சம்சுதீன் ஹீரா எழுதிய "கட்டங்காப்பி" சிறுகதை தொகுப்பு புத்தகம் | Samsudeen Heera's Kattan Kappi or Kattan Kaapi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சம்சுதீன் ஹீரா எழுதிய “கட்டங்காப்பி” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“கட்டங்காப்பி” சிறுகதை தொகுப்பு – இந்த எட்டு கதைகளிலும் ‘சிலிர்ப்பின் அந்திமம்’ வித்தியாசமான கதை. இந்தக் கதை சம்சுதீன் ஹீரா யார் என்பதை உணர்த்துகிறது. இவர் இப்படித்தான், இது மட்டும் தான் இவர் என்று முடிந்த முடிவாய் கூற முடியாது. இவரின் கற்பனைகளின் கதிர்வீச்சு எந்த முடிவிலும் நிற்காது என்பதை ‘சிலிர்ப்பின் அந்திமம்’ உணர்த்துகிறது.

மதங்களால் மட்டுமா? மனிதம் அழிந்து அழிகிப் போகிறது! மனிதர்களாலும்தான், சுற்றுச்சூழலும் கெட்டு நாசமாகத்தான் போகிறது. வானத்தை, வனத்தை, மனிதத்தை, யாரோ எதுவோ, ஒன்றை ஒன்று உறிஞ்சி..உறிஞ்க் குடிக்கிறது. ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது. எங்கோ இருந்து கொண்டு இயற்கைக்கு மாறாக மலைகளை வெடிவைத்து தகர்க்கிறான், எங்கோ இருக்கும் பனிமலைகள் உருகி கடலில் விழுகிறது, நீர்மட்டம் உயர்கிறது. எத்தனையோ பென்குயின் போன்ற லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிந்தொளிகிறது.

இயேசுவை சிலுவையில் அறைந்ததெல்லாம் ஒரு வலியாம்! அது ஒரு வேதனையாம் அதை பெரிதாகப் பேசிக் கொள்கிறார்கள். அது பெரும் வலி தான் ஆனால், அது ஒரே ஒரு நாளில் முடிந்து போகிறது. ஆனால், கணவனை இழந்த கைம்பெண், ஒரு முழு ஆயுளுக்கான வலியைச் சுமக்கிறாள்!

கணவனை இழந்த ஒரு கருமாயப்பட்ட ஒரு தாய் அவள் ஒரு கதை சொல்கிறாள். அவள் சொல்லி வரும்போது ஒன்றும் புரியவில்லை. கடைசி வார்த்தையைச் சொல்லி கதையை முடிக்கும் போது? இதயம் எகிரிக் குதித்து எங்கோ தொலைந்து போகிறது.

“இரண்டு வேளை உணவு என்பது இரண்டு மாதத்திற்கு முன்பே முடிந்து போனது. ஒருவேளை உணவு என்பதும் ஒரு வாரத்திற்கு முன்பே முடிந்து போனது. தினமும் இரவில் ‘கட்டங்காப்பி’ மட்டுமே. அவளுக்கும் மூன்று குழந்தைகளுக்குமாக நான்கு கிளாஸில் ஊற்றுகிறாள். அதில் ஒரு குழந்தை, “அம்மா… நாளைக்கு எனக்கு கஞ்சி வேண்டாம்மா டம்ளர் நிறைய குடும்மா, ரொம்ப பசிக்குது”

இந்நிகழ்வும் இந்த வார்த்தைகளும் இதயச்சுவரில் எழுதி அழித்த ஓவியமாக நினைவுகளில் தங்கிப் போனது.

வலிதாங்கிய வழிகளைத்தான் அம்மா இப்போ கதையாக கதைக்கிறாள். வாசிப்பவர்கள் தன் தாயின் அந்திமக் காலத்தை நினைத்துப் பார்த்து கண்ணீர் உதிர்க்காமல் இருக்க முடியாது.

“சாப்டியா ம்மா, மாத்திரை எடுத்துக்கிட்டியாம்மா” இந்த இரண்டு வார்த்தை தவிர அம்மாவிடம் பேசுவதற்கு வேறு வார்த்தைகளோ, நேரமோ மகன்களுக்கு இருப்பதில்லை. ஆனால், ஒரு தாய்க்கு?
மகனிடம் மட்டும் பேசுவதற்கு, மலை அளவான வார்த்தைகளை குவித்து வைத்திருக்கிறாள். மிகப் பெரிய கடலை ஒரு சிப்பிக்குள் அடைப்பதைப் போல,
கட்டங்காப்பி எனும் பெரும் காப்பியத்தை சில பக்கங்களில் முடித்திருக்கிறார். எனக்கு அந்தக் கதையை இந்த இடத்தில் சொல்லிவிட வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. ஆனால், நூலினுல் சென்று வாசிப்பது தான் சிறந்த அனுபவமாக இருக்கும்.

கொலையும் செய்வாள் பத்தினி. அதுவும் தன் குழந்தைக்காக என்றால்? இந்த உலகையே கூட எரிப்பாள்.

இந்துவோ இஸ்லாத்தோ கிறிஸ்தவமோ இல்லை இன்னும் உலகில் வேறு என்னென்னே மதங்கள் இருக்கிறதோ அது எதுவும் மனிதனை பண் படுத்தியதாகத் தெரியவில்லை. மதங்களில் எதுவுமே இல்லை மனிதர்களை மனிதர்களாக வைத்திருக்கக் கூட அதுகளுக்குத் தெரியவில்லை. மனிதன் என்றாலே அவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் மகா சல்லிப் பய தான். மதங்கள் என்பதும் வெறும் ஆடை தான். அந்த ஆடைகளுக்குள் நல்லவர்கள் கெட்டவர்கள் என எல்லாவிதமான மனிதர்களும் இருக்கிறார்கள். உணர்வுகள், உணர்ச்சிகள், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற சுயநலன்கள்.யார் எப்படி போனல் என்னே, ஊரென்ன பேசும் நாடென்ன பேசும், தான் செய்யும் தவறு தன்னோடு போவதில்லை அது தான் குடும்பத்தையும் பாதிக்கும் என்கிற எந்த வித சொரணையும் இல்லாத மனிதர்களைத் தான் இந்த மதங்கள் சுமந்து கொண்டிருக்கிறது. கடவுளும் அதற்கு காவல் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்,

சம்சுதீன் ஹீரா உருவாக்கி இருக்கும் சாஜிதா என்னும் கதாபாத்திரம் அப்படியல்ல. அவள் மெத்தப் படித்தவளும் அல்ல மெத்தையில் படுப்பவளும் அல்ல. மதம் வரைந்து வைத்த கோட்டுக்குள் தானுன்டு தன் கடவுள் உண்டு என்று சாதாரண வாழ்க்கை வாழம் ஓர் குடும்பப்பெண் தான். ஆனால், வாழ்க்கை அவளை ஒரு முடிவுக்குள் தள்ளுகிறது. அவளும் துணிச்சலான ஒரு முடிவை எடுக்கிறாள். அவள் எடுக்கும் அந்த முடிவுக்கு முன்னால், தன் மகளின் வாழ்க்கை மட்டுமே தெரிகிறது! மதம், கடவுள் கட்டுப்பாடு எதுவும் தெரியவில்லை. இது ஒரு சாஜிதா மட்டுமல்ல, தேசங்கள், மொழிகள்! நிறங்கள், மதங்கள் என எந்த கோடுகளும் இல்லை பல்லாயிரம் கோடிப் பெண்கள் சாஜிதாக்களாகத் தான் இருக்கிறார்கள். ‘விடுவிப்பு’ எனும் சிறுகதையில் நான் இதைத்தான், இப்படித்தான் புரிந்து கொண்டேன்.

‘அப்பால் ஒரு பயணம்’ என்றொரு சிறு கதை இருக்கிறது. இந்தக் கதையில் ஒரு பிணம் தான் கதாநாயகன். புதைக்கப்பட்ட பிறகு அவன் என்ன ஆகிறான் எங்கே போகிறான். சொர்க்கமா நரகமா? ஏனெனில் அவன் ஒரு நாத்திகன், கடவுள் மறுப்பாளன். கடவுள் மறுப்பாளனுக்கு இஸ்லாத் நரகம் என்று உறுதியாகக் கூறுகிறது. ஆனால், கண்ணில் காணாத கடவுளை இல்லை என்று சொல்கிறான். பாராததை பார்க்கவில்லை என்று சொல்வது நியாயம் தானே.” கடவுள் மறுப்பு தவிர நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எந்த அநியாயமும் பாவமும் செய்யவில்லை” என்று ஆர்ப்பாட்டம் செய்கிறான். தோழர் இப்படி ஒரு புதுமையான கதையை யோசித்து இருக்கிறார். தோழருக்கு நம் பாராட்டுக்கள்.

தான் பாராததை, உணராததை யாரோ சொன்னார்கள் என்பதற்காக. காலம் பூராவும் தேடித்தேடி அலைவதை விட இல்லாததை இல்லை என்று சொல்வதே மேல். இருக்கு என்று சொல்பவர்கள் தான் உண்மையில் நாத்திகவாதிகள்.

வேந்தரைத் தேடி என்றொரு கதை. இது புரியாதவர்களுக்கு புரியாத கதை. தமிழக அரசியலை அறிந்தவர்களுக்கு நல்ல நகைச்சுவையான கதை.

எட்டு சிறுகதைகள் 100 பக்கம். இதில் எந்தக் கதையையும் சொல்லிவிடக் கூடாதென்று நினைக்கிறேன். ஒரு பானைச் சோற்றுக்கு சில பருக்கைகளை மட்டுமே நான் உங்களுக்கு பதம் பார்க்கக் கொடுத்திருக்கிறேன். ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ என்ற நாவலின் மூலம் தோழர் சம்சுதீன் ஹீராவை நான் நன்கு அறிவேன். தமிழ்நாடு எங்கும் பிரபலமாக பேசப்பட்ட நாவல் மௌனத்தின் சாட்சியங்கள். அந்த நாவலின் சாரம்சங்கள் இந்த சிறுகதைகளில் இல்லை. சிறப்பான சிறுகதைகள் தந்த தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“கட்டங்காப்பி” சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்:சம்சுதீன் ஹீரா
வெளியீடு:
விலை:₹.200
அறிமுகம் எழுதியவர்:  
எழுத்தாளர் பொன் விக்ரம்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *