காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய கழிவறை இருக்கை நூல். அப்போது கண்ணில் பட்டு வாங்கியது தான் சாண்ட்விச் நூல். ஆனால் வாசிக்காமல் கிடப்பில் போட்டு தற்போது தான் வாசித்தேன். இவ்வளவு நாட்கள் வாசிக்காமல் இருந்ததை நினைத்து தற்போது வருத்தம் ஏற்படுகிறது. அந்தளவு முக்கியமான நாவல் இது.
நாவலை இரண்டு பாதிகளாக பிரித்து நான் புரிந்து கொண்டேன். முதல் பாதி வாசிக்க முடியாத அளவு கடுமையான கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழிகிறது. இது சரியான அணுகுமுறை தானா என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. இருப்பினும் பதின்பருவ மாணவர்கள் தங்கள் வாழ்வில் எதிர்நோக்கிய பாலியல் மற்றும் காமம் நிச்சயமாக அப்படி தான் இருந்திருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
சரியாக வழிநடத்தப்படாத பதின்பருவத்து குழந்தைகளின் மனநிலையை படம் பிடித்தபடியே பள்ளியில் நடைபெறும் பாலியல் பாடத்தை ஆசிரியர் வாசித்துவிட்டு கடந்து செல்லும் பிற்போக்குத்தனத்தை சுட்டியது மிக முக்கியமானது.
நாவலின் இரண்டாம் பாதி தான் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். திருமணத்திற்கு முன்பு காமத்தை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் ஆண் சமூகம் திருமணத்திற்கு பிறகு பெண்களை எந்த மனநிலையில் அணுகுகிறார்கள் என்பதை மிக எதார்த்தமாக நாவல் பதிவு செய்கிறது. முதல் பாதியை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை அப்படியே தலைகீழாக புரட்டி போடுகிறது நாவலின் இரண்டாம் பாதி.
மனிதர்களின் வாழ்வில் நிச்சயமாக நாம் திருமணம் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ புணர்ச்சியை சந்திப்போம். அப்போது நமக்கு ஏற்படும் மனக்குழப்பதை தீர்க்கும் விதமாக இந்த நாவல் அமைந்து இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
காமம் குறித்தும் பெண்களின் நுட்பமான மன உணர்வுகளையும் நம்முள் கடத்தும் முக்கியமான நூல்.
நன்றி
நூல்: சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது
எழுத்தாளர்: தரணி ராசேந்திரன்.
வெளியீடு: வர டீ பதிப்பகம்
விலை: ரூ.130
இரா.செந்தில் குமார்
தொட்டியம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.