ஆர்.பாலகிருஷ்ணன் (R.Balakrishnan) எழுதிய சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை (Aninadai Erumai) : நூல் அறிமுகம்

சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை : நூல் அறிமுகம்

 சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை : நூல் அறிமுகம்

காலத்தின் தேவை
——————

நூலின் தலைப்பு வித்தியாசமானதுதான்.‌ எனினும் சங்க இலக்கியங்களை மேலோட்டமாக கடமைக்கு வாசிக்கும் மாணவர்களைப் போல் அல்லாமல் உள்ளார்ந்து அகழ்வாராய்ச்சி செய்து உரையாற்றுவதும் நூலாக்குவதும் என இயங்கி வரும் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் நூல் எனும்போது ஒருவிதமான ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவ்வகையில்தான் இந்நூலின் தலைப்பு “அணி நடை எருமை” என வித்தியாசமானதாக இருப்பினும் நூலுக்குள் செல்ல இதுவே ஒரு ஈர்ப்பாகிவிடுகிறது.

சங்க இலக்கியத்தில் கணக்கிடக்கும் ஒவ்வொன்றையும் எடுத்து இந்திய வரலாற்றோடும் சிந்து வெளியோடும் எடுத்துக்காட்டும் பாணியைக் கையாண்டு இந்நூலை அற்புதமாக்கி இருக்கிறார் நூலாசிரியர். அதற்காக அவர் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் பிரமிக்கத்தக்கது. ஆழ்ந்து வாசித்து பல்வேறு தரவுகளுடன் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவது என்பது அயராது உழைப்பால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட உழைப்பைச் செலுத்தித் தான் இந்நூல் உருவாகி இருக்கிறது எனின் மிகையன்று.

இந்நூலில் உள்ள 10 கட்டுரைகளும் இரண்டாம் பத்தாக சங்கச் சுரங்கத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட 10 முத்துக்களால் ஆன மாலையாக உருவாகி இருக்கிறது.

முதல் தலைப்பான ‘குடகாற்று எரிந்த குப்பை’ என்னும் கட்டுரையில் காற்றைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார் ஆர். பாலகிருஷ்ணன் தென்றல் காற்று, வாடைக்காற்று, கொண்டல் காற்று, கோடைக்காற்று ஆகியவற்றை இலக்கியத் தரவுகளோடு ஆய்வு செய்துள்ளார். அனைவராலும் வெறுக்கப்படும் ‘வாடைக் காற்று’ தான் சங்க இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்டுள்ளது என்பதை இந்நூல் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. அதையும் துல்லியமாக 52 குறிப்புகளில் வாடைக்காற்று இடம் பெற்றுள்ளதை நிறுவுகிறார் நூலாசிரியர். இன்னும் கூர்மையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நான்கு நிலப் பின்னணிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே காற்று வாடைக்காற்று மட்டுமே என வரையறுக்கிறார். ஒவ்வொரு காற்றின் சிறப்பைப் பற்றியும் அந்தக் காற்று சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள தரவுகளோடு அழகாக விவரித்துச் செல்கிறார். சங்க இலக்கியத்தைப் பற்றி மட்டும் பேசி விட்டுச் செல்லாமல் இன்றைய கள நிலவரத்தையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளது உற்று நோக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசும் காற்றின் வேகமும் திசையும் எப்படி இருக்கிறது என்பதைக் காட்சி வரைபடமாக விளக்கும் ஒரு முறையை வானியல் ஆராய்ச்சியாளர்கள் ‘காற்று ரோஜா’ என்று அழைப்பதையும் இங்கே குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அதற்கான வரைபடங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. “சுக்கிரன் இங்கிருப்பதாலோ அல்லது அங்கிருப்பதாலோ எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. நல்லவனோடு பழகினால் நல்லது நடக்கும். கெட்டவனோடு பழகினால் கெட்டது நடக்கும் என்பது தான் அந்த புரிதல். இந்தச் சங்க இலக்கியம் எப்படிப்பட்ட விசயத்திற்கு எதிரான ஒரு முழக்கத்தினைச் சத்தம் இல்லாமல் எழுப்பி விட்டுச் செல்கிறது என்பதை 117 வது புறநானூற்று பாடலைக் கபிலிரர் பாடுவதாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆர். பாலகிருஷ்ணன். இக்கட்டுரையின் இறுதியில் ‘பகுத்தறிவு என்பது வேறு ஒன்றும் இல்லை அது பட்டறிவு என்பதன் இன்னொரு பெயர்தான்’ என்னும் நூலாசிரியர் ‘வெள்ளிக்கு வெளிச்சம் காட்டிய சங்கத் தமிழ்க் கடவுளை மறக்கவில்லை. ஆனால் கடவுள் பிறக்கும்போதே நீரும் நிலமும் வானும் வலியும் தீயும் இருந்தன என்ற இயற்கையின் இயல்பை தமிழ் அறிந்திருந்தது, காற்றின் மீதும் நீரின் மீதும் தீயின் மீதும் தமிழர்களுக்குக் கவனிப்பு இருக்கிறது, ஆனால் அதற்கு கடவுள் உருவம் அவர்கள் கொடுக்கவில்லை” என்று முடிக்கிறார்

“விளையாட்டும் விரும்பார்க கொல்” என்னும் தலைப்பிலான கட்டுரையில் சிந்து வெளியும் பண்டைய சமூகமும் நூலாசிரியரால் விளக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடுகின்ற பொம்மைகளை சுடுமண் பொம்மைகள், மாட்டுவண்டி பொம்மைகள், முதலியவை கிடைக்கின்றன. சிந்து வெளிச் சிதைவுகளில் போர், தேர் பொம்மைகள் இல்லை. களிமண் மாட்டு வண்டிகள் தான் உள்ளன என்பதைத் தரவுகள் மூலம் நிறுவுகிறார். சங்ககால விளையாட்டுகளை விவரிக்கும் நூல் ஆசிரியர் நீர் விளையாட்டை முக்கியமாகக் குறிப்பிடுகிறார். “வாழ்க்கைக்கான பயிற்சியாக விளையாட்டு அமைந்துள்ளது. அதிகம் எல்லாப் பழங்குடிகளிலும் தனது தந்தை செய்ததை விளையாட்டாக பிள்ளைகள் செய்து பார்ப்பார்கள் என்பதையும் அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தின் குறுந்தொகை 222 ஆம் பாடலில் படகு விளையாட்டு பற்றிக் குறிப்பிடுவதைப் படம் பிடித்து காட்டுகிறார் நூலாசிரியர். பெண்கள் படகினைச் செலுத்துதல், அதுவும் ஆற்றின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு துடுப்புப் போடாமல் விடுதல் என்பதெல்லாம் முக்கியமானது என்கிறார்.

மொகஞ்சதாரோ பகடை தற்போது உள்ள பகடையை போல் இருக்கவில்லை. தற்போதைய பகடை எதிர் எதிர் பக்கங்களைக் கூட்டினால் 7 ஆக இருக்கும் மொகஞ்சதாரோவில் கிடைத்த பகடையில் ஒன்றிற்கு எதிராக இரண்டும் மூன்றிற்கு எதிராக நான்கும் ஐந்திற்கு எதிராக ஆறும் இருக்கின்றது. இவை மிகச் செம்மையானவை ஓரங்கள் செப்பமானவை என்று அழகிய படங்களுடன் குறிப்பிடுகிறார் ஆர் பாலகிருஷ்ணன். ஒரு செங்கலில் விளையாடுவதற்கான கட்டங்களை வரைந்து அதனை அப்படியே சுடும் மண்ணாக உருவாக்கியுள்ளனர் என்று உரிய படத்துடன் விளக்கியுள்ளார். மகாபாரதப் பகடை, வரலாற்றுக் காலப் பகடை கீழடியில் கிடைத்த சுடுமண் கனசதுரப் பகடை எனக் குறிப்பிடும் நூலாசிரியர், அது ஆறு புறங்களும் குழிவுவுடன் அமைந்திருந்ததையும் அதில் ஒன்றிற்கு எதிராக ஐந்தும் இரண்டிற்கு எதிராக நான்கும் மூன்றுக்கு எதிராக ஆறும் அமைந்திருந்ததையும் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். மேலும் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்த அகழ்வாய்வு மூலம் கிடைத்த பகடையும் தமிழக அரசு செய்த அகழாய்வு மூலம் கிடைத்த பகடையும் சிந்துவெளியில் பண்பாட்டில் கிடைக்கக்கூடிய இரண்டு வகையான பகடைளைப் போன்றே அமைந்துள்ளது. வரலாற்றுக் காலத்தில் வட இந்தியாவில் கிடைக்கின்ற ஏழு எண் வருகிறதாகச் சொல்கிற பகடையும் கிடைக்கிறது. இந்த இரண்டும் ஒரே இடத்தில் ஒரே ஊரில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கிறது என்பது மிக முக்கியமான அம்சமாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

நற்றிணை 68 ஆம் பாடல் பிரான் சாத்தனார் என்பவர் எழுதிய குறிஞ்சித் திணைப் பாடலில்,”விளையாடப் போக வேண்டிய வயதில் இளம் பெண்கள் விளையாடாமல் இருப்பது அறம் அன்று. ஆக்கமும் தேயும் என்பதை யாராவது சென்று அன்னையிடத்தில் சொல்லி அதனை அன்னை புரிந்துகொண்டு அன்னை விளையாடிவிட்டு வா என்று சொல்வாரோ என்று சொல்கிறாள்” எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். விளையாட்டில் பெண்கள் நிலை என்று பிபிசி ஆய்வு சொல்லும் எட்டு அம்சங்கள் குறித்துக் குறிப்பிடுவதில் பாலின சமத்துவம் தொடர்பான அணுகுமுறை வியக்கத்தக்கதாக உள்ளது. அதற்கு ஏற்ப 2018 ஆம் ஆண்டு காமன் போட்டிக்கு விளையாட்டுத்துறை இந்தியா வென்ற பதக்கங்கள் பெண்கள் கணிசமான பதக்கங்களை வென்றிருப்பது உணர முடிகிறது.

மூன்றாவது கட்டுரையாக “களம் சுடும் புகை” பானையைப் பற்றியதாக உள்ளது. சங்க இலக்கியத்தில் பானை குறித்து வரும் ஏராளமான தகவல்களை விவரிக்கிறார். பானை செய்பவனை சங்க இலக்கியம் பண்டைய அறிவு பொருந்திய குயவனே என்று நற்றிணை 200-ம் பாடலில் பதிவு செய்து இருப்பதைக் காண முடிகிறது. தொல்லியலும் இலக்கியமும் துணை நிற்கின்றன. கீழடி சிவகளை, ஆதிச்சநல்லூர் முதலிய இடங்களில் தோண்டியபோது பானைகள் கிடைத்தன. அவை தொல்லியல் தரவுகள் மறுபுறத்தில் சங்க இலக்கியத்தில் வெள்ளிச் சாமான்களைக் கருப்புத் துணியில் மூடி வைத்துள்ளனர். ஒரு பெண் ‘கலம் செய் கோவே’ என்று சொல்கிறாள். முதுவாய் குயவன் என்று சொல்கிறார்கள்.இவ்வளவு விஷயங்கள் இலக்கியத் தரவுகளாக கிடைக்கின்றன என்பதை அறிய முடிகிறது. மதுரையை சுற்றி 293 இடங்களில் அகழ்வாய்விற்கான வாய்ப்புகள் இருப்பதை இந்திய தொல்லியல் துறை சொல்கிறது. இன்னும் முக்கியச் செய்தி இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. குயவர்களை உழைப்பாளிகள் தலைவன் என்று சொல்லுதல் பானையின் வாழ்வியலை சொல்லுதல் என்பவற்றையெல்லாம் கொண்ட இலக்கியம் இந்தியாவில் சங்க இலக்கியம் மட்டுமே என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர். எவன் ஒருவன் கைவினைப் பொருட்கள் செய்கிறானோ கைத்தொழில் செய்கிறானோ அவன் சூத்திரர் என்ற வகையில் தான் வருவான் என்று சொல்கிறது மனஸ்மிருதி. குயவர்கள் அனைவருக்கும் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பொதுத்தன்மை என்பது வாழ்ந்து கெட்டவன் என்ற தன்மையாகும் என்பதை எதார்த்தமாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

ஒரு அப்சரசால் சாபம் இடப்பட்டு விஸ்வகர்மா கீழ் நிலைக்கு ஆக்கப்படுகிறார். இந்த விஸ்வகர்மா என்போர் பிராமணர் ஒருவருக்கும் சூத்திரப் பெண் ஒருவருக்கும் முறை தவறிப் பிறந்த ஒன்பது குழந்தைகள் ஆவர். அந்த ஒன்பது குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு கைவினைஞராக மாறிவிட்டனர். தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர் முதலியோராக வந்துவிட்டனர் என்று சொல்லப்படுகிறது என்பது அறியாத அறியப்படாத அம்சமாக இருக்கிறது.

சங்க இலக்கியத்தில் கழுதை குறித்தும் பேசப்படுகிறது அகநானூற 89ஆம் பாடலில் சுட்டப்படும் கழுதை இரண்டு வேலைகளைச் செய்கிறது. துணி துவைப்பதற்குத் தேவைப்படும் வெள்ளாவியை உருவாக்குவதற்குத் தேவைப்படும் உவர் மண் கழுதையின் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது.

ஜமதக்னி யின் மனைவி ரேணுகா பற்றிய துன்பத்தை நாம் அறிவோம் ரேணுகா பச்சையம்மன் பானையை அன்றாடம் செய்து அதன் நீர் கொண்டு வந்தவர் ஒருநாள் விமானத்தில் சென்ற கந்தர்வனை நேரில் பார்த்து அதனால் பணி செய்ய முடியாமல் போய் தன்னுடைய கணவனது ஆணைப்படி தான் பெற்ற மகனால் கொலை செய்யப்பட்டவள். இப்படி ஒரு புறத்தில் பானை செய்தல் என்பது செயல் சார்ந்த தன்மையோடு தொடர்பு படுத்தாமல் கதை மரபாகவும் புராணமரமாகவும் சுட்டப்படுகிறது சங்க இலக்கியத்தில் ‘வென்னி குயத்தியாள்’ என்ற ஒரு பெண் புலவரில் இருந்து தில்லைவாழ் அந்தணருக்கும் அடியார்க்கும் அடியேன்’ என்று சொல்லுகின்ற பாடலுக்கு அடுத்து ‘திருநீலகண்ட குயவனாருக்கும் அடியேன்’ என்று சொன்னது வரையிலும் குயவர்கள் பறந்து விரிந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

நூலின் தலைப்பான ‘அணிநடை எருமை’ நான்காவது கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள எருமை குறித்தான பல்வேறு ஆய்வுகளை ஆழ அகல உழுதுள்ளார் ஆர் பாலகிருஷ்ணன். எருமையின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிட்டுப் பேசுகிறார். எருமை மாட்டுப் பாலின் கொழுப்பு விகிதம் அதிகமானது. எல்லா பாலிலும் 83 சதவீதம் முதல் 91 சதவீதம் வரை தண்ணீர் தான். குறைந்த தண்ணீர், நிறைய திடம் கொண்டது எருமைப்பால். சிந்துவெளியில் எருமை என்பது சடங்கு முறைகள் கூட தொடர்புடைய ஒரு விலங்காக உள்ளது என குறிப்பிடும் நூலாசிரியர், தைமாபாத்தில் கிடைத்த எருமை உருவ பொம்மை படத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எருமை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதைத் தரவுகளோடு விவரித்துள்ளார்.

“சத்தீஸ்கர் பகுதியில் காட்டெருமை கொம்பு வைத்துள்ள கோண்டுகள் காணப்படுகின்றனர். அவர்களுக்குப் பெயரே ‘பைசன் கான் மரியாஸ்’ என்பதாகும். அவர்கள் நடனம் ஆடும்போது கொம்பைத் தலையில் வைத்துக்கொண்டு ஆடுவர். நாம் தலைப்பாக வைத்திருப்பது போல அவர்கள் கொம்பு வைத்த கிரீடத்தைத் தலையில் வைத்துக் கொள்வர். இத்தகைய தன்மை பஸ்தர் பகுதிகளிலும் ஒரிசாவிலும் எல்லையோரப் பகுதிகளும் கோயா முடியா மக்கள் ஆடுவதிலும் காணப்படுகிறது. இவர்களின் பகுதிகளில்தான் சிந்து வெளிப் பண்பாட்டில் காணப்படும் டான்ஸிங் கேர்ள் என்ற சிலையினை செய்யக்கூடிய பழங்குடியினர் உள்ளனர்” என்ற புதிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

எருமையை எமனுடன் கோர்த்து விட்டதுதான் அதற்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியது. யமன் அல்லது எமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் குறித்து தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இந்த எமன் சூரியனின் மகன் சனீஸ்வரனின் அண்ணன் ஆவார். யமன் இந்தோ இரானிய புராணக் கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம். வேதத்தின்படி யமன் பூமியில் இறந்த முதல் மனிதர்.

தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இறப்பின் பின் உயிர்களைக் கொண்டு செல்வதாக சொல்லப்படும் உலகத்திற்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார். யமனுக்குச் சித்திரகுப்தமன் உதவி செய்கிறார். இவரே மனிதர்களின் பாவ புண்ணிய கணக்கச் சரி பார்த்து அவற்றைக் குறித்துக்கொண்டு அந்தத் தகவல்களை யமனுக்குத் தெரிவிக்கிறார். யமனை தர்மத்தின் தலைவனாக கருதி யமதர்மராஜா எனவும் அழைப்பதுண்டு. அவனுடைய வாகனம் எருமை என்று ஆகுபெயராய் கலித்தொகை, பரிபாடலில் குறிப்பிட்டுள்ளதை நிறுவுகிறார் நூலாசிரியர். பசு புனிதமான என்ற காரணத்தால் பாதுகாக்கப்படுகிறது என்றால் எருமை எந்த விதத்தில் புனிதத் தன்மை குறைந்தது? நமது இலக்கியங்களில் பசுவுடன் இணைந்தே எருமையும் வந்துவிடுகிறது. இந்தியா நீண்ட காலமாக பசுக்களை நம்பி இல்லை. ஆனால் 5000 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நாம் எருமையைப் பயன்படுத்தி வருகிறோம். உலகிலேயே மிகப்பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக இந்தியா உள்ளது. எருமை இறைச்சி விலை குறைவாக இருப்பதால் இங்கிருந்து வாங்குகின்றனர். உத்தர பிரதேசம், அரியானா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார் முதலிய இடங்கள் தான் இந்த எருமைகள் படுகொலை செய்யப்பட்டு ஏற்றமதி செய்யப்படுகின்ற இடங்களாக இருக்கின்றன. சங்க காலத் திருமணத்தில் பெண் எருமை சார்ந்த சடங்கு காணப்படுகிறது. இவ்வளவு தூரம் பண்பாட்டிற்குள் ஊறி இருக்கின்ற எருமைக்கு இத்தகைய நிலை எப்படி நேர்ந்தது என்கிற கேள்வியோடு கட்டுரையை முடிக்கிறார். அவர் கேள்விக்கான விடைகளைக் கண்டறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்‌.

“நடுவு நின்ற நல்ல நெஞ்சினோர்” என்னும் தலைப்பிலான கட்டுரையில் கலப்பை படம் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. நுகத்தடி பற்றி விவரிக்கிறார்.

வள்ளலாரின் அணுகுமுறை குறித்து கட்டுரை இடம் பெற்றுள்ளது சிறப்பு.

“அரசாட்சி செய்த நாள் தொட்டு இவன் இளவரசன் பட்டம் பெறுவான் என்று நினைத்திருந்தேன். இன்று எனது கனவெல்லாம் போய்விட்டது. இவன் அரசன் பிள்ளையாகாமல் அணில் பிள்ளையாகி விட்டானே. பட்டப் பிள்ளையாகாமல் பலிப்பிள்ளையாகி விட்டானே. எப்படியெல்லாம் வளர்த்துக் கொண்டு வர வேண்டும் என்று
நினைத்திருந்தேன். எனக்குத் தெரிந்த அளவிற்கு இந்தப் பிறவியில் நான் எந்தத் தப்பையும் செய்யவில்லையே! இந்தப் பிறவியில் செய்யாமல் இருந்தாலும் முற்பிறவியில் ஏதேனும் செய்துள்ளேன் போல, என்று சோழ மன்னன் புலம்புவதாக மனுநீதிச் சோழன் முற்பிறவியில் தான் செய்த பாவங்களாக சிலவற்றைப் பற்றிப் பட்டியலிடுகிறான். இப்படி எல்லாம் நான் செய்தால் என்னவோ எனக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்து விட்டான் போலிருக்கிறது” என்று அம் மன்னன் சாதாரணமாக இறக்கிக் கொண்டு வந்து இவரை தமிழ்நாட்டு மனுவாகச் சொல்கிறார். மனுநீதிச் சோழன் என்ற பெயரை மட்டுமே வள்ளலார் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் அச்சோழனைத் தமிழ் சமூகத்தின் புராணம் மூதாதையாகவே அடையாளம் காட்ட விரும்பி உள்ளார் என்பதும் தெளிவாகிறது.

“நும்மினும் சிறந்தது நுவ்வை” என்னும் கட்டுரையில் சங்க இலக்கியத்தில் காடு என்பது 83 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதை ஆதாரத்தோடு நிறுவுகிறார் நூலாசிரியர். புன்னை மரத்தை விதந்தோதும் இலக்கியச் சான்றுகளை குறிப்பிட்டுள்ளார் ஆர். பாலகிருஷ்ணன். தலைவனுக்கும் தலைவிக்கும் செவிலித் தாய்க்கும் புன்னை மரம் முக்கியக் குறியீடாக சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளதை உணர முடிகிறது. திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்றால் அங்கு ஆயிரம் ஆண்டு பழமையான வன்னி மரத்தைப் பார்க்கலாம் என்கிறார். ராஜஸ்தானில் உள்ள ராணா, கர்நாடகாவில் உள்ள உடையார், தமிழ்நாட்டு வன்னியர், உடையார், குலாலர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு சமூகத்தினர் தங்களை வன்னி மரத்துடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். சிந்துவெளி பகுதியில் இருந்து தமிழ்நாடு வரையிலும் இணைக்க வன்னி சார்ந்த இட பெயர்களும் வன்னி சார்ந்த மரபுகளும் வன்னி சார்ந்த நம்பிக்கைகளும் இருக்கின்றன என்கிறார். கல்பத் தருவைப் பற்றி சங்க இலக்கியச் சான்றுகளை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

கட்டுரையில், ஓசோன் மண்டல ஓட்டையை எப்படித் தைப்பது என்கின்ற குறிப்பிலே கவிஞர் தாராபாரதியின் கவிதையையும் குறிப்பிட்டுள்ளது பாராட்டத்தக்கது.

“ஓசோன் மண்டல ஓட்டையைத் தைக்க புதியதாய் ஊசி கண்டுபிடி” “பட்ட மரம் ஒன்று வெட்டும் பொழுது பக்கத்தில் புதியதாய் நட்டு விடு” “பட்ட மரமானாலும் வச்சி வெட்டணும்” போன்ற பதிவுகள் சிறப்பு‌.

“வசையம் நிற்கும் இசையும் நிற்கும்” என்ற கட்டுரையில் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகள் அனைத்திலும் வை என்னும் வேர்ச்சொல் திட்டுதல், கூர்மை என்னும் இரண்டு பொருட்களில் வருகின்றன என்கிறார். பரம்பு மலையில் 300 ஊர்கள் இருந்ததும் கபிலர் வந்து பாடவும் அவற்றை எடுத்துக் கொள்ளுமாறு பாரி கொடுத்து விட்டதும் என்று நூத்தி ஒன்பதாவது புறநானூற்றுப் பாடலில் கபிலர் பாடுவதை குறிப்பிடுகிறார் நூலாசிரியர். தமிழ்நாட்டில் மொத்தம் 3466 பேர் பாரியுடன் சம்பந்தப்பட்ட பேர்களைக் கொண்டுள்ளனர் என்று நம்மை வியக்க வைக்கிறார்.

“ஒரு நாள் நாம் இறந்து விடுவோம் என்ற மாற்ற முடியாத உண்மை பற்றிய ஆழ்நிலை உணர்வு புகழுக்கான தூண்டுதல் சுயமதிப்பு பற்றிய சிந்தனை புகழுக்கான அடிப்படை” என்று நவீன உளவியலாளர்கள் சொல்வதைக் குறிப்பிடும் நூலாசிரியர், “இறந்து விடுவோம் என்ற பயத்திலும் எதை விட்டு விட்டுப் போகிறோம் என்பதிலும் இவையே தூண்டுகோலாக இருக்கிறது” என்று தத்துவ விசாரணை செய்கிறார்.

புறநானூறு பதினெட்டாம் பாடலில் குடபுலவியனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியதைக் குறிப்பிட்டுள்ளார். இசை நிற்க வேண்டும் என்றால் அணைக்கட்டுமாறு மன்னர்களுக்கு சங்க இலக்கியம் சொல்கிறது. இதற்குப் பேர்தான் இசை நிற்கும் என்பது. நிற்கும் என்பது நிலைத்து நிற்கும். நீடித்து நின்று மட்டுமல்லாது நெட்டமாக நிற்பதும் தான் என்று புதிய விளக்கம் தந்துள்ளார் நூலாசிரியர்.

காளிங்கராயன் வாய்க்கால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த காளிங்கராயன் என்பவரால் கட்டப்பட்டது என்பதையும் நீர் வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்டம் சிறப்பாகப் பயன் அடைவதையும் இக்கட்டுரைகள் நம்மால் உணர முடிகிறது.

1876-ல் தாது வருட பஞ்சம் ஏற்பட்டபோது ஜான் பென்னிகுவிக் என்னும் ராணுவப் பொறியாளர் லண்டன் சென்று தன் சொத்துக்களை விற்று வந்து தன் சொந்தப் பணத்தின் மூலம் கட்டி அமைத்த முல்லைப் பெரியாறு அணை குறித்து விரிவாகவே கட்டுரையில் விவரிக்கிறார் நூலாசிரியர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப்பகுதி ஜனங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது. பென்னிகுவிக் பெயர்களைப் பல குழந்தைகளுக்குச் சூட்டி இருப்பதும், அவருக்கு இப்பவும் பொங்கல் வைத்துக் கொண்டாடுவதும் அறியப்படாத செய்திகளாக இக்கட்டுரையில் காண முடிகிறது.

“வசையும் நிற்கும்” என்பதில் ரோம் பேரரசைச் சேர்ந்த நீரோவையும் கம்போடியாவைச் சேர்ந்த போல் பாட்டையும் ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ஃப் இட்லரையும் குறிப்பிடுகின்றார். இக்கட்டுரையின் இறுதியில் இடம் பெற்றுள்ள ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் கவிதை சிறப்பானது.

” தமிழ்கெழு கூடல்” எனும் கட்டுரையில் மருங்கூர், ஊனூர், தழும்பல் போன்றவர்களைச் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளதைத் தரவுகளோடு விவரிக்கிறார். ‘தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானம்’ என்னும் இடப் பெயர் வந்த காரணத்தை விவரிக்கிறார் நூலாசிரியர்.

முருகக் கடவுள் குறித்தும் வைகை ஆறு குறித்தும் பார்ப்பனர்கள் வைகை ஆற்றினைத் தொட மறுத்தது குறித்தும் விவரிக்கிறார் இக் கட்டுரையில். திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடவூர் என்னும் நான்கு மாடங்களை நச்சினார்க்கினியர் கலித்தொகையில் நான்மாடக்கூடல் பற்றி கூறியுள்ளதைக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். ஐராவதம் மகாதேவன், “மதுரை என்பது அதனுடைய பெயர் அல்ல அது மதில் என்பதிலிருந்து வந்தது அது மதிரை என்பார்” என்னும் புதிய தகவல் அறிய முடிகிறது. “

கூடல் என்பது வெறும் நகர் அல்ல- நாகரீகம்
வைகை என்பது வெறும் ஆறு அல்ல -வரலாறு
தமிழ் என்பது தொன்மம் மட்டுமல்ல- தொடர்ச்சி

என முடித்திருப்பது சிறப்பு.

பண்பு இல் ஆண்மை எனும் கட்டுரையில் கொண்டி குறித்து சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பேசப்படுவதை விவரிக்கிறார் நூலாசிரியர். சங்க இலக்கியங்களில் வரும் கைக்கிளை, பெருந்திணை குறித்தும் விவரித்து எழுதுகிறார். இவ்வளவும் சொல்லிவிட்டு சமகால அவலங்களையும் குறிப்பிடாமல் இல்லை கட்டுரை. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல “ஹத்ரஸ் சம்பவம் ஒரு கண்ணாடி போன்றது. நமது சமுதாயத்திலும் நமது மக்களாட்சியிலும் உள்ள தவறுகளை, பிரச்சனைகளை அது நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்த கண்ணாடி காட்டும் பிம்பம் அச்சுறுத்தக் கூடியதாக உள்ளது. இந்த நிலைமை கட்டாயம் மாற வேண்டும் என்பதற்கான கடுமையான நினைவுறுத்தல் தான் இந்தச் சம்பவம்”

“கிராமங்கள் திறந்தவெளிச் சிறைச்சாலை போன்றவை. அங்கு முற்றிலும் சாதியக் கொடுமைகள் நடைபெறுகின்றன. ஒடுக்கப்பட்டோர், ஒரு நலிவடைந்தோர் முதலியோருடைய வாழ்க்கைக்கு அங்கு மதிப்பே இருப்பதில்லை” என்று சாடுகிறார்.
மேலும் “வட பகுதியில் பல இடங்களில் கோதுமையும் சேர்ந்து கொடுமைகளும் விளைகின்றன”
என்று காத்திரமுகப் பதிவு செய்துள்ளார் ஆர். பாலகிருஷ்ணன்.

“சமூக விரோத ஆளுமை, மனப் பிறழ்வு, மதுவுக்கு அடிமையாவது, போதைப் பொருட்களுக்கு அடிமையாவது முதலியவை முரட்டு ஆண்மை நோய்கள். மனச்சோர்வு, கவலை, பெருந்தீனி, உணவு செல்லாமை ஆகியவை பெண்மை நோய்கள்” என்கிறார் நூலாசிரியர்.
இது சிந்திக்கத் தக்கது.

புதுமைப்பித்தனின் சாப விமோசனம் சிறுகதையில் அகலிகையின் காத்திரமான கேள்விகளும் முடிவும் பொருத்தமாக இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

இறுதியாக “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறு” என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
இக்கட்டுரையின் மூலம் காலந்தோறும் பஞ்சம் இருந்து வந்ததை உணர முடிகிறது. 1940 களின் தொடக்கத்தில் கூட லட்சக்கணக்கானோரை நாம் இந்தியாவில் பலி கொடுத்து இருக்கிறோம். அருகிலேயே உணவு இருக்கும். ஆனால் எடுத்துக் கொடுக்க ஆள் இருக்க மாட்டார்கள். கட்டளை வழங்க ஆள் இருக்க மாட்டார்கள் அப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறையப் பேர் இறந்தனர்” என்பது நெஞ்சை நெருடுகிறது.

பிஜியின் தென்னாப்பிரிக்காவில் மொரிசியசில் ரீயூனியன் தீவுகளில் தமிழர்கள் கொட்டிய, கொட்டும் உழைப்பு

அதுதான் சிங்கப்பூரில் ஆட்சி மொழித் தகுதி
அதுதான் மொரிசியசு கரன்சி நோட்டில் தமிழ்
அதுதான் சிலிக்கான் பள்ளத்தாக்கில் கணினி விசைப்பலகை, மென்பொருள் அதுதான் டன்ட்ராவில் வர்தோவில் பிடித்த மீன் கத்தி
அதுதான் முருகனை உலகெங்கும் தூக்கிச் சென்ற தோள்கள் அதுதான் கடல் தந்த மதுரை வீரனின் கதையின் கால்கள்
என்று முடித்திருப்பது நூலின் சிறப்பு.

“பசுவை வைத்து மதமும் அரசியலும் இயங்கும் இன்றைய சூழலில் எருமைகளை விதந்து பேசுவது முக்கியமானது.”

“அரசியல் ரீதியாகப் பின்னிழுக்கும் பழமைவாதக் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை. எல்லாவற்றிலும் ஒரு தேக்கம். இச்சூழலில் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகள் தடைகளை உடைத்தும் பெருகும் புது வெள்ளம் போல் வந்து சேர்ந்துள்ளன”

எனும் பெருமாள் முருகனின் கூற்றுப்படியான புது வெள்ளத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இன்றைய தேவையும் அவசியமும் கூட.

நூலின் தகவல்கள் : 

நூல் : சங்கச் சுரங்கம் இரண்டாம் பத்து “அணி நடை எருமை”
ஆசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 168
விலை : ரூ.160
நூலைப்  பெற : https://thamizhbooks.com/product/aninadai-erumai-sangachsurangam-erandam-pathu/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பெரணமல்லூர் சேகரன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *