ஆன்மீகம் என்ற போர்வையில்..
செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகள் கலந்து கொண்ட இம் மாநாட்டை வாழ்த்தி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதன் சாரம்சம் இதுதான்
“இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம் ஆகும்.”
”சனாதனம், சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் மாற்ற முடியாதது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் கம்யூனிச இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் துவக்கப்பட்டது. ராஜ்பவனில் இருந்து அடிக்கடி சனாதனம், சனாதனம்னு குரல் கேட்டுக்கிட்டே இருக்கு. பள்ளிகளில் காலை உணவு போடுவதால் கக்கூஸ் நிரம்பி வழியுதுனு ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிடுகிறது. மக்களை சாதியாகப் பிரித்து, தனித்தனியா இருக்கணும்னு சொல்றதுதான் சனாதனம். வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என்று பெண்களை சனாதனம் அடிமைப்படுத்தியது. கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன் கட்டை ஏறவைத்தது”.
இதுதான் அவர் பேச்சின் சாரம். உடனே நாடெங்கும் சனாதனத்தை துக்கிப்பிடிக்கும் சக்திகளும், சங்கிகளும் கூச்சலிடத் துவங்கினர். பல்வேறு மாநிலங்களில் அவர் மீது புகார்கள் கொடுத்தனர். அதன் உச்சமாக ”சனாதனம் குறித்த கருத்தை உதயநிதி வாபஸ் பெறாவிட்டால், மகாராஷ்டிராவிற்குள் நுழைய முடியாது” என அம்மாநில அமைச்சர் மங்கள் பிரபாத் லோதாவும், ’உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி’ என அயோத்தியைச் சேர்ந்த துறவி ? பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிக்கை விடுத்தனர்.
ஆனால் உண்மையில் சனாதன சக்திகள் காலம் காலமாக கருத்தை கருத்தால் எதிர்கொண்டது கிடையாது. வன்முறையே அவர்களது வழிகளாக இருந்துள்ளது, வர்ணாசிரம சனாதன வக்கிரங்கள் குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் கேள்வியெழுப்பினால் அதை இந்து மதத்திற்கு எதிரான கருத்தைப்போல கட்டமைத்து அந்த அமைச்சரையும் அவர் சார்ந்த கட்சியையும் இந்து மக்களுக்கு எதிரிகள் போல சித்தரித்து கலவரங்களைச் செய்யும் மத அடிப்படைவாதிகளுக்கு உண்மையில் இந்து மதத்தின் மீது அக்கரை இல்லை. அவர்களுக்கு இந்து மதத்தை பயன்படுத்தி வாக்குகளை பெருவதே இலக்கு. அதுவும் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற சூழலில் இந்த விவாதம் அவர்கள் வாக்குத் திரட்டளுக்கு உதவும் என நம்புகின்றனர்.
மூடநம்பிக்கைகள் அவர்களது அடிப்படை:
இந்திய விஞ்ஞானிகளின் 15 ஆண்டு கால தொடர் முயற்சியின் பலனாக சந்திரயான் – 3 இன்று விண்வெளி ஆய்வில் மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவின் சந்திரயான் – 3 நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆய்வுப்பணியைத் துவங்கியிருக்கிறது. இந்த மகத்தான சாதனை உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்திருக்கிறது. பூமியிலிருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரனின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியைத் துவக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. இங்கிருந்து அனுப்பும் சிக்னல் சந்திரனுக்கு சென்றடையவே 1.15 வினாடிகள் ஆகும். அதனால் ரிமோட் கன்ட்ரோல் போன்று பூமியிலிருந்து விண்கலத்தை இயக்கிட முடியாது. இத்தனை நுட்பமாய் அறிவியல் வளந்துள்ளது.
ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த அறிவியலுக்கு எதிரான இரண்டு சம்பவங்களை பார்க்கலாம். ஒன்று குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள மகாராஜா, சாயா ஜிராவ் பல்கலைக்கழகத்தில்தான் ‘சனாதன இலக்கியம்’ என்ற பெயரில் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும் வைதீக மதத்தின் கொள்கைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதுவும், நவீன உலக அறிவை மாணவர்களுக்கு தரக்கூடிய ஆங்கிலத்துறையில், இந்தப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உபநிடதங்கள், வேதத்திற்குப் பிந்தைய ஆய்வுகளின் போதனைகளை கற்றுத்தரப் போகிறார்களாம்.
‘சனாதனம் இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு பாடத்திட்டத்தை ஏற்படுத்தியிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்று பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தெரிவித்துள்ளது. ‘தேசிய கல்விக்கொள்கை – 2020’ கட்டமைப்பின் கீழ், நடப்பு கல்வியாண்டு முதல் பி.ஏ. முதலாண்டு மாணவர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பாடமாக ‘சனாதன இலக்கியம்’ இருக்கும். சுமார் 160 மாணவர்கள் இப்பாடத்தை தேர்வு செய்திருப்பதால் அவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் செமஸ்டரில் உபநிடதங்கள் அடிப்படையிலான கதைகள் கற்பிக்கப்படும். இதையடுத்து படிப்படியாக பகவத்கீதை மற்றும் மத அடிப்படையிலான நூல்கள் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டு. உத்தரப் பிரதேச காவல்துறையினர், பஞ்சாங்கத்தை கடைப்பிடிக்குமாறு அம்மாநில டி.ஜி.பி அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நவீன அறிவியல் வளராத காலத்தில், அன்றைக்கு இருந்த அறிவு வளர்ச்சியின் அடிப்படையில் பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. இன்று விஞ்ஞானம் வளர்ந்து செவ்வாய்க்கிரகம் வரை சென்றுவிட்டது. ஆனால், சாமியாரை முதல்வராக கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் டி.ஜி.பி விஜயகுமார், அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமாவாசை நாளில், குற்ற நிகழ்வுகளை தீவிரமாக கண்காணிக்குமாறும், அமாவாசை நாளுக்கு முன்பு, குற்றங்களைத் தடுக்க அதிக முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தியிருக்கிறார். “பொதுவாக குற்றச்சம்பவங்கள் அமாவாசைக்கு ஒரு வாரம் முன்பும், அமாவாசைக்கு ஒரு சில நாள்களுக்கு பின்பும் தான் அதிகமாக நிகழும். எனவே, அதற்கேற்ப, மாதந்தோறும் அந்த நாள்களில் காவல்துறை கண்காணிப்பை அதிகரிக்குமாறு” கூறியிருக்கிறார்.
கடவும் நம்பிக்கையையும், ஆன்மீக களத்தையும் அவர்கள் தங்கள் இந்துத்துவ திரட்டளுக்கு பயன்படுத்த திட்டமிடுகின்றனர். ஆனால் அதை எதிர்த்து மூடநம்பிக்கைகளை உடைத்து, நமது உண்மையான ஆன்மீக மரபை முன் நிறுத்த வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதை புரிந்துக்கொண்டு களமாட வேண்டியுள்ளது.
ஒரு வரலாற்று பின்னணி:
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது வரலாற்று காலத்தில் தமிழ் நுழைந்ததன் அறிவிப்பு முழக்கமாகும். மருதநில ஊரின் நிலப்பரப்புக்குள் குறிஞ்சியும், முல்லையும், நெய்தலும் ஆட்படுத்தப்பட்ட காலம் அது. வென்றோர் பெரியோராகவும், வென்றடக்கப்பட்டவர்கள் சிறியோராகவும் கட்டமைக்கப்பட்டனர். அந்த கடமைப்பை தொடர பண்பாட்டு தளத்தில் மதம் முக்கிய பங்காற்றியது. தமிழகத்தின் பக்தி பேரியக்க வழக்கங்களிலும், சைவ சித்தாந்தம் என்ற தத்துவ பங்களிப்பாலும் இந்து சமயம் எழுந்து நின்றது. சமூக செயல்பாட்டுத் தளத்தில் ஆன்மீகம் முக்கிய பங்காற்றியது.
சனாதன சக்திகள் வேதகாலமே வரலாற்றுக்கு முந்தையது என்று காலச்சக்கரத்தைப் பின் நோக்கி இழுத்தது. அதற்காக அவர்கள் வரலாற்றைத் திரித்தனர். மொகஞ்சதார – ஹரப்பாவில் இல்லாத குதிரைகளை இருப்பதாக கதைத்தனர். ஒற்றைக் கொம்புடைய மிருகத்தை குதிரை எனப் பொய் பிம்பம் ஒன்றை உருவாக்கினர் பின் அந்தப் பொய் அம்பலப்படுத்தப்பட்டது, நகர நாகரீகம் இல்லாத வேத காலத்தை நகர நாகரீகம் ஓங்கி நின்ற ஹரப்பாவுடன் இணைக்க முயன்றனர்.
நாம் நினைவில் கொள்ள வேண்டியது தமிழக சூழலும்தான். மாங்குடி மருதனார் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் குறித்து பாடிய மதுரை காஞ்சியில் மொத்தம் உள்ள 782 பாடல்களில் 397 பாடல்கள், அதாவது சரிபாதி பாடல்கள் நகரம் குறித்து வர்ணனைகளைக் கொண்டது. நதிகளைப் போல விரிந்த வீதிகளையும், மாட மாளிகைகளைகளயும், நாளங்காடியையும், அல்லாங்காடியையும் படம்பிடித்து காட்டியது நகர நாகரீகத்தின் அடையாளம் ஆனால் வேதகாலத்திலிவை எதுவும் இல்லை.
மற்றொரு பக்கம் விவசாயப் பண்பாட்டின் வெளிப்பாடான சாங்கியமும் தந்திரமும் போன்ற தத்துவங்கள் முகிழ்த்தன. இவை பெண்களை முதன்மைபடுத்தின. பல தத்துவங்கள் இங்கு நிறைந்து இருந்தது. பெளத்த நூலான மனிமேகலையில் வஞ்சி நகரில் அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகிய சமய கணக்கர்களுடன் விவாதித்த கதியுண்டு. சமண நூலான நீலகேசியில் நீலகேசி என்ற பெண் பரபக்கவாதம், புத்தவாதம், ஆசீவகவாதம், சாங்கிய வாதம்,வைசேடிகவாதம், வேதவாதம், பூதவாதம் என சமய ஆசிரியர்களிடம் வாதிக்கும் கதையுண்டு.
ஆக பல பண்பாட்டு கூறுகளை, தத்துவார்த்த பண்புகளை கொண்ட இந்த மண்ணின் பன்மைத்துவத்தை ஒற்றை தன்மையில் அடைக்க சனாதனம் முயல்கிறது. மேற்கண்ட வரலாற்று பின்னணியில் வளர்ந்த நமது ஆன்மீக மரபை அறிந்துகொள்வோம்.

