நூல் அறிமுகம்: பெண்வாழ்வும் தொன்மங்களின் ஆதியும் பேசும் “சந்தனத்தம்மை” – அ.கரீம்நூல்: சந்தனத்தம்மை
ஆசிரியர்: எம்.எம்.தீன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ₹140.00 INR*

தேனி மாவட்டம் கம்பத்தில் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் “ஒருநாள் சாமி” விழாவாக முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. முந்தின தினம் சாமியைச் செய்துவந்து மறுநாள் முழுக்க அதனை வணங்கி அன்று மாலை குளத்து மேட்டில் வைத்து எல்லோரும் அடித்து நொறுக்கி தங்களது வழிப்பாட்டை நிறைவு செய்கிறார்கள். முத்தாலம்மன் என்கிற சாதி இந்துவை சேர்ந்த பெண் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனை விரும்பி ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொள்கிறாள். தேடிக் கண்டுபிடித்த உறவினர் கூட்டம் அவளது கணவரை அங்கேயே கொன்றுவிட்டு முத்தாலம்மனை ஊருக்கு அழைத்து வந்து எல்லோர் முன்னிலையிலும் குளத்து மேட்டில் வைத்து அடித்தே கொலை செய்யப்படுகிறாள். வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை யார் திருமணம் செய்தாலும் அவர்களுக்கும் இதுதான் தண்டனை என்று அச்சுறுத்தவே பொதுவெளியில் இப்படியொரு தண்டனை அன்று கொடுக்கப்பட்டது.

அந்த கொலையைப் பார்த்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயத்தில் உடல் சுகமில்லாமல் போகிறது, “முத்தாலம்மன் சாபம்” என்று எல்லோரும் பயந்து அவளது கோபம் தணிக்க மண் உருவம் செய்து வழிபாடு செய்வதாகவும், இறுதியில் அவளைக் குளத்து மேட்டில் வைத்து அடித்து உடைப்பதாகும் முடிவாகிறது (கொலைக்கான காரணத்தைக் காலம் காலமாகக் கடத்த இந்த வழிமுறை). அந்த வழக்கம் இப்போதுவரை நீள்கிறது. ச.தமிழ்ச்செல்வன் எழுதிய சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்ற புத்தகத்தில் இதனைப் பதிவு செய்கிறார். தொன்மமாக வழிபடும் எல்லா தெய்வங்களுக்கும் பின்னால் இப்படியொரு கதை இருப்பதை நாட்டார் வழக்காறு ஆய்வுகள் சொல்கிறது. சந்தனத்தம்மை என்ற பெண் தொன்மத்தைக் குறியீடாக முன்வைத்து எம்.எம்.தீன் எழுதிய “சந்தனத்தம்மை” என்ற நாவல் ஒரு கொலையிலிருந்து துவங்குகிறது.

கொடை விழாவுக்கு முந்தின நாளில் பண்ணை வீட்டுப் பெண்ணை குலதெய்வம் “சந்தனத்தம்மை” போல அலங்கரித்து சந்தனம் பூசி உட்கார வைப்பார்கள். அவள் தரும் எழும் பிச்சை பழத்துக்காக ஊரே காத்திருக்கும் யார் யாருக்கு வழங்குகிறாளோ பெற்றவர்கள் யோகக்காரர்கள் அந்த ஆண்டு முழுவதும் நிறைவாக இருக்கும் என்பது அவர்களின் ஐதீகம். மரகத நாச்சியாள் அன்று மட்டுமல்ல எப்போதும் கொண்டாடும் தெய்வமகள்.

மரகத நாச்சியாரை அவளது கணவரே சந்தேகத்தின் பேரில் கொலை செய்கிறான். கொலை செய்த இரவு முழுக்க அவள் அருகிலேயே கிடக்கிறான். அந்த நீண்ட இரவில் கொலை குறித்து சுயபரிசீலனை செய்கிறான். தான் மிகப்பெரிய முட்டாள்தனத்தைச் செய்ததாக முடிவுக்கு வருகிறவன் தன்னை தானே கத்தியால் குத்தி சரிந்து விழுகிறான். அந்த நீண்ட இரவே “சந்தனத்தம்மை” நாவல்.நாச்சியாளுக்கு அவளது வீட்டுக்குக் கட்டிட வேலை செய்ய வந்த மேஸ்திரி மீது காதல் வருகிறது இது அவனுக்குத் தெரியாது. அவனையே திருமணம் செய்யவேண்டுமென்று விரும்புகிறாள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பண்ணையார் வீட்டுக்கு வருகின்ற மருமகன் ஒரு மேஸ்திரி என்பதை அவர்கள் குடும்பம் விரும்பவில்லை. அவளது குடும்பத்தினர் பலமுறை அவளிடம் பேசியும் மனம் மாறவில்லை. வேறு வழி இல்லாமல் ஊரின் தெய்வமாக இருக்கும் அவளை அவளது விருப்பத்தின்படி திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் சகோதரர்கள் அதன்பின்பு எந்த உறவும் இல்லை என்று வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார்கள். மரகதநாச்சியாள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. வீட்டிலிருந்து வெளியேறியவள் விரும்பியவனைக் கைபிடித்து வாழ்க்கையைத் துவங்குகிறாள். அவளது கணவனுக்கு எல்லாம் கனவு போல இருக்கிறது. ஊரே அவனை அதிர்ஷ்டசாலி என்று மெச்சுகிறது.

பூரிப்போடு திரிந்தவன் குழந்தைப்பேறு இல்லாமல் குடிகாரனாகிறான். தொழில் இழக்கிறான். அவன் உள்ளத்தில் சந்தேகம் விரிகிறது. ஆண் சமூகத்தில் பெண் வாழ்வு எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாகிறது என்ற புறச் சூழலை நாவலில் விசாரணைக்கு உட்படுத்தி நகர்த்துகிறார் எம்.எம்.தீன்.

குழந்தைப்பேறு இல்லாமல் நகரும் நாச்சியாள் வாழ்வும், தெரிந்தவர்களோடு பேசினாலும் சந்தேகமாகப் பார்க்கும் கணவனின் உள்மனதையும், எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற அவளின் வேட்கையும் குறுக்கும் நெடுக்குமாக எல்லா திசையிலும் நாவலை நகர்த்தி ஒரு கொலை வழக்கை அதன் எல்லா கோணங்களிலிருந்து அணுகுவதைப் போல “சந்தனத்தம்மையை” அணுகுகிறார் எம்.எம்.தீன்.

தன் அன்பு மனைவியை அவசரப்பட்டு கொலை செய்துவிட்டு பின்பு இது கேவலமான செயல் என்று தன்னை தானே நொந்துபோவதும், அந்த உடலை எந்த நரிகளும் இழுத்து செல்லாமல் விடிய விடியக் காவல் காப்பதும் மிக நேர்த்தியாக தன் எழுத்தால் தீன் பதிவு செய்கிறார். அவனது தவிப்பை ‘திடிரென நரி ஊளையிடும் சத்தம் மொட்டைப்பாறை அருகிலிருந்து கேட்டது அதனைத் தொடர்ந்து இன்னொரு நரியின் ஊளை காதை துளைத்தது “அய்யோ.. பொல்லாத சனியன் ஆச்சே, வந்த படையோட வருமே, அதன் ஊளைச் சத்தம் செந்நாய்க்குக் கேட்டு ரத்த வாடை பிடித்துவிட்டால் அதோ கதிதான், நாச்சியாள் உடலைப் பதம் பார்த்து விடுமே எப்படியாவது பாதுகாக்க வேண்டும்” அவள் கிடக்கும் இடத்தை விட்டு எங்கும் போகக்கூடாது என்று முடிவு செய்தான். அவன் மனது அவனிடம் நடத்தும் விசாரணை ஆண்மை சமூகத்தில் எல்லோரையும் நோக்கி நடத்தப்படும் விசாரணையாகும். செய்த செயலுக்கு முரணாக அவன் நடந்துகொள்வதையும், கடைசியில் தன்னை தானே குத்திக் கொள்கிறான்.நாச்சியாளையும் அவளது கணவரையும் யாரோ திருட்டு கூட்டம் கொலை செய்துவிட்டதாகத் தகவல் பரவி ஊரே திரண்டு வருகிறது. உயிர் போகும் கடைசி நொடியில் அவன் மக்களால் காப்பாற்றப்படுகிறான். மயக்கம் தெளிந்தவன் அருகிலிருந்த மொட்டைப்பாறை மீது நின்று நடந்த உண்மையைச் சொல்ல ஆரம்பித்தது போல ”எல்லோரும் நான் சொல்லுறதை கேட்டுட்டு நாச்சியாளை தூக்கிட்டு போங்க” என்று நாவலை நிறைவு செய்கிறார் தீன். அவன் பாறை மீது நின்று உண்மையைச் சொல்கிறானா இல்லை என்ன சொல்லுவான் என்பதை அவனுக்கும், வாழ்வுக்கும், மனதுக்கும் நடுவே நிகழும் உரையாடல் மூலமாக வாசகர்கள் தெரிந்து கொள்ளாலாம்.

நாச்சியாள் அந்த ஊரின் தொன்ம தெய்வமாக வணங்கப்படுகிறாள். ஒவ்வொரு தொன்ம வழிபாட்டையும் நேர்மையோடு விசாரணை செய்யப்பட வேண்டியதை “சந்தனத்தம்மை” வாசித்தபோது உணர முடிகிறது. எல்லா தொன்மத்துக்குள்ளேயும் ஒரு நீண்ட கதை உண்டு.

நாச்சியாள் கொலை செய்யப்பட்ட நேரம் முதல் விடியும் நேரம் வரை ஒவ்வொரு மணி நேரத்தின் தமிழ் காலத்தைத் தலைப்பாக வைத்து அதன்மீது நாவலின் விஸ்தரிப்பு செய்தது நேர்த்தி. “இரவு வேய்ந்த இருள் பந்தலைக் கிழக்கே இருந்து பிரித்துக்கொண்டே வருவதைப்போல வெளிச்சம் வந்தது. அது மேற்கு நோக்கி விரிந்தது” மிக அழகான கட்சிகளை நாவல் முழுக்க ஆசிரியர் விரிக்கிறார். பெண் வாழ்வின் வழியே தொன்மங்களின் மீது நடத்தப்படும் நீண்ட விசாரணையே “சந்தனத்தம்மை”. ஆசிரியர் எம்.எம்.தீனுக்கு வாழ்த்துக்கள். .

ஆசிரியர் எம்.எம்.தீன்

சந்தியா பதிப்பகம்

விலை 140/-