தமிழகத்தின் ஆன்மீக மரபு..
பெரும் இலக்கிய வளம் கொண்ட தமிழ் மொழியும் தமிழர்தம் வாழ்வும் மிகவும் இலகியத் தன்மை கொண்டது. மனித வாழ்வின் இல்லாமையை பேசிய அதே அளவு மனித வாழ்வின் இருப்பு குறித்தும் பேசியது தமிழர் மரபு. இறைவனோடு சேர்வதே வீடு பேறு என்று சொன்ன தமிழ் மொழி, சாகாவரம் குறித்த ஆசையையும், மோட்சம் குறித்த கற்பனையையும் வளர்த்தது. இவ்வாழ்க்கையே மாயை என சித்தரித்த பாடல்கள் ஒலித்தாலும் நமது வாழ்வில் எது நேரடியாய், குறிப்பாக பொருளாகப் பார்க்க முடிகிறதோ அதுவே உண்மை என்ற பாடல்களும் ஓங்கி ஒலித்தன.
”நீர் மிகின் சிறையும் இல்லை தீமிகின் / மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை / வளி மிகின் வலியும் இல்லை” என்று ஐயூர் முடவனாரும்,
“நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம் / உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே / உண்டி முதற்றே உணவின் பிண்டம் / உணவெனப் படுவது நிலத்தொடு நீரே / நீரும் நிலனும் புணரியோர் / ஈண்டு உடம்பு உயிரும் படைத்திசினரோ” என குடபுலவியனார் பாடிய புறநானூறுப் பாடல்கள் போதும் உதாரணத்திற்கு.
இந்திய வரலாறு நேர்கோடில்லை ?
உலகம் முழுவதும் மனிதகுல வரலாறு எப்படி நடை போட்டது? வேட்டை சமூகத்தில் கிடைத்ததை பொதுவாக உண்டு வளர்ந்த, பெண்கள் தலைமை தாங்கிய புரதான பொது உடமைச் சமூகம். எதிர்ப்பட்ட கூட்டத்தை போரிட்டு வீழ்த்தி அவர்களில் இலவச உழைப்பிற்காக அடிமைப்படுத்திய, ஆண்டான் அடிமை சமூகம். நதிக்கரையில் தோன்றிய நில உடமை குவிப்பை செய்த முடியாட்சி அரசுகள். அதாவது நிலவுடைமை சமூகம். அந்த அரசாட்சிகளை வெட்டி வீழ்த்தி, அந்த ரத்த சகதியில் உருவான, தொழில் புரட்சியில் உருவான முதலாளித்துவ சமூகம். அந்த முதலாளித்துவம் தனக்கு சவக்குழியை உருவாக்க உற்பத்தி செய்தது தொழிலாளி வர்க்கம். அந்த தொழிலாளி வர்க்கம் உருவாக்கிய சோசலிச சமூகம். என இதுவரை இந்த மனிதகுல அரசியல் வரலாறுகள் மாறி வந்துள்ளது.
ஆனால் உலகம் முழுவதும் நடந்த வரலாறு இந்திய சமூகத்தில் அந்த வரிசைப்படி நடைபெறவில்லை என்பதே விந்தை. நில உடமை சமூகத்தை முற்றிலும் வீழ்த்தாமல் அதன் கூறுகளை அப்படியே உள்வைத்து வளர்ந்த முதலாளித்துவ சமூக அமைப்பு உருவாக்கியதுதான் நமது சமூகம். இதனை கீழ்வருமாறு எளிதில் இப்படி புரிந்துக்கொள்ளலாம்.
புரதான பொது உடமை சமூகம், ஆண்டான் – அடிமை சமூகம், நிலபிரபுத்துவ சமுகம் பின் அதன் அழிவில் எழுந்த முதலாளித்துவ சமூகம் என்ற நேர்கோடுதான் உலகம் முழுவதும். (உற்பத்தி முறை வளர்ச்சி, அதன் போக்குகள் பிரதேச அளவில்கூட ஒவ்வொரு நாட்டிலும் மாறுபட்டிருந்தாலும்) ஆனால் இந்திய துணைகண்ட சமூகத்தில்தான் நிலபிரபுத்துவத்துடன் முதலாளித்துவம் சமரசம் செய்துகொண்டது. இது உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை. இத்தகைய சாதி அமைப்பு முறை வேறெங்கும் இல்லை இப்படி நிலபிரபுத்துவத்துடன் முதலாளித்துவம் சமரசம் செய்துகொள்ள அடிப்படை காரணம் இங்கு இருந்த உற்பத்தி முறையில் ஊடாடி நின்ற சாதி அமைப்பு முறைதான்.
இது உலகில் வேறெங்கும் இல்லாதது மட்டுமல்ல உற்பத்தி சாதனங்கள் அபார வளர்ச்சி அடைந்தாலும், நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்ட மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாகி, கூட்டம் கூட்டமாய் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கினாலும், வர்க்க உணர்வைவிட சாதிய உணர்வு தொழிலாளி வர்க்கத்திடம் ஓங்கி நிற்க இந்தச் சாதி அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆன்மீகம் எங்கு வருகிறது?
சாதிய முறைமையால் மனிதர்களை இழிநிலையில் வைத்த இந்திய சமூகத்தில், ஆற்றாது உழன்ற மக்களுக்கு விடுதலை தரும் நெறியாய் உதித்த மதங்கள், சாதிய முறைமைகளை காக்கும் கடவுளர்களை முன்வைத்து தனது பண்பாட்டை கட்டமைத்தன. சாதிக்கு ஒரு கடவுளும், குலத்திற்கு ஒரு சாமியும் உதித்தன. இக்கடவுளர்களை சுற்றி நடைபெறும் பண்பாட்டு அசைவுகள் சாதியமுறைமையை பாதுகாக்கும் நிகழ்வுகளாகின.
கொடும் ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட பெருமுதலாளிகள் தலைமை தாங்கும் முதலாளித்துவ நிலபிரப்புத்துவ அமைப்பு முறை கோடிக்கணக்கான மக்களைச் சுரண்டி கொழுக்கிறது. நுகர்வு பண்டங்கள் நிறம்பி வழியும் சந்தையில் அதை வாங்க வசதியில்லாத உழைக்கும் கூட்டம் ’நமக்கு விதிக்கப்பட்டது’ இதுதான் என விதியை நொந்து அதை மாற்ற கடவுளைத் தேடிப்போகும் சூழலில் ஆன்மீகம் முக்கியத்துவம் பெறுகிறது.
இங்குதான் சனாதனம் ஆன்மீகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. எனவேதான் இன்று சனாதனவாதிகள் எதிர்ப்பில்லாமல் விளையாடும் களமாக ஆன்மீகம் எழுந்து நிற்கிறது பண்மைத்துவத்தை சிதைக்கும் ஒற்றைத் தன்மையை உருவாக்க ஆன்மீகம் பயன்படுகிறது. கடவுள் என்ற நம்பிக்கை அவர்கள் திரட்சிக்கு அடிப்படையாக உள்ளது. ஆனால் உண்மையான ஆன்மீகம் எது என்பதை உரத்துச் சொல்லாமல் சனாதன எதிர்ப்பை கட்டமைக்க முடியாது.
மனிதனை முன் நிறுத்தும் ஆன்மீகம்:
“பறைச்சியாவது ஏதடா / பணத்தியாவது ஏதடா / இறைச்சி தோல் எலும்பிலும் / இலக்கமிட்டு இருக்குதோ”. “சாதியாவது ஏதடா / சலம் திரண்ட நீராலோ / பூத வாசல் ஒன்றலோ / பூதம் ஐந்தும் ஒன்றலோ”
என்று சனாதனம் முன் நிறுத்தம் சாதிய முறைமையினை பறைச்சி என்பவர் யார்? பணத்தி என்பவர் யார்? அவர்களின் வேறுபாடுகள் என்று நீங்கள் கூறுவது அவர்களின் எலும்பு அல்லது தோல் அல்லது சதையிலோ குறிக்கப்பட்டு உள்ளதோ என்றும் சாதிகள் என்பது ஏதடா… உடம்பில் ஓடும் குருதி ஒன்றாக இருக்கின்றது, பஞ்ச பூதங்களும் ஒன்றாக இருக்கின்றன, இந்நிலையில் சாதி பேதங்கள் மட்டும் எங்கிருந்து வருகின்றன என சித்தர் சிவவாக்கியர் கேள்வி எழுப்பிய நமது மரபை முன்னெடுக்க வேண்டும்.
(படம்:சித்தர் சிவவாக்கியர்)
”படமாடக் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயின் / நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றும் ஆகா / நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் / படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமே”
அதாவது நடமாடும் கோவிலான மனிதனுக்கு சேவை செய்வதே கோவிலுக்கு உள்ளே உள்ள கடவுளுக்கு செய்யும் உண்மையாக சேவை என திருமூலர் சொன்ன ஆன்மீக மரபு நமதாய் மாற வேண்டும்.
”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் / வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த / வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் / நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் / நேருறக் கண்டுளந் துடித்தேன் / ஈடில் மானிகளாய் ஏழைக ளாய்நெஞ்சு / இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.”
என பாடிய வள்ளலார் சாதி, சமயம், சடங்கு, வருணம், ஆச்சாரம், கோத்திரம், அனைத்தையும் சாடி, சனாதான எதிர்ப்பைக் கட்டமைத்தார். எனவேதான் சனாதன வாதிகளால் திருவருட்பாவில் உள்ள முதல் ஐந்து திருமுறைகளை கொண்டாடியது போல ஆறாம் திருமுறை கொண்டாடப்படவில்லை. காரணம், முதல் ஐந்து திருமுறைகள் சைவம் சார்ந்து அவர் எழுதிய பொதுவானது, அவைகள் வள்ளலாரின் துவக்க நிலையில் உள்ளது. சமயம் சார்ந்தது, தோத்திரம் மிகுந்தது, முக்தி குறித்து பேசுவது, உருவ வழிபாட்டை உயர்த்தி பிடிப்பது, சமய சன்மார்க்கம் பேசுவது,
ஆறாம் திருமுறை சிறப்பானது, பக்தியின் மேம்பட்ட நிலையில் உள்ளது, சமயங்களை கடந்த சமயாதீதம் கொண்டது, பொய்யான தோத்திரங்கள் குறைந்தது, எல்லா உயிர்களையும் நேசிக்கும் சமரச சுத்த சன்மார்க்க தன்மை கொண்டது, மனித வாழ்வின் பொருளாதாய காரணிகளில் அனுபவ ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது, அதைவிட ஆறாம் திருமுறையின் சிறப்பு உருவ வழிபாட்டை மொத்தமாக அது தவிர்த்து. எல்லோரும் வணங்கும் ஒளி வழிபாட்டிற்கு இறுதியாய் வந்து சேர்ந்தது. இவையே இப்போது விவாதிக்கப்பட வேண்டும்.
வர்ணபேதத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதனம் ஒடுக்கி வைத்த சாதிகளிலிருந்து எழுந்து நின்ற அய்யா வைகுந்த சாமிகள் ஆன்மீக மரபு மிக முக்கிய மரபாகும். இப்படி மனிதர்களை ஒன்றிணைக்கும் ஆன்மீக மரபுகளை உயர்த்தி பிடிக்கவேண்டிய அவசியத்தை காலம் நமக்கு உணர்த்துகிறது.
ஆன்மீகம் மனிதர்களை இணைக்கவே:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் எழுந்தருளியுள்ள சங்கர நாராயணசாமி கோயிலில் இருந்த யானை மரணமடைந்த பிறகு நீண்ட நாட்கள் அக்கோயிலில் புதிய யானை கொண்டு வரப்படாமல் இருந்தது. அக்கோயிலுக்கு யானை வழங்கக் கேட்டு வழக்கு போட்டவர் ஒரு இஸ்லாமியர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது வழக்கு தொடர்ந்த ராவுத்தரை பார்த்து நீதிபதி இந்து கோயிலுக்கு யானை வேண்டுமென நீங்கள் எதற்காக வழக்கு தொடுத்தீர்கள் என கேள்வியெழுப்பினார். அதற்கு அந்த ராவுத்தர் சொன்ன பதில் “நூறு ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் மசூதிக்கு விளக்கு எரிய எண்ணெய் கொடுப்பது இந்தக் கோயில்தான். எங்கள் மசூதிக்கும், இக்கோவிலுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. எங்களுக்கு எல்லா இறைவனும் ஒன்றுதான்” என்று சொன்னார். பின்னர் அந்த கோவிலுக்கு யானை வாங்கி கொடுக்க வேண்டுமென தீர்ப்பானது.
ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ளது ஆத்தூர் வண்டிகாளியம்மன் கோயில். இந்த கோயிலில் நடக்கும் திருவிழாவில் பல்லக்கு அலங்கார வீதியுலா மிகவும் பிரசித்தி பெற்றது. மிக அலங்காரமாக ஜோடிக்கப்படும் பல்லக்கில் நான்கு பக்கங்களில் இரண்டு பக்கங்கள் முஸ்லீம் – கிருஸ்த்துவர்களுக்கு சொந்தமுடையது. அவர்கள் பல்லக்கை ஆள் வைத்து தூக்கச் செய்து உடன் நடந்து வருவார்கள். அக்கோயில் திருவிழாவில் அமைக்கப்படும் கடைகளை ஏலம் எடுக்க இந்த இரண்டு சமூகத்திற்கும் உரிமை உண்டு.
திருவாரூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் நடைபெரும் திருவிழாவில் பிரும்மாண்டமாக செய்யப்படும் விளக்கு அலங்காரம் பல்லாண்டுகளாக இஸ்லாமியர்கள் ஏல உரிமை பெற்று செய்து வருகின்றனர். ஏலம் என்றால் டெண்டர் போடும் போது ஒரு ரூபாய் என போடுவர். ஒரு ரூபாய்க்கு இவ்வுளவு பெரிய அலங்காரம் செய்ய முடியுமா? அதை அவர்கள் தங்கள் உரிமையாக நினைத்து முருகனுக்கு அலங்காரம் செய்து வருகின்றனர்.
மாசி மகம் நடைபெரும் போது சிதம்பரத்தை அடுத்துள்ள திருமுட்டம் கிராமத்தில் ( மண்ணுலகை காக்க விஷ்ணு பன்றி அவதாரமாக உருவெடுத்து நின்றது இந்த ஊர் என்று நம்ப்பப்படுகிறது. வராக தேவர், திருபன்றி ஆழ்வார், திருமுட்டத்து ஆழ்வார், ஆதிவராகர் என்ற பெயரால் அழைப்படுகிறது) புறப்படும் பூவராகர் கடவுள், பல தினங்கள் பயணம் செய்து பல கிராமங்களைக் கடந்து கிள்ளை அருகில் கடற்கரையில் தீர்த்தவாரிக்குச் செல்லும் நிகழ்வு நடைபெறும். பூவராகர் கடற்கரைக்கு செல்வதற்கு முன் அங்குள்ள திருநாள் தோப்பு என்ற இடத்திலிருந்து நஞ்சை மகத்து வாழ்க்கை செல்லும் வழியில் உள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான ஹஸ்ரத் சையத் ஷா ரஹ்மத்துல்லா சுத்தாரி தர்ஹாவுக்கு செல்வார். அங்கு கொடுக்கும் பச்சை அரிசி 1 மரக்கால், தேங்காய் 3, பூ மாலை 1, பட்டுத் துணி 1, காணிக்கை ரூபாய் 500 ஆகியவற்றை ஒருதட்டில் வைத்து படைக்கப்படும். பிறகு சாமியுடன் கொண்டுவரும் நாட்டுச் சக்கரை மாலையை எடுத்துக் கொண்டு அனைவரும் மேலதாளத்துடன் தர்ஹாவிற்குச் செல்வர். அங்கு பாத்திஹா ஓதி பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெரும். பிறகு அனைவரும் தர்ஹா அலுவலகத்தில் அமர்வர். ஓதுவார், மேலதாரர்கள், சுமை தூக்குவோர்களுக்கு டீ, சம்சா வாழங்கப்பட்டு அன்பளிப்பாக அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படும். இந்த படையலை ஏற்றுக்கொண்டே கடற்கரை நோக்கி நகர்வார் பூவராகர் சாமி.
இவையெல்லம் சில உதாரணங்கள் தான் வைணவ திருத்தலமான ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கப் பெருமானுக்கு இஸ்லாமிய முறைப்படி கைலி உடுத்தும் கலாச்சாரம் துவங்கி நூற்றுகணக்கான உதாரணங்களைச் சொல்ல முடியும். இந்த ஒற்றுமையைத்தான் சிதைத்து மக்களைப் பிளவுபடுத்த நினைக்கின்றன மத அடிப்படைவாத சக்திகள். சனாதனத்தை சந்திக்க வேண்டிய களம் ஆன்மீகக் களம் என்பதையும், அதை வெற்றிடமாக விட்டு வைத்தால் சனாதனவாதிகள் மட்டுமே ஆடும் களமாக அந்த இடம் மாற்றப்படும் என்பதையும் உணர்ந்து செயலாற்ற வேண்டிய காலம் நம்மை அழைக்கிறது.