சம்பத்குமார் கவிதைகள் 

சம்பத்குமார் கவிதைகள் 

 

1.நிறைவேறா  வேண்டுதல்கள்

——————————————————–


சிறுமியும், சாத்தானும்

சந்தித்துக் கொண்டனர்

புனித தினமொன்றில்

தேவாலயத்தின் வாசலில்


ஒரு புள்ளியில் இருதிசை பிரியும்

கோடுகளை ஒத்திருந்தன

அவ்விரு மனங்களின் பிராத்தனைகள்


தெருநாயொன்றின் பசி தீர்க்கவும்

இன்னும் கண் திறவா குட்டிபூனைக்காகவும்

தொட்டிச்செடியின் ஒற்றை பூவிற்காகவும்

வகுப்புத்தோழியின் தம்பி நோய் தீ்ரவும்

பிராத்தித்திருந்தாள் அவள்


தேவதூதன்

இவ்வெளிய வேண்டுதலில்

கனிந்து இரட்சிக்கத் துவங்குகையில்

தன் முதுகில் சுமந்தலைந்த

வெறுப்பின் பாரங்களை அவரிடம்

கையளிக்கத் தொடங்கியது சாத்தான்

சற்று நேரத்திலெல்லாம்

வெடித்துச் சிதறியது

எளிய வேண்டுதலுடைய

எண்ணற்ற உடல்கள்.

2.சூழ் கொண்ட சிற்றுலகம்

————————————————-

நீர் தெளித்து

சாணமிட்ட வாசலில்

கோல புத்தகத்தின்

தாளிலுள்ள வடிவத்தை

பிரதியெடுக்கிறாள் அம்மா

குறுக்கு நெடுக்கு வரிசைப்

புள்ளிகளாலான சிடுக்குகளில்

உருக்கொள்ளும் வடிவங்களில்

அவளறியாமலே படிந்துவிடுகிறது

அடுத்தவர்களின் சாயல்

பக்கத்திலமரும் மகன்

அள்ளியெடுத்த வண்ணங்களில்

பூக்களை, நட்சத்திரங்களை

பறவையை, சிறுசெடியை

வரைந்து முடிக்கிறான்

விடியும் வரை காத்திடவே

கற்களை நம்பாமல்

வண்ணப்பொடி சுவரெழுப்பி

போதுமென்று நிறையுமவன்

கையுதறிப் பார்க்கையில்

அவனுள் சூல் கொண்ட

சிற்றுலகம் தரையில்

பிரதியாயிருக்கிறது.

3.உறக்கம் கலைத்த ஒலி

———————————————

உறக்கத்தையே விரும்புகின்றனர்

குழந்தைகள்

பள்ளியின் இறுதிவேளை நாளின்

முன்னிரவு வரை

எழுதி ஓய்ந்த அவர்கள்

ஞாயிறின் ஒரேயொரு பகலையும்

தலையணைக்குள் புதைத்து

உறங்கிக் கொண்டிருக்கின்றனர்

அந்நாளில் முந்தையர்

மரக்கிளையிலும் குளத்துமேட்டிலும்

பேச்சொலி கூடிய வீதியிலும்

தாயக்கட்டையிலும்

விளையாடிக் கழித்த

பொழுதின் மிச்சங்கள்

இவர்கள் கனவில் நுழைந்து

புன்னகைக்கச் செய்கிறது

உறக்கத்திலும்

அவர்களது பள்ளி வாகனத்தின்

சுருதியில் எங்கோ ஒலித்த

ஹாரன் சத்தத்தில்

பதறி எழுந்தவர்கள் பின்

பேந்த விழித்தபடி கேட்கிறார்கள்

“இன்னைக்கு ஸ்கூல் இருக்காம்மா?”

க. சம்பத்குமார்

அவிநாசி

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *