Sandhiya Natarajan in Mayavaram Sila Ninaivugalum Sila Nigazhvugalum Book Review by Vincent Soundaram. Book day , Bharathi Puthakalayam



தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகள் நெடுகிலும் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப்பலகைகளைப் பார்த்து இது என்ன டிகிரி காப்பி என்று நினைத்ததுண்டு; நீங்களும் நினைத்திருப்பீர்கள். எப்படி அந்தப் பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சந்தியா நடராஜன் எழுதிய மாயவரம் நூலைப் படியுங்கள். மாயவரத்து காளியாகுடி ஹோட்டல் டிகிரி காப்பிக்குப் பிரசித்தமாக இருந்த காலம் இருந்தது. இப்படி சின்னச் சின்ன விவரங்கள்முதல் அந்தக் காவிரிக்கரை ஊர்பற்றிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் குறுப்புகள் வரை இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

33 கட்டுரைகள் கொண்ட இந்த நூலை ஓர் ஊரின் வரலாறு என்பதா? சில ஆளுமைகள்பற்றிய வாழ்க்கைக் குறிப்பு என்பதா? ஏறத்தாழ அரை நூற்றாண்டின் தமிழ்நாட்டு அரசியல், திரைபட, இலக்கிய உலகம்பற்றிய காட்சி என்பதா? இதில் பலதரப்பட்ட ஆளுமைகள் வருகிறார்கள். இலக்கியப் படைப்பாளிகள் வருகிறார்கள். (ஒரு இலக்கியவாதியின் படைப்பாதலால் அவர்களுடைய ஆதிக்கம் அதிகம் போலத் தோன்றுகிறது.)பெரிய அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் வருகிறார்கள். திராவிடர் கழகமும், காங்கிரசும், திராவிட முன்னேற்றக் கழகமும், பொதுவுடைமைக் கட்சியும் வந்துபோகின்றன. மாயவரம் வரதாச்சாரி பூங்காவும், பியர்லஸ் தியேட்டரும், மகாதானத் தெரு முக்கு தங்கராசு பூட்டுக்கடையும், திருஇந்தளூர் கடைசியில் ராஜதெருமுனையில் இயங்கிய ஸ்டெப் கட்டிங் செல்வமணி சலூனும் காட்சிப் படுத்தப்படுகின்றன. வறுத்த நெய் சீவலும், கொழுந்து வெற்றிலையும், பன்னீர் புகையிலையும், ரத்தினம் பட்டணம்பொடியும் மாயவரத்தின் அடையாளங்களாகத் தெரிகின்றன.



மாயவரம் நூலை எழுதிய ஆசிரியர் நடராஜனுக்கு மாயவரம் சொந்த ஊரில்லை. அவரது ஊர் கீழப்பெரும்பள்ளம். ஆறாம் வகுப்புப்படிக்கத்தான் மாயவரம் வந்தார். எனவே அவரது சொந்த ஊர் பற்றிய நினைவுகள் இடம்பெறுவது வியப்பில்லை. இது மாயவரம் பற்றிய நூல்மட்டும் இல்லை. சுற்றுப்புறக் காவிரிக்கரை சிறு நகர்களும் ஊர்களும் இடம்பெறுகின்றன. திருவாரூர் முதல் திருச்சிற்றம்பலம் வரையில் ஆசிரியர் பார்வையில் நமக்கு அறிமுகப்படுத்தப் படுகின்றன.
இனி நடராஜன் நம் முன் சொற்சித்திரங்களாக வடிக்கும் ஆளுமைகள் சிலரைப்பார்க்கலாம்.

முதலில் இலக்கிய கர்த்தாக்கள்: முதலில் வருபவர்கள் மயிலாடுதுறைக் காரரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் உத்தமஞானபுரத்திலிருந்து வந்து தெய்வதரிசதனத்திற்குக் காத்திருக்கும் உபாசகன் போல அவரைப் பார்க்கக் காத்திருந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா வும். அதன்பிறகு பத்துத் தொகுதிகளில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. அ. (மு. அருணாசலம்; மாயவரக்காரர்களுக்கு ஆட்களின் இனியஷலைக் கொண்டு அழைப்பது பழக்கம்) என்ற திருச்சிற்றம்பலக்காரர். அவரைப் பற்றிச் சொல்லும்போதே அவர் சென்னைக்குக் குடியேறியதையும் அங்கு ரசிகமணி டி.கே.சியின் வீட்டில் ராஜாஜியையும் கல்கியையும் சந்தித்தையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இதுதான் அவரது யுத்தி. ஒன்றிலிருந்து அடுத்ததற்குப் போய்விடுவார். அது இயற்கையாகவும் இருக்கும்; தொடர்புடையதாகவும் இருக்கும். முதல் தமிழ் நாவல் பிறந்த நகரம் என்று பெருமையுடன் வேதநாயரைப் பற்றி எழுதுகிறார். வேதநாயகர் மாயவரத்தில் பிறந்தவரில்லை, அங்கு வாழ்ந்தவர். அங்கு அவருக்கு எந்த நினைவுச் சின்னமும் இல்லை. இதை ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர். வேதநாயகருக்கு மணிமண்டபம் கட்ட ஆசிரியர் வழிகாண்பார் என்பது உறுதி. மாயவரத்துக்காரர் என்று கல்கியை நடராஜன் சொந்தம் கொண்டாடினாலும் கல்கிக்குச் சொந்த ஊர் மாயவரம் அருகிலுள்ள புத்தமங்கலம் என்ற கிராமம். கல்கியின் கள்வனின் காதலிபற்றிய சிறு குறிப்பும் உண்டு.

Sandhiya Natarajan in Mayavaram Sila Ninaivugalum Sila Nigazhvugalum Book Review by Na. Ve Arul. Book day is Branch of Bharathi Puthakalayam
சந்தியா நடராஜன்

புத்தகத்தில் அரசியல்வாதிகளும் கட்சிகளும் கணிசமான இடத்தைப் பெறுகின்றார்கள். 70களில் மாயவர நகரப்பூங்கா மைதானத்திலும், ராஜாந்தோட்டத்திலும் நடக்கும் அரசியல்கூட்டங்களையும் அங்கு பேசிய கலைஞர், எம்.ஜி.ஆர் பற்றியும் விளக்கும் கட்டுரையில் மிசாபற்றியும் கிட்டப்பாபோன்ற உள்ளூர் அரசியல் வாதிகள்பற்றியும் கலைஞர் எடுத்தாண்ட குறுந்தொகை பாடல் பற்றியும் விபரங்கள் மலிந்துகிடக்கின்றன. தி.மு.க. பிரமுகர் கிட்டப்பா வேறொரு கட்டுரையிலும் வருகிறார். பொதுவுடைமைக் கட்சிக்கார ராஜாபாதர், கதர் சட்டை அணிந்த தி.க. காரரான தங்கராசு, தொழிற்சஙகத் தலைவர் ஜி.டி.கே என்ற துரைக்கண்ணு, பெரியாரிஸ்டாக இருந்து பி.ஜெ.பி. வேட்பாளரான ஜேவி என்ற ஜெகவீரபாண்டியன், வகுப்புரிமைப் போராளி முத்தையா முதலியார் முதலான பல உள்ளூர்த் தலைவர்கள் நம்மிடம் பேசுகிறார்கள்.

“There is a history in all men’s lives” என்பார் ஷேக்ஸ்பியர் தன்னுடைய Henry IV 2 நாடகத்தில். மாயவரம் என்ற ஒரு நகரத்தின் கதையில் அந்த நகர வரலாறு இல்லை. ஆனால் மனிதர்களின் வாழ்க்கை இருக்கிறது. அவர்களின் வரலாறு இருக்கிறது. அந்த மனிதர்கள் தேவதாசி முறையை எதிர்த்துப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் முதல் மக்கள் தொண்டாற்றிய டாக்டர் வரதாச்சாரியார் வரையில், நடராஜனைத் முதலில் தொட்டுத்தூக்கிய ஆங்கிலோ இந்திய மருத்துவர் ரோட்ரிக்ஸ் முதல் காளியாகுடி அல்வா பிரியரான மரவேலை ஆசிரியர் வரையில், மாயவரத்தின் சினிமாக் கொட்டகைகள் அதிபர் வெங்கு செட்டியார் முதல் கீழப்பெரும்பள்ளத்தில் தீண்டாமையைக் கடைப்பிடித்த கடைக்கார ஐயர் அதனைப் போராடாமலே மாற்றிய பாய் வரையில் வரலாறாகிறார்கள், வரலாறு சொல்கிறார்கள்.

நூலைப்படிக்கும்போது சில விஷயங்கள் முன் நிற்கினறன. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஆசிரியர் கையாண்டிருக்கிற எடுத்துரைப்பு உத்தி. அவர் பயன்படுத்தியிருக்கும் சரளமான நடை. அடுத்து நூல் பாத்திரங்கள்பற்றி முழுவதுமாகப் புரிந்துகொள்ள அவர் தரவுகளைத் தேடி அலைந்த முயற்சி. நூல் முழுவதும் ஊடாடும் இழையாக இரண்டு கருத்துகள். ஒன்று காவிரிக் கரை மண்ணின் வாசம். அந்த வாசம் இருபத்தோராம் நூற்றாண்டில் காணாமல் போய்விட்டது என்ற ஏக்கம். அதுதான் சில நினைவுகளாக nostalgic memories ஆக வடிவெடுக்கின்றன. இன்னொன்று மாயவரம் சமய நல்லிணக்க்த்தின் தொட்டிலாக விளங்குவதை நமக்குக் காட்ட முற்படுவது.

இந்திய வரலாற்றை எழுத முதலில் அதன் உள்ளூர் வரலாற்றை ஆராய்ந்து எழுதுங்கள் என்பார் கே.எம். பணிக்கர். இந்த நூல் அதுபோன்ற ஒரு முயற்சி என்றே தோன்றுகிறது. இதுபோன்ற local histories எழுத இது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம், சென்னை
பக் 230
விலை: 220

ச. வின்சென்ட்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “மாயவர மண் வாசனை *சந்தியா நடராஜனின் மாயவரம்* – ச. வின்சென்ட்”
  1. ‘ மாயவரம்’ நூலுக்கு அருமையான அறிமுகம். கலை வாங்கிப் படிக்க வேண்டும் என்று எண்ண வைக்கிறது. நூலாசிரியர் சந்தியா நடராஜனுக்கும் நூலை அழகாக அறிமுகம் செய்த வின்சென்ட் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  2. Prof.S.Vincent’s review is excellent because it brings out the essential characteristics of the work, which reminds us of Chaucer’s Canterbury Tales.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *