‘சமூக நீதியின் தனி நபர் ராணுவம்’
ஐஏஎஸ் அதிகாரி எனும் பதவியை ஆயுதமாக மாற்றிக் கொண்டு தனது பணிக் காலம் முழுவதும் பி.எஸ்.கிருஷ்ணன் சாதியின் மீது மோதிக் கொண்டேயிருந்திருக்கிறார்’
……பதிப்புரையில்.
‘ ஒரு சமூக நீதிப் போராளிக்கான வீர வணக்கமே இந்நூல்’
முனைவர். வே.வசந்தி தேவி.
நூலின் அட்டையில் சிறிய உப தலைப்பு
‘நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்’
இந்த நூல் 41 கேள்வி பதில் வடிவிலான ஒரு சுயசரிதை என்று கூறலாம்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரி தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி இத்தனை பெரிய சாதனைகள் செய்ய முடியுமா என பிரமிக்க வைக்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன்.
கேரளாவில் ஒரு மேல்சாதி என சொல்லப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.
தனது பதினோராவது வயதில் அம்பேத்கர் எழுதிய கட்டுரை ஒன்றில் ‘ நம் நாட்டில் ஏழில் ஒருவர் தீண்டத் தகாதவர் ‘ என்கிற செய்தியை படிக்கிறார்.
தன் தந்தையிடம் தீண்டாமை பற்றி கேட்டறிகிறார்.
அந்த பிஞ்சு மனதில் அன்று விழுந்த தீப்பொறி அவர் மறையும் வரை கனன்று எரிந்து அவரை இயக்கியிருக்கிறது.
போர் வாள் கூராகிறது:
இளம் வயதில், விவேகானந்தர் எழுதிய The future of India(1897) நூலை படிக்கிறார்.
“முகமதியர்கள் வாட்களாலும் தீப்பத்தங்களாலும் மக்களை அவர்களுடன் சேர்க்கவில்லை.நான் மலபார் நாட்டின் வீதிகளில் பறையர்கள் நடத்தப்படும் கீழ் நிலையைப் பார்த்தேன்.மக்களில் ஐந்தில் ஒருவர் இஸ்லாமியராக மட்டுமல்ல சரிபாதி கிறித்தவராகவும் மாறினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை” என்ற எழுத்துக்களும்
‘மதம் ஏதாயாலும் மனுசன் நன்னாயால் மதி’ என்பது போன்ற நாராயண குருவின் போதனைகளையும் படிக்கிறார்.
அம்பேத்கர்,காந்தி,பெரியார்,நாராயணகுரு,காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் தன்னைக் கவர்ந்ததாகக் கூறுகிறார்.
விளையும் பயிர்:
1956 ல் ஐஏஸ் அதிகாரியாக தேர்வு பெறுகிறார்.
பயிற்சி அதிகாரியாக பஞ்சாப் சென்றபோதே தலித் மக்கள் வாழ்விடம் சென்று நிலைமைகளை கேட்டறிகிறார்.
அங்கே ஒரு வட்டார வளர்ச்சி அதிகாரி தான் செய்ததாக ஏராளமான வேலைகளை அடுக்கிக் கொண்டே போகிறார். இவர் “தலித் மக்களுக்கு என்ன செய்தீர்கள்” என்றதும் அவர் வாயடைத்து நிற்கிறார்.பதிலே இல்லை. இவர் சொல்கிறார் ” அவர்களுடைய திட்டங்களிலும் எண்ணங்களிலூம் தலித் மக்கள் இல்லவே இல்லை”
ஆந்திரம்:
சார் ஆட்சியராக ஆந்திர மாநிலத்தில் பொறுப்பேற்கிறார்.
பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு அரசு புறம்போக்கு நிலங்களையும் வீட்டு மனைகளையும் பிரித்து வழங்குகிறார்.
சட்டம் தனக்கு வழங்கியுள்ள அத்தனை அதிகாரத்தையும் ஏழை மக்களுக்கு சேவை செய்ய பிரயோகிக்கிறார்.
மந்திரி சபை:
ஒரு சார் ஆட்சியரின் ‘தொந்தரவு தாங்காமல்’ அவரை என்ன செய்யலாமென பேசுவதற்காக அமைச்சரவை கூடுமளவுக்கு வேலை பார்க்கிறார்.
ஆட்சியர் கிராமங்களுக்கு போகும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சென்று மக்களின் பிரச்சினைகளை அங்கேயே தீர்ப்பது இவரது பாணி.
இவரை சமாளிக்க முடியாமல் டெல்லி அனுப்படுகிறார்.
ரகசியக் குறிப்பு
‘கலப்பு மணங்களை ஆதரிப்பது, ஏழைகளிடம் அதிக கரிசனம் காட்டுவது, கிராம அதிகாரியைவிட கிராம மக்கள் சொல்வதையே நம்புவது’ என்கிற உயரதிகாரிகள் எழுதிய ரகசியக் குறிப்பால் ஈர்க்கப்பட்டு நிலக்கரித்துறைக்கு இவரை கேட்டுப் பெற்று இணைத்துக் கொண்டார்கள்.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் இணைச் செயலாளராக தொடங்கி
நல்வாழ்வுத் துறை செயலராக ஓய்வு பெறும் வரை….
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
சட்டம் வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தினார்,
அதிகாரத்தை பயன்படுத்தி சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் உருவாக்கினார்.
* SC ST தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகார சட்டத் திருத்தம் 1990.
* புத்த மதம் தழுவிய தலித்துகளை பட்டியல் சாதியினரென அங்கீகரிக்கும் சட்டம்
* SC ST மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989
* அதன் திருத்த சட்டம் 2015.
*எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல, 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் கமிசன் அறிக்கை, பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமாக இழரது முயற்சியாலேயே நிறைவேற்றப் பட்டது.
* இச் சட்டத்தை நிறைவேற்றினால் ஆட்சி கவிழும் என்று தெரிந்தே இது நடந்தது.
* இந்த இடத்தில் சாதாரண மக்களுக்காக நனது ஆட்சியை தியாகம் செய்த வி.பி.சிங் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வது பொறுத்தம்.
“BE YOUR OWN LIGHT” எனும் புத்தரின் வழிகாட்டலே தன் வழியாக இருந்தது என்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன்.
1991 ல் ஓய்வு பெற்ற பிறகும் 2019ல் மறையும் வரை பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஓயாமல் உழைத்தார்.
இவர் ஜனதா, தேசிய முண்ணனி, காங்கிரஸ் ,பாஜக என அனைத்து வகையான ஆட்சியாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களின் சேவைக்காக பயன்படுத்தினார்.
இவர் ஓய்வு(1991) பெற்ற பிறகும் 2015 ல் பாஜக ஆட்சியில் SC ST வன்கொடுமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் பெரும்பங்காற்றினார் என்பதே அவருடைய அர்ப்பணிப்பும் நேர்மையும் எந்தளவு அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கான சான்று.
மேலும் அவர் பணி
ஓய்வு பெற்ற பிறகும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்புச் செயலராகவும் அரசின் இன்ன பிற அமைப்புகளிலும் இடம் பெற்று ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வந்தார்.
* சமூக நீதிக்கான தேசியப் பேரவை எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நலிவடைந்த மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ந்து இறுதி மூச்சு வரை இயங்கினார்.
87 வயதில் மரணமடைந்த இவர் இன்னுமொரு பத்தாண்டுகள் வாழ்ந்திருக்க வைண்டும்.
ஒரு அதிகாரி நேர்மையானவராகவும் அப்பழுக் கற்றவராகவும் சட்டத்துக்குட்பட்டு செயல்பட்டால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.
இவரை மகாத்மா
என்றாலும்
மனிதருள் மாணிக்கம்
என்றாலும் இன்னும் மேலே சொன்னாலும் தகும்.
சமூக நீதிக்காகப் பாடுபடும் ஜனநாயக சக்திகள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.
சமூக நீதிக்கான அறப்போர்
பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)
உரையாடல்:
முனைவர் வே.வசந்தி தேவி
‘A CRUSADE FOR SOCIAL JUSTICE ஆங்கில மூலத்தின் தமிழாக்கம் மு.ஆனந்தன் (தமுஎகச)
வெளியீடு
சவுத் விஷன்
ந.சண்முக சுந்தரம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஈரோடு.
மிகச்சிறந்த விமர்சனம், மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்