“மர்யம்” நாவல் – நூல் அறிமுகம்
ஃபேஸ்புக்கும், மொபைலுமாக என்னை பாதி தின்று செரித்துவிட்டிருந்ததுதான்.
ஓரளவு வாசிப்பில் கவனம் செலுத்தி வந்த என்னை சூழலும் மனதும் புத்தகங்கள் பக்கம் தலைகாட்ட விடாமல் தடுத்திருந்தன.
இப்போது மீண்டும் வாசிப்பில் கவனம் செலுத்த இயலும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. நிச்சயம் தொடர்வேன்.
40, 45 ஆண்டுகளாகிறது நான் வாசிப்பில் ஈடுபடத் துவங்கி. ஆனாலும் இது போன்ற 600 பக்கமுள்ள புத்தகங்களையெல்லாம் வாசித்து முடிக்க பதினைந்து நாட்களாவது ஆகும். மர்யத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்த போது கூட எப்போது வாசித்து முடிக்கப் போகிறேன் என்று மலைப்பாகத்தான் இருந்தது. சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் வெளியீட்டு விழாவுக்கும் செல்கிறேன். அதற்குள் எப்படியாவது வாசித்து முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. மூன்றே நாட்களில் மொத்தமாக சுமார் பதினோரு மணி நேரம் ஒதுக்கி வாசித்து முடித்துவிட்டேன்.
‘மர்யம்’
ஓடுகிறாள். ஓடுகிறாள்…..
வாழ்விற்கான விடைகளைத் தேடி ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, மூன்று ஆண்டுகள் கணவன் அபுவுடனும் பாதி தூரம் பெற்ற மகனுடனும்.
நாவலை வாசிக்கும் எவரும் உணர முடியும். ஓடி முடித்து ஒரு வழியாக போலீசிடம் கணவன், குழந்தையுடன் மர்யம் சிக்கிய பிறகு ஓரளவு ஆசுவாசமடைதலை. வாசிப்பில் இது ஒரு வித்தியாசமான அனுபவம். கதை நாயகியான மர்யம் தொடர் துயரை – போலீல் கொடுமையை எப்படி எதிர்கொள்ளப் போகிறேனோ என்ற அச்சம் தொடர, ஆனால் இந்த இடத்தில் வாசகன் ஆசுவாசமடையும் நேரெதிரான உணர்வை அடைதலையும். ( வாசகனுக்குத் தெரியும்
இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட நாவல் – கதை நாயகி மர்யம் எல்லா சித்ரவதை கொடுமைகளையும் கடந்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறாரென்று. ) நாவலின் ஆசிரியர் இங்கு படைத்தலின் ஒரு பரிணாம்ததைத் தொடுகிறார்.
நாவல் மர்யமும், மர்யத்தின் கேள்விகளுமாகவே பயணிக்கிறது.
ஓரிடத்தில் அவளின் எண்ண ஓட்டத்தை இப்படி எழுதுகிறார். ” எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தேட வேண்டும் என்று அவள் முயற்சி செய்யவில்லை” ஆம் கேள்விகள் மட்டுமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. நிதானித்து ரசித்த வரிகள்.
மற்றொரு இடம் மர்யத்துக்கு – சந்திரிகாவுக்கு பேய் பிடிச்சிருன்னு ஊரே வதந்தி பரப்பும். ஆசிரியர் அதன் ஆபத்தை இப்படி வைக்கிறார்.
“நாளு போயிரும் பேரு நின்னுரும்”
சந்திரிகா – மர்யத்தின் அம்மா மகாலட்சுமி குழந்தைகள் மூன்று பேருடன் தற்கொலை செய்ய கல்லைக் கட்டி கிணற்றுக்குள் குதிக்க முடிவு செய்து கிணற்றுக்குள் விழ எத்தனிக்கும் போது சந்திரிகா “அம்மா பசிக்குதும்மா” என்பாள். அய்யோ மனித வாழ்வு பாசத்திற்கும் துயரத்திற்கும் இடையில் தான் எப்படிப் பரிதவிக்கிறது.
சந்திரிகா – மர்யத்திற்கும் அபுவுக்கும் ஏற்படும் அறிமுகம் நட்பு – மரியாதை
காதலுக்கு முன்னான இந்த உணர்வுகளை அடையாத மனிதன் தான் யார்?
அபுவும் சந்திரிகாவும் மதுரையில் இறங்கி தமுமு அலுவலகத்திற்குச் செல்லும் பத்திகளைப் படித்த போது
“நானும் ஜோ வும் இவ்வாறு தான் இதே போல 90 களின் துவக்கத்தில் மதுரையில் இறங்கினோம்”
இவர்கள் தமுமு அலுவலகம் சென்றார்கள். நாங்கள் மண்டையன் ஆசாரி சந்தில் இருந்த சிபிஎம் அலுவலகம் சென்றோம்.
1997 கோவை துயரின் சம்பவத்தை விளக்கு கையில் இப்படி முடிப்பார்
“உண்மை மங்கியது, வதந்தி பரவியது”
எவ்வளவு ஆழமான துயர வரிகள்.
உடனிருந்தவன் துரோகியாக மாறி இவர்களைக் காட்டிக் கொடுப்பதுடன் “வெடிகுண்டுகளோடு சுற்றித்திரியும் தீவிரவாதி” என்ற பொய்யை போலீசாரிடம் சொல்லி விடுவான்.
கணவன் அபு மர்யத்திடம் “என்னாலதான் உனக்கு இவ்வளவு பிரச்சனை” என கையறு நிலையில் கதறுவான். அப்போது மர்யம் “இல்ல அபு நான் தான் உன்னைத் தேடி வந்தேன். இது நானா தேர்ந்தெடுத்த வாழ்க்கை. நான் மெளத்தானாக்கூட உன் மடியில் தான்” என அபு மீதான பாசத்தையும் காதலையும் உறுதியையும் வெளிப்படுத்தும் இடம் மனித உன்னதம்.
துயரத்தின் தொலைதூரப்பயணத்தில் பேருந்தில் சோர்ந்து போயிருப்பாள்.
ஆசிரியர் மர்யத்தின் துயரை சோர்வை இப்படி வடிக்கிறார்
“சோர்ந்து போயிருந்த அந்தக் கண்களில் யாரைப் பற்றிய புகாரும் இல்லை” கண்ணீரைத் துடைக்காமல் இவ்வரிகளைத் கடக்க முடியாது.
நேபாள எல்லையில் தலை காய்ந்த மனிதர் வாழ்வை இவ்வாறு பார்க்கிறார்
“ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குள் நடந்து செல்லும் மனிதர்கள் எதைச் சுமந்து போகிறார்கள்? பயத்தையா? அல்லது நம்பிக்கையை யா?”
இவ்வாறு நாவல் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கும் மர்யத்தோடு நம் கையையும் இழுத்துச் செல்கிறார் ஆசிரியர் .
ஒரு நாவலின் சிறப்பம்சம்
கதைக்களத்தையும் பாத்திரங்களையும் எழுத்தாளர் தன் வார்த்தைகளால் வாசகனை உடன் இழுத்துச் செல்வது.
மற்றொன்று வாசிக்க வாசிக்க ஒவ்வொரு வரிகளும் நமக்கு காட்சித் திரையாய் விரிவது. ஆசிரியர் இரண்டிலும் கைதேர்ந்து வாசகனைக் கட்டிப்போடுகிறார்.
மர்யமும், அபுவும் மம்சாபுத்திலிருந்து மதுரை – சென்னை விஜயவாடா – கல்கத்தா பாட்னா – நேபாள் என்று ஒரு நெடும் ஒட்டம் நாவலின் பாதியைத் தாண்டுகிறது.
நேபாள எல்லையிலிருந்து மம்சாபுரம் வரலாம் என முடிவெடுப்பார்கள். நமக்கும் ஒரு நிம்மதி. மம்சாபுரத்திலிருந்து நேபாளத்திற்கான துயரமிகு ஓட்டத்தை பல அத்தியாயங்களில் விவரித்த எழுத்தாளர் , மம்சாபுரம் திரும்புவதை இரண்டே பக்கங்களில் கொண்டு வந்து சேர்ப்பார். மர்யத்தின் உணர்வின் வேகத்தை வாசகனுக்குக் கடத்தும் இலக்கிய சூட்சுமம் அது.
ஆனால் மம்சாபுரத்திலிருந்து மீண்டும் பாட்னா, மீண்டும் நேபாளம் என்ற வாசகர் எதிர்பாராத அந்த துயர் மிகுந்த ஓட்டத்தை இப்பக்கங்களை வாசிக்க இரும்பு மனது தேவைப்படும். மனித சமூகம் சந்தித்திராத துயரம், பதினைந்து பக்கங்களைக் கடப்பதற்குள் மரணத்தை எதிர்கொண்ட தருணம்.
இவ்வாறு ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு வரிகளும் வாசகனைக் கட்டிப்போடுகிறது. இல்லை இல்லை இழுத்துக் கொண்டு ஒடுகிறது.
அதே நேரத்தில் ஆசிரியருக்கு சுட்டிக் காட்ட வேண்டியதாக தோன்றிய ஒன்றிரண்டு
நாவல் துவக்கமே த்ரில்லாக துவங்கி நம்மைத் தயார் படுத்துகிறது. அடுத்த அத்தியாயம் ஃப்ளாஷ்பேக்காக மர்யத்தின் குடும்பம் – தந்தை செல்லப்பாண்டி, தாய் மகாலட்சுமி, மாமனார் மர்யம் – சந்திரிகா பிறப்பது, கல்வி பயில்வது என ஒரு நெடும் பக்கங்கள், முதல் அத்தியாயத்தில் தொற்றிய அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தில் வாசகர் இருக்க இந்த அத்தியாயத்தை சற்று சுருக்கியிருக்கலாமோ எனத் தோன்றியது.
சந்திரிகாவைத் தயார்படுத்துவது கிருஷ்ணமூர்த்தி எனும் பகுத்தறிவுக்கார எதிர் வீட்டுக்காரரின் பாத்திரம்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிச்சலும் சந்திரிகா இந்துவாக, கிறித்துவளாக, அபுவை திருமணம் செய்த பிறகு இஸ்லாம் மார்க்கத்தில் பயணிப்பது வரை அவர் பயிற்றுவித்ததே மர்யத்திற்கு பெரும் மன உறுதியைக் கொடுத்தது.
ஆனால் இறுதியில் இஸ்லாம் மார்க்கமே வாழ்வின் தீர்வாக அவள் ஏற்றுக் கொள்வது போன்று நாவலின் போக்கு சொல்லிச் செல்கிறது. கிருஷ்ணமூர்த்தி பாத்திரம் இவ்வாறு கைவிடப்பட்டிருக்க வேண்டுமா எனும் கேள்வியை என்னுள் எழுப்பியது.
ஓரிடத்தில் ‘மத்தியதர வர்க்க’ எனும் அரசியல் சொல்லாடலைத் தவிர்த்திருக்கலாம். நாவல் முழுவதும் எழுத்தாளரின் அற்புதமான உவமைகள், பார்வைகள், மேலே நான் குறிப்பிட்டவாறு கையாளப்பட்டிருப்பது
எழுத்தாளரின் மொழியை உணர்வை எடுத்துரைக்கும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் நாவல் செல்லும் வேகத்திற்கு சில இடங்களில் அவையே கல் தடுக்கி விடுவது போன்ற தோற்றத்தை ஏற்ப்டுத்துகிறது.
மற்றபடி
சுமார் நாலரை ஆண்டுக்கால எழுத்தாளரின் உழைப்பு நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது.
மர்யம் கல்லூரியில் சேர்ந்த பிறகு எடுக்கும் வேகம், அறுநூறாவது பக்கத்தில் போய் தான் நிற்கிறது.
நாவலை பெண் வாசகர் படிப்பது போன்று துவங்கி நாவல் முற்றும் என முடித்த பிறகு மர்யத்தை அப்பெண் வாசகர் பேட்டி எடுப்பது போன்று கையான்டிருப்பது நாவலில் இது புது முயற்சி.
நீண்டு கொண்டே போகிறது முடிக்கிறேன்
அனைவரும் வாசியுங்கள்.
இறுக அணைத்துக் கொள்கிறேன் மாம்ஸ் (Samsu Deen Heera)
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “மர்யம்” நாவல் |
| ஆசிரியர்: | சம்சுதீன் ஹீரா |
| வெளியீடு: | |
| விலை: | ₹.750 (5% Discount price was: ₹.710) |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 நெல்சன் பாபு அந்தோணி |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


எனது பதிவை வெளியிட்டதற்கு நன்றிகள் தோழர்