பிளாஸ்டிக் குப்பை, கடல் உயிரின கேடு!
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், நம் உடலுக்கு கேடு!
மனித வாழ்க்கையினை எளிதாக்கி, நாகரீகம், அறிவியல்
பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில், பிளாஸ்டிக் எனும் நெகிழி முக்கிய பங்கினை நெடுங்காலம் ஆற்றி வருகிறது.
பிளாஸ்டிக் இல்லாமல் இனிமேல் உலகில் வாழ இயலாது.
ஏனெனில் அதன் பயன்பாடு ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம். ஆனால் மக்காத ஒரு முறை பயன்படுத்தி எறிந்து வரும் பிளாஸ்டிக் பைகள் மிக அதிக பிரச்சனை தந்து வருகிறது.1907 ஆம் ஆண்டு பெல்ஜிய நாட்டு வேதியியல் விஞ்ஞானி லியோ பேக்கலான்ட் என்பவர் பிளாஸ்டிக் உருவாக்க முனைந்து வெற்றி பெற்றார். ஆனால் பிளாஸ்டிக் என்ற பொருளின் நெடுங்கால தரம், உறுதி, லேசான தன்மை, கிடைக்கும் நிலை உலக மக்களை அதன் அசுரத்தன வளர்ச்சி அதிகரித்து, தேவைகள் பெருகி வெவ்வேறு வடிவங்கள் கொண்டு ஆட்டி படைத்து வருகிறது. இதன் உருவாக்க காலத்தில் கூட பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் நம் உலகத்தினை அச்சுறுத்தும் என்று யாரும் எண்ணி பார்க்க வில்லை. பொதுவாக பிளாஸ்டிக் என்ற நாகரீக பொருள், மனித நடத்தையினை பெரும்பாலும் மாற்றம் செய்துவிட்டது, என்பது உண்மை.அதன் பெருக்கம் இயற்கைக்கும், மனித ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கும் என்ற உண்மை அறிந்தும் அறியாமல், இருக்கும் சமுதாயம் வளர்ந்து வருவதும், வருத்தம் தான்.
உலக அளவில் 2019 ஆம் ஆண்டு,460மில்லியன் டன்கள், பிளாஸ்டிக் உற்பத்தி ஆகி, அவற்றின் கழிவு அதே ஆண்டில் 353 மில்லியன் டன்கள் ஆக இருந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி குழு நிறுவனம் அளித்த தகவல் படி, பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகள் மீள் சுழற்சி செய்யாமல் 50% பெரும் வெற்று நிலங்களில் கொட்டப்படுகின்றன.2021-22 ஆம் ஆண்டு நம் இந்திய நாட்டின் பிளாஸ்டிக் தேவை 20.89 மில்லியன் டன்கள் ஆகும். இதில் 40%முதல் பயன்பாட்டுக்கு பிறகு கழிவுகள் ஆக மாறி விடுகின்றன என டெல்லி, அறிவியல் சுற்றுச் சூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் ஏறத் தாழ எட்டு மில்லியன் டன்கள் கடற்கரை பகுதியில் சேர்ந்து, அங்கிருந்து கடலுக்குள் போய்விடும் நிலை உண்மையில் அச்சுறுத்தல் ஆகும். ஆம்!
கடற்கரை ஒட்டிய இடங்களில், மனித செயல்பாடுகளின் விளைவினால், அதிகமாக ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து விடுகிறது. ஆற்றின் வழியாக, வெள்ளத்தில் சமவெளி பகுதியின் குப்பை, தொழிற்சாலை வெளியேற்றும் கழிவு, படகு, தயாரிப்பு, மீனவர்கள் பயன்படுத்தும் வலைகள், பிளாஸ்டிக் நுகர்வோர் பொருட்கள், உல்லாச பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில், உணவுகள் பிளாஸ்டிக் பொட்டல கழிவு, வெவ்வேறு வகை நெகிழிகளின், குப்பை கூடையாக கடல் மாறி வரும் நிலை வேதனை தருகிறது.
இந்திய நதிகளின் கிளை ஆறுகள் 15-20% பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் சேர்க்கும் தற்போதைய அவல நிலை, தொடர்ந்தால்,2050 ஆம் ஆண்டு கடலில் மீன்களுக்கு மாறாக பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே மீனவர்கள் வலையில் பிடிபடும் என்ற தகவல் அதிர்ச்சி தருகிறது.மேலும் பிளாஸ்டிக்குகள் கடலில் சென்று மைக்ரோ பிளாஸ்டிக் என்ற நுண் நெகிழி துகள்களாக மாறி மீன்கள் உடலில் புகுந்து கேடு விளைவிக்கும், அந்த மீன்கள் மனிதர்கள் உணவு மேசைக்கு வரும்பொழுது யாரும் அதனை பற்றி சிந்திப்பதில்லை. இது உணவு சங்கிலி மூலம் மீன்கள் பாதிக்கப்பட்டு, மனித ஆரோக்கியத்திற்கும் அபாயம் உருவாக்கும்.2025 ஆம் ஆண்டுக்குள், நீடித்த தொடர் வளர்ச்சி குறிக்கோள்களின் படி (SUSTAINABLE DEVELOPMENT GOAL )பெருங்கடல் மாசுபாடு தடுப்பு என்பது இயலுமா!!? என்ற வினா எழுந்துள்ளது.இந்தியாவில் ஓராண்டில் 65 மில்லியன் டன் குப்பைகளில் 62 மில்லியன் டன் நகராட்சி கழிவுகள் ஆகும். இதில் 25-28%மட்டும் பராமரிப்பு செய்யப்பட்டு உரமாக, அல்லது மீள்சுழற்சி முறைக்கு உட்படுத்தப்படுகிறது. ஆனால்,.75-80%கழிவுகள் இயற்கையான நீர் வழிகள் மூலம் கடலை அடைகின்றன.
இந்திய அரசு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி முதல் 19 வகை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தடை செய்துள்ளது. SWATCH BHARATH MISSION என்ற தூய்மை திட்டம் மூலம் ₹3000 கோடி, விழிப்புணர்வுப் பணிகளுக்கு செலவு செய்து வருகிறது. எனினும் உற்பத்தியாளர் பொறுப்பு என்ற முறையில் பாலியெதேலீன் டெர ப் தாலாட், HC பாலிமர், LD பாலி ஏதேலின் பிளாஸ்டிக் போன்றவை மட்டும் மீள் சுழற்சி ஆகின்றன. மீதம் கடலினை நோக்கியே மிதந்து செல்கின்றன. நுகர்வோர்களுக்கும் பொறுப்பு, கழிவு பிரித்தல், பொறுப்புடன் வெளியேற்றம் என்பது நாம் உணர வேண்டும். அவ்வப்போது கடற்கரை தூய்மை செய்வது மட்டும் பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. விரும்பதக்கமாற்றம் ஏற்படும்நிலை இல்லை. கடுமையான சட்டம்,கண்காணிப்பு,போன்றவை அவசியம். மேலும் தேசிய கடற்கரை கழிவு மேலாண்மை கொள்கை உருவாக்க வேண்டிய அவசரம் அரசுக்கு உள்ளது.
கடலில் பிளாஸ்டிக் கலந்தால், அவை மைக்ரோ பிளாஸ்டிக் ஆகி உணவு சங்கிலி மூலம் மீன், மனிதர்கள் பாதிப்பு அடைவது ஒரு புறம், குடிநீர் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மூலம் நீர் குடிக்கும் போது, அதில் உருவாகும் மைக்ரோ பிளாஸ்டிக் 1மி மீ நம் மனித உடலில் திசுக்களில் BIO ACCUMULATION முறையில் புகுந்து, பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோ பிளாஸ்டிக் உருவாக, பாலி எதிலீன் டெட்ராப் த லேட், என்ற வேதிப் பொருள் மற்றும் பாட்டில் அசைவு, சூரிய ஒளி அதிகம் படுதல், மீள் பயன் பாட்டுபிளாஸ்டிக் பாட்டில் ஆகிய காரணிகள் முக்கியமாக கூறப்படுகின்றன. இந்த நுண் நெகிழி துகள்கள் நுரையீரல், மற்றும் குடல் பகுதியில், நாளமில்லா சுரப்பிகள் போன்றவைகளை பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் உறுதியான ஆய்வு பூர்வ மருத்துவ நிரூபணம் அதிகம் இல்லை. எனினும் மைக்ரோ பிளாஸ்டிக் என்ற நுண் நெகிழி துகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் மூலம் உற்பத்தி ஆகிறது என்பது உண்மையில் நாம் விழிப்புணர்வு பெற வேண்டிய முக்கிய செய்தி!.எனவே பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் தவிர்ப்போம்.
நெகிழி, பிளாஸ்டிக் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு, பல்வேறு வகையில் வாழ்க்கையில் நன்மைகள் தரும் பல பொருட்கள் நெடுங்காலமாக தந்து வருகிறது. ஆனால் அதே பிளாஸ்டிக் இயற்கை பாதிக்க செய்யும் போதும், மனித வாழ்வில் நோய்கள் வரவழைத்து எதிர் கால தலைமுறை துன்பம் அடைய காரணம் ஆகி வருகிறது. எனவே இது பற்றி நாம் சிந்தித்து, செயல்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது அல்லவா!!!???