1. சங்க இலக்கியத்தில் நிலங்கள் – குடிகள் – வழிபாடுகள் | 2. சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும் - www.bookday.in

முனைவர் மு.ரமேஷ் எழுதிய “சங்க இலக்கியத்தில் வழிபாடும் சமயமும்” – இரண்டு ஆய்வு நூல்களின் அறிமுகம்

சங்க இலக்கியத்தில் வழிபாடும் சமயமும்  

– புதிய கண்ணோட்டத்தில் 

இரண்டு ஆய்வு நூல்கள்

சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணை பேராசிரியரான மு.ரமேஷ் 2021ஆம் ஆண்டு இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு நூல்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக அமைந்துள்ளன. முதல் நூலில் சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கைச் சூழலும் வழிபாட்டு முறைகளும் விவரிக்கப்படுகின்றன; அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நூலில் நிறுவனச் சமயங்களும் தத்துவச் சிந்தனைகளும் சங்க இலக்கியத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதைக் குறித்து ஆசிரியர் ஆராய்கிறார். அதனால் இந்த இரண்டு நூல்களையும் இணைத்துப் படிக்கும் போது சங்கக் காலச் சமூகத்தின் சிந்தனைப் பின்னணியைப் பற்றிய ஒரு விரிவான பார்வை கிடைக்கிறது.

சங்க இலக்கியத்தைப் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலும் மொழி, இலக்கணம், கவிதை நயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. ஆனால் சங்கப் பாடல்களின் பின்னால் இருக்கும் சமூக அமைப்பு, சமயச் சிந்தனை மற்றும் தத்துவப் பின்னணியை ஆராயும் முயற்சிகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. இந்தப் பின்னணியில் முனைவர் மு. ரமேஷ் எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் நிலங்கள் – குடிகள் – வழிபாடுகள்,” “சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும்” என்ற இரண்டு ஆய்வு நூல்கள் சங்க இலக்கியத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அணுகும் முயற்சிகளாகத் தோன்றுகின்றன.

சங்கக் கால நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த ஐந்து நிலங்களில் குறவர், ஆயர், உழவர், பரதவர், எயினர் என்கிற மக்கள் வாழ்ந்து வந்தனர். நூலின் முதல் பகுதியில் ஐந்து நிலத்துக்குரியவர்களின் வாழ்க்கைப் பற்றி நூலாசிரியர் விவரிக்கிறார். சங்க இலக்கியத்தில் பார்ப்பனர் பற்றிய குறிப்புகள் வந்திருந்தாலும் அன்று அவைதிக மரபினரான பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களையே ஆதரித்ததையும் இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் மூவேந்தரின் போர் வெறியை, வைதீகர்கள் தூண்டுபவர்களாகவும், போரைத் தடுக்கப் பௌத்தர்களும் சமணர்களும் முயற்சித்ததாகவும் இந்நூலாசிரியர் கூறுகிறார்.

முதல் நூலின் இரண்டாம் பகுதி, வழிபாடுகளும் சடங்குகளும் நம்பிக்கைகளும். இந்தப் பகுதி நிறுவனச் சமயங்கள் தோன்றுவதற்கு முன்பு தமிழர்களிடையே காணப்பட்ட வழிபாட்டு முறைகளைப் பற்றி பேசுகிறது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்கள், எப்போது வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பதை விவரிக்கிறது இந்த இரண்டாம் பகுதி.

அச்சமூட்டக்கூடியவை, ஆபத்தைச் செய்யக்கூடியவை என நம்பப்பட்டவற்றையும், நன்மை செய்யக்கூடியவை தம்மைக் காக்கக்கூடியவை யாவையும் தெய்வமாகப் பழந்தமிழர் வழிபட்டனர் என்கிறார் இந்நூலாசிரியர். தொடக்கத்தில் இதனைத் தெய்வமாகக் கொள்ளாமல் வழிபாட்டை மட்டுமே செய்தனர். பிறகுதான் தெய்வத் தன்மை பெற்றதாகக் கருதினர். வழிபாட்டின் தொடர்ச்சியே தெய்வத்தன்மை பெறுகிறது.

தமக்கு ஏற்படுகிற நன்மை தீமை ஆகிய இரண்டுக்கும் காரணமான பருப்பொருளுள் ஏதோ ஓர் ஆற்றல் இருப்பதாகவும் அவ்வாற்றல் பெரும்பாலான காலங்களில் வெளிப்பட்டு அச்சுறுத்துவதாக நம்பப்பட்டது என்கிறார் இந்நூலாசிரியர். இந்த அச்ச உணர்வே தொடக்க நிலை வழிபாட்டுக்குக் காரணமாகும். அச்ச உணர்வு மட்டுமல்ல நன்றி செலுத்தவும் இயற்கையை வழிபட்டனர் என்பதை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழர்கள் முதலில் மலையையும் மலைகளில் காணப்படும் சுனையையும் வழிபட்டனர். இந்த வழிபாடு நன்றியைத் தெரிவிப்பதாக இருக்கிறது. மலையில் இருந்தே ஆதி மனிதனுக்கு அனைத்தும் கிடைத்தது. குறிப்பாக நீர் மனிதயின வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாகும். இதற்கு ஆதாரமாக இந்நூலாசிரியர் “நீரின்றி அமையாது உலகு” என்று நற்றிணைப் பாடலைச் சுட்டிக்காட்டுகிறார்.

சுனைகளில் நீர் வற்றுவது, சூர் என்ற ஆவி கோபித்ததால்தான் என்று அன்றைய தமிழர்கள் நம்பினர். இதனடிப்படையில் தான் ஆவிக் கோட்பாடு உருவாகியது. ஆவிக் கோட்பாடு உலக மக்கள் அனைவரிடமும் காணப்பட்டது. இன்று காணப்படும் பழங்குடிகளிடமும் காணப்படுகிறது.

ஆவிக் கோட்பாட்டைத் தொடர்ந்து மூத்தோர் வழிபாடு வருகிறது. மறைந்து போன தலைவர்கள் அல்லது போர்வீரர்களின் ஆற்றல் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று நினைத்த பழங்குடிகள், மறைந்த மூத்தோரை வழிபட்டனர். கல்வட்டம், நெடுங்கல், பதுக்கை, முதுமக்கள்தாழி, நடுகல் ஆகியவை மூத்தோர் வழிபாட்டின் தொடர்ச்சியாகும். இந்த நூலாசிரியர் ஒவ்வொன்றையும் சங்க இலக்கிய ஆதாரத்துடன் விளக்குகிறார்.

முதலில் தாய்வழிச் சமூகமே தொடக்கத்தில் இருந்தது, அதற்குப் பிறகே ஆணாதிக்கச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கச் சமூகம் தோன்றிய பின்பும் கொற்றவை போன்ற பெண் தெய்வங்களை பண்டைய தமிழர்கள் வழிபட்டனர். கொற்றவையைத் தொடர்ந்து கொல்லிப் பாவை, சூலி, தவ்வை போன்ற பெண்களை வழிபட்டனர்.

மற்ற வழிபாடுகளுடன் ஒப்பிடும்போது முருகன் வழிபாடு வளர்ச்சி பெற்றதாகத் தெரிகிறது. முருகனை வழிபடும் பூசாரியாக வேலன் இருந்தான். வேலன் ஆடும் வெறியாட்டம் முருகனுக்கான ஒரு தனிப்பட்ட வழிபாட்டு முறையாக சங்கக் காலத்தின் இறுதியில் காணப்படுகிறது. முருகன் வழிபாடு சிறப்பாக இருந்தாலும், அது ஒரு தனித்த நிறுவனச் சமயமாக வளர்ச்சி பெறவில்லை.

இத்தகைய செய்திகளே, “சங்க இலக்கியத்தில் நிலங்கள் – குடிகள் – வழிபாடுகள்” என்கிற முதல் நூலில் காணப்படுகிறது. அடுத்த நூலான “சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும்” என்பதில் நிறுவனச் சமயங்களைப் பற்றியும் மெய்யியல் என்று கூறப்படுகிற தத்துவங்கள் பற்றியும் நூலாசிரியர் விவரிக்கிறார்.

நமது நாட்டில் சமயங்களும் தத்துவங்களும் இணைந்தே காணப்படுவதால், இந்நூலாசிரியரும் அவற்றை இணைத்தே விளக்குகிறார். பௌத்தம், சமணம், வேத மரபு, வைணவம், சைவம், ஆசீவகம், உலகாயதம் ஆகிய சமயங்கள் மற்றும் தத்துவங்கள் ஆகியவை சங்க இலக்கியத்தில் எவ்வாறு காணப்படுகிறது என்பதை சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறார்.

நூலாசிரியர் பௌத்தச் சமயச் சாரமாக, ஆத்மா இல்லை, கடவுள் இல்லை, பொருள்கள் அனைத்தும் வினாடிகள் தோறும் மாறிக் கொண்டிருக்கின்றன. பொருள்கள் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன, துக்கத்தை அனைவராலும் நீக்க முடியும் என்று தொகுத்துத் தருகிறார். பௌத்தருடைய கருத்துகள் பொதுவுடைமை சமூகத்தை நோக்கிச் செல்வதாக நூலாசிரியர் கருதுகிறார்.

சங்கப் புலவர்களில் சிலரின் பெயர்கள் பௌத்தச் சமயத் தொடர்பைக் காட்டுகின்றன என்ற இந்நூலாசிரியரின் கருத்தை ஏற்கலாம். குறிப்பாகப் பிடவூர்க் கிழான்மகள் பெருஞ்சாத்தனிடம் நக்கீரர், தன்னை அறப்பெயர் சாத்தனின் உறவோன் எனச் சுட்டிக்காட்டுவது மிகச் சிறப்பான சான்றாகும். சாத்தன், சாத்தி, ஒக்கூர் மாசாத்தியர், சாத்தந்தையார், வடமா பண்ணக்கண் பெருஞ்சாத்தனார், இளம் போதியார், தேரையார், சிறுவெண்தேரையார், ஐயாதிச் சிறுவெண்தேரையார், கோதமனார், சங்கவருணர் போன்ற புலவர்களின் பெயர்களும் அவர்களின் பாடல்களின் கருத்துகளையும் வைத்துப் பார்க்கும் போது பௌத்தத் தொடர்புடையதாக இருக்கிறது என்கிற நூலாசிரியரின் கருத்து பெரும்பாலானவரை உடன்பட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைத் தொடர்ந்து ஆய்வு செய்வதின் மூலம் உறுதிப்படுத்தலாம்.

சங்க இலக்கியத்தில் பாடிய பெண்பால் புலவர்களின் பாடல்களில் காணப்படும் போர் எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்து அவர்கள் பௌத்த நெறி சார்ந்தவர்களாக நூலாசிரியர் கருதுகிறார். ஔவையாரின் பாடலான “நாடா கொன்றோ காடா கொன்றோ” என்பது பெளத்த இலக்கியத்தில் உள்ள தம்மபதம் என்கிற தொகுப்பில் உள்ள ஒரு பாடலோடு நெருக்கமாகக் காணப்படுவது பௌத்தத்தின் தாக்கம் என்பது உண்மையே. ஆனால் இதை வைத்துப் பெண்பால் புலவர்கள் அனைவரும் பௌத்தத் தாக்கம் பெற்றவர்கள் என்று கருதுவது, நூலாசிரியரின் பௌத்தச் சார்பையே காட்டுகிறது. ஏனென்றால் போர் எதிர்ப்பு சமணக் கருத்தோடும் நெருக்கமாக இருக்கிறது. சமண, பௌத்தத் தாக்கம் இத்தகைய கருத்துகளில் காணப்படுகிறது என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.

இந்நூலாசிரியரிடம் பௌத்தச் சமயத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது, அதாவது பௌத்த சார்பு. இறையனார் களவியல் உரையில் முதல் சங்கம் சிவனுடன் இணைத்துப் பேசுவதை, சைவச் சமயத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது என்று கூறுகிற இந்நூலாசிரியர் சங்கத்தையும், ஆசிரியப்பாவால் எழுதப்பட்டதையும் பௌத்தத்தோடு இணைத்துப் பேசுகிறார். இது புதிய கருதுகோளாகக் கொள்வதைவிட, அவரின் தாக்கம் என்று கூறுவதே சரியாக இருக்கும். ஏனென்றால் சங்க இலக்கியத்தின் தனித்தன்மை என்பது பௌத்தச் சமயத்தோடு ஏற்பட்ட தொடர்பினால் சங்க இலக்கியத்திற்கு இச்சிறப்பு வாய்த்தன எனக் கருதமுடிகிறது என்று அவர் கூறுவதை வைத்து முடிவெடுக்க முடிகிறது.

ஜைன மதத்தவர்கள் தமிழகத்தில் சமணர் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர். பௌத்தச் சமயத்தைப் போன்றே சமணத்தையும் நூலாசிரியர் சுருக்கமாக விளக்குகிறார். அது சமணத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

பௌத்தச் சமயத்துக்கு அடுத்த நிலையில் பழங்காலத்திலேயே ஜைனம் தமிழகத்திற்கு வந்தது என்கிற கருத்தை இந்நூலாசிரியர் முன்வைக்கிறார். இதற்கு ஆதரவாகச் சில ஆய்வாளர்களின் கருத்துகளையும் சான்றாகக் காட்டுகிறார். இந்த உண்மையினைத் தமிழ் சமூகத்தில் உரக்கச் சொல்ல வேண்டியது அவசியமானதாக நான் கருதுகிறேன். சமஸ்கிருதமயமாதலும் சைவமயமாதலும் இத்தகைய உண்மையினை மறைக்கிறது. ஆதாரங்களின் அடிப்படையில் சங்கக் காலத்தில் வைதீகத்தைவிடப் பௌத்தமும் சமணமும் மேலோங்கி இருந்தது. இந்த உண்மையினை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வுகள் தொடர வேண்டும்.

பிசிராந்தையாரின் புறம் 191ஆம் பாடலில் “ஆன்றவித்த கொள்கைச் சான்றோர்” என்று கூறப்படுவது சமணக் கொள்கை என்று இந்நூலாசிரியர் குறிப்பிடுவது சிறப்பாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் பௌத்த, சமணக் கருத்துகள் நிறைந்து காணப்படுகிறது, வைதீகக் கருத்துகள் குறைந்து காணப்படுகிறது.

சைவமயமாதலான முச்சங்கக் கதைகளோடு மட்டுமல்லாது இடைச்செருகலும் காணப்படுவதை ஆய்வு செய்து வெளி கொணர வேண்டும். வைதீகமயமாதலையும் சைவமயமாதலையும் களைந்தெறிந்தால்தான் தமிழர்களின் உண்மையான வரலாறு வெளிப்படும். இதற்கு இந்நூலாசிரியரைப் போன்றோர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

சங்கக் காலத்தில் தமிழர்களிடம் காணப்பட்ட வடக்கிருத்தல் என்பது சமணத்தோடு தொடர்புடையது என்பதை நூலாசிரியர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சங்க இலக்கியத்தில் மட்டுமல்ல, பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் என்கிற நூலிலும் சமணக் கருத்துகள் மேலோங்கி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

இத்தகைய கருத்துகளை நான் பலகாலமாக ஏற்றுக் கொண்டுள்ளேன், அதனால் இந்தக் கருத்துடைய இந்த நூலைப் படித்த போது இந்தக் கருத்தை இந்நூலின் மூலம் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து இந்நூலுக்கு அறிமுகம் செய்கிறேன்.

பரிபாடலில் திருமால் பற்றிய பாடல்கள் காணப்படுகிறது, மற்ற சங்க இலக்கியத்திலும் மால் பற்றிய பாடல்கள் காணப்படுகிறது. இதனை முன்வைத்தே வைணவம் சங்க இலக்கியத்தோடு பேசப்படுகிறது. திருமால் என்பது தனித்த தமிழர்களின் கடவுள், இதனை வைணவப் பெருமாளோடு சேர்த்துப் பேசப்படுகிறது. இதனை இந்நூலாசிரியர் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகம் 59ஆம் பாடலின் கருத்தை முன்வைத்து இந்நூலாசிரியர் கூறுவது கவனிக்கத் தக்கது. “இப்பாடலில் மால் என்று தமிழ்ப்பெயரைப் போட்டு வடபுலத் தொன்மத்தைத் தமிழ்த் தொன்மமாகவே மாற்றிவிடும் புலவரின் கவிநுட்பம் எண்ணத்தக்கது” (பக்கம்-87) என்கிறார் நூலாசிரியர். இது வைணவமயமாதலாகும். வைதீகமயமாதல், சைவமயமாதல், வைணவமயமாதல் என்பதை நீக்கியே தமிழர் வரலாற்றை ஆதாரங்களோடு நிறுவ வேண்டியது ஆய்வாளர்களின் கடமையாக இருக்கிறது. சங்க இலக்கியத்தை இந்தக் கண்ணோட்டத்தில் மறுவாசிப்பு செய்ய வேண்டும். பல ஆய்வாளர்களின் முயற்சியால் மட்டுமே உண்மையான தமிழர் வரலாற்றைக் கண்டு பிடித்துக் கூறமுடியும்.

சங்க இலக்கியம் மீது சைவ ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியம் தொகுக்கப்பட்ட காலத்திலும், பழைய உரைகள் எழுதப்பட்ட காலத்திலும் தமிழ் சமூகத்தில் சைவம் மேலோங்கி இருந்தது. இதன் தாக்கம் அதிகம் என்பதை உணர்ந்து, உண்மையை வெளிப்படுத்தும் வகையில் புதிய கண்ணோட்டத்தில் ஆய்வுகள் செய்ய வேண்டும். சிவன் என்கிற சொல் சங்க இலக்கியத்தில் நேரடியாக எங்கேயும் காணப்படவில்லை. இருந்தாலும் சங்க இலக்கியம் சைவத்துக்கு உரியது என்பதாகக் கதைவிடப்படுகிறது.

பழ.முத்தப்பன் எழுதி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட நூல் “சங்க இலக்கியத்தில் சைவச் சமய மூலக்கூறுகள்”. தலைப்பு சைவத்தைக் குறிப்பிட்டிருந்தாலும் பல்வேறு தத்துவப் போக்குகளை இந்த நூல் விவரிக்கிறது. ஆனால், இன்றைக்குச் சமயம் பற்றிய ஆய்வுகள் நிறைய நிகழ்த்திய பிறகும், சங்க இலக்கியத்தில் உள்ள வழிபாட்டு முறைகளைச் சைவ வழிபாட்டு முறையாகப் பழ.முத்தப்பன் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் சிவன் என்கிற சொல் நேரடியாக இல்லை. முக்கண் செல்வன், ஆலமர் செல்வன் போன்ற குறியீடுகளைக் கொண்டே சைவர்கள் சிவனைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். அப்படி இருக்க “சங்க இலக்கியத்தில் சைவச் சமய மூலக்கூறுகள்” என்கிற இந்த நூல் சங்க இலக்கிய வழியில் சைவம் வளர்ந்ததாகக் கூறுகிறது. முருகன் – ஸ்கந்தன் இணைப்பைப் பற்றிய ஆய்வுகள் பல வந்த பின்பும் சைவர்களின் கூற்று முடிவுக்கு வரவில்லை. சைவர்களின் விருப்பங்களை ஆய்வாகக் கொள்ளக்கூடாது. ஆய்வு என்பது ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

சங்க இலக்கியத் தொகுப்பின் போது எழுதிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைக் குறிப்பதாகக் காணப்படுகிறது. இதைக் கொண்டு சைவம் மேலோங்கிய காலத்தில் சங்க இலக்கியம் தொகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. சைவர்கள் தொகுத்த போதும் சங்க இலக்கியத்தில் சிவன் என்கிற சொல்லைக் காட்ட முடியவில்லை. திருமாலைப் பற்றிய தனிப்பாடல்கள் பரிபாடலில் இருக்கிறது, ஆனால் சிவனைக் குறிக்க ஒரு சொல் நேரடியாக இல்லை, அப்படி இருந்தும் சைவர்களின் தவறான கண்ணோட்டம் தொடர்கிறது.

இன்றைய நிலையில் ஓர் ஆசிரியர் தனது மதம் சார்ந்து எழுதாது ஆதாரத்தைச் சார்ந்து எழுதுவதே சரியானதாக இருக்க முடியும். சொந்த மதம் சார்ந்த எழுத்துகளை ஆய்வாகக் கொள்ள முடியாது, அது அவரது மதச் சார்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அதனை அந்த மதம் சார்ந்தவர்களே ஏற்றுக் கொள்வர், ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பௌத்த, சமணக் கருத்துகள் சங்க இலக்கியத்தில் காணப்படுவதைப் போல ஆசீவகத்தின் கருத்துகள் காணப்படுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற புறப் பாடல் ஆசீவத்துடன் நேரடி தொடர்புடையதாக இருக்கிறது. வைதீகத்துக்கு எதிரான பௌத்த, சமண, ஆசீவகக் கருத்துகள் சங்க இலக்கியத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. எது பௌத்தக் கருத்து, எது சமணக் கருத்து, எது ஆசீவகக் கருத்து என்பதை அவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியாத வகையில் ஒத்த கருத்துடையதாக இருக்கிறது. இருந்தாலும் அவைதிகக் கருத்துகளே சங்க இலக்கியத்தில் அதிகம் காணப்படுகிறது என்பதைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்ட முடியும். இத்தகைய ஆய்வுகளை, ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிறுவனச் சமய வழிபாடும், நிறுவனத் தத்துவக் கருத்துகளும் தோன்றுவதற்கு முன்பு உலகாயதச் சிந்தனைகளே, பழங்குடிகளுக்கும், பழங்குடிகளில் இருந்து விடுபட்ட புதியவர்களும் இருக்கும். இத்தகைய சிந்தனைகள் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது, அதனைத் தனியாகத் தொகுத்து ஆராய வேண்டும். இந்நூலாசிரியர் மு.ரமேஷ் புறம் 335, 189 ஆகிய பாடல்களை முன்வைத்துப் பண்டைய தமிழர்களிடம் காணப்பட்ட உலகாயதச் சிந்தனையை சுட்டிக்காட்டுகிறார். பழங்குடிகளாக வாழ்ந்த அனைத்து மக்களிடமும் பொதுவாக உலகாயதச் சிந்தனையே காணப்படுகிறது. அதனால்தான் அச்சமூகம் ஆதி பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கப்படுகிறது. பழங்குடி சமூகம் சிதைந்து வர்க்கச் சமூகமாக மாறிய பிறகு பல தத்துவப் போக்குகளும் சமயச் சிந்தனைகளும் தோன்றுகிறது. உலகாயதச் சிந்தனை மிகச் சிலரிடம் தான் தொடர்கிறது.

இத்தகைய கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, பிற்காலத் தமிழர்களிடம் காணப்படும் பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம், வைணவம், சைவம் ஆகியவை வட இந்தியாவில் இருந்து வந்த சிந்தனைகளே, உலகாயதம் மட்டுமே பழம் தமிழர்களிடம் காணப்பட்ட சிந்தனையில் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. ஆனால் பழங்குடிகள் அனைவரிடம் காணப்பட்ட உலகாயதச் சிந்தனை, பிற்கால வர்க்கச் சமூகத்தில் சிலரிடம் மட்டுமே உலகாயதச் சிந்தனை தொடர்கிறது. இது படிப்படியாக மாறும், வளர்ச்சி அடைந்த கம்யூனிசச் சமூகம் தோன்றும் போது நவீன உலகாயதத் தத்துவம் என்று கூறப்படுகிற இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவமே சமூக முழுதும் காணப்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இந்நூலாசிரியர் சங்க இலக்கியத்தில் காணப்படும் பூதவாதம் என்கிற உலகாயதத்தோடு நியதிவாதம், தற்செயல்வாதம், ஊழியல் என்று கூறப்படுகிற ஆசீவகக் கருத்தை இணைத்துப் பேசுகிறார். இது ஆய்வுக்கு உரியதாகும்.

பண்டைய தமிழ் சமூகத்தில், குறிப்பாக பழங்குடி சமூகம் மற்றும் அதன் சிதைவு காலத்தில், உலகாயதச் சிந்தனையே இருந்தது. பின்னர் வர்க்கச் சமூகம் உருவானபோது சமயச் சிந்தனையின் தேவை ஏற்பட்டது. அந்த நிலையில் பழைய வழிபாட்டு முறைகளும் முன்னோர் வழிபாடுகளும் நிறுவனச் சமயமாக வளர வாய்ப்பு இருந்தது. ஆனால் அத்தகைய சூழ்நிலையில் வட இந்திய நிறுவனச் சமயங்கள் தமிழகத்திற்கு வந்து விட்டன. அவை இங்குள்ள தமிழர்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டு நிலைபெற்றன. இதனால் தமிழர்களிடம் தனித்த சொந்த சமயம் உருவாகவில்லை. தமிழர்களிடம் தனித்த சொந்த சமயம் உருவாகவில்லை என்ற காரணத்தால் தமிழர்களுக்கு சமய சிந்தனையே இல்லை என்று பகுத்தறிவாதிகள் கூறுவது தவறான கருத்தாகும்.

வர்க்கச் சமூகத்தில் வர்க்க ஒடுக்குமுறைக்கு துணையாக சமயம் தோன்றுவது இயல்பானதே. தமிழகச் சொத்துடையாளர்கள் உழைக்கும் மக்களை ஒடுக்கவில்லை என்று கூற எந்தச் சான்றும் இல்லை. சொத்துடைமையின் தோற்றத்துடன் ஆன்மீக ஒடுக்குமுறையான சமயமும் தத்துவமும் தோன்றுவது இயல்பு. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஒரே மாதிரியான சூழ்நிலைகளில் மனிதனின் தேவைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே வெளிப்படுகின்றன என்று மார்கன் கூறுவதை இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

முனைவர் மு.ரமேஷ் எழுதிய இந்த இரண்டு நூல்களும் என்னுடைய சிந்தனைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இருக்கிறது. சில விமர்சனங்கள் இருந்தாலும், பல ஒற்றுமைக் கருத்துகள் இருக்கிறது. எனது தொடர் ஆய்வுக்கும் நூல் உருவாக்கத்துக்கும் முனைவர் மு.ரமேஷ் நூல்கள் பெரிதும் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: 1.சங்க இலக்கியத்தில் நிலங்கள் – குடிகள் – வழிபாடுகள்

2.சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும் (2021)

ஆசிரியர்: முனைவர் மு.ரமேஷ்
வெளியீடு:

A.V.தமிழறம் பதிப்பகம்

விலை: ₹.200/- ₹.200/-
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அ.கா.ஈஸ்வரன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *