சமரம் நாவலிலிருந்து…
“கடலில் நீந்தும் சிறு மீன் கூட தன் சக்திக்குட்பட்ட அளவிற்கு தன் சிறுவாலால் கடலை அசைத்துப் பார்க்கிறது…”
நூலை வாங்குவதற்கு முன் கையிலெடுத்து விரித்து இவ்வரிகளை படித்த பொழுது இவ் வாசகம் என்னை அப்படியே அசத்தியது. நூலின் உள்ளே மிக விரைவாகச் செல்வதற்கு உண்டான அத்தனை சாத்தியக் கூறுகளையும் இந்த வரி எனக்கு கொடுத்தது என்றால் அது மிகையல்ல.
“நாவல் விறுவிறுப்பாக ஒரு துப்பறியும் நாவல் போலப் பயணிக்கிறது. குடும்பப் பாசங்களும் பயங்களும் காதல் கதைகளின் குறுக்கீடுகளும் நிறைந்த முழுமையான நாவல். ஓரிடத்தில் கூட பிரச்சாரமாகவோ, துருத்தலாகவோ கலை நயம் குறைந்துபோயோ ஏதும் இல்லாமல், இடதுசாரி அரசியலே தெரியாத ஒருவர் படித்தாலும்கூட அவரையும் ஈர்க்கும்படியாக நாவல் எழுதப்பட்டிருக்கிறது. கதை சொல்லல் முறையே மிகுந்த சுவையாகவும் பொருத்தமாகவும் அமைந்து நம்மை அப்படியே உள்ளே இழுத்துச் செல்கிறது”-
தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் உற்சாகம் மிகுந்த இவ்வாழ்த்து அனுபவங்களும் உடனே புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைக்காமல் வாசித்துவிட வேண்டும் என்று வாசித்து முடித்துவிட்டு இதோ உங்களுடன் சிறு அறிமுகத்துடன் வந்துள்ளேன் தோழர்களே.
இது மேற்கு வங்க நாவலாக இழைந்து ஓடும். அங்கே 1960 முதல் 1970 வரை உழைக்கும் வர்க்கம் அடக்குமுறையை சந்தித்த, அவர்கள் மீது அரச பயங்கரவாதத்தை அது ஏவிய கொடூரத்தை, கொடும் மூர்க்கத்தனத்தை மார்க்சிய தோழர்கள் எப்படி சந்தித்தார்கள், துயரப்பட்டார்கள், எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நாவல் வடிவில் வாசிக்க நமக்கு கிடைத்த வாய்ப்பு என்றே சொல்வேன்.
அதை வாசிக்கும்போது அது நமது அங்கமாக மாறும். நாம் வேலையில்லாமல் இருப்போம் அல்லது ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருப்போம். கஞ்சி சரியாக கிடைக்காது; கிடைக்கிற வருமானமும் வயித்தைக் கழுவ முடியாது. ‘எல்லாவற்றையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான்’ என்று இல்லாத ஒன்றின் மீது பாரத்தை போட்டுவிட்டு அடுத்து உழைப்பதற்காக நம் உடம்பை தூக்கிச் செல்வோம் ‘யாருடைய வம்பு தும்புக்காவது நாம போனோமா’ என்று. இப்படித்தான் பெரும்பான்மையான மக்கள் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளாமலேயே அல்லது நமக்கு எதற்கு வீண் வம்பு என்று பார்க்கின்ற சிறு வேலையோ அல்லது பெரிய வேலையோ செய்து முடித்து விட்டு உடல் வலி தாங்காமல் தூக்கமும் இல்லாமல் அரண்டு படுத்துக்கொண்டு நம்முடைய வாழ்க்கையை கொண்டு செல்கிறோம். நம்முடைய வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்கிறோம் என்று நாம் கடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மை, நம்முடைய உழைப்பை மிகப்பெரிய சுரண்டும் கட்டமைப்பு சுரண்டிக் கொழுத்து மென்மேலும் நம்மை அடிமையாக்கிக் கொண்டு வருகிறது என்பதை நாம் காணத் தவறுகிறோம் என்பதுதான் இந்நூலின் நாவலின் சுருக்கக் கருத்து.

நம்மைச் சுற்றி, நமது வாழ்க்கைக்காக கொடி பிடித்துக் கொண்டு போராடும் உழைக்கும் வர்க்க மக்களை நாம் எப்போதாவது திரும்பி பார்த்திருப்போமா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டியதிருக்கும் இந்த நூலை படித்த பின்பு.
நாம் விடுகின்ற மூச்சுக் காற்றிலும் அரசியல் இருக்கும்பொழுது ‘அரசியல் நமக்கு வேண்டாம்’ என்று ஒதுங்கிச் செல்ல நினைத்தோமானால் அது எவ்வளவு குறுகலானது என்பதை நமக்கு இந்நூல் உணர்த்தும். திடீரென்று தேசப்பற்று கிளம்பினால் அங்கு ஏதோ ஒரு வன்மம் முளைத்திருக்கிறது என்று அர்த்தம். அதற்குப் பின்னால் யாருடைய சுயநலத்திற்காக அது கிளப்பப்பட்டது என்றும் தெரியவரும் நாம் தெரிய விரும்பினால் மட்டுமே.
தேசப்பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று இப்படி எல்லா பற்றுக்குப் பின்னாடியும் ஒரு கொம்பு முளைத்திருக்கும். அந்தக் கொம்பு நம்முடைய உழைப்பை சுரண்டும் கொம்பு தான். இப்போது ஒருத்தர் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கிளம்பினார் இல்லையா அதுக்குப் பின்னால் இருக்கும் கொம்பு. தினம் தினம் ஓடாய் உழைத்து நிமிர்ந்து நிற்க கூட நேரமில்லாத உழைப்புச் சுரண்டலை செய்யும் சிறுகூட்டம் நம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமலேயே நாம் உழைத்து ஓடாய் தேய்வோம். அதை உணர்ந்துகொள்வதற்கான ஒரு ஆயுதம்தான் இந்த “சமரம்” நாவல்.

நம்முடைய அரசியலை நாம் கையில் எடுப்போம். இந்நூலை வாசித்த பின்பு இதுவரை நம்மை யாரெல்லாம் மூளை மழுங்கச் செய்தார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளச் செய்யும். எல்லாவற்றுக்கும் வாய்ப்பளிக்கும். நம்மை, நம்மூரை, நம் நாட்டை யார் ஆதிக்கம் செய்கிறார்கள் என்பதை நீரோடை போன்ற, மொழிப்பெயர்ப்பு என்பதே தெரியாத ஒரு அருமையான எழுத்தின் வழியே நாம் உணர்ந்து கொள்வோம். வாருங்கள் நாம் உழைக்கும் வர்க்கம் என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு அருமையானதொரு வாய்ப்பு.
இந்நாவலை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துக் கொடுத்த அருமைத் தோழர் ரவிச்சந்திரன் அரவிந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நூலின் கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. மாறாக நம்முடைய வியர்வை இப்போதுவரை யாருக்காக சிந்திக் கொண்டிருக்கிறது என்பதை ஒரு பொதுவான கருத்தாக என் மனதில் பட்டதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். வாசியுங்கள் நமது உழைப்பை, நம் கூட்டு உழைப்பை நமக்காக மட்டுமே பயன்படுத்துவோம். எந்தச் சுரண்டலுக்கும் அடிபணியோம்.
நூலை வாங்கத் தூண்டிய தோழர் சிராஜூதின் அவர்களுக்கு மிக்க நன்றி!
நூலின் தகவல்கள் :
ஆசிரியர் : தபோ விஜய் கோஷ்
தமிழில் : ரவிச்சந்திரன் அரவிந்தன் (Ravichandran Aravindhan)
வெளியீடு : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
முதல் பதிப்பு : டிசம்பர் 2024
விலை : ரூ. 260
நூலைப் பெற : thamizhbooks.com
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

