பேராசிரியர் சோ மோகனா (Prof.S.Mohana) எழுதிய சமூகப் போராளிகள் (Samooha Poralikal) - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

சமூகப் போராளிகள் – நூல் அறிமுகம்

சமூகப் போராளிகள் – நூல் அறிமுகம்

 

சோ.மோகனா அவர்கள் கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று இன்று பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கும் கீழ்நிலை ஊழியர்களுக்கும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போராட்டக்காரர். தினமும் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து இன்னும் தன்னை சமூகத்துடன் பிணைப்பில் வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் அறிவியல், வானவியல், புனைக் கதைகள், வரலாற்று நூல்கள், கண்டுபிடிப்புகள் என பல்வேறு தளங்களில் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் .

அந்த வரிசையில் நம் நாட்டில் விடுதலைக்காகப் போராடி சிறை சென்று தனது இன்னுயிரை ஈந்த பெண் போராளிகளைப் பற்றியும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக முழு மூச்சில் தம்மை ஒப்புக்கொடுத்து உழைத்திட்ட பெண்களைப் பற்றியும் தனது பதிவை நூலாக வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்து இந்திய வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு ஒரு கட்டத்தில் வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடி இந்திய மக்கள் தங்களது எல்லா விதமான வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்துவிட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்ந்த சூழலில் தெற்கே எழுகிறது முதல் விடுதலைப் போராட்ட குரல் . பூலித்தேவன் என்ற மாவீரன் தொடங்கி வைத்த விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் தலைமையின் கீழ் நின்று சுதந்திரமாகிறது எத்தனையோ தியாகிகள் விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரை ஈந்து இந்த சுதந்திரத்தை நமக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

பேராசிரியர் சோ மோகனா  (Prof.S.Mohana) எழுதிய சமூகப் போராளிகள் (Samooha Poralikal) - நூல் அறிமுகம்  - பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

போராளிகள் என்ற நிலையில் எத்தனையோ கட்டுரைகள் நூல்கள் தியாகிகளைப் பற்றியும் அவர்களது விடுதலைப் போராட்ட வரலாற்றையும் எழுதிச் செல்கின்றன. தங்களது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தனது போராட்ட குணத்தையும் கைவிடாமல் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மூடநம்பிக்கைகளையும் அற்பத்தனங்களையும் மக்களுக்கு எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தி ஒரு சுதந்திரமான வாழ்வைப் பெறுவதற்கு எத்தனையோ முயற்சிகளை எடுக்க சமூகப் போராளிகள் முயன்றிருப்பார்கள். ஆனால் ஆணுக்குச் சமமாக பெண்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தன்னலமற்று தன் குடும்பத்தை துறந்து விடுதலைக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பாடுபட்ட வரலாறு இதுவரை முழுமையாக தொகுக்கப்படவில்லை. அந்த வகையில் இந்த நூல் நாம் அறிய மறந்து சமூகத்தை சீர்தூக்கிய தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் வழங்கிய பெண் போராளிகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கிலும் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனையோ பெண் விடுதலைப் போராளிகள் விடுதலைக்காகப் போராடி சிறை சென்று பலவித இன்னல்களுக்கு உட்பட்டு குடும்பத்தை துறந்து தங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் எத்தனையோ வலிகளை சுமந்து கொண்டு கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தாங்கள் கொண்ட கொள்கையிலும் எடுத்துக் கொண்ட லட்சியத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் சமூகத்தின் விடுதலைக்காக போராடியிருக்கும் வரலாற்றை நமக்குள் எழுச்சியை உருவாக்கும் வண்ணமும் அன்றைய வரலாற்றை நம் கண் முன்னே நிறுத்தி காட்சிகளாக படம் பிடித்துக் காட்டும் வகையிலும் நெஞ்சில் நினைவுகளாக, ஆறாத வடுக்களாக அவர்களின் வலியைச் சுமக்கும் வகையிலும் எழுதிச் செல்கிறது நூல்.

எத்தனையோ பெண்கள் சமூகத்தின் அடிமைத்தனத்தை அழித்து முழுமையான சமத்துவத்தை நோக்கிய திசையில் விடுதலைப் போராளிகள் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் எழுந்து வந்து வீதியில் நின்று போராடி இருக்கக்கூடும். அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு இன்னும் தொகுக்கப்படவில்லை. எனவே பெண்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான வரலாற்றை எழுதும் பொழுது தமிழகத்தின் பெண் போராளிகளின் பங்கும் அளவிட முடியாத உயரத்தில் இருக்கும் என்பது இந்நூலின் வழியாக அறிய முடிகிறது.

இதில் இந்திய தேசத்தில் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை விதைத்த 15 சமூக போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும் அதேசமயம் அவர்களின் தியாகங்கள் நீர்த்துப்போகா வண்ணம் நம் நெஞ்சில் நிலைக்கும் வகையிலும் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று ஆதிக்க சக்திகள் நிறைந்த அன்றைய காலகட்டத்திலும் ஆணுக்குப் பெண் சமமில்லை என்று அடிமைத்தனத்தில் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் நிறைந்த விடுதலைப் போராட்ட வரலாற்று காலத்திலும் தன் குடும்பத்தையும் அவர்களின் எதிர்ப்பையும் தாண்டி எத்தனையோ பெண்கள் தெருவில் இறங்கி போராட்ட களம் கண்ட வீரத்தையும் இந்த நூல் ஒவ்வொரு வரியாக நமக்குள் கடத்துகிறது.

பெண்கள் தங்கள் கடமையினைச் செலுத்தும் பொழுது ஆண்களைப் போல இல்லாமல் குடும்பத்தையும் பார்க்க வேண்டும் தேசத்தையும் கவனிக்க வேண்டும் என்ற இரட்டைக் குதிரை சவாரியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் தாங்கள் கொண்ட லட்சியத்தில் உறுதி கொண்டு தங்கள் உயிருக்கும் குடும்பத்திற்கும் எத்தனையோ ஆபத்துகள் நேரும் போதும் அவற்றைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் போராடும் மனப்பக்குவத்தை வளர்த்து சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த நூல் நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

நூலில் இடம்பெறும் பெண் போராளிகளின் சில பண்புகள்:
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே

உண்மையில் இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது மக்களுக்கு முறையான கல்வியை அறிமுகம் செய்து குறிப்பாக பெண்களுக்கு கல்வியை முதன் முதலில் வழங்கி முதல் ஆசிரியராக ஒளிர்ந்த சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்த தினத்தையே கொண்டாட வேண்டும்.தலித் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல ஆயிரக்கணக்கான துன்பங்களை தனக்குள் வாங்கிக் கொண்டும் முதல் பள்ளிக்கூடத்தை நிறுவி அவர்களுக்கு கல்வியை அறிமுகம் செய்தவர் சாவித்திரிபாய் பூலே. கொடுமையான பிளேக் நோய் தாக்கி பல பேரை பலி வாங்க தனது
66 வது வயதிலும் அந்த நோயிலிருந்து பல மக்களை காப்பதற்காக களத்தில் இறங்கி போராடி அந்த நோயாலேயே உயிர் துறந்தவர் சாவித்திரிபாய் பூலே

சூழலியல் போராளி வந்தனா சிவா

இவர் ஒரு இந்திய சூழலியலாளர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் உலகமயமாக்களுக்கு எதிரான எழுத்தாளர் 20க்கும் மேற்பட்ட சூழல் தொடர்பான மரபீனி மாற்றம் பெற்ற உணவுப் பொருட்களை மற்றும் உலகமயமாக்களுக்கு எதிரான புத்தகங்களை எழுதியவர் உலகில் பெண்கள் தான் எப்பொழுதுமே உணவு உற்பத்தி செய்பவர்களாக இருந்து வருகின்றனர் ஆனால் விவசாயம் ஆண்களின் அறிக்கை வந்த பின் அதில் பெண்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போனது விவசாயத்தைப் பொறுத்தவரை பெண்களின் உழைப்பு என்பது வேலையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. உணவுச் சங்கிலியின் முதல் கன்னியாக இருக்கும் விதையை பெண்கள் தான் பாதுகாக்கின்றனர் அதேபோல் உணவை பதப்படுத்தும் முறைகளும் பெண்கள்தான் முழுமையான பங்களிப்பைச் செய்கின்றனர் ஆனால் அவர்களது உழைப்பு எந்த இடத்திலும் முறையாக கவனப்படுத்தப்படுவதே இல்லை என்பது வந்தனா சிவா அவர்களின் கூற்று.

கடலூர் அஞ்சலை அம்பாள்

பாரதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபு என்னும் விலங்கை உடைத்து எறிந்து விட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல சமுதாய வாழ்வும் தான் என்று முழங்கி குடும்பத்துடன் குடும்பத்தினருடன் வீதியில் இறங்கி போராடியவர். எத்தனையோ தியாகிகளின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின அந்த வகையில் கடலூர் அஞ்சலை அம்மாளின் வரலாறு நிறையப் பேருக்கு தெரியாமலேயே போய் விட்டது. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் கதர் போராட்டம் நீல் சிலை அகற்றும் போராட்டம் என பலவிதமான போராட்டங்களில் கலந்து கொண்டு தனது ஒன்பது வயது மகளுடன் சிறை சென்றவர். கொண்ட கொள்கைக்காகவும் எடுத்துக் கொண்ட லட்சியத்திற்காகவும் மகளின் எதிர்காலத்திற்காக சிறிதும் அஞ்சாமல் சிறை சென்று தனது போராட்ட உணர்வை வெளிப்படுத்தியவர் .நாட்டில் பல ஊர்களில் உள்ள சிறைகளில் இவர் அடைக்கப்பட்டு இருக்கிறார் .உப்புச் சத்தியாகிரகம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறார் .சிறையிலேயே குழந்தை பிறந்துவிடும் என்பதால் சிறை நிர்வாகம் பரோலில் அனுப்பி அவருக்கு விடுதலை கொடுக்கிறது. பரோலில் வந்த அஞ்சலையம்மாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது .சிறையில் இருந்து வந்தவுடன் பிறந்ததால் குழந்தைக்கு ஜெயில் வீரன் என்று பெயர் வைக்கிறார். இப்படியாக தனது உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தனது குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் 5 வருடங்கள் சிறைவாசத்தை விடுதலைக்காக மேற்கொள்கிறார். இவர் தென்னாட்டு ஜான்சி ராணி என போற்றப்பட்டவர்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தி பாய் ஜோசி

9 வயது ஆனந்தி பாய் ஜோஷிக்கு 29 வயது கோபால் ஜோசியுடன் திருமணம் நடக்கிறது. தனது விருப்பத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் ஆனந்தி பல்வேறு இயற்கைத் தடைகளையும் சமூக தடைகளையும் உடைத்து தனி ஒரு மனுசியாக வெளிநாட்டிற்கு பயணப்பட்டு மருத்துவ பட்டம் பெறுகிறார் இடைவிடாத தொடர் இருமலும் ஆஸ்துமா நோயும் அவரை தொடர்ச்சியாக வாட்டிய போதும் பெண் மருத்துவத்தில் கருவிகள் மற்றும் மகப்பேறு பிரிவில் பட்டம் பெற்று இந்தியா திரும்புகிறார் ஒரு சாதாரண இந்திய பெண் மருத்துவராக பட்டம் பெற்றதால் இங்கிலாந்தின் பிரதமர் விக்டோரிய மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பி கௌரவிக்கிறார்

தியாகி மதுரை சொர்ணத்தம்மாள்

பலப்பல போராட்டங்களுக்காக அடி உதை சித்திரவதை சிறைவாசம் ஆகியவற்றை அனுபவித்தவர் பலமுறை காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டவர் ஒருமுறை போராட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காலை 10 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை தடியால், செருப்பால் ,பெல்டால் ,கையால், காலால் என எவ்வித பாகுபாடும் இன்றி உடலின் எல்லா இடங்களிலும் அடி வாங்கியவர். அதன் காரணமாக தனது ஒரு பக்க காது செவிடாகிப் போன வரலாற்றை உடையவர். மற்றொரு முறை போராட்டத்திற்காக போலீசாரல் கைது செய்யப்பட்டு அவரும் அவரது தோழி லட்சுமிபாயும் சுமார் மூன்று கிலோ மீட்டர்கள் காட்டிற்குள் இரவு நேரத்தில் லாரியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டு நடுக்காட்டில் இறக்கி விடப்படுகிறார்கள். அதுவும் அரை நிர்வாணத்துடன். தட்டுத் தடுமாறி சாலைக்கு வந்து கரை ஏறுகிறார்கள் இருவரும் .இப்படியாக ஏராளமான தியாகங்களைச் செய்தே இந்திய விடுதலை கிடைக்கிறது இவ்வளவு தியாகங்கள் செய்த சொர்ணத்தம்மாளின் இறுதிக் காலம் எப்படி எங்கே நிகழ்ந்தது என்பதும் அவர் எப்பொழுது இறந்தார் என்ற தகவலும் கூட வரலாற்றில் பதிவாகவில்லை என்பது எவ்வளவு பெரிய பரிதாபம் .

காந்தியின் தத்துப் பெண் அம்புஜம்மாள்

பெற்றோர் வசதி வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நன்கு படித்தவர்கள்.பள்ளிக்கு செல்லாமல். வீட்டிலேயே ஆசிரியர்களால் பாடம் நடத்தப்பட்டு அதிலும் தமிழ் இந்தி ஆங்கிலம் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் கற்றுத் தேர்கிறார் .வீணை வாசிப்பதிலும் தனது திறமையை நிரூபிக்கிறார் .காந்தியடிகள் தமிழ்நாடு வரும்பொழுதெல்லாம் அவரது தந்தை சிறந்த வக்கீல் என்பதால் அவரது வீட்டிலேயே தங்க நேர்கிறது. காந்தியடிகளையும் கஸ்தூரிபா காந்தியையும் நேரில் சந்தித்த அம்புஜம் அவர்களின் எளிமையையும் தேச விடுதலைக்காக அவர்களின் உழைப்பையும் கண்டு வியந்து தானும் தேசிய உணர்வை அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து உலகப்போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு சென்னையிலிருந்து மருந்துகள் துணிகள் சேகரித்து அனுப்பினார் .நிதியும் திரட்டி கொடுக்கிறார். இவை அத்தனையும் அம்புஜத்தம்மாளின் 15 வயதில் நடந்த நிகழ்வுகள். நிறைய நூல்கள் எழுதி எழுத்தாளராகவும் மிளிர்ந்தவர். மகாத்மா காந்தி நினைவு மாலை நூல் ,நான் கண்ட பாரதம் நூல் போன்றவை இவரின் சிறப்புப் பெற்ற நூல்கள்.

மணலூர் மணியம்மை

“”பெண் என்ற காரணத்திற்காகவோ விதவை என்ற காரணத்துக்காகவோ என்னை அடக்கி ஒடுக்க முடியாது என் விருப்பப்படி நடந்து கொள்ள எனக்கு முழு உரிமையும் இருக்கிறது எனக்காக பிறர் முடிவெடுப்பதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்”” என்று வசை பாடியவர்களை வாயடைக்க செய்த புரட்சி வீராங்கனை மணலூர் மணியம்மாள் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சாதித் தீண்டாமை எதிர்பாளர் ,பெண்ணியலாளர் ,வர்க்கப் போராட்டக்காரர் என பன்முகம் கொண்டவர் .ஆண்களைப் போல் வேட்டியும் மேல் சட்டையும் அணிந்திருப்பார் முடியை வெட்டி கிராப் வைத்திருப்பார் சைக்கிளில் பயணிப்பவர்.

சிவகங்கையைக் காத்த படைத்தளபதி குயிலி

விடுதலைப் போராட்டத்திற்காக தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த முதல் பெண் குயிலி. தனது தலைவி வீரமங்கை வேலு நாச்சியாருக்காக ஆங்கிலேயர்களின் ராணுவ கூடத்திற்குள் யாரும் அறியா வண்ணம் நுழைந்து தன்னைத்தானே மாய்த்துக் கொண்டு அவர்களின் ராணுவ தளவாடங்களையும் ஆயுதக் கிடங்குகளையும் தீ வைத்து எரித்து சிவகங்கையைக் காப்பாற்றியவர் குயிலி.

வீரமங்கை பத்மாசனி

பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு மதுரையைச் சேர்ந்த பத்மாசனி கர்ப்பிணி என்ற நிலையிலும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். ஒரு முறை மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து சிறை சென்றார்.சிறை நிர்வாகத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார் அதன் காரணமாக கரு கலைந்து விடுகிறது தனது உடல் வலியை கருத்தில் கொள்ளாமல் வீர சுதந்திரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு விடுதலைப் போராட்ட இயக்கத்திற்காக பொருளுதவியும் செய்கிறார் தனக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை பாரதி ஆசிரமம் அமைக்க நன்கொடையாக கொடுக்கிறார்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக துப்பாக்கி ஏந்தி ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கில் வெடிவேசியும் போராடியவர் கல்பனா தத் இந்திய சுதந்திர முதல் முஸ்லிம் போராளி பேகம் ஹஜ்ரத் மஹால் உத்திர பிரதேசத்தில் இருக்கும் ஒரு சமஸ்தானம் அவார்ட் அதன் ஐந்தாவது அரசன் அஜித் அலிசாவின் மனைவி பேகம் ஹஜ்ரத் மஹால் சொந்த நாட்டிலேயே தன் உடலுக்கு ஆறடி நிலம் இன்றி நாடு கடத்தப்பட்டு நேபாளத்தில் உயிர்நீத்தவர். தன் கணவனால் விவாகரத்து செய்யப்படும் கூட ஆட்சி செய்ய நாதி இன்று கிடந்த தன் கனமழை நாச்சிக்குட்பட்ட பகுதியை அந்நியன் கைக்கு கிடைக்க விடாமல் சாதுரியமாய் கைப்பற்றி மாபெரும் சக்தியாக விளங்கியவர் இறுதியில் தோல்வி அடைந்து நாடு கடத்தப்பட்டு நேபாளத்தில் ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டவர்.

தியாகத்தின் மறு உருவம் ஜல்காரி பாய் ஜான்சி ராணி லட்சுமி பாய் போலவே தோற்றத்தில் இருக்கும் ஜல்காரி பாய் அவரது பீரங்கி படையில் சேர்ந்து அவருக்கு நம்பிக்கை கூறிய ஆளாக மாறுகிறார் துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டவர் ஒரு கட்டத்தில் ஜான்சி ராணியை ஆங்கில அரசு நெருக்கி போது அவருக்கு பதில் தான் ஜான்சி ராணி என்று அவர்களிடம் சரணடைந்தவர் அந்த வீரத்திற்காகவே ஜல்காரி பாயை மிகுந்த மரியாதையாக நடத்தி அவரை ஆங்கிலேயர்கள் விடுதலை செய்த வரலாறு நாம் அறிய வேண்டிய முக்கியமான ஒன்று

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி வி ராமன் அவர்களின் கீழ் பணிபுரிய வேண்டும் என்ற பெருவிருப்பத்திற்காகவே பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சத்தியாகிரகம் நடத்தி விஞ்ஞானியாக மாறியவர் கமலா சோகோனி. பெண்கள் வீட்டைத் தாண்டி வெளியே அலுவலகங்களுக்குச் சென்று வேலை செய்தால் ஆண்களின் செயல் திறன் குறைந்துவிடும் என்ற பிற்போக்குத்தனத்தை அன்றைய விஞ்ஞானிகளும் வைத்திருந்தனர் என்பதை எதிர்த்து தனி ஒரு மனுசியாக நின்று போராடி வெற்றி கண்டவர்.

இந்தியாவில் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று இருந்தாலும் அது வரலாற்றில் சரிவர எழுதப்படாததால் வெளி உலகத்திற்குத் தெரியாமலே போய் விடுகிறது .அந்த வகையில் சமூகப் போராளிகளைபா பற்றி நமக்கு இன்றைய காலகட்டத்தில் அறிமுகப்படுத்தி சமூக முன்னேற்றத்திற்காக பெண்கள் மேற்கொண்ட நீண்ட நெடிய போராட்டத்தை நமக்கு நினைவுபடுத்தும் ஆசிரியரின் இந்த நூல் சிறப்பான வரலாற்று நூல்.

நூலின் தகவல்கள் : 

நூல் : சமூகப் போராளிகள் (வரலாற்றுக் கட்டுரைகள்)
ஆசிரியர் : பேராசிரியர் சோ மோகனா
முதல் பதிப்பு :  நவம்பர் 2024
பக்கம்  : 88
விலை : ரூபாய் 90
வெளியீடு  : பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ரன் சென்னை
தொடர்புக்கு : 044 24332924

நூல் அறிமுகம் எழுதியவர் : 

இளையவன் சிவா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *