mayanakarayin velitcham book review - book day website is branch of bharathi puthakalayam
மயானக்கரையின் வெளிச்சம்-சம்சுதீன் ஹீரா

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவின் *மயானக்கரையின் வெளிச்சம்* – கார்த்தி டாவின்சி



நூல்: மயானக் கரையின் வெளிச்சம்
ஆசிரியர்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 108
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mayanakaraiyin-vellicham-by-samsuthin-heera/
7, இளங்கோ தெரு, தேனாம்பேட்டை, சென்னை -600 018.
தொலை பேசி: 044 – 24332424 , 24332924 , 24356935

இத்தொகுப்பில் உள்ள 9 கதைகளில் 8 கதைகள் நிகழும் காலக்கட்டம் இந்த பத்தாண்டுகளாகும். ஒரு கதை மட்டும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஒட்டி அமைந்திருக்கிறது. அனைத்து கதைகளினின்றும் அதுதான் என்னை மிகவும் பாதித்த கதையுமாகும். இக்கதைகளின் மையம் மதவாத கோஷ்டிகள் தலைத்தூக்கியிருக்கும் நமது நாட்டில் நமது சக மனிதர்கள் சாதி மத துவேசத்தில் சிக்கி வாழ்வை இழந்ததன் வலியை எடுத்துகாட்டுவதாய் அமைந்திருக்கின்றன.
இது முழுமையாக இஸ்லாமியர்களின் வாழ்க்கையை மட்டும் பிரதிபலிக்காமல் பிற மதத்தவர்களின் வாழ்க்கையிலும் எப்படி துவேசங்கள் நடக்கிறதென்று காட்டுகிறது. ஒரு பழங்குடியின் வாழ்வாதாரம் எப்படி வேட்டையாடப்படுகிறது என்றும் காட்டுகிறது. சொல்லொன்று செயலொன்று என அதிகார வர்க்கம் மாறுவேடம் போடுவதையும் காட்டுகிறது. எது நடந்தாலும் மெல்லிய சிரிப்புடன் அப்படியே ஏற்கும் ஒருவரையும் காட்டுகிறது. இஸ்லாமியர் விரோத அரசு நடக்கிறதென்று குற்றச்சாட்டை முன்வைப்பதோடு மட்டுமல்லாமல் நாங்களும் மனிதர்கள் தான், எங்களுக்கும் வலிக்கிறது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

இதை இலக்கிய வடிவத்தில் சொல்லும் போது, அது காலத்தையும் பிரதிபலிக்கிறதாக ஆகின்றது. இதையே தோழர். ஆதவன் தீட்சன்யா தன் காலத்தை எழுதுதல் என்று குறிப்பிடுகிறார்.

1. ஒரு பெயரற்றவன் பற்றிய குறிப்பிலிருந்து…

ஒரு பெயர் இல்லாத மனிதன்தன் வாழ்வின் எல்லா நேரத்திலும் மெல்லிய சிரிப்பு ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு இருக்க முடியுமா.? இக்கேள்விக்கு பதில் இக்கதையில் உள்ளது. கந்தல் துணியுடன் ஹோ என்னும் நாய்க் குட்டியோடு இரண்டு சிறியத் தட்டுகளைக் கையில் ஏந்திக்கொண்டு, மெல்லிய சிரிப்புடன் இருக்கும் ஒருவர் தான் கதையின் மையம். அவர் டீக்கடையில் மணிக் கணக்காக நிற்கும் போதும் சிரிப்பு, போலீஸ் அடி பின்னும் போதும் சிரிப்பு, நீதிபதி முன்பு நிற்கும் போதும் சிரிப்பு, டீக்கடையின் முதலாளியிடம் சாப்பிட ஏதேனும் கிடைக்கும் போதும் சிரிப்பு, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பின்னரும் அச்சிரிப்பு மட்டும் மாறவில்லை.

இந்த பெயரற்ற கதாபாத்திரத்திற்கு, போலீஸ் இட்டப்பெயர் ‘அக்கியூஸ்ட்.’ நீதிபதி இவரை அப்பாவி என்று பெயர் சொன்னார். டீக்கடைத்தொழிலாளி அவனை ‘குத்தாவாலா’ (நாய்க்காரா..) என்று பெயர் வைத்து அழைப்பான். டீக்கடையின் உரிமையாளரோ அவரை ‘பாபா’ என்று தான் அழைப்பார். அதாவது சாட்சாத் சாய் பாபா. ஒரு NGO ஆள் அவனை ‘கேஸ் நம்பர் 13’ என்று குறித்துக்கொண்டான். அவரது உண்மையானப் பெயரை யாருமே கேட்டதில்லை. திடீரென சிலர் வந்து அவரது ஆடையை உருவிப்பார்த்து மிருகங்களாய் மாறி அடித்து கொள்கின்றனர். நல்ல வேளை நாயாவது தப்பித்தது.

மனிதர்களின் இயற்கையான பழக்கங்களில் ஒன்று, தாங்கள் அறியும் விஷயங்கள் எதையும் ஒரு வடிவமைப்பிற்குள் வைத்து பார்ப்பது. அப்படித்தான் இந்த பெயரற்ற கதாப்பாத்திரத்திற்கு தங்களுக்கு தெரிந்தப் பெயர்களை வைத்து அழைத்தனர். ஆக, அவர்கள் அழைக்கும் பெயர் என்ற வடிவமைப்பிற்குள் இக்கதாப்பாத்திரம் தன்னை அடக்கிக்கொள்ளும். எதிர்த்து நின்று, ‘ஏய்… என்ன இப்படிதான் கூப்புடனும்’ என்று சொல்லாது.
சில குண்டர்கள் இந்த பெயரற்றவரை ‘முசல்மான்’ என்று அவனைச் சொல்லி அவரைத் தீக்கிரையாக்கினர். எத்தனை பெயர் இருந்தாலும் அவரைக் காப்பாற்ற ஒரு பெயர் கூட உதவவில்லை. கடைசி வரை மாறாதது அந்த சிரிப்பு மட்டுமே. மனிதர்களின் பெயர்களே அவர்களின் அடையாளம் என்றில்லாமல், இவருக்கு அந்த மெல்லிய சிரிப்பே அவரது அடையாளமானது.



2. முடிவுக்கு காத்திருக்கும் கதை. 

இது கொரோனா ஊரடங்கு போடப்பட்ட நிலையில் வட இந்தியர்கள் நடந்தே அவரவர் ஊருக்குச் சென்ற போது நிகழ்வதாக எழுதப்பட்டு இருக்கிறது. இது ஒரு பரிசோதனை முயற்சியிலான கதை என்று கருதலாம். நேரடியாக கதையை வாசகரிடம் ஒப்படைத்து நீங்கள் இந்த கதையை முடித்து விடுங்கள் என்று விட்டு விடுவது.

கதையின் நாயகன் ஃபைசல் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவன். ஐநூறு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் கூலி வேளைப் பார்க்கிறான். கொரோனாத் தொற்று காரணமாக தங்கியிருந்த இடத்தை விட்டு அவரவர் ஊரை நோக்கி நடைப்பயணமாக சென்றனர். உடன் வந்த அனைவரும் ஒவ்வொருவராய் இறப்பதை ஏற்க முடியாமல் நாயகன் ஃபைசல் அடைகிற துயரத்தை நாம் வாசிக்கும் போது உணரலாம். திடீரென லாக்டவுன். தொழிலாளர்கள் உடனே ஊருக்கு நடக்கிறார்கள். சாப்பாடு இல்லாமல் தவிக்கிறார்கள். உடல் கெடுகிறது. பசியினால் திருடப் போய் மாட்டிக்கொண்டு அடிபடுகிறார்கள். குழந்தைகள் சாகின்றன. திடீரென தன்னுடன் வந்தவர் குடும்பத்தோடு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நடுவில் ‘ஃபைசல்’ என்ற பெயரைக் கேட்டதும் ஊர்க்காரர்கள் ‘கொரோனா ஜிகாதி’ என்று சொல்லி ஊரே சேர்ந்து அவனை அடித்துக் கொள்கிறது. இந்த மரணத்தை ஏற்காமல்தான், கதையைக் கொஞ்சம் முன்கூட்டியே முடித்து விடுங்கள் என்று விட்டுவிடுகிறார் ஆசிரியர். மனிதரை நம்பி மனிதர் வாழ முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டோம்.

3. புனித சமர் என்னும் கதையில், ஒரு தப்பை மறைக்க ஒம்போது தப்பு. இது பழமொழி. ஆனா, ஒரு தப்பு பண்ணா அதுக்கு ஒம்போது பேர் எடுப்பு. இது புதுமொழி. ஜம்புலாலும்இப்படித்தான். ஜம்புலால் ஒரு சாதி மத துவேசக்கூட்டத்தில் இணைந்து கட்டப் பஞ்சாயத்து செய்பவன். அதில் பெரியவனாக வளர வேண்டும் என்று ஆசையில் இருக்கிறவன். அவன் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணின் மீது விருப்பம் கொள்கிறான். அவளைத் தன் ஆதிக்கத்தினால் அடைய விரும்புகிறான். ஒரு கட்டத்தில் அப்பெண்ணை அடித்து துன்புறுத்தி, அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறான். ஆனால் திடீரென அப்பெண் தப்பித்து விடுகிறாள்.
போலிஸில் இப்போது மாட்டிக்கொள்வோமே என்ற பயத்தில் அவன் இருக்கும் போது தான் இக்கதையே ஆரம்பிக்கிறது. என்ன யோசித்தும் தப்பிக்க அவனுக்கு வழி தெரியவில்லை. அப்போது தான் கதையே திசை மாறுகிறது. அவன் மீண்டும் ஒரு குற்றத்தை செய்கிறான். ஏனெனில், ஒரு தவறை மறைக்க அதை விட பெரியத் தவறை செய்கிறான். அதாவது, மக்களின் கவனம்பெறும் செயல்கள் நிறைய உண்டு, அப்படியொன்றை செய்து இந்தத் தவறை மறைப்பது. அப்படி செய்தால் அவன் மீது பயம் வந்து அப்பெண் போலீசில் புகார் தர முடியாத அளவுக்கு அவன் வளர்ந்திருப்பான். அவனைப் பின்னாலிருந்து அக்கூட்டம் வளர்க்கும். பின்னர், எப்படி அப்பெண்ணால் பயப்படாமல் இருக்க முடியும். புகார் சொல்ல முடியும்.?

ஆனால் ஜம்புலால் அப்படி மட்டும் யோசிக்கவில்லை. செய்த தவறையே தனக்கு சாதகமாகவும் மாற்றி ஆதாயம் செய்து கொள்கிறான். அது எப்படி என்பது கதையைப் படிக்கும் போது புரிபடும். மேற்கூறிய புதுமொழியும் விளங்கும். அதற்கும் எப்படி நம் சகமனிதர்களும் உடன் போகின்றனர் என்பதையும் பார்க்கலாம்.

4. ‘நிறமிழந்த வெள்ளைக் குர்தா’ என்ற கதையில் ஜுபேர் எனும் சிறுவனின் சின்ன சின்ன ஆசைகளை முதலில் ஆசிரியர் விவரிக்கிறார்.
ஹாபிழ் பட்டம் பெறுவதற்காக போட்டிப்போடும் இருமாணவர்களில் ஜுபேர் வெல்கிறான். அவனுக்கு உள்ளூர ஒரு சின்ன ஆசை. வெள்ளை நிற குர்தாவும் ஒரு ஜீன்ஸ்பேண்டும் அணிந்து கொள்ள வேண்டும். போட்டிப்போட்டு வென்று ஹாபிழ் பட்டம் வாங்கியதற்கு பரிசாக அத்தா பணம் கொடுத்து விரும்பியதை வாங்கிக்கொள் என்று கூறுகிறார். அந்த ஆடைகளைப் பற்றிய நினைவிலேயே தன் நண்பர்களுடன் அவன் நகரத்திற்கு சென்று புது ஆடைகளை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி வந்துக் கொண்டிருந்தான். இங்குதான் சில குண்டர்கள் அவர்களைப் பிடித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லி அடிக்கின்றனர். ஜுபேரின் நண்பர்களும் தாக்கப்படுகின்றனர். குத்திக் கொல்லப்படுகின்றனர். அப்படி கொல்லப்படும் வரை அந்த குண்டர்களை யாருமே தடுக்கவில்லை. அல்லாவை வேண்டினாலும் பலனில்லை. மனிதனைத் தவிர மனிதனுக்கு உதவ வேறொன்றால் முடியாது. ஆனால் அங்கே ஒருவர் கூட உதவவில்லை. ஏனெனில் அவர்கள் அப்போதிலிருந்து மனிதர்களாய் இருந்ததை விட சுயநலமிகளாய் இருந்தனர். ஆசையாய் வாங்கிய புதிய ஆடைகளில் ஜுபேரின் ரத்தம் தோய்ந்து நிறம் மாறிவிட்டது. இதுதான் கதையின் தலைப்பில் உள்ள விசயம். உண்மை நிகழ்வின் அடிப்படையில் இருந்து கருக்கொண்டு எழுந்த தீப்பொறி இந்த கதை. ஒரு இஸ்லாமிய இளைஞன் கொல்லப்பட்டப் பின் நாடு முழுவதும், ‘மாட்டுக் கறி வைத்திருந்த இஸ்லாமிய இளைஞர் கொலை’ என்றே செய்தியாக வாசிக்கப்பட்டது.

ரயிலில் இளைஞர்கள் கொல்லப்பட்டபோது ஒருவர் கூட கேட்கவில்லையே.. சக மனிதர் மீதான அந்த அன்பு எங்கே போனது.. என்று கேட்கிறது, உண்மையிலேயே ரயிலில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சொல்லி கொல்லப்பட்ட ஜுனைத்தின் மரணம். வெண்மை என்பது அன்பு, நேர்மை, தூய்மை ஆகியவற்றுக்கான நிறம். ஆக, அவரது மரணத்தின் போது அங்கிருந்த மக்களின் அன்பு என்ற வெள்ளை நிறத்தால் ஆனது ஜுனைத்துக்காக ஒரு விரலைக் கூட அசைக்கவில்லையே என்னும் போது நிறமிழந்து போனது. இதையே கதையின் தலைப்பு மூலமாக ஆசிரியர் கூறுகிறார் என்று கருதுகிறேன். உத்திரபிரதேசத்தில் இதே போலத்தான். பசு பாதுகாவலர்கள் என்போர் ஒரு இஸ்லாமியரின் வீட்டில் புகுந்து மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி அடித்து கொல்லப்பட்டார். ஆனால், அதே ஊரில் ஒரு இந்துவின் மாடு கிணற்றில் விழ, அதை காப்பாற்றியவர் ஒரு இஸ்லாமியர். ஆக, அன்பே இஸ்லாம், அன்பே சிவம் என்பதை விட, அன்பே மதம் என்பது தான் சிறப்பு.



5. நிகழ்தகவு என்ற சிறுகதை

ஒரு துரோக உயிர்க்கொல்லியின் கதை. சங்கர் என்ற சாதாரண இளைஞன் அந்த சாதி மத துவேசக் கூட்டத்தில் சேர்கிறான். கட்டப்பஞ்சாயத்து, அடி தடி, கலவரம் எனவ ளர்க்கப்படுகிறான். ஆனால், ஒரு சமயத்தில் அக்கூட்டத்தின் மாவட்டச்செயலாளரையே கொல்லச் சொல்லி அவர்களின் தலைவன் கோவலன்ஜீ தோலில் கைப்போட்டுக்கொண்டு சொல்கிறான். அதற்கு வேறு காரணம் கற்பிக்கப்படுகிறது. சங்கரும் சொன்ன படியே செய்கிறான். அவனுக்கென ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தப்பின் இவற்றை விட்டு விலகுகிறான். எந்தவன் முறையிலும் ஈடுபடுவதில்லை. ஆட்டோ ஓட்டி பிழைக்கிறான். அப்படி இருந்தவன் தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கும் கோவலன்ஜீ வந்து பார்த்தான். சங்கரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி, வீட்டிற்கு அனுப்பினான். ஆனால், அதுவரை சங்கரின் கூடவே இருந்த பண்ணாரி சங்கர் இருந்த அறைக்குள் வந்து, ‘ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி எங்களயே கடிச்சிட்டியேண்ணே.. உனக்கு எவ்ளோ திமுரு இருந்தா தலைவரின் சொந்தக்காரப் பொண்ண கல்யாணங் கட்டுவ..’ என்று சொல்லி சங்கரைக் கொல்கிறான்.

அடுத்த நாளே ‘இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொள்ளப்பட்ட வீர சங்கருக்கு வீரவணக்கம்’ என்ற முழக்கத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஜீக்களின் வரலாறு இப்படி துரோகங்களால் ஆனது தான் என்று இக்கதையின் மூலம் அறிய முடிகிறது. இந்தக்கதையில் வரும் முருகேசனோ சங்கரோ பண்ணாரியோ கதையின் நாயகர்கள் கிடையாது. இவர்கள் எல்லோருமே கோவலனை பின்பற்றி நடந்தவர்கள். அதேபோலத்தான் இன்று பலபேர் பின்பற்றி சங்கிகளாக மாறி வருகிறார்கள். ஆனால் மாவட்டச்செயலாளர் பதவிக்கு வரும் ஒவ்வொருவரையும் தனக்கான வளர்ச்சியின் இரையென நினைத்து பலியிட்டு, அதை வைத்து ஆதாயம் கண்டு, அரசியலில் பிழைக்கும் கோவலன்ஜீ தான். கதையின் முக்கிய வில்லனாக, கோவாக வலம் வருகிறான். இவர்களும் அவன் கழுத்தை அறுக்கும் கத்தி என்று அறியாமல் பலி பீடத்தில் தலை வைக்கின்றனர். செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் இஸ்லாமியருக்கெதிராகவே ஏவிவிடும் கதாபாத்திரம் கோவலன்ஜீ. சங்கரும் அவ்வபோது இஸ்லாமியர் மீது தனது வன்கொடுமைகளை நிகழ்த்தி விட்டு வருகிறான். ஆனால், மத துவேசம் செய்த இவனையே சாதி துவேசம் செய்துகொள்கிறது அக்கூட்டம்.. எது எப்படியாயினும் உயிர்க் கொலைகுற்றமே.! செய்தவனும் செய்வித்தவனும் குற்றவாளிகளே.!

6. நான ஒருத்தல்

I love Muslims என்று ஒரு குழந்தை தனது சமூக ஊடகத்தில் பதிவு செய்ததற்கு, மத துவேசிகள் கேட்கும் கேள்விகளில் ஒன்று… ‘ஏன்டி.. முஸ்லிம்களோட சாமான் தான் பிடிக்குமா.? இந்துக்களோட சாமான் பிடிக்காதா..?’ இவை எல்லாம் நம் அருகிலேயே இருக்கும் சகமனிதர்கள் பேசும் வார்த்தைகள் தான். ஆனால் இதில் நாம் கவனிக்க வேண்டியது, பிற மதத்தினரை சக மனிதராக மதித்து பழகுவதை குற்றம் என்று சொல்லி, குறிவைத்து தாக்கி, உணர்வை தூண்டுகிற, புண்படுத்துகிற சொற்களைச் சொல்லித் திட்டுவார்கள் குண்டர்கள். இதற்காகவே இவர்களுக்கு பயிற்சியும் அதற்காக பணமும் வழங்கப்படுகிறது. அவர்கள் மனதையும் மூளையையும் கழட்டி வைத்துவிட்டு செயல்படுவர். இதைமற்ற எந்த மதத்தவர் எதிர்த்து கேட்டாலும் இதற்காகவே காத்திருந்தது போல அவர்களின் மீதும் பாய்வர்.

ஆனால் இவர்களை அடக்க இரண்டே வழிகள் தான் உள்ளன.

1. மொத்த இந்துக்களும் சேர்ந்து இந்த குண்டர்களை விரட்ட வேண்டும்.

2. அரசு மத துவேஷம் செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அமைதியான இடத்தில் குண்டு வைப்பது போல இயல்பாக இருக்கிறவர்களை தாக்குவது தான் இந்த குண்டர்களின் வீரம். ஒரு செல்போன் என்பது சிறந்த உதவியாக இருந்தாலும் அது மனிதர்களால் பாதகமாகவும் இருக்கின்றது. பேசுவதை தவிர்த்து ஏகப்பட்ட வசதிகளுக்கு செல்போன் அவசியமாகின்றது. ஆனால் சமூகவலைதளங்களில் நமது சக மனிதர்களே குண்டர்களாக மாறி அவதூறுகளும் பொய் பிரச்சாரங்களும் அதிகம் செய்வர். அதின்றி அவர்களுக்கு ஜீரணம் ஆகாது. பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்தது போல, இந்தியாவில் மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்கின்றனர்.

அழகான அந்த குடும்பத்தில் குண்டர்கள் செய்த கொடுமைகளின் விளைவாக ஒரு குழந்தை தன் உயிரை இழந்து விட்டது. புதிதாக ஒரு ஃபோன் வாங்கி கொடுத்துள்ள வீட்டில் அந்தக் குழந்தையிடம் இவ்வளவு ஆபாசமாக பேசுவதும் முகம் மாற்றப்பட்ட ஆபாச படங்கள் சமூகவலைதளங்களில் போடுவதும் என வன்மம் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் எடுத்த உடனே என்ன நினைப்பார்கள்.? எல்லாம் இந்த ஃபோனால் தான் என்று நினைப்பர். மனிதர்களின் குற்றங்களுக்கு அறிவியல் பொறுப்பாகாது. எடுத்த உடனே இப்படி புரிந்துகொள்ளக்கூடிய சமூகமாக நாம் இன்னும் பக்குவப்படவில்லை.

அப்படியிருக்க, இப்போது தான் ஃபோன் என்பதையே வைத்திருக்கும் இந்த குழந்தைக்கு இவ்வளவு வன்மத்தைக் காட்டினால் எப்படி இருக்கும்.? எவ்வளவு தூரம் அச்சமாய் உணர்ந்திருப்பாள்.? எவ்வளவு பதறி இருப்பாள்.? எவ்வளவு கலங்கி இருப்பாள்.? இந்த நிலைக்கு அவர்களை ஆளாக்கி பார்த்து இவர்கள் துன்பப்படுவதை பார்த்து ஆனந்தம் அடைவர் குண்டர்கள்.

ஆக, என்னதான் வழி என்று கேட்டால், ஆபாச பேச்சுக்கள், ஆபாச படங்கள் அல்லது வேறு எந்த வழியிலும் சரி, நாம் நம்மை இது போன்ற சமூக அவலவாதிகளிடம் பயப்படவே கூடாது. எந்த வகையில் தாக்கினாலும் திருப்பித் தாக்க வேண்டும். நம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இது போன்ற சமூக அவலவாதிகளிடம் தைரியமாக இருக்கவும் ஆபாச தாக்குதல்களுக்கு மனமுடைந்து போகாமல் இருக்கவும் மனதளவிலும் அறிவார்ந்தும் வாழ்வதற்கு சொல்லிக்கொடுத்து தயார் படுத்த வேண்டும். இப்படி ஒரு தலைமுறை வளர்ந்தால் போதும், எந்தப் பிரச்சனையானாலும் சரி, அதை சமாளிக்கவும் எதிர்த்துப் போராடி வெல்லவும் முடியும். அந்த வெற்றியை நோக்கி நாம் நம்மவர்களை நகர்த்த வேண்டும். இதைப் போன்ற இலக்கியமும் நம்மிடம் உள்ளது. ‘பேரிருளின் புதுச்சுடர்கள்’ என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பை நான் சமீபத்தில் படித்தேன். அத்தொகுப்பில் மூன்றாவதாக சுவாதி என்ற சிறுகதையின் முடிவு நம்மவர்களுக்கு சரியான எடுத்துக்காட்டாக இருக்கிறது. அக்கதை இப்படி தான் முடிகிறது. “தப்பு செஞ்சவனெல்லாம் திமிரா திரியும் போது ஒரு தப்பும் செய்யாத நான் ஏன் பயப்படனும்.? என்ன நெட்டில் போடுவியா.. போட்டுக்கோ. அது நானில்லை கிராஃபிக்ஸ்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பேன்’ என்றாள் சுவாதி. எதிர்முனையில் இணைப்பு அறுந்திருந்தது.” இதேப்போன்றே நம்மக்களும் தைரியத்தோடு இருக்க வேண்டும்.



7. நரோடாகாவ்ன்

இது தான் என்னை இருப்பதிலேயே அதிகம் பாதித்த சிறுகதை. என்னால் ஏற்றுகொள்ள முடியாத படிக்கு என்னை ஆளாக்கிய கதை. இதுவும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த கதையே. ரஃபீக் தினமும் கோத்ரா ரயில் நிலையத்தில் டீ விற்று குடும்பத்தைக்காக்கும் சாதாரண மனிதன். அவனுக்கு தன் மகன் இம்ரான் என்றால் உயிர். அவனுக்காகவே வாழ்பவன். இம்ரானுக்கு ஒரு கஸ்டம் என்றால் அதை பொருத்துக் கொள்ளவே மாட்டான் ரஃபீக். தன் மனைவியை திட்டுவான். இப்படி வாழும் இக்குடும்பமே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பிறகு எரித்து கொள்ளப்படுகிறது. இம்ரானின் வாயில் ஒரு லிட்டர் பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைக்கிறான் ஒருவன். சிறுவன் இம்ரான் வெடித்து போகிறான். அதைக் கண்ட ரஃபீக் இம்ரானைக் கட்டிக்கொண்டு தானும் தீக்கிரையாகின்றான்.
தான் உருவாக்கிய பாத்திரமானாலும் இம்ரானைக் கொல்ல ஆசிரியருக்கு எப்படி மனது வந்ததோ தெரியவில்லை. இதில் மத துவேச குண்டர்களின் வன்கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. உண்மைச் சம்பவத்தை மூலக்கருவாகவும் ஆசிரியரின் விவரிப்பாகவும் கதை இருக்கிறது. அவர் தைரியமாக பஜ்ரங்தள் என்றும் முதல்வர் என்றும் கதையில் கூறுவது பாராட்டத்தக்கது. இதன்படி உண்மையிலேயே கோத்ரா ரயிலை எரித்தது, குஜராத் எங்கும் குற்றமிழைத்தவர்கள் யாரென கதையின் போக்கில் சொல்கிறார். சிறுவன் இம்ரானைத் தூக்கி வைத்து கொஞ்சவே என் மனமும் ஏங்குகிறது. கதைப்படி, இம்ரானின் வாயில் பெட்ரோலை ஊற்றும்போது எப்படியாவது அதை தடுத்துவிட வேண்டும் என்று மனது துடிக்கிறது. அந்தளவு நம்மை ஏங்க வைக்கும் படி இக்கதை நமக்குள் ஊடுருவுகிறது.

8. மறுப்பின் நிலை மறுப்பு.

மாதவி, பிரகதீஸ், உமர், பிரகாஷ் ஜெயின் ஆகிய நால்வரின் மூலம் கதை நகர்கிறது. இக்கதையின் மையப்புள்ளி, கறி உணவு உண்பது என்ற சாதாரண செயல், ஒவ்வொருவராலும் எப்படி அனுகப்படுகிறது என்று தெளிவாக சொல்லியிருப்பார் ஆசிரியர். பிரகாஷ் ஜெயின் என்ற ராணுவ அதிகாரிக்கு கறி உண்பதே பிடிக்காது. அதனால் தனக்கு கீழ் இருக்கும் ராணுவ வீரர்களை வேண்டுமென்றே உளவியல் ரீதியிலான தண்டனைகள் தருவார். ஒரு சமயம் ஒரு ரோட்டார கறிக்கடைக்காரனை அடித்து துவைத்து, அவனது கடையை அழித்து விடுவான். அவன் கூடவே இருக்கும் பிரகதீஸ் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறான். இன்னொரு சமயம், பிரகாஷ் ஜெயின் வைத்தப் பார்ட்டியில் ஜெயின் மட்டும் யாருக்கும் தெரியாமல் தனியாக கறியை சாப்பிடுவதை நேரடியாகப் பார்க்கிறான் பிரகதீஸ்.

மாதவி அன்று அலுவலகத்திற்கு போவதற்கு உமர் என்றவரின் ஆட்டோவில் ஏறி பயணிக்கிறாள். அவளுக்கு உமர் என்ற இஸ்லாமியப் பெயரைக் கேட்டு பயம். அதை மறைத்து கொண்டு பயணிக்கிறாள். இடையில் ஒரு பெண்ணுக்கு அடிப்பட்டு ரத்தம் வருகிறபோது உமர் தான் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து, ரத்தம் கொடுத்து உதவி செய்கிறான். இதையெல்லாம் நேரடியாகப் பார்க்கையில் தான் உமர் என்ற இஸ்லாமியரின் மீதான பயம்  மாறுகிறது. அவர்கள் ஒரு பிரியாணி கடையில் சாப்பிட அமர்ந்த போது உமர் கறி சாப்பிடமாட்டேன் என்று கூறுகிறார். ஒரு இஸ்லாமியர் கறி சாப்பிடுவதில்லை என்பதை மாதவியால் நம்ப முடியவில்லை. ஏனென்று வினவிய போது, அவர் சொன்ன காரணம் தான், அவர் எவ்வளவு வலியோடும் வேதனையோடும் இந்த முடிவுக்கு வந்திருப்பார் என்பதை உணர முடிகிறது மாதவிக்கு. அப்போது அவள் பிரியாணி சாப்பிடுவதை விட்டு விட்டு வீட்டிற்கு வந்து விட்டாள். ஆனால் பார்ட்டியிலிருந்து வந்த பிரகதீஸ் பிரியாணியோடு வந்திருந்தான். இருவரும் நடந்ததை பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர். அவர்களின் பேச்சில் கறி உண்பது தான் மையமாக இருந்தது. கடைசியாக சாப்பிடும் நேரம் வந்த போது, பிரியாணியை சாப்பிடத் தொடங்கினான் பிரகதீஸ். ஆனால் அவனால் எப்படி கறி உணவை சாப்பிட முடிகிறது என்று விசித்திரமாய் பார்க்கிறதோடு இக்கதை முடிகிறது. இருவருக்கும் கறி உணவை யார் சாப்பிட வேண்டும் என்ற விசயத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒரு சார் பிரிவு சாப்பிடவும் ஒரு சாரார் சாப்பிட முடியாமலிருப்பதும் உறுத்துகிற வேளையில் எப்படி இவனால் மட்டும் கறி உணவை உண்ண முடிகிறது என்ற கேள்வியோடு பார்ப்பது தான் அந்த பார்வையின் பொருள். உமரின் நிலைமை மாதவியால் தான் பெரிதாக உணர முடிந்தது. அதே உணர்வை பிரகதீஷுக்கும் கடத்த பார்த்தாள். ஆனால் முடியவில்லை. ஏனெனில், பிரகதீஷின் பாத்திரம் சாதாரண மனிதனாக இருப்பது. அநியாயத்தை கண்டு வெகுண்டெழும் பாத்திரம் அல்ல, கடந்து போய்விடும் பாத்திரம். அது தான் தன் மேல் அதிகாரியின் தவறைப் பார்த்தும் எதுவும் சொல்லாமல் பிரியாணி உண்கிறான். இந்த கதைத்தொகுப்பில் இறப்பு இல்லாத ஒரே கதை இது மட்டும் தான். அதுவரை மகிழ்ச்சி.!

9. மயானக் கரை வெளிச்சம்

இந்த தொகுப்பின் பெயரே இக்கதையின் தலைப்பு தான். இரண்டு பெயரிலும் சிறு மாற்றம் உள்ளது. ஆனால் இக்கதையின் வீரியம் அறிய நாம் சற்று காலத்தால் முன்னோக்கிப் பார்க்க வேண்டும். அதாவது, கதையின் தொடக்கமே தன் மனைவியை இழந்து விட்டு அநாதரவாய் நிற்கும் நாயகன் தன் கதையை சொல்லும் தன்மை படர்க்கை முறையில் அமைந்திருக்கிறது.

நாட்டில் குடியுரிமையை நிரூபிக்கும் படி சட்டம் போடுகிறார்கள். அனைவருக்கும் இது பேரிடியாக இறங்குகிறது. எல்லாரும் போராடுகின்றனர். இடையில் ஏகப்பட்ட லஞ்ச லாவன்யம். இந்த நிலையில் முதலில் பணத்தை எடுக்கவே லஞ்சம் தந்து எடுத்துக்கொண்டு தனது தந்தையின் சொந்த ஊருக்கு கிளம்புகிறான். அங்கே தான் தந்தை படித்தார் என்பதற்கும் ஆதாரத்தை லஞ்சம் கொடுத்து வாங்கிக்கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டினால் இந்த ஆதாரம் செல்லாது என்று சொல்லி விடுகின்றனர். அப்படியானால் இனி தன்னை இந்திய குடிமகன் என்று நிரூபிக்க வேறு வழி இல்லை. அகதி என்று முத்திரைக் குத்தப்பட்டு தன் சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் அடைக்கப்படுவர். அவர்களின் அனைத்துமே இற்றுப் போகும். சொத்து சொந்தம் எதுவும் தங்காது. வங்கிக் கணக்கு முடக்கப்படும். சொந்த மக்களாலேயே வேட்டையாடப்படுவர். அப்படியான சூழலில் தான், ‘முஸ்லிம்களைத் தவிற மற்றவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தேவையில்லை’ என்று ஒரு அறிவிப்பு. அதன் படி ஒட்ட மொத்த இஸ்லாமியர்களும் அனாதையாக்கப்பட்டு பலியிடப்படுகின்றனர். இதிலிருந்து தப்பிக்க முடியாமல் துயருற்று அவனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறாள். தனது மகளைக் காப்பாற்ற, தன் நண்பனிடம் கொடுத்து விட்டு போலீசிடம் இவன் மாட்டுகிறான். அகதி முகாமிற்கு செல்கையில் அங்கே ஒரு கூட்டம் முகாமிற்குள் ஆவேசமாய் நுழைகிறது. இங்கேயே ஆசிரியர் கதையை முடித்து விடுகிறார்.
குடியுரிமை திருத்த மசோதா வந்தபோதே நாடு முழுவதும் மாணவர்களின் எதிர்ப்பலை எழுந்தது. திடீரென மசோதா சட்டமாக்கப்பட்டது. இதை அறிவித்த போது முஸ்லிம்களும் ஈழத்தமிழர்களும் வஞ்சகமாய் குறிப்பிடப்படவில்லை. இதற்கு இடையில் தான் கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்த, இந்தியா லாக்டவுனில் மாட்டியது. இதனால் இச்சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற மாணவர் போராட்டம் நீர்த்துப் போனது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இப்படித்தான் இருக்கும் என்று எழுதப்பட்ட எச்சரிக்கை கதை இது. ஆசிரியர் விவரிக்கும் காட்சிகள் இஸ்லாமிய விரோத சட்டமாக இருப்பது நேரடியாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தன் அன்பு மகளைக் காப்பாற்ற அவளை அறையும் காட்சியில் நாமெல்லாம் இருந்தால் மனது இறந்திருக்கும். அத்தனை வலியான இடம் அது.

இப்படியாக, அனைத்து கதைகளும் எதிர்மறை முடிவு கொண்டவை. இன்று மதத் துவேஷம், அதுவென்றால் நாளை சாதி துவேஷம். அதற்கடுத்து..? உயிர் வாழ எல்லாருக்கும் உரிமையுண்டு. ஆனால் நீ இஸ்லாமியன், நீ கீழ் சாதிக்காரன் என்று பேதம் கற்பித்து உயிர்க் கொலை செய்வது எக்காலத்திலும் ஏற்க முடியாது. அப்படி செய்பவர்களை அடையாளம் காட்டும் நேர்மையான சாட்சியாக இக்கதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தையே அனாதையாக்குவதன் பெரும் வலியை சொல்லும் குரல்கள் இன்னூலில் அதிகம்.

– கார்த்தி டாவின்சி
ஜூன், 2021.



Show 1 Comment

1 Comment

  1. நீலவேணி

    Super karthi…full story um nalairukum pola karthi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *