Samakala sutrusoozhal savalgal webseries 24 by dr ram manohar தொடர் 24: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர் பா. ராம் மனோகர்

சூழல் மீட்பும், விவசாயம், மீன்வள உணவு பாதுகாப்பும்!

உலகம் முழுவதும்,1970 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் சுற்றுசூழல் பாதிப்புகளினால், இயற்கை சேதம் அடைந்து வருகிறது என்ற உண்மையினை அறிவியல் அறிஞர்கள் அறிவித்தனர். ஆனால் பல்வேறு நாடுகளில் வளர்ச்சி காரணமாக, தொழிற் புரட்சி ஏற்பட்டு, அறிவியல் தொழில்நுட்பம் பல நவீன மாற்றங்களை  மனித குலத்திற்கு (புதிய கருவிகள், வாகனங்கள், கணினி, உணவு, உடை, வாழ்க்கை முறை உட்பட……)அளித்தது எனில் மிகையாகாது. எனினும் சமீப காலமாக  பருவ கால மாற்றம், உலகின் பல்வேறு பகுதிகளில், இயற்கையினை பாதிப்பு  அடையச் செய்து மக்கள் வாழ்வில் இடர்பாடுகள் உருவாக காரணம் ஆகி வருகிறது.

ஒட்டு மொத்த மனித குலமும், காடுகள், ஈர நிலங்கள், ஆறு, ஏரி, குளங்கள், கடல், பயிர் செய்யும் வளம் கொண்ட மண் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள், என்று உயிரின பல்வகைமை (BIODIVERSITY) யினை நம்பியுள்ள நிலை நாம், மீண்டும், மீண்டும் நினைவு கொள்ள வேண்டிய உண்மை ஆகும். ஆனால் பருவ கால மாற்றத்தினால், மகரந்த சேர்க்கை மூலம் உணவு உற்பத்திக்கு அவசியம் ஆன தேனீக்கள் குறைந்து போனது! வளம் பொருந்திய நிலங்கள் வறண்டு, பயனற்று போனதும் அதிர்ச்சி தருகின்ற தகவல்கள் ஆகும்.மேலும்,1மில்லியன் உயிரின சிற்றினங்கள் அழிவு நிலை கண்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பியா நாடுகளில்,மண் அரிப்பினால்,12 மில்லியன் ஹெக்டர் பாழ்ப்பட்டு, அதன் 1.25 பில்லியன் யூரோ தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம், “மாநகரங்கள் உருவாக்கம், நீடித்த நிலைப்பாடு தன்மைக்கு எதிராக, கட்டுப்பாடு இன்றி இருப்பதுதான் “என ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் நிகழ்ச்சி (UNEP )ஒருங்கிணைப்பு அலுவலர் திரு. நடலியா கூறுகிறார்.மேலும், உலகெங்கும் சூழல் பாதுகாப்பு சிறக்க, இயற்கை சார்ந்த மீட்புப் பணிகள் மேற்கொள்வதும் நீர், நில வாழிடங்கள் இயற்கை த் தன்மை மாறாமல் திரும்ப பெறவேண்டிய அவசியம் பற்றியும் அவர் வலியுறுத்துகிறார்.

உலகம் முழுவதும் 80%வளமான பயிர் நிலங்கள், தாவர அழிவு, மண்ணின் உப்புதன்மை, மண்ணின் கார்பன் இழப்பு ஆகிய காரணங்களால், பாதிக்கப் பட்டுள்ளது. ஐந்தில் ஒரு பங்கு,  நிலங்கள் மண் அரிப்பு மூலம் வீண் ஆகிவிட்டது.2001-2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகின் 2.5%, மரங்கள் அழிவினால் பயிர் நில அழிவு ஏற்பட் டுள்ளதாக தெரிகிறது. உலகின் 40%,3.2பில்லியன் மக்கள்,  பயனற்ற நிலங்கள் பிரச்சனை மூலம் பாதித்துள்ள நிலை கவலை அளிக்கிறது. விவசாயத் தில் அதிக வெப்ப நிலை மூலம் மகசூல் குறைவு, ஏற்படும். வறட்சி, வெள்ளம் போன்ற பருவ கால மாற்றம் நிகழ்வுகள் அரிசி, மக்காசோளம், கோதுமை உணவு  உற்பத்தி பற்றாக் குறை உருவாக்க காரணிகள்  ஆகிவிடுகிறது.பயிர் விளைச்சல் பூச்சிகொல்லி வேதிப் பொருள், நோய்கள், மண் தர குறைவு, நீர் பற்றாகுறைவு ஆகிய பிரச்சினைகள் மூலம் விவசாயிகளுக்கு சவால் ஆக  நெடுங்காலமாக இருக்கிறது.

