அதே நந்தி கிராமத்தில் அதே ஏப்ரல் 7இல் – சுஜித் நாத் (தமிழில்: பெரியசாமி)

அதே நந்தி கிராமத்தில் அதே ஏப்ரல் 7இல் – சுஜித் நாத் (தமிழில்: பெரியசாமி)

அதே நந்தி கிராமத்தில் அதே ஏப்ரல் 7இல் 

கடந்த ஆண்டான 2019இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தின் நந்தி கிராமத்தில தனது கட்சி அலுவலகத்தைத் திறந்திருக்கிறது.அங்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையில் கலவரங்கள் ஏற்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிகழ்வு, நிகழ்ந்திருக்கிறது. ஆனால், ஊடகங்களின் கண்களுக்கு இது தெரியவே இல்லை. இந்த நிகழ்வுக்கு முந்தைய மாதங்களில் இடது முன்னணித் தலைவர்கள் மத்திய, மாநில அரசாங்கங்களின் பல்வேறு மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பேரணிகள் நடத்தினர். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகிய எரிபொருட்களின் விலை உயர்வு, நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார் மயமாக்குதல், ரயில்வேயை தனியார்மயமாக்குதல், வேலை இழப்புகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலைமை ஆகியவற்றிற்கு எதிராக இந்தப் பேரணிகளை நடத்தினர்.

    இந்தப் பேரணிகள் எல்லாமே 2009ஆம் ஆண்டின் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கின. இந்தப் பேரணிகளில் முழக்கப்பட்ட “லால் சலாம் லால் சலாம், இன்குலாப் ஜிந்தாபாத்” ஆகிய முழக்கங்கள் அச்சத்தில் உறைந்து கிடந்த நந்தி கிராமத்தின் மவுனத்தைக் கலைத்தன.

    மேற்கு வங்கத்தில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 2007இல் நடத்திய நில இயக்கத்தின் மையமாக ஒரு சமயத்தில் விளங்கிய குக்கிராமம்தான் நந்தி கிராம்.இங்கிருந்துதான் மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தனது பயணத்தை மம்தா பானர்ஜி அதே ஆண்டில் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கினார்.

கொல்கத்தாவிலிருந்து 133 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதே நந்தி கிராமத்தின் மக்கள் 2019ஆம் ஆண்டில் அதே ஏப்ரல் 7இல் தங்கள் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு வளைந்தும் நெளிந்தும் நின்ற நீண்ட மனித சங்கிலியைப் பார்த்துப் பரவசம் அடைந்தனர்.அந்தக் கொடிகள் அக்கிராமத்தில் உள்ள சுகுமார் சென்குப்தாபவனைச் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்) சுற்றிலும் செவ்வண்ணமாக்கின. அந்த நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள், ஏனெனில் அன்று, நந்தி கிராமத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சி அலுவலகத்தை மீண்டும் திறப்பதற்கு முடிந்திருக்கிறது.

2019இல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏராளமான அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் நந்தி கிராமத்தில் சுகுமார் சென்குப்தா பவனின் மறு திறப்பு மிக மிக முக்கியமான நிகழ்வாகும். காரணம் என்னவெனில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் நடந்த நந்தி கிராம நில இயக்கம், மேற்கு வங்கத்தில் இடது முன்னணியின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பதுதான் இந்த இடத்திலிருந்தே மீண்டும் தனது புதிய எழுச்சியைத் தொடங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்ததுதான். 

இன்னொரு பக்கம் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி திரிணாமுல் காங்கிரஸிற்குக் கவலை அளித்தது.எனவே, காவிக் கூட்டமான பா.ஜ.க.வை எதிர்ப்பதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம் காட்டியது. அதே நேரத்தில் இடது முன்னணி, வட்டார அளவில் விரிவாகவும் சப்தமின்றியும் மக்களுக்காகப் பணியாற்றிட முடிவு செய்தது.இந்தப் பணிகளை இடது முன்னணி “நாங்கள் அதிகாரத்தில் இருக்கவில்லை ; ஆனால் நெருக்கடியான நேரங்களில் மக்களோடு இருக்கிறோம்” என்பது போன்ற,மக்களின் சிந்தனைகளைக் கவ்விப் பிடித்த முழக்கங்களுடன் மேற்கொண்டது-

எந்த இடர்களையும் எதிர்கொள்கின்ற இடது முன்னணியின் சிறப்புத் திறன் கடந்த பல மாதங்களாக மேற்கு வங்க மக்களால் உணரப்பட்டது.ஏனெனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதில் அவர்கள், இளைஞர்களையும் ஈடுபடுத்தி  ஏழை மக்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் சமூக உணவுக் கூடங்கள்,இலவச உணவுப் பொருட்கள்,காய்கறிச் சந்தைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தனர். மேலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு செயல்முறைக் கருவிகள்,ஆடைகள் ஆகியவற்றை விநியோகித்தனர்.

அவர்கள், ஊடகங்களின் கவனத்திலிருந்து வெகுதொலைவில் இருந்து கொண்டு மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசாங்கங்களின் மக்கள் விரோதக் கொள்கைகளான எரிபொருட்களின் விலை உயர்வு, நிலக்கரிச் சுரங்கங்கள் தனியார் மயமாக்கல், ரயில்வேயை தனியார் மயமாக்கல், வேலை இழப்புகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலைமை போன்றவற்றை எதிர்த்து பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இன்றைய நிலையில் இவை அவ்வளவு சிறிய விஷயங்கள் அல்ல.

மேற்கு வங்கத்தில் இடது முன்னணியின் மறு எழுகைக்குக் கடுமையாக உழைக்கும் அர்ப்பணிப்பு மிக்க ஏராளமான இடது முன்னணி ஊழியர்களில் அமல் சாது (72) என்பாரும் ஒருவர்.

அமல்சாது, 24ஆவது பர்கானா மாவட்டத்தின் போங்காவோனில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு மூத்த தலைவராவார்.அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1967ஆம் ஆண்டில் இணைந்தார்.அவர் இன்றுவரையிலும் மேற்கு வங்கத்தில் இடது முன்னணியை வலுப்படுத்துவதற்கு சோர்வின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவர், போங்காவோனில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான அஜித் கங்குலிபவனுக்கு செல்வதை ஒரு நாள் கூட தவறவிட்டதில்லை. அவர் இப்போதும் அணி திரட்டப்படாத தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபாட்டுடன் பங்கெடுக்கிறார்.அவருடைய பெயரையும் புகைப்படத்தையும் ஊடகங்களில் பார்க்க முடியாது. ஆனால், போங்காவோனில் அணி திரட்டப்படாத உழைக்கும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர்.

“இடது முன்னணி ஊழியர்களில் பெரும் பகுதியானவர்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள்.நாங்கள் எந்தவோர் எதிர்பார்ப்பும் இன்றி கட்சிப் பணிகளை செய்வதை பெரிதும் நேசிக்கிறோம்.சமீப மாதங்களில் இடது முன்னணி, உண்மையிலேயே கடுமையாக பணியாற்றுவதைத் தொடங்கியிருக்கிறது; மக்களும் திரிணாமுல் காங்கிரஸின் தவறான ஆட்சிக்கும் பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலுக்கும் எதிராக எங்களை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று சாது கூறுகிறார்.

இந்தப் போராட்டத்தில் சாது மட்டும் தனியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் கிழக்கு கெய்காடாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலாளர் சேபான்கோஷும் மேற்கு வங்கத்தின் அரசியல் வரைபடத்தில் இடது முன்னணியைத் திரும்பவும் கொண்டு வருவதற்கு தீவிர ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்.

“நான் சொல்வதை நம்புங்கள்.இப்போது மக்கள் திரிணாமுல் காங்கிரஸிடமும் பா.ஜ.க.விடமும் கடும் எரிச்சலடைந்துள்ளனர். அவர்கள் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பெருமளவிலான ஊழல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆம்பன் புயலின்போதும் சரி,முழு ஊரடங்கின்  போதும் சரி அவர்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை. பொது விநியோகப் பொருட்கள் சூறையாடப்பட்டன.அவர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்ட பணம், ஓரங்கட்டப்பட்டது.எதிர்காலத்தில் மக்கள், யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று எனக்குத் தெரியாது.ஆனால் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது.மக்கள், திரிணாமுல் காங்கிரஸ் மீதும் பாரதிய ஜனதா கட்சி மீதும் கோபத்தில் உள்ளனர் என்று கோஷ் கூறினார்.

