார்கள் .கார்பன் தொழில்நுட்பத்துக்கு மாற்று தீர்வு என முன் வைக்கும் பயோ டீசல் போன்றவை வெறும் இலாப நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் மோசடி என்பதை ஜெஃப் கிப்ஸ்இயக்கிய Planet of the Humans” எனும் ஆவணப்படம் அம்பலப்படுத்துவதாக த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் கவனப்படுத்துகிறார். மேலும் முழு விவரங்களுக்கு அவருடைய கட்டுரையை நேரடியாக வாசிப்பது மிக அவசியம்.
4. புவி வெப்பமயமாதல்..அதை எப்படி கணக்கிடுவது ?சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உலக நாடுகள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து செய்து வரும் முயற்சிகள்.. சந்திப்புகள்.. மாநாடுகள் ..தங்களுக்கு இடையே மேற்கொண்ட ஒப்பந்தங்களின் முக்கிய அம்சங்களை வ.சேதுராமனின் கட்டுரை விலாவாரியாக விளக்குகிறது. அண்மையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட EIA 2020 மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அது நிலுவையில் உள்ளது. ஆனாலும் அதன் பாதகமான அம்சங்கள் அரசாணை மூலம் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நம்மை எச்சரிக்கிறது இந்த கட்டுரை.
5. 1997 ஆம் ஆண்டு கியோட்டோ நகரில் நடந்த உறுப்பு நாடுகளின் மூன்றாவது மாநாட்டில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி ஒவ்வொரு நாட்டிற்கும் உமிழ்வின் அளவு தீர்மானிக்கப்பட்டு அதைவிட அதிகமாக உமிழ்ந்தால் தண்ட தொகை செலுத்துவதையும் ,குறைவாக உமிழ்ந்தால் ஊக்கத்தொகை கொடுப்பதையும் சட்டகமாகக் கொண்டது .ஆனால் இது கடைசி வரை அமலாகவில்லை .இது சாத்தியமில்லை என்று ஆனபின் 2000 ஆண்டுகளின் இறுதியில் முன்னுக்கு வந்ததுதான்’ நிகர பூஜ்யம்’என்ற கோட்பாடு .இந்தக் கோட்பாட்டை புரிந்து கொள்ள எஸ். விஜயன் அவர்களின் நிகர பூஜ்ய சவால்கள் கட்டுரையை படிக்க வேண்டும்…
6. காடுகள் பெருகினால் மட்டும் கார்பன் அளவு குறைந்து விடுமா என்பதை நான்கு பக்கத்திற்குள் சுவைபட விளக்குகிறார் ப ராம் மனோகர் அவர்கள்.
7. சென்னையில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் சவால்களை பற்றியும் அதை எதிர்கொள்ள சாத்தியமான தீர்வுகளை பற்றியும் சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆதி .வள்ளியப்பன் அவர்கள் பேசியது ஒரு கட்டுரையாக வந்திருக்கிறது. அதை சென்னைக்காரர்கள் மட்டுமல்ல எல்லோருமே வாசிக்கலாம். வாசிக்க வேண்டும்!
8. கடல் வெப்பநிலை -வளிமண்டல அழுத்தம் இணைந்து உலகளாவிய கால நிலையை இயக்கும் எல் நினோ( ஸ்பானிஷ் மொழியில் குழந்தை இயேசுவுக்கு வழங்கப்பட்ட பெயர் அல்லது பொதுவாக ஆண் சிசுவை குறிக்கும்) தெற்கு அலைவால் அதீத வெப்பம்தீவிரம் அடைவதாக அறியப்படுகிறது .எல் நினோ வெதுவெதுப்பான நிலைமை மற்றும் எல் நினோ குளிர்ந்த நிலைமைஆகியவற்றுக்கு இடையே மாறி மாறி வருவதாக அது உள்ளது .எனவே பிரபலமாக பேசப்படும் எல் நினோ பற்றி சரியாக புரிந்து கொள்ள டி. ரகுநந்தன் -பிந்து பூமா இருவரும் எழுதிய “மிகக் கடுமையான வெப்பநிலை குறையப்போவதில்லை” என்ற கட்டுரையை அவசியம் வாசிக்க வேண்டும்.
9. புவி வெப்பமடைதல் விளைவுகளை எதிர்கொள்வதில் மரபணு தொழில் நுட்பத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்ற சாத்தியக்கூறுகளை அறிவியல் பூர்வமாக டி .திருநாவுக்கு அரசு அவர்களின் கட்டுரை விளக்குகிறது என்றாலும் நமக்கு மரபணு மாற்றம் என்பது மனதளவில் பயத்தினைஉண்டாக்குகிறது. இதைப் பற்றியும் விவாதிக்க நீங்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டும்.
10. சுபஸ்ரீ அவர்களின் “சிள் வண்டுகளும் கால நிலை மாற்றமும் “என்ற கட்டுரை உண்மையிலேயே புதிய தகவலாகவும் ஆச்சரியமூட்டுவதாகவும் இருக்கிறது.
11. சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு செல் போன் டவர்கள் தான் காரணம் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருப்பதாக பறவை இயலாளர் வெ. கிருபானந்தினி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். அத்தோடு மனிதனுக்கு தொல்லை தரும் பறவைகளையும் அவர் சுட்டிக் காட்டுகிறார் மாடப்புறா.. சிட்டுக்குருவி.. தூக்கணாங்குருவி.. கிளி இனங்கள்.. திணை குருவி இனங்கள்.. மயில் போன்றவை நம்மைப் படுத்தும் பாட்டை விவரிக்கிறார். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பறவைகளும் எப்படி பாதிக்கப்பட்டிருக்கின்றன என இவரது கட்டுரை விளக்குகிறது.
12. நாம் அவ்வளவாக கவலைப்படாத.. அயல் படர் உயிரினங்கள் பற்றி நன்மாறன் திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள கட்டுரை உண்மையிலேயே ஏராளமான தகவல்களை நமக்குத் தருகிறது. குறிப்பாக சீமைக் கொன்றை.. உண்ணி செடி, ஆப்பிரிக்க கெளுத்தி ,ஆப்பிரிக்க நத்தைகள் ,சீமை கருவேல மரம், தைல மரம் என ஏராளமான புதிய விவரங்களை இந்த கட்டுரை நமக்கு கவனப்படுத்துகிறது.
13. நவீன வேளாண்மை ,இயற்கை வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மை முறைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள தொடர்புகளை பற்றி வெ.சுகுமாரன் அவர்களின் கட்டுரை விரிவாக விவரிக்கிறது.
14. நம் பூமிப்பந்தில் பெரும்பகுதியாக உள்ள கடலையும் அதனுடன் தொடர்புபடுத்தி சுற்றுச்சூழலையும் விளக்குகிறது நாராயணி சுப்பிரமணியன் அவர்களின் சுவாரசியமான கட்டுரை .கரிமத்தை உறிஞ்சுவதில் கடலின் பங்கு.. திமிங்கலங்கள், மிதவைப் பாசிகள்.. அலையாத்திக் காடுகள் என கடல்சார் தாவரங்கள் எப்படி பல்வேறு தளங்களில் கடலுக்குள் கனிமத்தை சேமிக்கின்றன என்பதை பற்றி எல்லாம் இவரது கட்டுரை தீவிரமாக விவாதிக்கிறது.
கடல் உணவின் முக்கியத்துவம்.. மீன் பிடி தொழிலின் தற்போதைய சிக்கல்கள்.. காலநிலை மாற்றத்தால் கடல் உணவில் ஏற்படும் பாதிப்புகள்.. கடலில் ஏற்படும் பல மாற்றங்கள்.. இதற்கான தீர்வுகள் என கட்டுரை விறுவிறுப்பாக இருக்கிறது.
15. நமக்கு வரலாற்று ரீதியாக விபரம் தெரிந்த காலத்திலிருந்து கடல் சார் வணிகம் நாகரிகத்தின் அம்சமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் காரணமாக கடல்சார் வணிகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி இல. சுருளிவேல் அவர்களின் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் தனியாக கப்பல் விட விதிக்கப்பட்ட தடை முதற்கொண்டு இக்கட்டுரை அலசுகிறது. கடல் மீன் உற்பத்திக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பை விவரங்களுடன் விவாதிக்கிறது கட்டுரை. கடல் வளம் இந்தியாவின் உயிரோட்டமாக உள்ளது என்றும் அதை சமூகப் பொறுப்புடன் பயன்படுத்தி கடல் வாணிபத்தை ஊக்கப்படுத்தி சுயசார்பு இந்தியாவை உருவாக்க நம்மை வலியுறுத்துகிறது இவரது கட்டுரை.
16. அபாயாகரமான.. மிக மோசமான சுற்றுச்சூழல் சீர்கேட்டு நெருக்கடியாக.. மருத்துவ கழிவுகள் உள்ளதை மருத்துவப் பிரதிநிதியாக பல ஆண்டுகள் பணியாற்றிய என். சிவகுரு அவர்களின் கட்டுரை உணர்த்துகிறது.
17. நாம் யாருமே பெருமளவில் கண்டுகொள்ளாத ஒளிமாசைப் பற்றி நந்தசிவம் புகழேந்தி அவர்களின் கட்டுரை கவனம் ஈர்க்கிறது. கண்ணை கூசச் செய்யும் அதீத வெளிச்சம் (over illumination) ஒளி அத்துமீறல் (light trepass) கூசொளி (Glare) ஒளி ஒழுங்கீனம் (Clutter) என்று பல புதிய விஷயங்களை இவரது கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம். தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் மனித இனமும் ஒளி மாசால் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள இந்த கட்டுரை நிச்சயம் உதவும்.
18. எஸ் .விஜயன் அவர்கள் எழுதியுள்ள மற்றும் ஓர் கட்டுரை நிரந்தரமாகவே நிலத்தடி நீரில் குடியேறிவிட்ட ரசாயன மாசுக்களின் அபாயங்களை தீவிரமாகவே நமக்கு எடுத்துரைக்கிறது.பிஃபாஸ் PFAS பற்றி அறிய வாசியுங்கள்.
19. நுண் நெகிழிகளில் ( micro plastics) மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகளை தனது கட்டுரைகளில் அவிழ்க்கிறார் கார்த்திக் பாலா அவர்கள்.
20. நகரமயமும் போக்குவரத்தும் என்ற மு .ராமநாதன் அவர்களின் கட்டுரை விவரங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ரயில்வே தண்டவாளங்களின் நீளத்தை விட பெரிய அளவில் சுதந்திர இந்தியாவில் போடப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய தகவலாகும். ஆனால் மறுபுறம் இரு சக்கர.. நாற்சக்கர தனியார் வாகனங்களின் அதிவேக எண்ணிக்கை வளர்ச்சியால் எப்படி சுற்றுச்சூழல் மிக மோசமான நிலைக்குச் சென்று இருக்கிறது என்பதையும் இக்கட்டுரை உணர்த்துகிறது. பொதுப்போக்குவரத்தை வலியுறுத்தும் இவரது கட்டுரையை வாசித்த பின்பும் நாம் திருந்துவோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
21. உலகப் பெருங்கடலின் தளத்தை வரைபடமாக உருவாக்கிய விவரத்தை மிக சுவாரசியமான கதை போல விவரிக்கிறது ஏற்காடு இளங்கோ அவர்களின் அற்புதமான கட்டுரை.
22. மிகச் சாதாரண சொல்லாடலில் நாம் உலகம் அழியப் போகிறது.. இயற்கையைப் பாதுகாப்போம் (Save Nature) என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால் வந்தனா ரேவதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கட்டுரை நெத்தியடியாக இயற்கைக்கு நம் இரட்சிப்பு தேவையில்லை.. இயற்கைதான் நம்மை இரட்சிக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. LUCA எனும் புதிய உயிரினம் பற்றி தெரிந்து கொள்ள அவரது கட்டுரையை வாசியுங்கள் .அதேபோல Survival of the Fittest என்பது பற்றிய புது விளக்கமும் இவரது கட்டுரையில் உள்ளது. ‘நான் பூமியின் கடைசி மனிதன் ‘என்று ட்வீட் செய்யும் மனிதனைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
23.சுற்றுச்சூழல் சீர்கேட்டை சமாளிக்க எப்படி எப்படி எல்லாம்.. என்னென்ன விதத்தில் எல்லாம் செய்யறிவை(AI) பயன்படுத்தலாம் என்ற பா. ஸ்ரீகுமாரின் கட்டுரை நமக்கு ஆச்சரியத்தையும் ஆவலையும் தூண்டுகிறது.
24. ஊருணிகளின் மரணம் என்ற சு .தினகரனின் கட்டுரை மூன்று பக்கத்தில் முடிந்து விட்டாலும் மிக முக்கியமான கட்டுரையாக.. தகவல் நிறைந்த கட்டுரையாக.. சோகமூட்டுவதாக இருக்கிறது.
25. வெயிலின் சூடு கோவை சதாசிவம் அவர்களின் கட்டுரையில் வியர்த்துக் கொட்டுகிறது.
26. தே. தாமஸ் பிராங்கோ அவர்கள் எதற்கு சிங்காரச் சென்னை என்று அடுக்கடுக்கான கேள்விகளை நியாயமாகவே எழுப்புகிறார்.
27. வி. அமலன் ஸ்டேன்லி அவர்களின் சென்னை புளூரோசிஸ் நோய் தொற்று பற்றிய கட்டுரை ஓர் ஆய்வுக் கட்டுரையாக படைக்கப்பட்டுள்ளது.
28. இறுதியாக ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதிய” ஒற்றை உயிர் கிரகமும் அந்த ஒன்பது புத்தகங்களும்” என்ற கட்டுரை நமக்கு ஒரு.. எட்டு புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறது. 1.Ecological imperialism.. 2.The Columbian Exchange,
3.Green imperialism..4. Fossil Capital .5.Silence Spring.. 6.Eco socialism- Radical alternative to capital Catastrophe.. 7.Capitalism and climate change .. 8.Red- Green Revolution.. இந்த நூல்களை எல்லாம் வாங்கி வாசிப்பது பற்றி யோசிக்கலாம்.. அதற்கு முன்பாக இந்த “சமகால சுற்றுச்சூழல் சவால்கள்” என்ற காலத்தில் வெளிவந்த பாரதி புத்தகாலய நூலை வாங்கி வாசிக்கலாம்..குழுவாக விவாதிக்கலாம்.. செயல்பாடுகளை திட்டமிடலாம்.
எல்லாத் தரப்பினருமே வாசிக்க வேண்டிய நூல். இன்னும் பல்வேறு கட்டுரையாளர்களின் கட்டுரைகளோடு இந்நூலின் இரண்டாம் பாகம் வெளிவரட்டும்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
இரா.இயேசுதாஸ்
மன்னார்குடி அறிவொளி வாசிப்பு இயக்கம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

