மதசார்பின்மையைத் தகர்க்கும் போலி தேசியவாதம்
மதச்சார்பின்மை என்பது :
அரசையும் மதத்தையும் தெளிவான நேர்கோட்டில் பிரிப்பதே மதச்சார்பின்மை ஆகும். ஒரு அரசு எல்லா மதங்களையும் மதிப்பது அவசியமாகிறது. எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமல் இருப்பதும் மற்றொரு பக்கம் அரசு எந்த ஒரு மதத்திலும் தலையிடாமல் இருப்பதும் மதச்சார்பற்ற தன்மையின் அளவுகோளாகிறது. மத நிறுவனங்களையும் அரசு நிறுவனங்களையும் குழப்பிக்கொள்ளாமல் இருத்தல் முக்கியமாகிறது. பொதுவெளியில் நிகழும் மத நடவடிக்கைகளில் குறிப்பிட்ட மதத்திற்குதான் சமூகத்தில் கூடுதல் முக்கியத்துவம் என்கிற உணர்வை ஏற்படுத்துவது கூடாது. அப்படி நிகழுமாயின் அது குறிபிட்ட மத ஆதிக்கத்தை உருவாக்கும். மத பற்றுள்ளதால் அல்லது மத பண்டிகைகளில் ஈடுபடுவதால் ஒருவர் மதச்சார்பற்ற உணர்வுடன் இருப்பார் என்பதும் கற்பிதமாகும்.
தேசியமெனப்படுவது யாதெனில்:
தேசியம் என்பது இதுதான் என ஒரு குறிப்பிட்ட வரையறையை சுட்ட இயலாது. திராவிட தேசியம், தமிழ் தேசியம், இந்து தேசியம், இந்திய தேசியம், இஸ்லாமிய தேசியம் என பல வகைமைகள் உள்ளது. உலகம் முழுவதும் தேசியம் பலவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மொழியோ, மதமோ, இனமோ, நிலப்பரப்போ மட்டும் ஒரு தேசியத்தை வரையறுத்துவிட முடியாது. இதுதான் உலக அனுபவம்.
தமிழ்நாட்டில் ஒரு 30 சதம் மொழிச் சிறுபான்மையர் உள்ளனர்; ஒரு 12 சதம் மதச் சிறுபான்மையர் உள்ளனர்; 18 சதம் பட்டியல் சாதியினர் உள்ளனர். இவர்கள் யாரையும் ஒதுக்கிவிடாமல் உள்ளடக்கியது திராவிட தேசியம். பெரியார் அதன் பிறகு திமுக முதலான திராவிடக் கட்சிகளால் மொழியப்பட்டது திராவிடம் என்ற தேசியம். இரண்டரை சத அளவே உள்ள பார்ப்பனர்களைத்தான் அது வெளியில் நிறுத்தியது. திராவிட தேசியம் என்பது தமிழர்கள் எல்லோரையும் உள்ளடக்குவதாக இருந்தது. எல்லாவகைச் சிறுபான்மை மக்களுடனும் அது மிகவும் நெருக்கமாக இருந்தது. முஸ்லிம் கட்சிகளுடன் அது கூட்டணி அமைத்தது. அது எல்லோரையும் உள்ளடக்கிய தேசியத்தை முன்வைத்தது. அதாவது பரந்த வாக்குவங்கியை அது குறிவைத்தது.
மற்றொரு பக்கம் தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளைப் பேசுகிற சாதியினர்; உருது மொழி பேசும் முஸ்லிம்கள்; மார்வாரிகள் ஆகியோர் தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான மொழிச் சிறுபான்மையினர் என்றனர். தமிழ் தேசியவாதிகளான ம.பொ.சி துவங்கி மணியரசன் மற்றும் சீமான் உள்ளிட்டோர் ‘தமிழர்கள் அல்லாதவர்களை’ அடையாளம் காண சாதியை முன்வைப்பது எத்தனை பெரிய கொடுமை.
தோழர் அ.மார்க்ஸ் கட்டுரையிலில் கீழ்கண்ட முறையில் குறிப்பிடுகிறார். ”சாதி அடிப்படையில் அவர்கள் ஒரிஜினல் தமிழர்களை இனம் காண்கிறார்களாம். உன் சாதியைச் சொல் நீ தமிழனா, இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். நீ ஒரு அருந்ததியன், சௌராஷ்டிர நெசவாளி, உருது முஸ்லிம் என்றால் தமிழன் இல்லை. வீட்டில் தமிழ் மட்டுமே பேசினாலும் சாதியில் நீ நாயக்கராக இருந்தால் நீயும் தமிழன் இல்லை. மண்வெட்டிக் கூலி தின்னும் ஓட்டர்களாக இருந்தால் அவர்களும் தமிழர்கள் இல்லையாம். அவர்கள் எத்தனை ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு, இலவசக் கல்வி முதலியன கூடாதாம். இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் தமிழர்களை ஒன்றிணைக்கும் தேசியமல்ல. சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் தமிழர்களைக் கூறுபோடும் தேசியம்.”
தேசிய சித்தாந்தங்கள்:
குருதேசம், சூரசேனதேசம், குந்திதேசம், குந்தலதேசம், விராடதேசம், மத்சுயதேசம் துவங்கு அங்கதேசம், வங்கதேசம்,கலிங்கதேசம் வழியாக திராவிடதேசம், சோழதேசம், சிம்மளதேசம், பாண்டியதேசம், கேரளதேசம், கர்னாடகதேசம் என 56 தேசங்களாக இந்தியா இருந்தது. இந்தியா, இந்திய தேசியம் என்கிற கருத்தாக்கமெல்லாம் அப்போது கிடையாது. நவீன அரசியலின் எழுச்சிக்கு பின்னர்தான் தேசங்கள் என்ற கருத்தாக்கம் உருக்கொண்டது. முதல் விடுதலைப்போருக்கு 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த பிளாசிப் போர் தேசம் என்ற வரையரைக்காக நடந்ததல்ல, 1857 ஒப்பீட்டளவில் கொஞ்சம் தெளிவாக இருந்தது. அதற்கு பிறகு பிரிடிஷ் ஆட்சியாளர்கள் நேரடியாய் இந்தியாவை ஆள துவங்கிய பின்னர்தான் ஓரளவு எல்லைகள் பிடிபட்டது.
ஒன்றாக இருந்த வங்க மாநிலத்தை இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்ததை மேற்கு வங்கம் எனவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்ததை கிழக்கு வங்கம் எனவும் இரண்டு மாநிலங்களாகப் பிரிடிஷ் ஆட்சியாளட்கள் பிரித்தனர். அனேகமாக இந்திய தேசியம் என்ற விவாதம் முழுவீச்சில் அப்போதுதான் துவங்கியது. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்று அந்நியர்களான பிரிட்டிஷ்காரர்களை எதிர்ப்பது என்பது மிக முக்கிய அரசியலாக முன் நின்றது. வெளிநாட்டிலிருந்து வந்து நம்மை அடிமைகளாக்கி ஆளும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள், அதாவது முஸ்லிம்கள் உட்பட எல்லோரையும் உள்ளடக்கிய இந்தியர்கள் என்ற தேசியம் உதயமானது.
ஆனால் இந்த செயல்முறை எதிர் திசையில் இந்துத்துவ திரட்சிக்குப் பாதை அமைகப்பட்டது. அதற்கு ‘இந்துத்துவம்: இந்து என்பது யார்?’ எனும் புத்தகம் அடித்தளம் அமைத்தது. இந்த புத்தகத்தை 1923ல் எழுதி சாவர்க்கர் வெளியிட்டார். இதை அடிப்படையாக கொண்டு 1925 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வெள்ளையர்களை அந்நியர்களாகவும், எதிரிகளாகவும் பார்ப்பதற்குப் பதிலாக அவர் முஸ்லிம்களை அந்நியராகவும் எதிரியாகவும் கட்டமைக்கத் தொடங்கியது.
ஆனால் அதே சமயம் இந்திய நவீன அரசியலின் அடையாளமாக உயர்ந்துக்கொண்டிருந்த காந்திக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் உரசல்கள் மேலெழ துவங்கியது. அந்த உரசலுக்கு காரணம் “எல்லோரையும் உள்ளடக்கும் காந்தியின் தேசியத்திற்கும், ஒரு சாராரை வெறுத்தொதுக்கும் இந்து அடிப்படைவாதிகளில் தேசியத்திற்கும் இடையிலான முரண்தான். காந்தி தன்னை இந்துவாகச் சொல்லிக் கொண்டாலும் இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமே உரித்தானது எனச் சொன்னதே இல்லை. இது இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட எல்லோருக்குமான நாடு என்றார் அவர்.
காந்தியின் படுகொலை என்பது கோட்சே என்ற நபர் உணர்ச்சிவசப்பட்டு செய்த கொலை அல்ல. அது ஒரு சித்தாந்த கொலைவெறியின் வெளிப்பாடு. வெறுப்புகளுக்கு எதிராக தொடர்ந்து உரையாடிய மகத்தான மனிதனை வெறுப்பு அரசியல் பலி கொண்ட நிகழ்வு அது.நவகாளியில் அவர் நடந்தது ஒரு மகத்தான மனிதநேய அர்ப்பனிப்பு.
நவீன முதலாளித்துவ சந்தைக்கான தேசியம்:
இந்துஸ்தான் பாக்கிஸ்தான் என்ற கோரிக்கைகளில் உள்ள மத அம்சங்களைத் தாண்டி நிலபிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்ட இந்திய முதலாளித்துவ வர்க்கம் தனக்கான சந்தைகளில் முடிந்த அளவு போட்டிகளை விலக்க இக்கோரிக்கையை ஆதரித்தது. உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாடு இந்தியா. இதன் சந்தை உலகின் பல நாட்டு மக்கள் தொகைக்குச் சமம். இந்தியாவில் இருந்த நில உடமையாளர்கள், ஜமீந்தார்கள் ஆங்கிலேயர் விதித்த நில வரியால் வெதும்பி நின்றனர். முதாளிகள் வெள்ளைக்காரர்கள் கொள்ளையடித்த சந்தை தங்களுக்கு வரவேண்டுமெனில் அவர்கள் வெளியேற வேண்டும்.எனவேதான் காந்தி பிர்லா மாளிகையில் இருந்தார். ஜின்னாவை பாகிஸ்தான் முதலாளிகள் கொண்டாடினர்.
மக்களும் கொதி நிலையில் இருந்தனர். காரனம் பிரிட்டிஷ் ஆட்சியின் மறைமுக வரிச்சுமை பெருமளவுக்கு அதிகரித்தது. மொத்த ஆண்டு வரிவருவாய் 1858-59ல் 36.06 கோடி ரூபாயிலிருந்து 1870-71ல் 51.41கோடி ரூபாயாக அதிகரித்தது. அதே சமயம் மொத்த வரியில் நிலவரியின் பங்கு 50 சதவீதத்திலிருந்து, 40 சதவீதமாகக் குறைந்தது. 1877-78ம் ஆண்டில் 6197கோடி ரூபாயாக இருந்த மொத்த வரி, 1901-02ல் 114.52கோடி ரூபாயாக மீண்டும் அதிகரித்தது. அதே சமயம் நிலவரி ரூ.19.89 கோடியிலிருந்து ரூ.27.43 கோடியாக மட்டுமே அதிகரித்தது. விலை மாற்றங்களுக்கு ஏற்ப சரி செய்யப்பட்ட நிலையில் 1870-71க்கும் 1901-02க்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்த வரிச்சுமை 75 சதவீதம் அதிகரித்தது. (இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள் – இர்பான் ஹபீப் – பக் 365)
மக்களின் இந்த நிலையும் விடுதலைப் போராட்டத்தை துரிதப்படுத்தியது. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட சந்தையும் அதற்கு முன் நிபந்தனையாக இருந்தது. ஆனால் இந்தியாவை இந்து அடிப்படைவாதிகள் இந்து தேசியமாகக் கட்டமைக்க விரும்பினர். ஆனால் தத்துவார்த்த அடிப்பயையிலும், மக்கள் திரலிலும் காந்தியம் அதற்கு எதிராக இருந்தது. காந்தியம் இந்திய முதலாளிகளுக்கு அவர்கள் கனவுகளை வென்றெடுக்க மிகவும் இலகுவான வழியாக இருந்தது.
ஆக தேசசியம் என்பது:
இஸ்ரேல் என்றொரு இனம் கிடையாது. யூத மதத்தை பின்பற்றுபவர்கள் தம்மை யூத தேசிய இனமாகக் கருதிக் கொள்கிறார்கள். யூதர்கள் ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல. இட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்ய, அரபு மொழிகளை பேசிய யூதர்கள் எல்லோரும் தாமாக விரும்பி ஹீபுரு மொழி கற்றுக் கொண்டார்கள். அங்கே மொழி பின்னர் வந்தது. இப்படி ஓவ்வொன்றுக்கும் உதாரணங்களைச் சொல்ல இயலும்.
தேசிய உருவாக்கத்தின் அடிப்படை என்ன என்பதை எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் பொதுவாக வரையறுத்துவிட முடியாது. ஒரு நாட்டில் தேசிய உருவாக்கத்தின் அடிப்படையாக மதம் முன்வைக்கப்படலாம்.
சரி, மதம்தான் தேசியத்திற்கு அடிப்படையாக இருக்குமா என்றால் அப்படியும் இல்லை. இரண்டு நாடுகளிலும் ஒரே மதத்தினரே வாழ்ந்தபோதும் பாகிஸ்தானும், வங்கதேசமும் ஒன்றாக இருக்க முடியவில்லை. பெரும் இரத்தக் களறியுடன்தான் அவை பிரிந்தன. பஞ்சாபிலும் மொழிக்கு அப்பாற்பட்ட தேசியத்தைப் பார்க்க முடிகிறது. அங்கு வாழும் சீக்கியர்களும், இந்துக்களும் பஞ்சாபி என்கிற ஒரே மொழி பேசுபவர்களானாலும் அவர்கள் தனித்தனித் தேசியமாக உணர்கின்றனர். அவர்களை ஒரே இனமாக உணரவைக்க மொழிக்கு அங்கே சக்தியில்லை.
சரி எந்த வகையில் தேசியம் என்ற கருத்தாக்க உருவாகிறது. அல்லது உருவாக்கப்படுகிறது. ஆம் கருத்தாங்கள் உருவாக்கப்படுபவைதான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென சொன்னால் அது கட்டமைக்கப்படுபவை. பெரும்பான்மை ஆதிக்க சக்திகளே அந்தந்தச் சமூகங்களிலுள்ள அதைத் தீர்மானிக்கின்றன.
தோழர் அ.மார்க்ஸ் கட்டுரையில் வரும் இந்த பகுதியுடன் இதை நிறைவு செய்யலாம்.
”இந்த நிலையைத்தான் தேசியம் என்பது ஒரு ‘கற்பிதம் செய்யப்பட்ட சமூகம்’ (imagined community) என பெனடிக்ட் ஆன்டர்சன் குறிப்பிடுவார். இதன் பொருள் தேசியம் என ஒன்றில்லை என்பதோ அல்லது அது ஒரு மாயை என்பதோ அல்ல. தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருங்கிணைப்பு சாத்தியமாகிறது. தேசியத்தின் பெயரால் ஒருவன் அல்லது ஒருத்தி ஓர் அடையாளத்தைப் பெறுகிறார்கள். முகம் பார்த்தறியாத எங்கோ இருக்கும் ஒருவரைத் தனது தேசத்தவர் என உணர்ந்து ஒரு ஒற்றுமை உணர்வை (solidarity) வெளிப்படுத்துவதை அது சத்தியமாக்குகிறது. இன்னொரு பக்கம், தேசியத்தின் பெயரால் போர்கள் நடக்கின்றன, கொலைகள் நடக்கின்றன, புதிய நாடுகள் உருவாகின்றன, நாடுகள் பிரிகின்றன, நாடுகள் இணைகின்றன. எந்த அடிப்படையில் நாடுகள் பிரிகின்றன அல்லது இணைகின்றன என்பதைப் பொருத்தமட்டில் வரலாறும் அரசியலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.”