நாச்சியாள் விரதத்தின் பொலிவோடு பெருந்தேவியாக வெளியே வருகிறாள் சந்தன மணத்தை அகிலம் முழுதும் பரப்பிய வண்ணம் என்ற காட்சியினை கண்முன் கொண்டு வந்ததை முன்னுரை எழுதிய வண்ணதாசன் சந்தன மணத்தை நுகர்ந்தவுடன் நறுமணம் பரப்பும் தன்னலக்காரன் என்று நாவலாசிரியர் எம்.எம்.தீன் அவர்களை பாராட்டும்போதே,
எலுமிச்சம் பழமாகத்திகழும் நாச்சியாளை மனதளவில் நான் ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒண்ணுக்கு(ஒன்றுக்கு) இருப்பவனைப்போல பாவனை செய்து இரும்பு பட்டையினால் நடுத்தலையில் நங்கென்று நாச்சியாள் தலையில் அடி கொடுத்தவுடன் தான் நான் சுதாரித்துக்கொண்டேன், நாச்சியாளுக்கே இந்த அடின்னா மனசுள நினைச்ச எனக்கு எந்த அடி விழும் என்பதை உணர்ந்தவனாய் ஓரத்தில் ஒளிந்து நின்று மேஸ்திரியையும் அவளுடைய மனைவி நாச்சியாளையும் பார்க்கும்போது அன்றைய பொழுது சாயங்காலம் 06-00மணி இருக்கும் மறுநாள் காலை 09-00மணிவரைக்கும் சுமார் 15மணிநேரம் இரவு முழுதும் விழித்திருந்து பார்த்ததை என் நடையில் உங்களிடம் விமர்சிக்கப்போகிறேன்.
நாவல் முழுவதும் ஒரு நாள் சாமத்தின் பொழுதினை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளும்விதமாக விடிய விடிய விழிக்க வைத்திருக்கும் ஓட்டம் வெகு சிறப்பு. மாலை 06-00மணிக்கு மேல் ஒவ்வொரு பொழுதிலும் நமைக்கடத்தியிருப்பார் மூஞ்சி கருக்கல், கருக்கல், முன்னிரவு, இரவொடுங்கும் நேரம்,முதல் ஜாமம், பேயாடும் நேரம்,அர்த்த ராத்திரி, இரண்டாம் ஜாமம்,புல் தூங்கும் நேரம்,கல் தூங்கும் நேரம், கள்ளச்சாமம், மூன்றாம் ஜாமம், பின்னிரவு, பிரம்ம முகூர்த்தம்,நூல் பிரியும் நேரம், வைகறை, புலர் காலை, மம்மல், சூர்யோதயம், இளங்காலை என நாம் கடந்துசெல்லும்போது இளவெயிற்பொழுதில் மேஸ்திரி காயாம்பாறை மேட்டிலேறி நடந்தவற்றைக் கூறும்போது நாமே நாவலின் முடிவினை நிரப்பும்பொருட்டு நாவலை இட்டுச்சென்றுள்ளார்.
முதல் நாவலான யாசகத்தை வாசிக்கும்போது யாருக்கும் தெரியாமல் ஆசிரியரும் யாசகம் பெற்றுத்திரிந்திருப்பாரோ என நினைக்கச்செய்த என்னை, இரண்டாம் நாவலான சந்தனத்தம்மையிலும் என் எண்ணத்தை நீட்டிச்செல்கிறார். மட்டம் பார்க்கும் மட்டக்கம்பினைக்கொண்டு சமதளம் பார்க்கும்போது, மணலையும் சிமெண்டையும் மூணுக்கு ஒண்ணு(ஒன்று) வீதத்தில் கலந்து பண்ணை பிடித்து பள்ளம் பறித்து சாந்துல தண்ணீர் ஊற்றும்போதும் ஒரு கொத்தனாராகவும், உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்தபோது கொலைகாரனாகவும் திகழ்ந்திருப்பாரோ என யோசிக்க வைத்துவிட்டார்.
நாவலை இங்கே கூறிவிட்டாள் உங்களது அனுபவத்தை அபகரித்தவனாகிவிடுவேன்
அதனால் நாவலைத் தவிர்த்து நடைபோடுவோம்.
பண்ணைக் குடும்பத்தைச் சேர்ந்த நாச்சியாளை சாந்து சட்டி சுமக்க வைத்தது மேஸ்திரியின் குடிப்பழக்கமா அல்லது நாச்சியாளின் காதலை ஏற்க மறுத்து ஒன்றும் கொடுக்காமல் வீட்டைவிட்டு வெளியேற்றிய உடன்பிறப்புகளா என்பதை வாசிக்கும்போது அறியலாம்.
வேலைக்குப்போகும் பெண்ணை தன் இயலாமையினால் மட்டம் தட்டும்விதமா மற்றவனோடு இணைத்துப்பேசும் சமூகத்தை நம்பும் ஆம்பளை, சாப்பாட்டில் விசம் வைத்தாலும் பொண்டாட்டி மேலுள்ள நம்பிக்கையில் சாப்பிடும் மனசு ஏன், ஊர்ப்பேச்சைக்கேட்டு நம்பிக்கையற்றவனாக மாறி கொலைசெய்யத் துணிந்துவிடுகிறது. அவளின் அன்பினை யோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டோமேயென துடித்து நடுங்கும் மனதினை அக்கணம் நிதானமாகக் கொண்டு சென்றிருப்பின் இதைப்போல் தொடரும் சந்தேகக் கொலைகள் தவிர்க்கப்படலாம்.
நாவல்: சந்தனத்தம்மை
ஆசிரியர்: எம்.எம். தீன்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
சென்னை- 600 083.
முதற்பதிப்பு: மார்ச் 2020
விலை: ரூ. 140/-
நாவல் விமர்சனம் :
செல்வக்குமார், இராஜபாளையம்.