உயரப் பறக்கும் உயிரினங்களும்,
உயர் வெப்பநிலை பாதிப்புகளும்!
“என்ன நண்பரே! இந்த வெயிலை எப்படி சமாளிக்கிறீங்க!?
நடை பயிற்சியின் போது,. பின்னால் இருந்து அழைத்து,
அந்த மூத்த நண்பர் சுந்தரம் குரல் கேட்டு “உண்மையில் மிக கடுமையாக உள்ளது, நம் கஷ்டம் ஒரு புறம் இருக்கட்டும்!பல உயிரினங்கள் நம்மை விட அதிக துன்பங்கள் இப்போது அடைகின்றன, அய்யா, தெரியுமா!?”என்று நானும் கூறினேன். அவர் உடனே “சரி சொல்லுங்க,” என்றார்!
ஆமாங்க!பறக்கும் பாலூட்டிகள் ஆன வௌவால்கள், இந்த வெயில் காலத்தில் மிக அதிக பாதிப்புகள் அடைகின்ற ஒரு உயிரினம் ஆகும்!நம் மனித குலத்திற்கு தேவையான தாவர வளம் பெருக, விதை பரவுதல், மகரந்த சேர்க்கை ஆகிய சூழல் செயல்பாடுகளை மிக கவனமாக மேற்கொண்டு வரும் இந்த அரிய உயிரினங்கள் இலை உதிர் காடுகளில், மரங்களின் உச்சியில், கூட்டம், கூட்டம் ஆக சமூக வாழ்க்கை வாழ்கின்றன.வவ்வால்கள் அதிக வெப்பத் தினை, தாங்கி அதனால் அவற்றின் உடல் வளர் சிதை மாற்றம் அதிகரிக்கும் தன்மை கொண்டவை ஆகும். மேலும் இவை தீமை தரும் பூச்சிகளை அழிப்பதில் வல்லமை பெற்றவை ஆகும்.குறிப்பாக கொசு, வண்டுகள், வெட்டுக்கிளி, இலை சுருட்டு பூச்சி, மாத் எனும் தாவரங்களை பாதிக்க செய்யும் பூச்சிகள் வவால்களால் உணவாக எடுத்து கொண்டு அழிக்கப்படுகின்றன.
மிகுந்த வெப்ப உயர்வு பருவ காலங்களில்,வௌவால்கள் நீர்நிலைகளின் அருகில் உள்ள மரங்களை நாடி அங்கு அவை வசிக்கின்றன. நீரின் உதவியாலும், அவற்றின் இறக்கை சவ்வு (Patagiyam) அசைத்து தம் வெப்பத்தின் தீவிரத்தினை குறைத்து கொள்கின்றன.சமீபத்தில் இவ்வாண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் ஒடிசா மாநில ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வௌவால்கள் வெப்ப நிலை உயர்வு காரணமாக இறந்து போன தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.வனத்துறை பணியாளர்கள் வவ்வால் வசிக்கும் மரங்களில் நீர் தெளித்து அவற்றின் உயிர் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும் விலங்கு காட்சியகங்களில், இந்த பணி எளிது.
ஆனால் மற்ற வாழிடங்களில், இத்தகைய செயல்பாடுகள் மிகவும் கடினம். ஜெர்மனி நாட்டில் உள்ள லே பிரிஸ் விலங்கு, வன விலங்கு ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கையின் படி, வௌவால் இறப்புகள் சூழல் சமநிலை பாதிப்பு மட்டுமின்றி, அவற்றின் இறந்த உடல்கள் மூலம் விலங்கு மூலம் பரவும் நோய்கள் (ZOONOTIC DISEASES )உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
வௌவால் பெரும்பாலும் மர நிழல்களை தேடி, இரவில் தங்கும் நடத்தை உள்ளவை.15 முதல் 20 ஆண்டு வாழ்நாள் கொண்ட இவை ஆண்டுக்கு, ஒரு குட்டி ஈனக்கூடியவை. இந்த வௌவால்கள் அதிக வெப்பம் (41.6-44.2செ. கி) தாங்கக்கூடியவை. ஆனால் ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இவை வெப்பத்தால் தொடர்ந்து பாதிப்புகள் அடைவது அறியப்பட்டுள்ளதாக , ஹைதராபாத், உஸ்மானிய பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. மேலும் முதிர்ந்த உயிரினங்கள் மற்றும், இளம் குட்டிகள் இந்த பிரச்சினை மூலம் துன்பங்களை எதிர் கொள்வதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பூனே நகர கோத்ரேஜ் தாவர ஆய்வு மையம் “வௌவால்கள் இறப்பினால் இயற்கை சூழல் மாற்றம் , மகரந்த சேர்க்கை 10%பாதிப்பு கூட, தொடர்ந்து நான்கு ஆண்டுகள்சூழலில் பிரச்னை தொடர செய்யும்”.
வவ்வால் கூட்டம், குகைகளிலும், நகர தொன்மை வாய்ந்த கட்டுமானங்கள், கோயில்கள், அரண்மனை வளாகங்களில் வாழ்ந்து வருகின்றன. தஞ்சை மாநகர் கீழ வீதியில் உள்ள அரண்மனை வளாகத்தில் உயர மரங்களில் பழந்தின்னி வௌவால்கள் கூட்டம், கூட்டம் ஆக உள்ளன. அவற்றின் அரிய தன்மை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வளாகத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளி மாணவிகள் ஆய்வு செய்து வருகின்ற நிலை மகிழ்ச்சி தருகிறது.
ஒரு மணி நேரத்தில் 1200 தீமை தரும் பூச்சிகள் அழிக்கும் இந்த அரிய உயிரிகள் நாக்பூர், அகமதாபாத், ஒடிசா, உத்திர பிரதேச பகுதிகளில் அடிக்கடி இறக்கும் நிகழ்ச்சிகள் மிகவும் கவலை தருவது என்பதை உணர்வோமா!?. வெளிநாடுகளிலும் இந்த வகை அரிய விலங்குகள் வெப்பத்தால் இறக்கும் சம்பவங்கள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் வெஸ்ட் சிட்னி பல்கலைக்கழகம் ஆய்வின்படி,2008 ஆம் ஆண்டிலிருந்து 1,96000 முதல் 2,26000 வௌவால்கள் வெப்ப பாதிப்பு அடைவதாக தெரிகிறது.
2014 ஆம் ஆண்டு ஜனவரி சவுத் ஈஸ்ட் குயின்ஸ் லாந்து நாட்டில் ஒரு நாளைக்கு 45,500 விலங்குகள் இறந்த செய்தி அதிர்ச்சி தரும் ஒன்று.2018 ஆம் ஆண்டு நவம்பர் 42டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் தாக்கம் 23,000, எண்ணிக்கை மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் 65,000 ஆக தொடர்ந்து வௌவால்கள் இறப்பு நிகழ்ந்த தகவல்கள் , தொடர்ந்து உலகில் பல்வேறு வைரஸ் பாதிப்புகள் உருவாக தூண்டிய ஒன்றாக இருக்க வாய்ப்பிருந்தது.
வௌவால்கள் பொதுவாக பொது மக்கள் விரும்பும் விலங்கு அல்ல. பல மூட நம்பிக்கைகள், வேட்டை, அவற்றின் தொடர்ந்த ஒலி கூச்சல் போன்றவற்றால் வெறுப்புணர்வினை அடைகின்ற நம் மனித இனம் வவ்வால்களின் சூழல் பங்களிப்பினை புரிந்து கொள்ளவேண்டும்.இவை மட்டும் அல்ல தொடர்ந்து வரும் வெப்ப உயர்வினால் பறவைகளும் இறப்பு அடைகின்றன,என்பது முக்கிய தகவல் ஆகும். கடந்த ஆண்டு 2022 ல்,( ஏப்ரல், மே மாதங்கள்) குஜராத் மாநிலத்தில்,45டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையால்,மாடபுறா, பருந்து, காக்கை, கிளிகள் போன்ற பறவைகள் வானிலிருந்து வீழ்ந்து இறந்தன. ஆயிரக்கணக்காண பறவைகள், மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கபட்டன.
குறிப்பாக குஜராத், கட்ச் -சௌராஷ்ட்ரா பகுதியில் குறைவு வெப்பம் 29.7முதல் அதிக பட்சம் 45.8 செண்டி கிரடு (2022)அதிகம் பறவைகள் பாதிப்பு அடைந்த நிலை மிக துயரம் ஆகும்.அதிக வளிமண்டல அழுத்தம் பூமி மீது வருகையில் காற்று முற்றிலும் இல்லாத நிலை உயர் வெப்ப நிலை அனைத்து உயிரினங்கள் பாதிக்க ஏதுவாகி விடுகிறது. பொதுவாக அஹமதாபாத், கொரேகான் நகரங்களில் இந்த கோடை காலத்தில் 50% வல்லுறு, நீல பாறை புறாக்கள் போன்ற பறவைகள், அதிகம் துயர் அடைந்து வருவது ஆய்வு தகவல்கள் மூலம் அறியப் பட்டுள்ளது.
பொதுவாக உயிரினங்கள், நீரிழப்பு மூலம் உடல் சோர்ந்து, இறக்கும் நிலையில் அவற்றின் உயிர் காப்பாற்ற சோடியம், பொட்டாசியம் கலந்த நீர் தருதல் நன்று. அனைவரும் தம் இல்லங்களின் வெளி சுற்று சுவர்களில், சிறிய பாத்திரம் அல்லது கோப்பைகளில் நீர் வைக்கலாம். வானில் பறந்து செல்லும் நகரப் பறவைகள் இந்த நீர் அருந்தி உயிர் பிழைக்க நாம் வாய்ப்புகள் வழங்க இயலும், அல்லவா!?.
உயரப் பறக்கும் உயிரினங்கள், உயர்ந்து வரும் வெப்பநிலை மூலம் பாதிப்பு அடைவது தவிர்க்க முயற்சி செய்யும் போது,(பறவைகள், வௌவால்கள் போன்றவை) இயற்கைச் சூழலில் விதை பரவுதல், மகரந்த சேர்க்கை ஆகிய பணிகள் மேற்கொள்ள அவை அவசியம் ஆகின்றன என்பதையும் உணர முடியும்.