கடந்த சில மாதங்களாக, இடது முன்னணி ஊழியர்கள்,குறிப்பாக, இளைஞர்கள் தங்களுடைய சாதனைகளை சமூக ஊடகங்கள் வழியாக சிரத்தையுடன் மக்கள் முன்பு கொண்டு செல்வதையும் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் தோல்வியையும் மத்தியில் பா.ஜ.க. அரசின் தோல்வியையும் முன்னிலைப்படுத்தி அம்பலப்படுத்துவதையும் பார்க்க முடிந்தது.

இந்திய அரசியல் வானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியத்துவம் இல்லாததாக,மங்கலாகக் காட்சியளிக்கும் நிலைமையைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாக மேற்கு வங்கத்தில் அக்கட்சி, பொதுச்சுவர்களில் எழுதப்படும் கொள்கை விளம்பரங்களிலிருந்து கிளர்ச்சியூட்டும் வகையில் கையால் எழுதப்பட்ட போஸ்டர்கள் வரையிலும் சமூக ஊடகத்தளத்தில் ஒரு வலுவான தடம் பதித்திருக்கிறது. இந்த இடதுசாரிக் கட்சி ஒரு சுற்றறிக்கையை விடுத்திருந்தது. அந்த அறிக்கை கூறுவதாவது: உங்களை (கட்சி ஆர்வலர்களை) நன்கு புரிந்துகொள்ள எங்களை அனுமதியுங்கள். நீங்கள் டிஜிட்டல் தளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் செயல்பட ஆர்வம் கொண்டுள்ளீர்களா? ஒரு தனி நபராக நீங்கள் டிஜிடல் தொண்டராக இருப்பதற்கு விரும்பினால், தயவுசெய்து தேவையான விபரங்களுடன் இந்தப் படிவத்தை (இணையதள இணைப்பு) நிரப்புங்கள்.”

“இது (இந்த சுற்றறிக்கை) காட்டுவது என்னவெனில், டிஜிடல் தளங்களின் இன்றைய முக்கியத்துவத்தை சிந்தனையில் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது செயல்பாட்டு முறையில் ஒரு தெளிவான மாற்றத்தை மேற்கொண்டுள்ளது என்பதைத்தான்.இன்றைய நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்;ஏனெனில் ஏனைய கட்சிகள், டிஜிடல் முறையைப் பயன்படுத்துவதில் அடாவடித்தனமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்தின் கடந்த சட்ட மன்றத் தேர்தல் முடிந்தவுடன், அங்கு இந்த இடதுசாரிக் கட்சியின் இருப்பு தென்படவில்லை.ஆனால், இப்போது அவர்கள் மெதுவாக செயல்படத் தொடங்கியுள்ளனர் என்பதை எவரும் பார்க்க முடியும். அவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் மாநில முழுவதும் செயல்படுகின்றனர். இது ரொம்பவும் முக்கியமானதாகும். ஏனென்றால் இடது முன்னணியின் இந்தச் செயல்பாடு அதிகரிப்பு என்பது பா.ஜ.க.விற்கு சிக்கல் என்பதாகும்” என்று அரசியல் நிபுணர் கபில்தாசர் கூறியுள்ளார். “கடந்த மக்களவைத் தேர்தலில் இடது முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் 7 சதவீதம், ஆனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணிக்கு கிடைக்கும் வாக்குகளின் சதவீதம் அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

“மேற்கு வங்கத்திற்கு இடது முன்னணி தேவைப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைக்கும் பிரச்சினைகள் இவை:” திட்டமிடப்படாத நாடு தழுவிய ஊரடங்கு காலத்தில் 14 கோடிப் பேர் வேலை இழந்தனர்; தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே சொந்த மாநிலங்களுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 கோடிப் பேரும் வேலை இழந்தனர்.இவர்கள்  ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.7500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் நாங்கள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார் மயமாக்கும் மோடி அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து ஜுலை 2 முதல் ஜுலை 4 வரையான நிலக்கரித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு  எங்களுடைய ஆதரவை அளிக்கிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்வீட் ஒன்று கூறுகிறது.

மற்றொரு ட்வீட் கூறுவதாவது: மோடி ஓர் அரசாங்கத்தைப் புதிதாக  உருவாக்க முடியாது;ஆனால், அதனை நிலைகுலையச் செய்ய முடியும். அரசாங்கச் சொத்துகளை விற்க முடியும். அபாயகரமான நிலைமையில் ரயில்களை விற்கிறது. இந்த நேரத்தில் 109 ரயில் வழித்தடங்கள் கை மாறப் போகின்றன. கொரானா, மோடிஜிக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. கார்பரேட் மூலதனத்திற்கும் வாய்ப்புகள் நிறையவே கிடைத்துள்ளன.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமுதாய உணவுக் கூடங்களை நடத்தியது பற்றி ஒரு ட்விட்டர் போஸ்ட் கூறுவதாவது: பருவ மழை தொடங்கிவிட்டதால் சமூக உணவுக் கூடங்களை செயல்படுத்துவது மிகவும் கடினமானதாக இருந்தது, ஆனாலும் எங்களுடைய தோழர்கள் உணவுக் கூடங்களை நடத்தியாக வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள்.முழு ஊரடங்கு ,ஆம்பன் புயல் ஆகியவற்றின் தாக்குதல்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இலவச உணவுகளுக்கு ஏற்பாடு செய்து சமைத்தபோது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் (இங்கு அந்தப் படங்கள் பதிவு செய்யப்படவில்லை)பெஹாலாவிலிருந்தும் கொல்கத்தாவிலிருந்தும் வந்தவையாகும்.”

இடது முன்னணி ஜங்கல் மஹால், டாமின்-இ-கோஹ் பகுதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு ட்விட் கூறுவதாவது:

“சந்தால்கள் (அப்பகுதியில் வாழும் பழங்குடியினர்) காடுகளில் வாழ்ந்தனர்; காடுகளையே சார்ந்திருந்தனர். 1832இல் பிரிட்டிஷ் ஆட்சி, டாமின்-இ-கோஹ் பகுதியை இரண்டாகப் பிரித்தது,அங்கே வந்து வாழுமாறு சந்தால்களுக்கு அழைப்புவிடுத்தது; அவர்களுக்கு நிலமும் பொருளாதார வசதிகளும் அளிப்பதாக வாக்குறுதிகளை அளித்தது.இந்த வாக்குறுதிகளால் கவரப்பட்ட சந்தால்கள் பெருமளவில் அங்கே குடியேறினர்.ஆனால், அவர்கள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகளில் இறங்கினர்;ஏனெனில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஜமீன்தார்களாலும்,போலீஸ் மற்றும் நீதிமன்றங்களாலும் அமுல்படுத்தப்பட்ட அப்போதைய வரி-வருவாய் வசூல் முறை காலனியாட்சியின் ஒடுக்குமுறையாக இருந்தது. இதை எதிர்த்தே சந்தால் பழங்குடி மக்களின் கிளர்ச்சி ஏற்பட்டது.இந்த எழுச்சிக்கு முர்மு சகோதரர்கள் எனப்பட்ட சிது, கானு, சந்த், பைரவ் ஆகிய 4 சகோதரர்களும் தலைமை தாங்கினர். அப்போது இந்தியாவில் நிலவிய கொடூரமான பிரிட்டிஷ் வரி-வருவாய் வசூல், கொடூரவட்டி வசூலிப்பு, ஜமீன்தாரி முறை ஆகியவற்றிற்கு வங்காள ராஜதானியில் பழங்குடியினர் வாழ்ந்த பகுதியில் முடிவு கட்டுவதற்கான ஓர் எதிர்வினையாக இந்த எழுச்சி கிளம்பியது.

ஹூக்ளி மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தேபப்ரதா கோஷ் கூறியதென்னவெனில் “எங்களுடைய கட்சி அலுவலகம் 2011இல் திரிணாமுல்  காங்கிரஸால் கைப்பற்றப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரங்கள் காரணமாக, எங்கள் கட்சி ஊழியர்கள், அந்த அலுவலகத்தை மீண்டும் திறக்க முடியவில்லை. எங்களுடைய கட்சி ஊழியர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்;மிரட்டப்பட்டனர். இப்போது இந்தப் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது. இப்போது நாங்கள் வாக்குச்சாவடி அளவில் தொடங்கி எங்களுடைய கட்சியை மீண்டும் அமைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது, மாநிலம் முழுவதும் கட்சி அலுவலகங்களுக்கு கட்சித் தோழர்கள் மெதுவாக மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி” என்று கூறினார்.

ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கானாகுல், பாஸந்தப்பூர் ஆகிய ஊர்களிலும் 24ஆவது பர்கானா வடக்கு மாவட்டத்தில் ஆரம்பாக், பரஸாத், துத்தாப்புகுர் ஆகிய ஊர்களிலும் கட்சி அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டன. கட்சி ஊழியர்கள், வீட்டுக்கு வீடு சென்று நிலைமையை எடுத்துரைத்து வசூலிக்கப்பட்ட நன்கொடை மூலம் மக்களின் தேவைகளுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கூச் பிஹார் மாவட்டத்திலும் தின்ஹதா நகரில் நிகம்நகர், பேடாகுரி, பில்கானா ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அலுவலகங்களைத் திறந்துள்ளது.

மேலும் பர்தாமான், ஹவுரா, பங்கடரா, புருலியா, ஜார்கிராம், மால்டா, தினாஜ்பூர், 24 பர்கானா தெற்கு ஆகிய மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அலுவலகங்களை மீண்டும் திறந்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுஜான் சக்ரவர்த்தி கூறுகையில், “மக்களோடு நிற்பதுதான் எங்களுடைய தத்துவார்த்த நிலைபாடாகும். எங்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது மக்களுடைய நலன்களுக்கானதுதான். இன்று கூட, எங்களுடைய தோழர்கள் ஏராளமானோர் நன்கொடைகளை வசூலித்து இன்றைய நெருக்கடியில் உள்ள மக்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நீங்கள் பார்க்கலாம். இது எங்களுடைய அரசியல் கடமை. பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போலல்லாமல், மக்களைக் கொள்ளையடிப்பதற்கு நாங்கள் இருக்கவில்லை.  மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திரிப்கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் வீடுகளைப் பாருங்கள்.இப்படியோர் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?” என்று கூறினார்.

சுஜான் சக்ரவர்த்தி தொடர்ந்து கூறுகையில் “திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. என்றாலே கொள்ளையடிப்பதும் ஆடம்பரமும்தான்.ஆம்பன் புயலின்போது மேற்குவங்கத்தில் என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோமே. அப்போது மக்களுக்கான உணவுப் பொருட்களிலும் அவர்களுடைய பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளிலும் கொள்ளையடிக்கப்பட்டது; இதைக் கண்டித்துத் தான் மக்கள், தெருவில் இறங்கிப் போராடினார்கள். ஒரு பக்கம், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் பா.ஜ.க.  தலைவர்களும் ஒவ்வொரு நாளும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம், கிராம மக்கள் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர். இதே காலத்தில் நாங்கள், 600 சமூக உணவுக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளித்திருக்கிறோம். மேலும் உணவுப் பொருட்கள்,காய்கறிகள்,உடைகள்,கல்வி சாதனங்கள்,மருந்துகள் போன்ற தேவைப் பொருட்களை இலவசமாக விநியோகித்திருக்கிறோம்.

நாங்கள், பெரும்பாலான மாவட்டங்களின் சமையல் கூடங்களை இணைப்பதற்கு முயற்சித்தோம். இதற்கு நல்ல ஆதரவு (மக்களிடம்) இருந்தது என்று சட்டமன்ற உறுப்பினர் கூறினார். அத்துடன் அவர் மேலும், வங்கத்தில் கட்சியின் சமுதாய உணவுக்கூடங்களின் பணிகள்  தொடங்கி ஜுலை 10, 2020-ந் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

இடது முன்னணி 1977 முதல் 2010-வரை தொடர்ச்சியாக 7 முறை அதிகாரத்தில் இருந்திருந்த போதிலும்,இப்போது அது ஒரு கவனிக்கத்தக்க சக்தியாக இருக்கவில்லை.

ஒரு காலத்தில் முஜாபர் அகமது, ஜோதிபாசு, ஹாசிதத்தா. கமல் சர்கார், சமர்முகர்ஜி, அப்துல்லா ரசூல், நிரோத் சக்ரவர்த்தி, மஹா தேவ் சஹா, அனில்பிஸ்வாஸ், புரோமோத் தாஸ் குப்தா, புத்ததேவ் பட்டாச்சார்ஜி போன்ற வலுவான தலைவர்களால் வழிகாட்டப்பட்ட இடது முன்னணியின் அனைத்துக் கட்சிகளும் இன்று இந்த மாநிலத்தில் தங்களின் அரசியல் செல்வாக்கிற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

நெருக்கடியின் அளவு மிகமிகக் கடுமையாக உள்ளது. அது, மாநில அரசியலில் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொள்ளுவதற்கு ஒரு அரசியல் கட்டாயத்திற்கு  தள்ளியுள்ளது.

இது குறித்து புத்தக ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான கபில்தாசர் கூறியதாவது: “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி கிட்டத்தட்ட முழுமையான வீழ்ச்சியை அடைந்தது, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தாபானர்ஜி அதிகாரத்தில் ஏறினார், இத்தகைய நிலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அடிமட்ட அளவிலிருந்து வலுப்படுத்துவதற்கு, இளம் தோழர்கள் அளிக்கும் பங்களிப்பை அலட்சியப்படுத்திவிட முடியாது. அவர்களுடைய இருப்பானது திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் முன்னால் மிகச் சிறியதாக தோன்றலாம், ஆனால் அது வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் குறிப்பிடத்தக்க சக்தியாகிக் கொண்டிருக்கிறது. இடது முன்னணி தனது வாக்கு பங்கை நிச்சயமாக அதிகரிக்கப் போகிறது.”

மேற்கு வங்கத்தை 34 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற முடிந்தது.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு கிடைத்த 4 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இடது முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் 39.6 சதவீதமாகும். 2016இல் இடது முன்னணி பெற்ற வாக்குகள் கிட்டத்தட்ட 26 சதவீமாகக் குறைந்தது. பா.ஜ.க.விற்கு கிடைத்த வாக்குகள் கிட்டத்தட்ட 11 சதவீதமாக அதிகரித்தது.

அதேபோல, மக்களவைத் தேர்தலில், 2009இல் 6 சதவீத வாக்குகளை பெற்ற பா.ஜ.க. 2014 -இல் 17 சதவீத வாக்குகளைப் பெற்றது. மற்றொரு பக்கத்தில் 2009இல் 42 சதவீதமாக இருந்த இடது முன்னணியின் வாக்கு பங்கு, 2014இல் 30 சதவீதமாக சரிந்தது. இதில் 2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேலும் 7 சதவீத வாக்குகள் குறைந்தன.

ஆனால் இன்றைய நடப்பு நிலைமை குறித்து தெகன்காவில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சித் தலைவர் அருண்தாஸ் கூறுகையில் “சமீப மாதங்களில் இடது முன்னணியின் பேரணிகளில் மக்களின் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பு கவனிக்கத்தக்கதாக உள்ளது. நகர்ப்புறங்களிலும் சரி கிராமப்புறங்களிலும் சரி இதுதான் நிலைமை. இது காட்டுவதென்னவென்றால், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் இடது முன்னணி தான் மிகச் சிறந்த வாய்ப்பாக உள்ளது என்று மேற்கு வங்க மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றனர். வரக்கூடிய ஆண்டுகளில் மக்கள் இடது முன்னணிக்கு திரும்ப வருவார்கள் என நான் நினைக்கிறேன். இது மெதுவாக நிகழும் என்றபோதிலும் வரக்கூடிய தேர்தல்களில் எங்களுடைய வாக்குப் பங்கு அதிகரிக்கும் என முன்னோக்கி கூற முடியும். ஜுன் 29ஆம் தேதி நாங்கள் ஒரு பேரணியை நடத்தினோம். அதில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்தனர். இப்போதும் எங்களுக்கு பெருந்திரளான ஆதரவாளர்கள் இருக்கின்றனர். துரதிருஷ்டவசமாக, மக்கள் தங்களுடைய வாக்குகளை சுதந்திரமாக பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை” என்று கூறினார்.

தற்போதைக்கு, மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் “வேறுபாடுகளைக் கொண்ட கூட்டை” அமைத்துக்கொண்டு போட்டியிடப் போகின்றன.

சுஜித் நாத்              

தமிழில்: பெரியசாமி 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *