நூல் அறிமுகம்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவின் *மயானக் கரையின் வெளிச்சம்* – கருப்பு அன்பரசன்நூல்: மயானக் கரையின் வெளிச்சம்
ஆசிரியர்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 108
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mayanakaraiyin-vellicham-by-samsuthin-heera/

ஒருவரின் படைப்பு, அவரின் எழுத்து வாசிப்பவரின் மனதை கலைத்துப் போட வேண்டும்.. அவரின் மனதை சமன் குலைக்கச் செய்ய வேண்டும்..
அது, படைப்பவர் வாழும் காலத்தின் கண்ணாடியாக பிரதிபலிக்க வேண்டும்.. சமரசம் ஏதுமில்லாமல் அறத்தின் படி நின்று எல்லோருக்கும் உரத்துச் சொல்ல வேண்டும்.. உரத்துச் சொல்லும் வேளையில் அந்த குரல் எளியவர்களின் குரலாக.. ஏமாந்தவர்களில் அழுகையாக வஞ்சிக்கப்பட்டவர்களின் வேதனையாக, ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி நிமிர்ந்து எழும் ரௌத்திரமாக, பேரன்பு இதயமது காத்திருக்குமொரு ஏகாந்த வேளையில் தழுவி நிற்கும் பிச்சி பூவின் வாசமாக, அனைவரின் உள்ளங்களிலும் ஓங்கி எழும் கடல் அலையாக பாறை மோதி தெரித்துத் தழுவும் சாரலாக இருந்திட வேண்டும்..

அப்படியானதொரு படைப்பாளியாக இந்தக் காலத்தில் எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா நம் கண்முன்னே வந்து நிற்கிறார்.
தாம் வாழுகின்ற காலத்தில், நாம் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்ற.. அதிர்ச்சியுற்று மௌனமாக கடந்து போனவைகளை… அல்லது நாம் பார்த்து ஒதுங்கிப் போனவைகளை.. உண்மைகளை புனைவுகளாக மாற்றி பொதுச் சமூகத்தில் மிகப்பெரிய கேள்வி ஒன்றினை எழுப்பி பதிலுக்காக காத்திருக்கிறார்.. “மயானக் கரையின் வெளிச்சம்” என்கிற சிறுகதைத் தொகுப்பினை சரியானதொரு நேரத்தில் நேர்த்தியாக வடிவமைத்து வலி மிகுந்த ஒரு அட்டைப் படத்தோடு கொண்டு வந்திருக்கிறார்கள் பாரதி புத்தகாலயம்.  எழுத்தாளருக்கும் வெளியீட்டாளர் விழிநீர் ஈரத்தோடு முத்தங்கள்.

தொகுப்பில் இருக்கும் 9 கதைகளும் டெல்லி மற்றும் உத்திரப்பிரதேசத்தில் நடந்து நிஜங்களை களமாக்கி கதைகளாக்கிக் கொடுத்திருக்கிறார்
ஹீரா.

வாய் பேசத் தெரிந்து, மொழி தெரிந்த நாம்தான் எத்தனை விதமான மனிதர்களிடம் விதவிதமான உரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. எதிரில் இருப்பவர் எதைப் பேசினால்.. எதற்கு நாம் அழ வேண்டும்.? எப்படி அவர் பேசினால் நாம் அதற்கு சிரிக்க வேண்டும்..? அப்படி சிரிப்பது கூட எத்தனை வகையாக..
எந்தெந்த பிரிவுக்குள் பற்கள் தெரிய வேண்டும்.. உதடுகள் இருக்க வேண்டும் என நாம் பல வகைமைகளில் சிரிப்பினை பிரித்து வைத்திருக்கிறோம்.. அப்படியே அட்சரம் பிசகாமல் அதனையே நடித்துக் கொண்டிருக்கிறோம்.

மொழி தெரிந்தும்..வாய் பேச முடிந்தும் நூறு நூறு மனிதர்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தாலும் சிறிய பாலத்தின் கீழும் மேலும் அலைந்திடும் அவன் பேச்சுக்கு செவிமடுக்க அன்பான மனிதர்கள் எவரும் இல்லாததால் பேச்சை தொலைத்து புன்னகையும் மட்டுமே தனதாக்கிக் கொண்டான் வலிகளிலும்.. வேதனைகளிலும்.. பசியிலும் கூட.

அவனின் பெரும் துணையாக உடனிருப்பது “ஹோ’வும் அந்தப் பாலமும் நாம் தேவையற்றது என வீசிச் சென்ற துணிகள் அடங்கிய சாக்குப்பையும் மட்டுமே.. மழைக்காலம் ஒன்றின் ஆற்றில் வந்த வெள்ளத்தோடு அடித்து வரப்பட்ட அந்த நாய்க் குட்டியை இவன் கை பிடித்து தரைமீது இழுத்து வைக்க; இப்போது அவனுக்கு உயிர் துணையாக அந்த “ஹோ” மட்டுமே அவன் போகுமிடமெங்கும். உடல் மறைக்க பொருத்தமில்லாத சட்டை, அழுக்கும் சடையுமாக தலைமுடியும், தாடியும். இரக்கமுள்ள மனிதர்கள் எவராவது கொடுக்கும் உணவு.. சாப்பிட்டு முடித்ததும் கொஞ்சம் தூக்கம்.. இப்படியாக நாட்கள் அவர்கள் இருவரையும் இழுத்துப் போக..
ஒரு நாள் தன்னார்வலர்கள் சிலர் வந்து அவரின் முடி திருத்தி புத்தாடையை அவனுக்கு அணிவித்து செல்கிறார்கள்..கூட இருக்கும் ஹோ.. அவனை விசித்திரமாக பார்க்கிறது.. தன்னார்வலர்கள் சென்ற சிறிது நேரத்தில், எங்கேயோ கலவரத்தை நிகழ்த்திய கையோடு கைகளில் பெட்ரோல் கேன்களையும் குத்தீட்டிகளையும் ஏந்திக்கொண்டு தலைகளில் காவி கொடிகளை கட்டிக்கொண்டும், நெற்றியில் செஞ் சாந்து பொட்டு இட்டுக் கொண்டும் ஓடிவந்த கும்பல் இவனைப் பார்த்து “யார் நீ..?” என்கிறார்கள்.. இவனோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறான், மீண்டும் அவர்கள் கத்திக்கொண்டே “உன் பெயர் என்ன..?” என்கிறார்கள், அதற்கும் அவன் சிரிக்கிறான், ” நீ முசல்மானா.?” என்கிறார்கள், ஏதோ ஒரு பெயர் என்ன நினைத்தவன் அதற்கும் சிரிக்கிறான். எதற்கெடுத்தாலும் சிரிக்கிறான் என்று கோபத்தோடு அவனுடைய இடுப்புத் துணியை அவிழக்கிறார்கள்.. இடுப்புத் துணி கீழே விழுந்த அந்த வினாடியே அவன் தலைமீது பெட்ரோலை கொட்டுகிறார்கள் கத்திக்கொண்டே கைகளில் இருக்கும் தீக்குச்சியை பற்ற வைக்கிறார்கள்.. எரிகிற தீக்குச்சியை பார்த்தும் அவன் சிரித்துக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு சிரிக்க மட்டுமே தெரியும். சிரிக்க மட்டுமே பழகியவன் அவன்.. எரியும் தீக்குச்சி இப்பொழுது அவன் தலைமையில் வீசப்படுகிறது. அவனுடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்புக்குள் உருகிக் கொண்டிருக்கிறது. அவன் அலறல் சப்தம் அவர்களின் வெறிபிடித்த சிரிப்பில் அடங்கிப் போகிறது. ஆனாலும் அவனுடைய உதடு கடைசியில் சிரித்த வண்ணமே..

“ஒரு பெயரற்றவன் பற்றிய குறிப்பிலிருந்து..” என்கிற கதையை இப்படி முடித்திருப்பார்.. முதல் சிறுகதையை வாசித்து முடித்தவுடன் சிரித்துக்கொண்டே நெருப்பில் உருகிடும் அந்த உதடுகள் உங்களுக்குள் எதையோ நிகழ்த்திக் கொண்டே இருக்கும்.

பெரும் தொற்றுக் காலத்தில் 28 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட கொடூரம் வேறு எங்கும் நிகழவில்லை.. அறிவியல்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டிய தொற்றுநோய், இங்கு விளக்கேற்றுவதிலும் கைதட்டலிலும் பரவாமல் தடுக்கப்படும் என்கிற மூடத்தனத்தை ஆளுகின்ற அரசாங்கங்கள் பிரச்சாரம் செய்து பின்பற்றியது. அறிவியல் பூர்வமாக சிந்திக்க கூடிய உலக நாடுகளின் அறிவார்ந்தவர்கள் மத்தியில் நம் இந்திய தேசத்து மக்களின் வாழ்நிலை, எதிர்கொள்ளப் போகும் சவால் குறித்து கவலை கொள்ள வைத்தது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட அந்த நாளின் இரவிலிருந்து மிகப்பெரிய தொழிற்சாலை தொடங்கி தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிபவர்கள் வரை இந்தியாவின் சாலைகளிலும்.. ரயில் தண்டவாளங்களில் வழியாகவும் தங்களின் சொந்த கிராமம் நோக்கி பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நடக்கத் துவங்கினார்கள் தங்களின் குழந்தைகளை இழுத்துக்கொண்டும், வயது முதிர்ந்த பெற்றோர்களை தோளில் சுமந்து கொண்டே..

தங்களின் கிராமம் போய் சேர்வதற்குள் உணவின்றியும் குடிநீர் இன்றியும் தவித்து செத்துப் போனவர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்பது எவரிடமும் கணக்கு கிடையாது.. தேசத்தின் சாலைகள் முழுவதும் மக்கள் திரளாகளே. அப்படியானதொரு நாளில் டில்லியின் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த ஜிதேந்தர் தன் மனைவி சாந்தி மற்றும் பெண் குழந்தை பூஜாவோடு தன் தம்பி மணிஷ் குமாரையும் அழைத்துக்கொண்டு நால்வருமாக உத்திர பிரதேசத்தில் இருக்கக்கூடிய சொந்த ஊர் நோக்கி கிளம்புகிறாகள்.. அன்றைய இரவில் அந்தக் குடும்பத்தோடு உடன் பயணிக்கிறார் பைசல் என்கிற தொழிலாளியும்.
நடக்கிறார்கள்.. நடக்கிறார்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.. நெருப்பை உமிழும் கரு நாகத்தைப் போன்ற தார்ச் சாலைகள் வளைந்தும் நெளிந்தும் போய்க்கொண்டே இருக்க.. சாலைகள் எங்கிலும் தலை காய்ந்த எளிய மக்களின் கூட்டம்.. போகும் திசையெங்கும் பிஞ்சுக் குழந்தைகளின் அழுகை.. வயது முதிர்ந்தவர்கள் வெயில் சூட்டினால் கம்பளிப் பூச்சாக சுருண்டு விழுகிறார்கள்.. வயிற்றுப்பசி எளிய மக்களை, தொழிலாளர்களை கையேந்த வைக்கிறது வழிதோறும் குடிநீருக்காகவும், ஒரு பிடி சோற்றுக்காகவும் ஒரு ரோட்டிக்காகவும். பசியும் தாகமும் எல்லோரின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் விழுங்கிச் செறித்தது. எப்போது போய் சேருவோம் என்று தெரியாமலேயே ஜிதேந்தரும் அவன் குடும்பமும் நடந்து கொண்டே இருக்கிறார்கள தங்களின் கிராமம் நோக்கி இரவு பகலாக கூடவே பைசலும்.. அந்த கிராமத்தைத் தாண்டிதான் பைசலும் அவனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது.

சாந்தியின் பாதங்கள் இரண்டும் பிளந்து ரத்தம் கசிய, கால்களும் வீக்கமாகிட நடக்க முடியாமல் ஆங்காங்கே உட்கார.. நடக்க.. நடந்து கொண்டே இருக்கிறார்கள். ஜிதேந்தர் தம்பி மணிஷ் குமார் குழந்தை பூஜாவை தன் தோள்மீது தூக்கி நடக்கிறான்.. குழந்தை பூஜா பசியால் அழுது..அழுது அவன் தோள்மீது சரிந்து கிடக்கிறாள்.. பைசலிடம் பணம் இருந்தாலும் உண்பதற்கு எதுவும் வாங்கிட கடைகள் கிடையாது.. அனைத்தும் மூடிக் கிடக்கிறது. பார்க்குமிடமெல்லாம் பசியின் துயரம் எல்லோர் கண்களிலும்.. குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்த மணிஷ் குமார், பசி தாகம் வெயில் தாளாமல் சுருண்டு தரையில் விழுகிறான். அவனுடைய கடைசி மூச்சும் தொண்டைக்குழியின் வேகமான ஏற்ற இறக்கங்களோடு நின்று போனது ஜிதேந்தர் பார்த்திருக்கும் பொழுதே.. கீழே விழுந்த பூஜா அழுதுகொண்டே சாலை ஓரத்தில் இருக்கும் காய்ந்தும் காயாமலும் வளர்ந்து இருக்கும் புல்லை கடித்துத் தின்கிறாள் வயிற்றுப் பசியின் கொடுமையால்.
ஐந்து பேராக புறப்பட்டு வந்தவர்கள் வழியிலே ஒருவர் பிணமாக குழந்தையைத் தவிர மூவரும் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள்..கேட்க ஒருவரும் இல்லை.. பிணத்தை எப்படியாவது சொந்த ஊருக்கு கொண்டு போக வேண்டும் என ஜிதேந்தர்d இங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்து போய்விடவேண்டும் என்று பிரதான சாலையில் வந்து காத்திருக்கிறான்.. நிமிடங்கள் போய்க்கொண்டே இருக்கிறது. எந்த வாகனமும் வரவில்லை.. மீண்டும் வருகிறான் மணிஷ் குமார் பிணமாக இருந்த இடத்திற்கு.. அங்கே ஜிதேந்தர், சாந்தி,பூஜா மூவரும் மரமொன்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் பிணமாக . இந்த நான்கு பிணங்களுக்கும் சாட்சியாக பைசல் மட்டுமே அங்கே.. இந்தக் கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் நடந்தவைகளைச் சொல்லி கேள்வியாகியிருப்பார் பெரும் சமூகத்தின் முன்பாக..
“முடிவுக்கு காத்திருக்கும் கதை”யில் முடிவை எழுத நம்மை அழைத்து இருக்கிறார் சம்சுதீன் ஹீரா. ஒரு குடும்பமே செத்துப் போக காரணமான விளக்கு ஏற்றச் சொன்னவர்களையும்.. கைதட்டச் சொன்னவர்களையும்.. வீதியிலே பெரும் சமூகத்தையே நடக்க விட்டவர்களையும் என்ன செய்யப்போகிறோம்.? கதையை எப்படி முடிக்கப் போகிறோம்.?

சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீது பொதுவெளியில் சங்கிக் கூட்டங்கள் வன்மத்தை எப்படியெல்லம் திட்டமிட்டு
விதைத்து வருகிறார்கள் என்பதையும்.. கலவரங்களை குறிப்பாக யோசித்து எப்படி நிகழ்த்துகிறார்கள்..
கலவரம் நடத்திட வேண்டும் என்பதற்காகவே சொந்த சமூகத்தைச் சார்ந்தவர்களை எப்படி வஞ்சகமாக கொலை செய்கிறார்கள்.. முஸ்லிம் மக்கள் மீது நல்லெண்ணத்தோடு பழகக்கூடிய இந்துக்களின்.. பெண்களின் தனிநபர் ஒழுக்கங்களை கேலி செய்து, கேள்விக்குள்ளாக்கி, மனஅழுத்தத்தை உருவாக்கி தற்கொலை செய்து கொள்ள சங்கி கூட்டங்கள் எல்லாவிதமான எல்லைக்கும் செல்வார்கள் என்பதையும் தான் கொடுத்திருக்கும் கதைகள் வழியாக வலியும் துயரத்தோடு பதிவாக்கி இருக்கிறார் ஹீரா.. கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நாம் தொலைக்காட்சி வழியாகவும் பத்திரிகைகள் ஊடாகவும் அறிந்த, நடந்த உண்மை நிகழ்வுகளே.. கதைகளை வாசித்து முடித்தவுடன் நம்மை பெரும் சோகமும் பயமும் சூழ்ந்து நம்மை தூங்கச் செய்யாது.. நடைபெறும் அனைத்திற்கும் நாம் பார்வையாளனாக இருந்து கடக்கப் போகிறோமா.. அல்லது அந்தக் கொடூர எண்ணமும் மனமும் கொண்டவர்களை தடுத்து நிறுத்து ஏதேனும் செய்யப் போகிறோமா..? வாசிப்பவரின் மனங்களுக்குள் இப்படியான கேள்வி அரித்துக்கொண்டே இருக்கும்.. என்ன செய்யப்போகிறோம்..? அதை எப்படி செய்யப் போகிறோம்.? எதிர்காலச் சமூகத்திற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் எப்படி கடத்திக் கொடுக்கப் போகிறோம்..?
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து விசையாக வினை ஆற்றிட வேண்டிய தருணம் இது..

ஆனால் முற்றாக அதை உணராமல் சுய அடையாளத்தின் தேவைக்காக பொது அமைதியின், மகிழ்ச்சியின் வேர்களில் திராவகத்தை தடவிக் கொண்டிருக்கிறோமா.? எதிர்காலம் நம்மை இகழ்ந்து விடக்கூடாது என்கிற பயம் மட்டுமே மேலோங்கிக் கிடக்கிறது..ஒரு முறை வாசியுங்கள்..
குடியுரிமை முற்றிலுமாக அழிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே சிறைக்குள் சென்று வந்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.!

ஒரு முறை வாசியுங்கள்
நல்ல எண்ணத்தோடு வளர்க்கப்பட்ட
நம் பெண்குழந்தை
நம் கண்ணெதிரிலேயே தூக்கில் தூக்கில் பிணமாகத் தொங்கிடக் காரணம் யார் என்பதை அறிய முடியும்..

ஒரு முறை வாசியுங்கள்
கொலை பாதகச் செயல்களை செய்திடும் சங்கிக் கூட்டத்தை சார்ந்தவன் காவல் துறையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள,
தன்னை தியாகியாக மாற்றிக் கொள்ள,
தன் குடும்பத்திற்கு தேவையான
செல்வத்தை சேகரித்துக் கொள்ள, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரை வஞ்சமாக அழைத்து எரித்துக் கொன்று, அவர் மீது பொய்யானதொரு பழி சுமத்தி பெரும்பான்மை சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் இந்த முஸ்லீம்கள் என்பதை திறம்படக் கட்டமைத்து நிறுத்துகிறான் என்பதை தெரிந்திட முடியும்..

ஒரே ஒரு முறை வாசியுங்கள்
மயானக் கரையின் வெளிச்சம்

இருட்டாகி கிடக்கும் நமக்குள் ஒளிக்கீற்று ஒன்று விழச்செய்யும்..

வலி உணரும் ஒரு நபரால் தான் இப்படியான அழுத்தம் மிகுந்து ஒரு தொகுப்பினை கொண்டுவரமுடியும்.. படைக்கவும் முடிகிறது.
ஆனால் வலி அறிபவர்களால் இதுபோன்ற காத்திரம் மிகுந்த படைப்பினை உருவாக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது மனதிற்குள்.

மன்னித்து விடுங்கள் சம்சு..
என்னால் இப்பொழுது அழ மட்டுமே முடிகிறது. விழி நீரை துடைக்க விரல்கள் ஏதுமில்லாத சூழலில் நான் இருப்பதாக உணர்கிறேன்.

கருப்பு அன்பரசன்.