இந்நிலையில் தேனீக்கள், அதாவது உலகின் 100 உணவு (90%)பயிர் தாவரங்களுக்கு, மகரந்த சேர்க்கை மேற்கொள்ளும் 70 தேனீ பூச்சி சிற்றினங்கள் குறைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்!இந்தியாவில் 2002 முதல் ஒடிசா, பஞ்சாப், கேரளா, மகாராஷ்ட்ரா, திரிபுரா போன்ற மாநிலங்களில் தேன் கூடுகள் அழிவினால் அவை இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. அந்த அழிவிற்கு நியோ நிக்கோட்டினோய்ட் என்ற நச்சு பொருள் காரணம் என்று 2006ஆம் ஆண்டு உறுதியானது. கொல்கத்தாவில் மகரந்த சேர்க்கை ஆய்வு மையம் 2011லிருந்து இதன் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது, எனினும் வெளிநாட்டு தேனீ இனங்கள் (Apis mellifera) வளர்க்கப்படும் நிலையில் உள்நாட்டு பூச்சிகள் அழிவதாக தேனீ வளர்ப்பு தொண்டு நிறுவனம் இயக்குனர் சுஜானா கிருஷ்ண மூர்த்தி என்பவர் கூறுகிறார். ஆனால் சிக்கிம் பகுதியில் இந்த வெளிநாடு

தேனீ இனம் மறுக்கப் பட்டு, பூச்சி கொல்லி வேதி பொருட்கள் தடை மேற்கொண்டு, கரிம விவசாயம் ஊக்கப்படுத்தப்படுவதாக, அசோகா இயற்கை, சூழல் ஆய்வு(ATREE )நிலைய  விஞ்ஞானி ஊர்வசி பிரதான் கூறுகிறார்.

மீன் வளத்தினை பொறுத்தவரை, உலகில் மூன்றில் இரு பகுதி கடல் சூழல் பாழ்பட்டுகொண்டுள்ளது. மேலும் மூன்றில் ஒரு பகுதி அளவிலான மீன்கள் பிடிப்பு, நீடித்த நிலையற்ற தன்மை நிலையில் நிகழ்கின்றன. இதனால் மீன் வள குறைவு எதிர் கால பிரச்சனை ஆகிவிட்டது. எனவே மீன்வளம் பெருக அலையாத்தி (MANGROVES)காடுகள் அழியாமல் காத்தல் அவசியம் ஆகும். ஏனெனில் அந்தஉகந்த சூழலில் மீன்கள் இனப்பெருக்கம் தொடர்ந்து ஏற்படும்.

இவ்வாறு நில அழிவு, தேனீ பூச்சிகள் குறைவு, மீன்வள பாதிப்பு என்ற சுற்றுசூழல் சவால்கள் மனித குலத்தின் அடிப்படை உணவு பற்றாக்குறை பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் நிலையில் உலகம் சந்தித்து வருகிறது. ஆனால் இவற்றை எதிர் கொள்ளவும், உரிய மீட்பு நடவடிக்கைகள் பல்வேறு திட்டங்கள், அனைத்து நாடுகளில்,மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப் படுகிறது.

மண் வளத்தினை பாதுகாக்க பயிர் சுழற்சி முறை, கரிம வளம் காத்தல், உழுதல் முறை மாற்றம் போன்றவையும் நீர் வரத்து, பருவ கால இடர்கள் தாங்கும் பயிர்கள், வறட்சி, வெள்ளம் பாதிப்பு தாங்கும் பயிர் பற்றிய நவீன ஆராய்ச்சி மேற்கொள்ள பல நடவடிக்கைகள் தொடர்கின்றன. தேனீ வளர்ப்பு,  பற்றி பொது மக்களிடம் தோட்ட கலை துறை மூலம்  ஆர்வம் மற்றும் அதற்குரிய தொடர் ஆலோசனை, மானியம், செயல்பாடு செய்யும் நிலை மேலும் அதிகரிக்க வேண்டும். உணவு உருவாக்க அடிப்படை செயல்பாடுகள் மகரந்த சேர்க்கை, அது தேனிக்கள், பூச்சி, பறவைகள் வழி நடைபெறும் என்பது பற்றிய விழிப்புணர்வு பெருகும் நிலை அதிகரிக்க வேண்டும்.

பருவ கால மாற்ற விளைவுகள், சுற்றுச் சூழல், உயிரின வாழிடங்களை  பாதிக்கின்ற நிலையை நாம் அனைவரும் இந்த 2023 ஆண்டு ஜூலை மாதத்தில் நேரடியாக இங்கு அனுபவித்தோம் என்பது உண்மைதானே!!? நம் நாட்டின் 13 மாநிலங்களில் அதிக மழை பெய்திருந்தாலும், 56%மழை குறைவு, என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

மற்ற உலக நாடுகளில், குறிப்பாக, சீனா 52.2°C, வளைகுடா நாடுகள் 66.7°C, ஐரோப்பா 40°C  போன்றவை இந்த ஜூலை மாதத்தில் உணர்ந்த வெப்பம், வெப்ப அலைகள், ஒட்டு மொத்த சூழல் அறிவியல் அறிஞர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலை தொடர்ந்து உலக மக்கள் உணவு உற்பத்தி, பொருளாதாரம், மாறுவதையும் நாம் காண்கிற நிலை தெளிவாக உணரப்பட்டுள்ளது.

காய்கறிகள் விலை ஏற்றம், குறிப்பாக தக்காளி, வெங்காயம் ஆகியவை மிக கடும் பாதிப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவற்றை மலிவு விலைக்கு  அரசு மக்களுக்கு தந்தாலும்,மற்ற உணவு பொருட்களும், பற்றாக்குறை, விலை ஏற்றம் ஆகிய பிரச்சினைகள் தொடர்ந்து நம் சமுதாயம் சந்தித்து வருகிறது என்பதும் உண்மை! உணவு பயிர், காய்கறி பழங்கள் உற்பத்தி போன்றவற்றில், பருவ கால பாதிப்புகள் ஏற்படுத்தும் தாக்கத்தினை பொது மக்கள், அரசு, அலுவலர் மற்றும் விவசாய, உணவு அறிவியல் விஞ்ஞானிகள் ஓரளவு அறிவது மட்டும் தீர்வு தராது. உணவு, விவசாயம், மீன் வளம் மற்றும் பருவ கால  மாற்ற விளைவுகள் தாக்கத்திற்கு தகவமைத்துக் கொள்ள ஏற்றவாறு சூழல்  மீட்பு திட்டங்களை அவசர நிலை கருதி உருவாக்க வேண்டியது, அவசியம் ஆகும். மேலும்விஞ்ஞானிகள் , கண்காணிப்புடன் திட்டங்கள் உடனே செயல் படுத்துவது அதைவிட முக்கியம் ஆகும். மக்களும் இது தொடர்பான விழிப்புணர்வு பெற்று, பேரிடர் பிரச்சனைக்களுக்கு உடனடி தீர்வுகளான “நிவாரண உதவிகள் “பெறுவது மட்டும் குறிக்கோளாக இல்லாமல் நெடுங்கால, நீடித்த வளம் தொடர்ந்து பெற அரசின்  சூழல் மீட்பு திட்டங்கள் முறையாக செயல் பட நாம் அனைவரும் ஒத்துழைக்கவேண்டியது மிக அவசியம் ஆகும். சிந்தித்து பார்ப்போமா!!!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *