Sandhiya Natarajan in Mayavaram Sila Ninaivugalum Sila Nigazhvugalum Book Review by Na. Ve Arul. Book day is Branch of Bharathi Puthakalayam

சந்தியா நடராஜனின் “மாயவரம்”- ஒரு காவிரிக்கரை நகரத்தின் கதை



நா.வே.அருள்

“மாயவரம் காளியாகுடி ஹோட்டலில்…காபி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் சொக்குப் பிள்ளை கடையில் தவறாமல் வறுத்த நெய்சீவலுடன் கொழுந்து வெற்றிலையும் பன்னீர்ப் புகையிலையும் மெல்லுவது பிறவிப் பயன் என்று கருதிய பரம்பரை இருந்தது என்பது சத்தியம். அதற்குப் பிறகுதான் காவேரி ஸ்நானம். எல்லாக் குடும்பங்களிலும் வயதானவர்கள் கையில் வெற்றிலைப் பெட்டி இல்லாமல் இருக்காது. வசதிக்கேற்றபடி அதில் வாசனாதிகள் நிறைந்திருக்கும். கிராம்பு இருக்கும். ஏ ஆர் ஆர் வாசனைச் சுண்ணாம்பு இருக்கும். கத்தகாம்பு இருக்கும். களிப்பாக்கும் இருக்கும். மைதீன் புகையிலையும் பன்னீர்ப் புகையிலையும் தனித்தனியே இருக்கும். கத்தகாம்பு என்பது ஒரு சின்ன செம்மண் கட்டியைப் போல இருக்கும். கை விரல் நகத்தால் கொஞ்சம் கீறி, விழும் தூளை வெற்றிலையில் சேர்க்க வேண்டும். இது வாயைச் சிவக்க வைக்கும் மருந்து. அளவு சற்று அதிகமானால் வாய் வெந்து வீங்கிவிடும்.”

இப்படி புனைவிலக்கியத்துக்குச் சற்றும் குறையாத வர்ணனைகளால் மாயவரத்தை மனிதர்களாலும் மலரும் நினைவுகளாலும் நிறைத்திருக்கிறார் ஒரு மாயவரத்துக்காரர். சந்தியா நடராஜன்.

காளியா குடி காபியைப் போலவும் சொக்குப் பிள்ளைக் கடையின் பன்னீர்ப் புகையிலையையும் போலத்தான் அவரது “மாயவரம்”. முருகேச முதலியார் போடுகிற மூக்குப் பொடியின் அதே லாகிரி வாய்த்துவிடுகிறது மாயவரம் பற்றிய நினைவுகளின் நெடி.

அந்தக் காலத்திலேயே இலண்டனைத் தமிழைத் திரும்பிப் பார்க்க வைத்த மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதல் எல்லோருக்குமான இரண்டு ரூபாய் டாக்டர் இராமமூர்த்தி, எம்.பி.பி.எஸ் வரை தமிழ்ப் பண்டிதன் ஸ்டெப் கட்டிங் செல்வமணி முதல் உச்சு கொட்ட வைத்த கட் அவுட் கலைஞர் பி டி ராஜன் வரை ஜேவி என்கிற ஜெகவீரபாண்டியன் முதல் அறியப்படாத மாய உலகத்தின் ஜிடிகே வரை கோட்டுச் சித்திரங்களும், வண்ண ஓவியங்களும் நிறைந்த மாபெரும் ஓவியத் திரைச்சீலைதான் ‘மாயவரம்’.

Sandhiya Natarajan in Mayavaram Sila Ninaivugalum Sila Nigazhvugalum Book Review by Na. Ve Arul. Book day is Branch of Bharathi Puthakalayam
சந்தியா நடராஜன்

கும்பகோணம் டிகிரி காபியைப் பற்றிய குறிப்புகள், அப்பலா குடுமியின் தலை இலக்கணம், தேவதாசிகளின் ‘தண்டியம் பிடித்தல்’ சடங்கு என மாயவரம் அகராதியின் சொற்பொருள் களஞ்சியத்தை அறிந்து கொள்ளலாம்.

சிலப்பதிகாரத்தின் மாபெரும் சிருஷ்டி கர்த்தா இளங்கோவின் கண்ணாடியை அணிந்து கொண்டு காவிரி நதிப் பரப்பைக் காண பூம்புகார் தந்த புவிவியல் நன்கொடைதான் அன்றைய காவிரிப் பூம்பட்டினம்.

மாயவரத்திலிருந்து 25 கி மீ தொலைவில் இருக்கும் பூம்புகார் கடற்கரைதான் காவிரி கடலாகும் நிலப்பரப்பு. சிலப்பதிகாரத்தின் முதற் காண்டம் இங்குதான் நிகழ்ந்திருக்கிறது என்கிற தகவல் பக்கத்திலிருந்து பார்க்கிற பரவசத்தைத் தருகிறது. கோவலன் கண்ணகி திருமணம் நடந்த இடம், மாதவியைக் கோவலன் பிரிந்த இடம் என்பதைப் படிக்கிறபோது நமது கனவுக்கு கண்கள் முளைத்து விடுகின்றன.

பூம்புகாரின் 7 கி மீ தொலைவில் சாயாவனம். தமிழ் இலக்கிய ஜாம்பவான் சா.கந்தசாமியின் சாயாவனம். ஒரு தோப்பு முதன் முதலாக காலத்தின் சாயத்தைப் பூசிக்கொண்ட சாயாவனம்.

ஒரு வெள்ளைக்காரி இந்தியக் காதலனைத் தேடி தன்னந்தனியாக மாயவரம் வந்த மர்மம் முதல் கொலைக் குற்றத்தில் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டவர்கள் மருந்தியல் பற்றிய கூர்மையான அறிவால் விடுதலை ஆன மர்மம் வரை மாயவரத்தின் பூமியில் புதைந்திருக்கும் புதையல்கள்.

“ஜெகவீரபாண்டியன் அரசியல் பிரவேசம் என்பது ஒரு மாயக் கலவை. பெரியாரின் சிந்தனைகளில் வாழ்ந்த ஒருவர் நேர் எதிர் முகாமில் வளர்ந்தது ஆச்சரியமானதுதான்…..இவருக்காகப் பம்பாயிலிருந்து நேரடியாக மாயவரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி அத்வானி தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். ‘‘உதய சூரியன் ஒளியில் தாமரை மலரும்” என்று கலைஞர் பேசியிருக்கிறார்.” இப்படி நடராஜன் உண்மையின் உலைக்களத்தில் பல உலோகங்களைக் காய்ச்சி சுடச் சுட வடிவமைத்திருக்கிறார்.



திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்த ஓவியர் நியோகி பிராமண வர்க்கத்தைக் சேர்ந்த வேணுகோபால் சர்மா. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகியவர் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அது என்ன நியோகி வர்க்கம்? நியோகி என்ற வகுப்பினர் ஆந்திராவில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானவர்கள். அதற்கு முன்பு நியோகி என்கிற பிராமணர்கள் இந்தியாவில் கிடையாது. இந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் தெனாலி ராமன். இதுபோல் மாயவரம் புத்தகத்தில் பல மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்கின்றன.

‘‘தற்பெருமை என்பது இறைவனின் ஆடை. அதை அபகரிக்க முயல்பவன் இறைவனுடன் போருக்குத் தயாராகிவிட்டவன்” என்றது இஸ்லாம் மார்க்கம். “யாகூப் ராவுத்தர் குடும்பத்தின் மாயவரத்து கடைத்தெரு கட்டடங்களில் தொழில் செய்தவர்கள் ஐயர்கள் உள்ளிட்ட இந்துக்கள். கடல் கடந்து சென்ற “இஸ்லாமியக் குடும்பங்களின் நிலபுலன்களை கண்ணும் கருத்துமாய் காத்து உற்ற தோழனாய் இருந்தது இந்துக்கள். மாயவரத்தின் வரலாறு என்பது மதநல்லிணக்கத்தின் வரலாறு. மாற்று மதத்தினரோடு பாகுபாடு அற்றுப் பழகும் பூமி இது” என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.

எகிப்தில் இன்றைக்கு லக்ஸார் என்ற நகரமாக இருக்கலாம். ஆனால் அன்றைக்கு நைல் நதிக்கரையில் அது தீப்ஸ் நகரமாகத்தான் அறியப்பட்டிருக்கிறது. இன்றைக்கு மயிலாடுதுறை என்று அழைக்கப்பட்டாலும் காவிரிக் கரையில் இருக்கும் இந்த நகரம் அன்றைக்கு மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது.

பின்னிணைப்புகளாக நாராயணசாமி நாயுடு, அக்களூர் இரவி, தி.சௌந்தரராஜன், கோமல் அன்பரசன் அவர்கள் எழுதிய கட்டுரைகளும் மாயவரத்தின் மகிமை மிகுந்த மண் இணைப்புகளாக மணக்கின்றன.

சந்தியா பதிப்பகத்தின் அற்புதமான தயாரிப்பாக வந்திருக்கும் ‘மாயவரம்’ புத்தகத்தின் விலை ரூபாய் 220/-. மூவலூர் இராமாமிர்தம், உவேசா, மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற மகத்தான மனிதர்கள் உருண்டு புரண்டு வாழ்ந்த மாயவரம் மண்ணுக்கு விலை ஒரு பொருட்டா என்ன?



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Rathika vijayababu

    ஆயிரம் ஆனாலும் மாயவரம் போலாகுமா.

    படிக்கும் பொழுது பெருமையாக இருந்தது எங்க ஊரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *