வால்மீகி மகளே
சென்று வா!
தணியா வேதனையில்
விடைகொடுக்கிறோம்.
ராம ராம ராம ராம
என்றுரைக்கவியலாது
மரா மரா மரா மரா
எனப்பூசித்து
புற்றிலிருந்து எழுந்த
வால்மீகிக்குத் தெரியாது
தன் மகள்
சிதைத்துக்
கொல்லப் படுவாளென்று.
ராம ராமவென
உச்சரிக்க முடியாது
மரா மராவென உச்சரித்த
வால்மீகிக்குத் தெரியாது
தன் மகளின் நாவு
வெட்டப்படுமென்று.
மரத்தை மட்டுமே அறிந்து
மரா மராவென உச்சரித்து
மகரிஷியாய் மாறிய
வால்மீகிக்குத் தெரியாது
யோகியென்று அறிவித்துக் கொண்டு
ராமனின் பெயரால் அராஜகம்
செய்பவனின் ராஜ்ஜியத்தில்
தன் மகளின் முதுகு
முறிக்கப்ப்படுமென்று.
ஸ்ரீராமனின் காதையை
காவியமாக்கி
உலகுக்கு அறிவித்த
வால்மீகிக்குத் தெரியாது
தன் மகளின் கதை
கிழித்தெறிந்து
முடிக்கப்படுமென்று.

ஸ்ரீராமனின் உயிராம்
சீதேவித் தாயைத்
தன் மகளாய் ஏற்று
ஸ்ரீராமனின் பிள்ளைகளுக்குப்
பாட்டனான வால்மீகிக்குத் தெரியாது
தன் மகள்
தவித்துச் சாவாளென்று.
ராமராஜ்ஜியத்தின் பெயரால்
பிள்ளைகளைக் காப்பவன்
கிருஷ்ணஜென்ம பூமியில்
வேக வைக்கப்படுவதுதான்
யோகியின் தவம்!
ஏகபத்தினி விரதன்
இராமனின் பூமியில்
சிறுமிகள்
சிதைக்கப் படுகிறார்கள்.
இராமா!
உன் பெயரைக்
காப்பாற்றிக்கொள்
இந்தக்
கயவர்களிடமிருந்து!
சம்புகன்

