சாம்சங் போராட்டம்: வர்க்கப் போராட்ட வகுப்பறை தான், தொழிற்சங்கப் போராட்டக் களம்
எஸ்.வி.வேணுகோபாலன்
அக்டோபர் 5ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சாம்சங் தொழிலாளர்களுக்கு (Samsung Labour Union) எதிரான காவல் துறை அடக்குமுறை, தமிழக அரசின் தவறான அணுகுமுறை, சாம்சங் நிர்வாகத்தின் அடாவடித்தனம் எல்லாம் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடந்து முடிந்தபின் அருகே ஒரு சிறிய பெட்டிக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம் தோழர்கள் சிலர். தனியார் நிறுவனம் ஒன்றின் சீருடையோடு அதே கடைக்கு வந்து நின்ற இருவரில் ஒருவர், என்ன பிரச்சனைக்காகப் போராட்டம் என்று பொதுவாக அறிய விரும்புபவர் போலக் கேட்டார். நான் சுருக்கமாகச் சொல்லி முடித்தவுடன், இந்தியா முழுவதும் ஆயிரத்து ஐநூறு கம்பெனி மூடியிருக்கு, அதுக்கு இந்த கம்யூனிஸ்ட்காரங்க சங்கம் தொடங்கியது தான் காரணம் என்றார்.
இப்படியாக இந்த சீசனின் அபத்த எதிர்மறை குப்பைகள் தொடங்கியதுபோல் பட்டது எனக்கு, கடந்த மூன்று நாட்களாக சமூக ஊடகங்களில், ‘சி ஐ டி யு எந்த நிறுவனத்தில் நுழைந்தாலும் கம்பெனியை மூடாமல் வெளியே வரமாட்டார்கள்’ என்று நிபுணத்துவம் பெற்ற “ஆராய்ச்சியாளர்கள்” பலர் எழுதிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சாம்சங் தொழிலாளர்கள் செப்டம்பர் 9 முதல் போராட்டத்தில் இருக்கின்றனர். அக்டோபர் 1 அன்று சிஐடியு சார்பில் மாநிலம் முழுவதும் அவர்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுவரை ஊடகங்களில் பெரிதாக யாரும் விவாதங்கள் நடத்த உரித்தான கருப்பொருளாக இந்தப் போராட்டத்தைக் கையிலெடுக்கவில்லை. அதற்கு அவர்களுக்கு நிறைய காரணங்கள் இருந்தன.
அக்டோபர் 1 அன்று சாம்சங் தொழிலாளர்கள் (Samsung Labour Union) காஞ்சிபுரத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டு இருந்தனர். அதனால் நீலச் சட்டை போட்டுவந்த எல்லோரையும் அன்று காஞ்சிபுரம் காவல் துறை வாட்டி எடுத்தது. அவர்களுக்குத் தெரியாது, பாவம், சாம்சங் தொழிலாளர்கள் சீருடை, ஐடிகார்டு எதுவும் இல்லாது சாதாரண உடையில் நூற்றுக்கணக்கில் வந்து இறங்கி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி விட்டனர்.
கொண்டுபோய் வைக்க இடமில்லை என்று பலரைப் ‘பிழைத்துப் போங்கள்’ என்று ‘மன்னித்து’ விட்டது காவல் துறை. சாதி பெயரெல்லாம் கேட்பார்கள், கொடுக்காதீர்கள் என்று தலைமை அறிவுறுத்தியபடி தங்களது பெயர், முகவரி தவிர வேறு விவரங்கள் தர முடியாது என்று மறுத்து நின்றனர் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்.
அக்டோபர் 5 அன்று இடதுசாரிகள் தலையிட்டு நடத்திய போராட்டத்தை, முதல் நாள் இரவு அனுமதி மறுத்துவிட்டோம் என்று சொல்லி எல்லோரையும் கைது செய்து காற்று கூடப் புகாத மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தது காவல் துறை. அதே நேரத்தில், மூன்று அமைச்சர்கள் தலையிட்டு இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்க முதல்வர் உத்தரவிட்டதாக அறிவிப்பும் வெளியானது. இங்கே ஒரு முக்கியமான அரசியல் குறிப்பு இருக்கிறது. இருக்கட்டும்.
30 நாட்கள் அமைதியான முறையில் சாம்சங் நிறுவனத்தை அடுத்துள்ள ஒரு தனியார் காலி மனையில் பந்தல் போட்டுத் தங்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர் சாம்சங் தொழிலாளர்கள் (Samsung Labour Union). அக்டோபர் 8 அன்று நள்ளிரவு வீட்டு முகவரி அறிந்து பயங்கர குற்றவாளிகளை வேட்டையாடுவதுபோல் போய் முக்கிய நிர்வாகிகள் சிலரை கைது செய்தது காவல் துறை.
இன்னொருபுறம், தனியாருக்கு சொந்தமான இடத்தில் அவரது இசைவோடு போடப்பட்டிருந்த தொழிற்சங்கத்தின் போராட்டப் பந்தலை அத்துமீறிப் பிரித்து அள்ளிப் போட்டுக் கொண்டு போனது காவல் துறை. பேருந்தில், கடைத்தெருவில் பார்க்கும் இடத்தில் எல்லாம் சாம்சங் சீருடை அணிந்தவர் யாராயினும் சந்தேகக் கேசில் பிடிப்பதுபோல் வேட்டையில் இறங்கி உள்ளது காவல் துறை. நீலச் சட்டையும், செங்கொடியும் இப்போது காவல் துறைக்கு அலர்ஜி ஆகிவிட்டது. இருக்கட்டும்.
ஒரே ஒரு கோரிக்கை தவிர, எல்லாக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டாயிற்று என்று அமைச்சர்கள் பேட்டி கொடுத்தபின்னும், ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏன் போராட்டத்தில் இருக்கின்றனர் என்பதை ஊடகங்கள் கேள்வியாக எழுப்பவில்லை. தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, சிஐடியு தன்னை நிறுவிக் கொள்ளவும் முத்துக்குமாரைத் தலைவராக ஆக்கவும் இப்படியொரு போராட்டமா என்று கேள்வியைத் தலைகீழாக வைக்கின்றனர். சாம்சங் என்று தொழிற்சங்கத்தில் போட்டுக் கொள்ளக் கூடாது என்று சொல்லும் நிறுவனத்தை அருகே சென்று கூட சந்திக்க திராணியற்ற ஆசாமிகள், எதற்கு தொழிற்சங்கம், நிர்வாகம் தான் எல்லாக் கோரிக்கைகளும் ஏற்றுக் கொண்டாயிற்று தானே என்று கேட்கின்றனர்.
இத்தனை நாள் போராட்டத்தின் மேடையில் தான் அத்தனை அறிவிப்புகள், அதுவும், அமைச்சர்கள் வழியே சொல்லப்பட்டு இருக்கிறது, நிர்வாகம் வாய் திறக்கக் காணோம் . எட்டு மணி நேர வேலை நேரத்தில் ஒரே ஒரு முறை தான் இயற்கை உபாதைக்குச் செல்ல அனுமதி என்றெல்லாம் கொடுமைகள் வெளியாகின்றன.
இதைப் பற்றியெல்லாம் சாம்சங் ஆதரவுக் கும்பல்கள் வாய் திறப்பதில்லை. ஆனால், இந்த கம்யூனிஸ்டுகளுக்கு இதே வேலை என்று ஆள் ஆளுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இருக்கட்டும்.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நமது அடிமனத்தில் ஜனநாயக உணர்வு எந்த மட்டத்தில் உள்ளது என்பது ஒரு நுட்பமான விஷயம். எதையும் கேள்விக்கு உட்படுத்துவது என்பது ஜனநாயகத்தின் உட்கரு. அதிகாரத்திடம் துணிந்து நின்று உண்மை பேசுவது ஜனநாயகம். ஆனால், ‘எந்தக் கேள்வியும் கேட்காது சொன்னதைச் செய்’ என்கிற தத்துவம் தான் நம்மை மேலதிகம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது. காலகாலமாகப் பண்ணையாருக்குப் போட்ட கும்பிடு தான் நவீனமயமாகி முதலாளிக்கு வணக்கம் போட வைப்பதாக பரிணாமம் அடைந்திருக்கிறது. ராஜாவுக்கு முன் மண்டியிட்ட வாழ்க்கை, இப்போது எல்லா அதிகாரத்தின் முன்னும் கைகட்டி நிற்கப் பழக்குகிறது. இந்த அடிமைப்புத்திக்கு எதிரான கலகக்குரல்கள் எல்லாக் காலங்களிலும் ஸ்பார்ட்டகஸ் குரலில் ஒலித்துக்கொண்டே இருக்கத்தான் செய்கிறது.
இரும்புச் சங்கிலிகள் பிணைத்து இறுக்கிக் கொண்டிருக்கும்போதும், ‘பொறுத்தது போதும் மகனே மனோகரா பொங்கி எழு’ என்று கண்ணாம்பா குரல் கொடுத்த மாத்திரத்தில், அடித்து நொறுக்கிக் கொண்டு நிமிரும் சிவாஜி கணேசனைத் திரையில் பார்க்கையில் ஏன் தாங்களும் ஆவேசம் கொண்டார்கள் பார்வையாளர்கள்? தன்னை அடிக்க எழும் சாட்டையைத் தான் கைப்பற்றித் தன்னை அடிக்க வந்த நம்பியாரைப் புரட்டி எடுக்கும் எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆரை விசில் பறக்க ஏன் கொண்டாடினார்கள் ரசிகர்கள்?
‘நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாம் என்பார்’ எனும் தனது புகழ்மிக்க கவிதையில் மகாகவி, திரையில் ரசிக்கும் காதலைத் தரையில் பார்த்தால், நேரே கிள்ளி எறிந்துவிட்டுத் தான் மறுவேலை பார்க்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லி இருப்பார். அதிகாரத்தை எதிர்த்து யாரேனும் குரல் கொடுத்தால், தாங்கள் அதில் சிக்கிக் கொள்ளாமல் தள்ளி நிற்பது, தங்களுக்கு யாதொன்றும் தெரியாது என்று நழுவுவது, பட்டும் படாமல் இருப்பதுபோல் பாசாங்கு செய்து காட்டிக் கொடுப்பது, இப்படி ஒதுங்கி நின்று பார்த்துவிட்டு, பிரச்சனை தீராமல் நிற்கும்போது, அப்போதே சொன்னேன், இதெல்லாம் வேண்டாத வேலை என்று கருத்து சொல்வது என்று பலவிதமாகத் தங்களை நடுத்தரவர்க்கம் கட்டமைத்துக் கொண்டுவிடுகிறது.
விஷம சக்திகள் இன்னும் ஒரு படி மேலே போய் எதிர்க்குரல் எழுப்புவதை இப்போதைய நவீன தொழில் நுட்ப தொலைதொடர்பு சாதனங்கள் இலகுவாக்கி அருள்கின்றன. அதிலும் குறிப்பாக, சமூக மாற்றத்தை விரும்பாத தத்துவத்தின் உபாசகர்கள் அரசியல் கருத்தியல் எல்லாம் கடந்து ஒன்றுபட்டு நின்று தங்கள் வர்க்க நலன் காத்துக் கொள்ள உழைப்பாளி வர்க்கப் போராட்டங்களைக் கொச்சை செய்வது இப்போது கூடுதலாகி வருவதையும் பார்க்கிறோம். மூலதனத்தின் பால் இவர்களுக்கெல்லாம் இருக்கும் பயம், பக்தி, பாசம் அபாரமானது.
திமுக அனுதாபிகளும் சங்கிகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதையும் சாம்சங் (Samsung Labour Union) போராட்டம் அம்பலப்படுத்துகிறது. சாம்சங் போராட்டம் குறித்த யூடியூப் பதிவு ஒவ்வொன்றிலும் கமெண்ட் பகுதியில் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டுபொங்குவதைக் காண முடியும். வாட்ஸ் அப்பிலும் மட்டரகமான விமர்சனங்களைக் கண்மூடித்தனமாக தெரிந்தவர்களுக்கெல்லாம் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கும் இவர்களில் பலரும் அரசுத் துறையில், பொதுத் துறைகளில் தங்களது பணிக்காலத்தில் தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்றுத்தந்த உரிமை சலுகைகள் அனைத்தும் வஞ்சனையின்றி துய்த்து ஓய்வூதியம் பெற்று வருபவர்கள்.
அப்போது சங்க நிர்வாகிகளாகப் பிளந்து கட்டிய சிலர் பிற்கால வாழ்க்கையில் அடையாள அரசியலில் ஈர்க்கப்பட்டுப் பரம சங்கிகளாக மாறி இந்துத்துவ மதவெறி கருத்தியலுக்கு ஈர்க்கப்பட்டு விடும் கொடுமை காண்கிறோம். கம்யூனிச எதிர்ப்பு அவதூறு குப்பைகளைத் தங்களுக்குள்ளும் தங்களது முந்தைய தொழிற்சங்க வாழ்க்கையின் தோழமைகளுக்கும் பக்தி பூர்வமாகப் பகிர்ந்து வருபவர்கள். இந்த கோஷ்டிகள் சாம்சங் விஷயத்தில் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக அடிக்கும் கூத்து அரதப் பழசான வாதங்களைத் துடைத்தெடுத்து மீண்டும் எறிந்து விளையாடுவது.
அண்மையில் ஒரு நேர் காணலில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலபாரதி குறிப்பிட்டதுபோல், சிஐடியுவைப் பார்த்து முதலாளிகள் உள்ளே வரக்கூடாது என்று அலறுவது புரிந்து கொள்ளக் கூடியது. நடுத்தர வர்க்கத்தினர் ஏன் கதற வேண்டும்? தாங்கள் தொழிலாளியாக இருந்தாலும் முதலாளித்துவக் கருத்தியல் அவர்களது மூளைக்குள் குடிகொண்டிருப்பது தான் வேதனையானது என்றார் அவர். ஆயிரத்து ஐநூறு கம்பெனிகள் மூடவைத்தது சிஐடியு சங்கம் என்று அடித்துவிடும் போக்கு எந்த ஆதாரமும் அற்ற நிலையிலும் எப்படி இப்படி பரவி இருக்கிறது எனில் இந்தக் கருத்தியல் தான் அடிப்படை காரணம்.
கோடிக்கணக்கில் வங்கிக்கடன் பெற்றுக்கொண்டு மாநில அரசுகளின் அனைத்துக் கருணையும் பெற்று இடம், தண்ணீர், மின்வசதி உள்ளிட்ட இலவசங்கள் எல்லாம் அனுபவித்து, ஓசைப்படாமல் வர்த்தக மடைமாற்றத்தில் இங்கே கடையை அடைத்துவிட்டுப் போகும் நிறுவனங்கள் பற்றி இந்தக் கருத்து கந்தசாமிகள் வாய் திறப்பதில்லை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் சில லட்சம் கோடி ரூபாய் பணம், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்கப்படும் கதையை ஊடகங்கள் ஒருபோதும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை. ஒரு தொழிற்சங்கம் வைத்தால் ‘அய்யய்யோ போச்சு ..எல்லாம் போச்சு’ என்று ஆகாயத்திற்கு ஏறி குதிக்கின்றனர்.
சாம்சங் நிறுவனத்தில் உழைப்பாளிகள் என்னென்ன விதமாக எல்லாம் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதை முதல் 30 நாள் போராட்டத்தின்போது எந்த ஊடகமும் ஒரு பொருட்டாக மதித்துப் போராட்டப் பந்தலுக்கு அருகே சென்று காதுகொடுத்துக் கேட்டு உலகுக்கு எடுத்துச் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. போராட்டக்காரர்களை வீடு தேடிப் போய் நள்ளிரவில் கைது செய்வது எதற்கு என்ற கேள்விக்கு, ‘சங்கம் வைத்தாய் அல்லவா, சாவு’ என்று எழுதுகிற மேதாவிகள், உள்ளே வேலையில் இருந்தபோது உரிமையைக் கேட்ட தொழிலாளிகளைத் தனியறையில் வைத்துப் பூட்டிவைத்து மிரட்டியதைப்பேசுவதில்லை. அதெல்லாம் ஒருவேளை போன ஜென்மப் பாவம் என்று இவர்கள் மகாவிஷ்ணுவை அழைத்து வந்து பாடம் எடுக்கக் கூடும்.
தங்களது எந்த ஆலையிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை இவற்றைத் தங்களது அடிப்படை கொள்கை பத்திரத்தில் உறுதி செய்து பொன்னெழுத்துகளால் பொறித்து இணையத்தில் ஏற்றி வைத்துள்ளது சாம்சங் என்பது இணையத்திலேயே காணக் கிடைக்கிறது. கம்யூனிஸ்ட் யூனியனை எப்படி ஒரு பன்னாட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்று மாண்புமிகு துணை முதல்வரும், அமைச்சர் பெருமக்களும் எதற்கு கூடுதல் பாரம் சுமக்கின்றனர் என்பதை விளக்க வேண்டியதில்லை.
செங்கொடி ஏந்தியபடி மூவாயிரம் பேர் மூன்று மாதங்களுக்கு முன் தென் கொரியாவில் சாம்சங் நிறுவனத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணையத்தில் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
தொழிற்சங்க உரிமை, கூட்டு பேர உரிமை இரண்டும் அரசியல் சாசன அடிப்படை உரிமைகள். நாடு விடுதலை பெறுவதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது தொழிற்சங்க சட்டம். ஏஐடியுசி சங்கத்தின் முதல் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராய். அவரை அடித்துப் படுகாயமுற வைத்த வெள்ளைக்கார காவல் துறை அதிகாரி சாண்டர்சை எதிர்த்துப் புறப்பட்ட தீரர்கள் தான் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் மற்றும் சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டவர்கள்.
தமிழ்த் தென்றல் திருவிக தலைமையேற்ற சங்கம் தேச விடுதலைக்கும் சேர்த்தே தொழிலாளரைத் திரட்டியது. கப்பலோட்டிய தமிழர் 1908இல் தலைமை ஏற்று நடத்திய கோரல் மில் வேலை நிறுத்தம் உலகப் புகழ் பெற்றது.
தேசப் பிரிவினையின் போது வடக்கே ரயிலை ஓட்டவே தொழிலாளர் முன்வராத நேரத்தில் தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் அறைகூவல் ஏற்று தென்னகத்திலிருந்து பல ஓட்டுநர்கள் மக்கள் பணியில் துணிவோடும் பொறுப்போடும் கடமை ஆற்றிவந்ததை மிகவும் பாராட்டிய எழுத்தாளர் கல்கி, தனது கம்யூனிச எதிர்ப்பு உணர்வை மறைக்காது குறிப்பிட்டு இந்த நற்செய்கை தனது நெஞ்சைத் தொட்டது என்று சொல்லி நன்கொடையும் அனுப்பி நெகிழ்ந்தார்.
இடதுசாரி தொழிற்சங்கங்கள் நடத்திவரும் தொடர் போராட்டங்கள் காரணமாகத் தான் அந்நிய மூலதனத்தின் ஆதிக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்ததால், 2008 உலக நெருக்கடி நேரத்தில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பியது நமது நாடு. பணிவு நிறைவு செய்த வங்கி ஊழியன் என்ற வகையில் அண்மைக் காலத்து வரலாற்றுச் செய்தியை அறுதியிட்டுச் சொல்ல முடியும். 1996 பேலன்ஸ் ஷீட்டில் 1,336 கோடி ரூபாய் நஷ்டத்தை இந்தியன் வங்கி எதிர்கொண்டபோது, வங்கியை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் தான் களத்தில் இறங்கினோம். குறிப்பாக இடது சாரி கருத்தியல் கொண்ட இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், மறு மூலதன நிதியை ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கச் செய்ய எடுத்துக் கொள்ளப்பட்ட தனித்துவ செயல்பாடுகள் அசாத்தியமானவை.
நாடாளுமன்ற உறுப்பினராகச் செம்மாந்த சேவை நல்கிய மறைந்த பாசுதேவ் ஆச்சார்யா அவர்கள் அப்போதைய பிரதமர், நிதியமைச்சர் இவர்களோடு மிக நேர்த்தியான முறையில் மேற்கொண்ட இடையறாத வற்புறுத்தல் இதில் முக்கிய பங்களிப்பு செய்தது.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், வங்கியை வாட்டியெடுத்த அந்த நஷ்டத்தின் காரணிகளில் முக்கியமானது 1500 கோடி ரூபாய்க்கு நிலுவையில் இருந்த முதல் பத்து பெரிய வாரக்கடன்களாகும். அவை யாவும் பெருந்தொழில் நிறுவனங்கள் பொதுத் துறையை வஞ்சித்த கணக்கில் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
ஆனால் அரசு என்ன நிபந்தனை விதித்தது ? வங்கிக்கு மூலதன உதவி தேவையென்றால் ஊழியர்களும் அதிகாரிகளும் தங்களது சலுகைகள் பலவற்றை அடுத்த சில ஆண்டுகளுக்கு தியாகம் செய்ய வேண்டும் என்பது. இதே காலத்தில் இந்த நெருக்கடி பற்றியெல்லாம் தாங்களாக நேஷனல் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்தது முதலாளிகள் சங்கமான சிஐஐ.
ஐசிஐசிஐ வங்கியின் அப்போதைய தலைவரான K V காமத் இந்தக் குழுவின் தலைவர். 1999 டிசம்பர் 13 அன்று அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்காவிடம் இந்தக் குழு வழங்கிய ஆலோசனைகளில் முக்கியமான பரிந்துரை, இந்தியன் வங்கி யூகோ வங்கி யுனைடெட் வங்கி மூன்றையும் உடனே மூடி விட வேண்டும் என்பது. வங்கிகளைத் தங்களுக்குள் துண்டாடி விழுங்க அவர்கள் எடுத்த நாசகர முயற்சிகளை வீதியில் திரண்டு நின்று போராடி முறியடித்து, வங்கிகளைத் தக்கவைத்து மீட்டு எடுத்தது தொழிற்சங்க இயக்கம் தான். பலகோடி வாடிக்கையாளர் வைப்புத் தொகையை முதலாளித்துவ உலகம் ஏப்பம் விடப் பார்த்தது. மக்கள் பணத்தை இடதுசாரி தொழிற்சங்க இயக்கம் தான் பாதுகாத்தது.
நஷ்டத்தை வங்கி பணியாளர்கள் தான் தியாகம் செய்து ஈடு செய்யவேண்டும் என்ற அரசின் நிபந்தனையைக் கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் தலைவர் ஆர் உமாநாத், பெருந்தொழில் நிறுவனங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த பணத்தை ஊழியர்கள் ஏன் தங்களது வேர்வையாலும், இரத்தத்தாலும் ஈடு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இந்தியன் வங்கியை பாதுகாக்க உடனே தலையிட்டு அரசின் கவனத்தை ஈர்க்குமாறு அவர்தான் பாசுதேவ் ஆச்சார்யாவை அணுகுமாறு வழியும் காட்டினார். கல்கி பாராட்டி இருந்த தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கத்தின்நிர்வாகியாக நீண்டகாலம் இயங்கியவர் உமாநாத் என்பது கூடுதல் சுவாரசியமான செய்தி. உமாநாத் சுதந்திர போராட்ட வீரர் என்பது அடுத்த முக்கியமான வரலாற்றுக் குறிப்பு. ஆர் உமாநாத் தமிழக சிஐடியு சங்கத்தைத் தலைமைப் பொறுப்பில் இருந்து நெடுங்காலம் வழி நடத்தியவர்.
1970இல் உருவான சிஐடியு சங்கத்தின் தலைவர் பிடி ரணதிவே, பொதுச் செயலாளர் பி.இராமமூர்த்தி இருவரும் சுதந்திர போராட்டத்தில் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள். தொழிற்சங்க இயக்கத்தில் ஏஐடியுசி காலத்திலிருந்தே எண்ணற்ற தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை வென்றெடுத்தவர்கள்.
சுதந்திர இந்தியாவின் முக்கிய இரும்பு எஃகு ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள் போன்றவை நிர்மாணிக்கப்பட சோசலிச நாடுகளின் உதவியைப் பெற்றுவந்ததில் தோழர் இராமமூர்த்தி போன்றோரது பங்களிப்பு மகத்தானது. நலிந்து போன பல ஆலைகளை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு எடுத்து நடத்தி தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாத்தது எல்லாம் அண்மைக்கால வரலாறு.
இன்சூரன்ஸ் துறையில் எத்தனையோ குறுக்கீடுகள் செய்து ஒழித்துக் கட்டப் பார்த்த ஆட்சியாளர்களது முயற்சிகளை முறியடித்து எல்ஐசி நிறுவனத்தைத் தற்காத்து விரிவுபடுத்தி முன்னணியில் நிறுத்தி இருப்பது இடதுசாரி கருத்தியல் கொண்ட தொழிற்சங்க இயக்கம் தான்! பாதுகாப்புத் துறையில் தேச நலனுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அந்நிய மூலதன நுழைவை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுப்பதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதும் தொழிற்சங்க இயக்கம் தான்.
எந்த வரலாறும் அறிய விரும்பாது, தாங்கள் ஒரு கை மண் ஆக்கபூர்வமாக எடுத்துப்போட்ட ஒற்றை அனுபவம் அற்றவர்கள் தங்களது நேரமெல்லாம் செலவழித்து சேறு எடுத்து வீசிக் கொண்டிருப்பதும் நல்லதற்குத் தான். வர்க்க வேறுபாடுகள், வர்க்க முரண்பாடுகள் பற்றிய விவாதங்கள் முன்னுக்கு வரட்டும். தேச விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் யார், கொஞ்சமும் எட்டிப் பார்க்காத வரலாற்றைக் கொண்டிருப்போர் யார் எல்லாம் மீண்டும் ஒரு முறை மக்கள் மன்றத்திற்கு வரட்டும். தங்களது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பைத் தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கும், அவர்களது முன்னேற்றத்திற்கும் செலுத்திக் கொண்டிருப்போர் யார், குளிர்பதன அறையிலிருந்து கொண்டு அபத்தமாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் விற்பன்னர்கள் யார் என்பதும் பொதுப் பார்வைக்கு வரட்டும்.
சாம்சங் ஊழியர் (Samsung Labour Union) போராட்டத்தை அருகே சென்று பார்க்கும் வாய்ப்பு அவர்களது வேலைநிறுத்தத்தின் 13வது நாளான செப்டம்பர் 21 அன்று கிடைத்தது. வங்கி ஊழியர் இயக்கம் சார்பாக அங்கே சென்று ஆயிரம் பேர் திரண்டிருந்த பந்தலின் கீழ் அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றியபோது அவர்களது பரவசமிக்க கூட்டு மறுமொழி மறக்க முடியாதது. அந்தப் பந்தல் பிரித்துப் போடப்பட்டது என்ற செய்தி நெஞ்சைப் பிளப்பது போலிருந்தது. சாம்சங் நிர்வாகமும் அவர்களுக்கு அரணாக நிற்கும் தமிழக அரசும் அந்தப் பந்தலை ஏன் பிரித்தனர் என்று தெரியாது. ஆனால் போராட்டப் பந்தல் இப்போது இன்னும் மிகப் பரந்த விரிந்த பரப்பில் நிலைகொண்டு விட்டது என்பதை இப்போது சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் புரிந்து கொண்டிருப்பார்கள்.
கட்டுரையாளர்:
எஸ்.வி.வேணுகோபாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Excellent article. The justness of the Samsung workers’ struggle is well articulated. May be made a booklet and circulated among other sections of workers.
J.Gurumurthy
இந்த சாம்ஸங் போராட்டம் ஏன் எதற்கு எப்படி நடக்கிறது என்பதனை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றார்
எஸ்விவி.நன்றி சார். மிக்க மகிழ்ச்சி.வெற்றி நமதே.
மிக அருமையான விளக்கமுடன் , உணர்வு பொங்க சாம்சங் தொழிலாளர் போராட்டம் பற்றி பேசுகிறது உங்கள்.கட்டுரை. இந்தப் பிரச்னைக்கு சட்ட ரீதியிலான தீர்வுக்கும் முயற்சி நடக்கிறது என நினைக்கிறேன். நியாயம் நிச்சயம் வெல்லும்.
மிக அருமையான விளக்கமுடன் , உணர்வு பொங்க சாம்சங் தொழிலாளர் போராட்டம் பற்றி பேசுகிறது .கட்டுரை. இந்தப் பிரச்னைக்கு சட்ட ரீதியிலான தீர்வுக்கும் முயற்சி நடக்கிறது என நினைக்கிறேன். நியாயம் நிச்சயம் வெல்லும்.
நீண்ட ஆனால் தெளிவான கட்டுரை. கம்யூனிஸ்ட் எதிரிகள் நம் மீது எவ்வளவு வசைமாரி பொழிகிறார்கள்! நமது உறுதியான போராட்டத்தை தொடர வேண்டிய தேவையினை அருமையாக விளக்கியுள்ளார் SVV. வாழ்த்துகள்!
தொழிற்சங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் தொழிலாளியை முதலாளி மட்டுமே சுரண்டி வந்தார். சங்கம் வந்ததும் யூனியனும் சுரண்ட ஆரம்பித்தது. வேடிக்கை என்னவெனில் யூனியன், முதலாளி- தொழிலாளி இரண்டு பேரையும் சேர்த்து சுரண்ட ஆரம்பித்தது.. சங்கம் நடத்த சந்தா வசூலிக்க ஆரம்பித்து பின்னர் ஒவ்வொரு சம்பள உயர்வின் போதும் மறைமுக மிரட்டலால் வசூல் வேட்டை.. வசூலிக்கப்படும் பணத்திற்கு வெளிப்படையான கணக்கு வணக்கு கொடுப்பதில்லை..இது பெரும்பாலான எல்லா சங்கங்களுக்கும் பொருந்தும்.. யாருக்கேனும் சந்தேகம் இருப்பின்.. தாம்பரம் – பீச் மின்சார ரயிலில் கடந்த 30 வருஷங்களாகப் பயணம் செய்தோரைக் கேளுங்கள்.. ஒரு மூன்று முகங்கள்.. காலம் காலமாய் ஸ்டேஷன் ஸ்டேஷனாய் தென்படும்.. ஜனநாயகம் என்பது யூனியனில் கெட்ட வார்த்தை.. மன்னராட்சியைத் தூக்கி எறியும் வம்சாவளி அரசாங்கம்.. மார்க்ஸ் சொன்ன கம்யூனிசத்திற்கும் இந்திய யூனியன்களில் அவர்கள் உரத்து முழங்கும் வெற்றுக் கோஷங்களுக்கும் லவலேசம் சம்பந்தமில்லை..
ஒரு தொழிற்சங்கத்தை அதன் நடவடிக்கைகளை முடக்க அதிகார வர்க்கம் எந்த உச்சம் வரை செல்லும் எனபது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக மூட்டை கணக்கில் பொய்களை அவிழ்த்து விட்டு இன்பம் காண்கிறது இந்த முதலாளித்துவ முன்னேற்ற கழகம்.
Trade Union leaders and members are always selfless. But as you have observed, strangely for many who have benefitted from Trade Unions, after retirement they undergo a metamorphosis and Trade Unions become anathema for them. It is the venom spewed by this section that is very dangerous and damaging. An excellent write up from Com.SVV, as usual.
தொழிற்சங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் தொழிலாளியை முதலாளி மட்டுமே சுரண்டி வந்தார். சங்கம் வந்ததும் யூனியனும் சுரண்ட ஆரம்பித்தது. வேடிக்கை என்னவெனில் யூனியன், முதலாளி- தொழிலாளி இரண்டு பேரையும் சேர்த்து சுரண்ட ஆரம்பித்தது.. சங்கம் நடத்த சந்தா வசூலிக்க ஆரம்பித்து பின்னர் ஒவ்வொரு சம்பள உயர்வின் போதும் மறைமுக மிரட்டலால் வசூல் வேட்டை.. வசூலிக்கப்படும் பணத்திற்கு வெளிப்படையான கணக்கு வணக்கு கொடுப்பதில்லை..இது பெரும்பாலான எல்லா சங்கங்களுக்கும் பொருந்தும்.. யாருக்கேனும் சந்தேகம் இருப்பின்.. தாம்பரம் – பீச் மின்சார ரயிலில் கடந்த 30 வருஷங்களாகப் பயணம் செய்தோரைக் கேளுங்கள்.. ஒரு மூன்று முகங்கள்.. காலம் காலமாய் ஸ்டேஷன் ஸ்டேஷனாய் தென்படும்.. ஜனநாயகம் என்பது யூனியனில் கெட்ட வார்த்தை.. மன்னராட்சியைத் தூக்கி எறியும் வம்சாவளி அரசாங்கம்.. மார்க்ஸ் சொன்ன கம்யூனிசத்திற்கும் இந்திய யூனியன்களில் அவர்கள் உரத்து முழங்கும் வெற்றுக் கோஷங்களுக்கும் லவலேசம் சம்பந்தமில்லை.. சாம்சங்கில் சங்கம் அமைக்கும் CITU, SUN TV குள் நுழையுமா? நுழையாது. ஏனெனில் சன் டிவி கார்ப்பரேட் இல்லை.. குடிசைத்தொழில். தடிதடியான சித்தாந்த புஸ்தகங்கள் மேலேறி கோபாலபுரம் முன்னாலும் ராகுல் வீட்டின் முன்னாலும் நிற்பது அந்த சிந்தாங்களுக்குச் செய்யும் த்ரோகம். இந்திய கம்யூனிசம் யூனியன் எல்லாம் சிரிப்பொலி தொலைக்காட்சிக்கு போட்டி நடவடிக்கைகளே..
மிகச்சரியான தகவல்களுடன், உண்மையை உரத்து பேசிய கட்டுரை.
பாசிசம் எப்போதும் உண்மையை மறைக்கும். பொய்யை பரப்பும்.
பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு, பாசிசத்தின் ஆயுதத்தை கையில் ஏந்தியிருக்கிறார்கள்.
போராட்டப் பந்தல் இப்போது இன்னும் மிகப் பரந்த விரிந்த பரப்பில் நிலைகொள்ளத் தொடங்கிவிட்டது. உலக அளவில் சாம்சங் தொழிலாளர் போராட்டம் குறித்து விசாரிக்கிறார்கள்.
அருமையான கட்டுரை.
இப்படிப்பட்ட உரையாடல்கள் பொதுச் சமூகத்தில் நிறைய தேவைப்படுகிறது.
சிவன் போன்றவர்கள் இங்கே செய்யும் பதிவுகள் என்ன நோக்கத்தில் என்ற கேள்வி இருந்தாலும் ஒரு பகுதியினர் மத்தியில் இருந்து வரும் விவாதங்களே என்ற வகையில் அவர் எழுப்பும் பிரச்சினைகள் மீதும் நாம் வினை ஆற்றலாம்.
தொழிற்சங்கங்களின் நேர் மறை பங்களிப்புகள் குறித்து இக்கட்டுரையில் நிறைய விசயங்கள் உள்ளன. எதிர்க் கருத்துக்கள் வைப்பவர்கள் அவற்றின் மீதும் தங்கள் எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும். முன் முடிவுகளை வைத்துக் கொண்டு மட்டும் பேசுவது விவாதங்களுக்கு உதவாது.
எப்படியோ சாம்சங் போராட்டம் உயிர்ப்பான உரையாடல்களை உருவாக்கி இருப்பது நம்பிக்கை தருகிறது. அந்த உரையாடல்களை மேலும் முன்னெடுக்க உங்கள் கட்டுரையின் எளிய கருத்துகள் வலிமை தருகின்றன.
சிறப்பான கட்டுரை.. பல்வேறு தரவுகளோடு வாசிப்போரை வசீகரிக்கும் எழுத்து… வாழ்த்துக்கள் SVV