samikalin pirappum irapum book review. Book day website is Branch of Bharathi Puthakalayam

நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் *சாமிகளின் பிறப்பும் இறப்பும்*நூல்: “சாமிகளின் பிறப்பும் இறப்பும்”
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 64
விலை: ₹. 50
புத்தகம் வாங்க: thamizhbooks.com

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்ந்த “துளிர்” அறிவியல் மாத இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் என்பதை அறிந்தவுடன் சிறு வியப்பில் ஆழ்ந்தேன். 1997 -98 ஆம் ஆண்டில் எமது பள்ளியில் நடைபெற்ற துளிர் விநாடி வினா போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற நிகழ்வு கண்முன் வந்து சென்றது. வெற்றிப் பரிசாக ஓராண்டிற்கு “துளிர்” அறிவியல் மாத இதழ் என் வீடு தேடி வந்ததை இப்பொழுது நினைத்து பார்த்து பேருவகை கொள்கிறேன்.

இந்நூலிலுள்ள கட்டுரைகளைப் படித்ததாக நினைவில்லை என்பதே உண்மை. இந்நூல் 2011 ஆம் ஆண்டில் தான் முதற்பதிப்பாக வெளிவந்துள்ளதால் அடியேன் படித்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் படைப்புகளும் பேச்சுகளும் (இணைய வழி கலந்துரையாடல்) என்னுள் இனம்புரியாத அதிர்வலைகளைத் தூண்டவல்லதாகவே அமைந்து வருகின்றன.

இந்நூலிலுள்ள 16 கட்டுரைகளும் மிக மிக முக்கியமானவைகளே… குழந்தைகளை பக்கத்தில் அமர்த்திக் கொண்டு நேரிடையாக கதை சொல்லும் பாங்கில் அமைந்துள்ள கட்டுரைகளே இவை. குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் இக்கட்டுரைகள் வாசித்தல் இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியமான ஒன்றாகுமென்றே கருதுகிறேன். இனத்தாலும் மதத்தாலும் பிரிவினையைத் தூண்டி ஆதாயம் தேடப் பார்க்கும் மதவாதக் கூட்டத்தின் சாயத்தை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள இந்நூல் எளிதாக உதவுமென நம்புகிறேன்.

காலங்காலமாக கடவுள் மீது நாம் கொண்டுள்ள பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறியக் கூடிய நுட்பமான கட்டுரைகளே இவை. ஆனால், மிக மிக எளிய வடிவில் நம் கண்முன் காணும் காட்சிகளைக் கொண்டு அணுகிய விதமா அசாதாரணமானதே… “‘மனிதனின் கடவுள், மனிதனின் சாமி‘ என்றுதான் அழைக்க வேண்டும்” என்று ஆரம்பத்திலேயே கடவுளுக்கு வரையறை வழங்கி அதற்கான காரணங்களை உதாரணங்களுடன் பட்டியலிட்டு புரிய வைக்கும் பாங்கு பிரமிக்கத்தக்கதே..

சாமிகளின் தோற்றங்கள் குறித்து அவர் அடுக்கடுக்காக எடுத்து வைக்கும் சாமிகளின் வரலாறுகள் ஒவ்வொன்றும் புதுமையையும் பரவசத்தையும் அளித்தாலும் பரிதாபத்தையும் பச்சாதாபத்தையும் உண்டாக்கக் கூடியதாகவும் அமைந்து நம்மை கடவுளின் பக்கத்தில் அழைத்துச் செல்ல முயல்வதாகவே முதலில் தோன்றுகிறது. கடவுளை மனிதன் தான் படைத்தான் என்பதை அறிவியல் பூர்வமாக அலசும் கட்டுரையை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அமைத்த விதமே இந்நூலின் வெற்றியாகக் கருதுகிறேன்.

ஏழைச்சாமிகள் பணக்காரச் சாமிகள் என்று சாமிகளிடையே உள்ள வேறுபாடுகளை எள்ளலுடன் கூடிய பாணியில் சமூக ஏற்றத்தாழ்வுகளை பட்டியலிட்ட பாங்கு குறிப்பிடத்தக்கது. இந்து சமயமென்ற ஒன்றே ஆதியில் கிடையாது என்பதை வரலாற்று பிண்ணனியில் விளக்கிய விதம் இன்றியமையாதது. கிறித்துவ இஸ்லாமிய சமூகத்திலும் ஏழை – பணக்கார சாமி வேறுபாடுகள் உள்ளன என்பதையும் குறிப்பிட்டு அவற்றையும் சாடியுள்ள பாங்கே இந்நூலின் ஆகப்பெரிய வெறிறியாகக் கருதுகிறேன்.

முனியப்பசாமி கோவிலில் திருவிழா ...

மதுரை வீரன் சாமி, கம்பம் முத்தாலம்மன் சாமி, கொசவப்பட்டி மாலையம்மன் சாமி, மலடம்மன் சாமி, சீலைக்காரி கோப்பம்மாள் சாமி, சீனியம்மாள் கோவில், சுடலைமாடன் சாமி, ஐஸ் காளியம்மான் சாமி, தனகாளியம்மன் சாமி, சர்க்கரையம்மாள் சாமி முதலிய நாட்டுப்புற/ கிராம / சிறு தெய்வங்கள் உண்டான வரலாறுகள் ஒவ்வொன்றும் கண்ணீரையும் வியப்பையும் உண்டாகக் கூடியவைகளாக உள்ளன. இவைகள் யாவற்றையும் “ஏழை சாமிகள்” என்றழைப்பதே சரியென்றும் அதற்கான காரணங்களை ஆதாரத்துடன் விளக்கி நிரூபணம் செய்துள்ளார் எழுத்தாளர் அவர்கள்.

“கூட வாழ்ந்த மனிதர்கள் சாதாரணமாகச் சாகாமல் இப்படிப் பரிதவித்துச் செத்தால் அவர்களைத் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்”

” பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத ஏழை மக்கள் சாமியாக்கிக் கும்பிட்டுப் பாவத்தைக் கழுவிக் கொள்ள நினைக்கிறார்கள்”

போன்ற கருத்துக்கள் வாயிலாக ஏழைச்சாமிகளின் தோற்றம் குறித்து விளக்கமளித்த எழுத்தாளர் எழுப்பும் பின்வரும் கேள்வி கவனத்திற்குரியதே.

“கொலை, தற்கொலையால் செத்தால் கும்பிட்ட மக்கள் இடி விழுந்து செத்ததை ஏன் கும்பிடவில்லை?” ஆய்வுக்குரிய கேள்வி. (திருநெல்வேலி – சங்கரன் கோவிலிள்ள கும்பிடாத சாமி கதை)

“டவுசர் சர்ச்” தோற்றம் குறித்தான வரலாறு பெயரைப் பார்த்தவுடன் நகைச்சுவை உணர்வைத் தூண்டுவதாக இருந்தாலும் அது பேசும் சமூக ஏற்றத்தாழ்வு குறித்த சங்கதிகளோ சங்கடத்தையும் சாதீய அவலத்தைக் கண்டு பொங்கியெழத் தூண்டுவதாகவும் உள்ளன. ஆனால் அப்படிப்பட்ட வேற்றுமை பாராட்டும் சர்ச் இடிக்க “அருட்தந்தை கௌசானல்” மேற்கொண்ட முயற்சிகள் போற்றத்தக்கதே. ஆனால் இன்றும் தனித்தனி ஆலயங்களாக அவை உள்ளன என்பதும் நமது கண்கூடு தானே…

இஸ்லாமிய சமயத்தின் நாட்டுப்புற தெய்வ வழிபாடே “தர்கா” என்பது குறித்தான தகவல்களும் மிக நுட்பமாக விவரித்துள்ளார் எழுத்தாளர் அவர்கள். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உள்ள தர்கா – இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் குறித்தான தகவல்கள் சுவாரஸ்யமான அனுபவமே. சமய நல்லிணக்க வழிபாடு இன்றும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில் சமய பேதமின்றி பெயர்சூட்டிய விபரங்கள் (ரொண்டோ, நாகூர் கனித்தேவர்) அறிந்து சிலாகித்த உணர்வே மேலிட்டது என்பதே நிதர்சனம்.

இங்ஙனம் ஏழைச் சாமிகளின் பிறப்பும் இறப்பும் பற்றியே பெரும்பாலான கட்டுரைகள் பேசிய நிலையில் பணக்காரச் சாமிகள் தோற்றங்கள் குறித்தான கட்டுரைகள் ஒரு சிலவே இருந்த போதிலும் அவை பேசும் கருத்துக்கள் தர்க்கப் பூர்வமாக நிரூபிக்கும் வண்ணம் அமைந்துள்ளன என்பதே மெய். இயற்கையை வழிபட்ட மனிதன் (இடி, மின்னல், மழைக்குப் பயந்து ) அவற்றின் கோரத் தாண்டவம் தாங்க இயலாமல் அவற்றை சமாதானம் செய்ய ஆடு, மாடுகளைப் பலியிடும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவையே..

அரசர்களின் உதவியுடன் சமயங்கள் வளர்ந்த விதமும் அசைவ சாமிகள் சைவ சாமிகளாக மாறிய நிகழ்வுகளும் மிக நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ள விதம் கவனிக்கத்தக்கது. மக்கள் படைத்த தெய்வங்களுக்கும் (ஏழை) அரசன் வளர்த்த தெய்வங்களுக்குமான (பணக்காரச் சாமிகள்) வேறுபாடுகளாக எழுத்தாளர் எடுத்தியம்பியுள்ள ஏழெட்டு கருத்துக்கள் ஒவ்வொன்றும் நமது சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்யக்கூடியவைகளே…

ச.தமிழ்ச்செல்வனுடன் நேர்காணல் - The ...

அறிவொளி இயக்கம் அனுபவங்கள் வாயிலாக தாம் பெற்ற அனுபவங்கள் மற்றும் பல்வேறு தேடல்களின் வழியாக பெற்ற தகவல்கள் வாயிலாக அவர் படைத்துள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் உண்மைக்கு மிக அருகில் நிற்பதாகவே நமக்குத் தோன்றுகின்றன. பணக்காரச் சாமிகள் அமைதியாக இருக்க, ஏழைச் சாமிகள் மட்டும் மனிதர்களிடம் நெருங்கி வந்து உரையாடும் (சாமியாடுதல்) நிகழ்வுகள் பற்றிய தகவலில் மட்டுமே சிறுநெருடல் உண்டாகிறது. அதற்கான விடையை குழந்தைகளே (படிப்பவர்களே) தேடல் வழியாக அடையட்டும் என்று விரும்பியிருப்பாரோ என்னவோ?…

“இரக்கமில்லாத இந்த உலகத்தில் கருணையின் வடிவமாக கடவுள் இருக்கிறார். இதயமில்லாத இந்த உலகத்தில் இதயமாகக் கடவுள் இருக்கிறார்” என்ற ‘கார்ல் மார்க்ஸ்’ தத்துவத்தின் வழியாக “கோவில், மசூதி, சர்ச், பீடங்கள் உண்டு. கடவுள் இல்லை” என்பதை அறிவியல் பூர்வமாக ஆணித்தரமாக எடுத்தியம்பி கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து வரும் பகுத்தறிவாதி தோழர். ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.

இப்படியொரு அற்பதமான அதி அத்தியாவசியமான கட்டுரைகளை குழந்தைப் பருவத்திலேயே மாணவர்களிடம் கொண்டு செல்லும் பாங்கில் எழுத முனைந்த பேராண்மைக்கு மிக்க நன்றி. அதனைப் புத்தகமாக வெளியிட்டு பரவலாக்க முயன்று வரும் பாரதி புத்தகாலயத்திற்கும் நன்றி. இவ்வரிய புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்திற்கும் நன்றி.

பள்ளிக் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய “என் ஊரின் கதை” கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் 10 கட்டுரைகளுள் ஒன்றாக தேர்வு செயயப்பட்டு வெற்றி பெற்றமைக்கு பாராட்டி பரிசாக கிடைக்கப் பெற்ற புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதை இந்நேரத்தில் அறிவிப்பதில் பேருவகையும் பெருமிதமும் அடைகிறேன்.

இதுபோன்ற நூல்கள் பள்ளி நூலகத்தை அடைவது மிக அவசியமென கருதுகிறேன். அரசும் கல்வியாளர்களும் ஆவனச் செய்தல் வேண்டும். எப்படி இருப்பினும் ஆசிரியர்களும் இதுபோன்ற நூல்களை மாணவர்களிடம் அறிமுகப்படுத்துதலே இன்றைய காலத்தின் கட்டாயமாகக் கருதுகிறேன்.

அனைவரும் வாசிக்க முயலுங்கள். நன்றி.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *