நூல் : சங்கச்சுரங்கம் இரண்டாம் பத்து (Sangachsurangam Erandam Pathu)
அணி நடை எருமை
ஆசிரியர் : ஆர். பாலகிருஷ்ணன் (R. Balakrishnan)
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : டிசம்பர் 2021
விலை : ரூ.160
நூலைப்பெற : https://thamizhbooks.com/product/aninadai-erumai-sangachsurangam-erandam-pathu/
”*எருமையின் மீது எமனை உட்கார வைத்தது யார்? எப்போது?’’
இந்நூலாசிரியரின் இக்கேள்வியுடன் எனது வாசிப்பு அனுபவத்தை தொடர்கிறேன் தோழர்களே.
வாசித்து முடித்து ஒரு வாரம் கழித்தே எழுத வேண்டிய சூழல். காரணம் முழுவதும் வரலாற்றுத் தடமாச்சே. எசகுபிசகாக எதுவும் மாறிவிடக் கூடாதே. இந்நூலுக்கான வாசிப்பு அனுபவம் என்பதை விட நூலை மீண்டும் மீண்டும் படித்தே தான் ஒரு சில பதிவுகளை வழங்குகிறேன் தோழர்களே. நீங்கள் முழுவதும் வாசியுங்கள். தங்களுக்கு தங்களின் சிந்தனையோட்டத்திற்கு பல ஆச்சரியங்களை வழங்கலாம் இந்நூல். இதோ தொடங்குகிறேன்.
*இந்நூலுக்கு ‘அறிவாயுதம் தரும் ஆய்வுகள்’ என்னும் மிகச்சிறப்பான முன்னுரையை தந்து இந்நூலை வாசிக்க அடித்தளம் போட்டுக் கொடுத்துள்ளார் மாதொருபாகன் நூலாசிரியர் தோழர் பெருமாள் முருகன் அவர்கள்.
இந்நூலின் தலைப்பில் இருக்கும் அணிநடை எருமை அதுதான் மிகவும் இந்நூலுக்கு முத்தாய்ப்பு. ஆம் இம்மண்ணில் பசுவை வைத்து புனிதம் கற்பித்து நம்மை அதன் பின்னே நடைபோட வேண்டும் என்று கற்பிதம் செய்யப்பட்டதற்கு மாறாக நாம் வந்த வழித்தடத்தின் ஆரம்பப்புள்ளி எது என்று ஆராயும்போது அது நம்மை கொண்டு சேர்க்கும் இடம் சிந்துசமவெளி. அங்கே இந்த எருமை அங்கு வாழ்ந்த நமது மூதாதையர்களுக்கு விவசாயத்திற்காக உதவிய செயலைத்தான் குறியீடாக வரலாறு பதிந்துள்ளது. அக்குறியீடு இப்போதும் சிந்துசமவெளி நாகரிக பொறிப்புகளில் மிகவும் கம்பீரமாக காட்சி கொடுக்கும் நமது ஆசிரியர் குறிப்பிடும் அணிநடை எருமையில். உள்ளே தமிழ் கூறும் சங்க இலக்கிய பதிவுகளில் உள்ள ஒவ்வொரு பாடலையும் அதற்குண்டான விளக்கத்துடன் நமக்கு மிகச் சிறப்பாக தடம் அமைத்துக் கொடுத்திருப்பார் இந்நூலில். தமிழை மிகவும் விருப்பப்பாடமாக எடுத்து பயிலும் கல்லூரி மாணவர்கள் முதல் சங்க இலக்கியத் தடம் குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் வரை தங்களுக்குத் தேவையான தடம் இந்நூலிலும், ஆசிரியர் எழுதியிருக்கும் மற்ற நூல்களிலும் கண்டு தமது ஆராய்ச்சியை மிக நுணுக்கமாக பதிவு செய்யலாம்.
மற்றொரு கருப்பொருள் இந்நூலில் இருப்பது ‘கலம் சுடும் புகை’ எனும் பொருளில் வரும் மிக முக்கியமானது ‘கலம் செய் கோ’. ஆம் கலம் என்றால் பானை. கோ என்றால் அரசன். இங்கே பானை செய்யும் குயவரை போற்றிப் புகழும் மிகவும் சிறப்பான காட்சிதான் சங்க காலத்தில் இருந்துள்ளது. குயவர்களை அப்படி போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். காரணம் சக்கரம் கொண்டு அதாவது அன்று புதிய தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட சக்கரம் தான் இதற்குப் பின்னிருக்கும் வரலாறு. அவ்வளவு தொழில்நுட்பத்துடன் வளர்ந்த அம்மக்கள் இப்போது இருக்கும் காலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் அவல நிலையாகவே இருக்கிறது. ஆம் மட்பாண்டம் செய்பவர்கள் இன்று அதற்கான மண் எடுக்க வேண்டும் என்றால் அதற்கான அனுமதி வாங்க வேண்டும் என்பது. ஆற்றில், நீர்நிலைகளில் மணல் எடுப்பதுவும், தம் தொழிலுக்காக களிமண் எடுப்பதும் எப்படி ஒன்றாகும் என்று தெரியவில்லை. சங்க காலத்தில் மன்னர்கள் போன்று போற்றப்பட்ட குயவர்கள் இன்று மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியும் மண்பாண்டங்கள் வருகிறதென்றால் அது நவீன இயந்திரங்களில் உருவானவையாகவே இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி இன்று நாம் எழுதும் எழுத்து வடிவம் தோன்றியதே மண்பானைக் கீறல்களிலிருந்து தான் எனும்போது பானைத்தடம் எவ்வளவு வலிமையானதாக பரிணாம வளர்ச்சி பெற்ற வடிவமாக இருந்திருக்கிறது என்பது எவ்வளவு பேருண்மை. அந்த பானைக்கீறல் என்பது கூட சக்கரத்தைச் சுற்றும் ‘கோ’வால் முதலில் உருவாகவில்லை. மண்பானையை செய்து தனியாக எடுத்து வைக்கும்போது இருக்கும் பச்சை மண் கொண்ட அப்பானையில் அக்கோ அப்பானையில் கீறல் போட்டதை சிந்துவெளி முத்திரையில் இருக்கும் குறியீடுகள் வந்ததும் அதன் பரிணாமம் நம்முடைய எழுத்து நம்மிடம் வந்ததற்கான காரணம் எனும்போது நமது எழுத்தின் முன்னோர்கள் அன்றைய குயவர்கள் தானே.
இந்நூலில் எட்டு தலைப்புகளின் கீழ் நமக்கு இதுவரை அறிந்திடாத வரலாற்றுத் தடத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கிச் செல்கிறார் ஆசிரியர். 1.குடற்காற்று எறிந்த குப்பை. இங்கு குப்பை என்பது நமக்கு குப்பையாகவே தெரியும். ஆனால் சங்க காலத்தில் அது நெற் குவியல்களாக புலவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது எவ்வளவு பொருத்தமாக இருந்துள்ளது தெரியுமா. ஆம் நெற்களத்தில் நெற்கதிர்களை அடித்து கதிரிலிருந்து பிரித்துப் போடும்போது மேற்கிலிருந்து வீசும் காற்று நெல்மணிகளை குவிக்குமாம். அதைத்தான் சங்க இலக்கியம் குப்பை என்கிறது. இது பெரும்பாணாற்றுப்படையில் ஒரு பகுதியின் வளத்தைக் குறிப்பதாக ஆசிரியர் நமக்குக் கூறுகிறார். ஒவ்வொரு கருப்பொருளின் இறுதியிலும் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு என்று நமக்குப் புலப்படாதவற்றை மிகவும் அழகாக கோட்டிக் காட்டி முடிக்கிறார். நாம் சுக்கிரன் என்போமே அதுதான் அந்த வெள்ளி நட்சத்திரம் அதைப்பற்றிய பதிவு மிகவும் சிறப்பு. ‘’…யானே அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே.’’ இது புறநானூற்றில் வரும் 383 ஆவது பாடல். பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார் என்கிற பெண். ஒரு குறுநிலத் தலைவன் அவியனைப் பற்றி பாடியது. இப்பாடலில் வரும் உரையில் தான் இறுதியில் ‘’என்னைக் காக்க அவியன் இருக்கும்போது வெள்ளி எங்கு முளைத்து எங்குப் போனால் எனக்கென்ன?’’ என்று அப்பவே அறிவியல் சிந்தனையோடு நமக்குச் சுக்கிரன் இருக்கிறான் அதிர்ஷம் வரும் என்று பாடப்படவில்லையே.

இதுபோல் ஒவ்வொரு தலைப்பும் ஓராயிரம் அர்த்தங்களை நமக்கு வழங்கிச் செல்கிறது. முதல் தலைப்பில் வரும் வாடைக் காற்றின் பொருளே அசத்துகிறது. சங்க இலக்கியம் பேசிய பல பொருட்கள் இன்று நமக்குத் திரிந்தோ, திரித்தோ தான் வழங்கப்படுகிறது. இந்நூல் நம்மை சங்க காலத்தோடு கொண்டு இணைத்துவிடுகிறது. அதுதான் ‘சிந்துவெளி விட்ட இடம் சங்க இலக்கியம் தொட்ட இடம்’ என்று நம்மை அருமையாக இணைத்துள்ளார் நம் கையைப் பிடித்து சிந்துவெளி முன்னோருடன் இந்நூலின் ஆசிரியர்.
இரண்டாவது கருப்பொருள் ‘விளையாட்டும் விரும்பார் கொல்.’ இதில் விளையாட்டு என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானத என்பது மட்டுமல்லாமல் இருவரும் விளையாடிய விளையாட்டுகளில் பெண்களே அதிகம் விளையாடியிருக்கின்றனர் என்பது தான் இங்கு தனிச் சிறப்பு. இப்பொழுது பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் பொதுவெளியில் சுயமாக விளையாட முடிகிறதா? என்பதை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஊரின் மையத்தில் இருக்கும் விளையாட்டுத் திடல் யாருக்கானதாக இருக்கிறது என்பதை கொஞ்சம் யோசித்து பார்ப்போமே. நான் பெண் குழந்தைகளிடம் வினவியிருக்கிறேன் ‘’ஏம்பா நீங்களும் குழுவாகச் சென்று அந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடலாமே’ என்று கேட்டேன். அதற்கு அக் குழந்தைகள் ‘’எங்க சார் எங்களை வெளிய விடறாங்க’’ என்று வருத்தத்துடன் பேசினர். காரணம் நம் சமூகத்தில் ஆண் குழந்தைகள் என்றால் எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம் முழு சுதந்திரத்துடன். பெண் குழந்தைகள் என்றால் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டும்.
அதைத்தான் சங்க இலக்கியம் உடைத்துப்போட்டுள்ளது. சென்று வாசியுங்கள் இந்நூலில். நாம் எங்கே கோட்டை விட்டோம் என்று புரியும். சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு என்னும் இறுதிப் பகுதியில் விளையாட்டில் பெண்களின் குறித்த பாடலும் சமகால நிலையையும் ஒப்பிட்டு நம்மை சுட்டிருப்பார் சொல்லால். ஆம் நற்றிணை 68 ஆம் பாடலில் ‘விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது, இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் அறனும் அன்றே, ஆக்கமும் தேய்ம்…’ இதில் இளம்பெண்கள் விளையாடாமல் வீட்டில் இருப்பது அறம் அன்று. உடல்நலமும் கெடும் என்பதே மிக முக்கியமான வரிகள். இறுதியில் 2018ல் காமன்வெல்த் போட்டிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர், அத்துறையின் செயலாளர் ஆகியோருடன் இந்நூலின் ஆசிரியர் இந்திய ஆட்சிப்பணியாளர் என்பதால் ஒடிசாவின் ஆட்சிப்பணியாளராக அப்போட்டியை எப்படி இங்கே நடத்தலாம் என்பதை காண்பதற்காகச் செல்கிறார். அவ்விளையாட்டின் ஸ்பான்சர் ஒடிசா அரசு என்பதால் ஜெர்சியை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது ஒடிசா அரசு. அதனால் விளையாட்டு வீரர் அணிந்திருக்கும் உடையில் ஒடிசா என்று எழுதியிருக்கும். அப்படி ராணி என்று எழுதிய ஆடையை ஒரு குழந்தை அதாவது ஆஸ்திரேலிய குழந்தை அணிந்திருந்தது ஆச்சரியமளித்ததாம்.
அக்குழந்தையின் பெயர் மிஷ்தா. பிறகு விசாரித்ததில் அக்குழந்தையின் குடும்பம் பஞ்சாபிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளது தெரியவந்தது. குழந்தையின் தந்தைக்கு தனது மகள் இந்தியாவின் சார்பில் ஹாக்கி வீராங்கணையாக வரவேண்டும் என்கிற விருப்பம் இருந்துள்ளது. இதை அறிந்த நமது நூலாசிரியர் அக்குடும்பத்தை இந்தியாவிற்கு விருந்தினர்களாக அழைத்துள்ளார். அப்படி வந்தவர்களை 15 நாட்கள் தங்க வைத்து முழு அரசு மரியாதை செலுத்தியுள்ளனர். குழந்தை மிஷ்தா பெயரில் ஜெர்சியை உருவாக்கி அக்குழந்தைக்கு அணிவித்து இந்திய ஹாக்கித் தலைவருடன் கைக்கோர்த்து அக்குழந்தை நடந்ததையும் இரு அணிகளுக்குமிடையில் நிற்கு வைத்து அழகு பார்த்திருக்கிறார் ஆட்சிப்பணியாளராக நம் நூலாசிரியர்.
இந்நூலில் நான்காவதாக இடம் பெற்றுள்ள ‘அணி நடை எருமை’ தரும் பொக்கிஷம் அளவிடற்கறியது. உலகளவில் 207 மில்லியன் எருமைகள் உள்ளனவாம். இது 2021ல் இந்நூல் வெளியான போது வந்த பதிவு. அப்பதிவின் அடிப்படையில் 97% எருமைகள் ஆசியாவில் குறிப்பாக தெற்கு ஆசியாவில் இருந்துள்ளதாம். இவ்வளவு எருமைகள் இருந்தும் ஏன் எருமைகள் சிறுமைப்படுத்தப்படுகின்றன என்பதே மிக முக்கியமான கேள்வி. குறிப்பாக இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாவது எருமையின் இறைச்சியே. மிகக்குறைந்த விலை, சிறந்த தரம் என்பதாலும், வடஇந்தியாவில் எருமை பசுக்கப்பட்டதாலும் அதாவது பசுவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததாலும், எருமையை சிறுமையாகக் கருதியதாலும் எருமையின் இறைச்சி மிக விரைவாகவும், அதிகமாகவும் ஏற்றுமதியாகியுள்ளன என்பது இந்நூல் நமக்கு தகுந்த வரலாற்றுத் தரவுகளுடனும், சங்க கால இலக்கியத்துடனும் அறிவிக்கிறது. இன்னும் ஏராளமான சிந்துவெளிப் பண்பாட்டுத் தரவுகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டுகிறேன். இறுதியாக எருமை குறித்து நமது ஆசிரியர் எழுப்பியுள்ள கேள்விகளுடன் முடித்துக் கொள்கிறேன்.
‘’*இந்தியாவில் வளர்ப்பு விலங்காகப் பழக்கப்படுத்தப்பட்ட எருமை ஏன் எப்போதிலுந்து பசுக்கப்பட்டது? *சிந்துவெளிப் பொறிப்புகளில் முத்திரைகளில் கம்பீரமான காளை, சடங்கு வழிபாட்டடு முறைகளோடு சித்தரிக்கப்படுகையில் பசு மாட்டு முத்திரையோ பொறிப்போ ஏன் இல்லை? * பழங்குடி மக்களின் வாழ்வியலில் எருமையின் இடம் இன்னும் மாறவில்லை என்பது எதைக் காட்டுகிறது? *சங்க இலக்கியம் எருமையைப் போற்றுவதற்கான சமூக உளவியல் மற்றும தொன்ம மரபுகளையும் அதன்பின் நேர்ந்த தாக்காங்கையும் எப்படி மீள்கட்டமைப்பு செய்வது? *எருமையின் மீது எமனை உட்கார வைத்தது யார்? எப்போது? என்ற கேள்விகளோடு முடிக்கிறேன்’’ என்று அணிநடை எருமையின் கருப்பொருளை முடித்திருப்பார். ‘
’*இந்தியாவில் வளர்ப்பு விலங்காகப் பழக்கப்படுத்தப்பட்ட எருமை ஏன் எப்போதிலுந்து பசுக்கப்பட்டது? *சிந்துவெளிப் பொறிப்புகளில் முத்திரைகளில் கம்பீரமான காளை, சடங்கு வழிபாட்டு முறைகளோடு சித்தரிக்கப்படுகையில் பசு மாட்டு முத்திரையோ பொறிப்போ ஏன் இல்லை?
* பழங்குடி மக்களின் வாழ்வியலில் எருமையின் இடம் இன்னும் மாறவில்லை என்பது எதைக் காட்டுகிறது?
*சங்க இலக்கியம் எருமையைப் போற்றுவதற்கான சமூக உளவியல் மற்றும தொன்ம மரபுகளையும் அதன்பின் நேர்ந்த தாக்கங்கையும் எப்படி மீள்கட்டமைப்பு செய்வது?
*எருமையின் மீது எமனை உட்கார வைத்தது யார்? எப்போது? என்ற கேள்விகளோடு முடிக்கிறேன்’’
என்று அணிநடை எருமையின் கருப்பொருளை முடித்திருப்பார்.
நமக்கும் நிறைய கேள்விகள் இந்நூலை வாசித்ததன் மூலம் எழுகிறது. உங்களுக்கும் எழும் கேள்விகள் எழக் காரணமென்ன இந்நூலில் விடை இருக்கிறது. அவ்விடைகளைக் கொண்டு நாம் அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையோடு முடிக்கிறேன்.
இந்நூலை இவ்வளவு சிறப்பாக வழங்கிய நமது தொல்லியன் ஆசான் தோழர் ஆர். பாலகிருஷ்ணன் (R. Balakrishnan) அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. தோழர் உங்களுக்கு நாங்கள் நன்றி சொல்லும் விதமாக இருப்பது தங்களின் அனைத்துப் படைப்புகளையும் தொடரந்து வாசிப்பது தான். வாசிக்க அடியெடுத்து வைக்கிறேன் என்று தங்களுக்கு உறுதி கூறுகிறேன். தங்களின் பின்னால் தங்களின் பானைத் தடத்தில் பின்தொடர்ந்து வருகிறோம்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூல் அறிமுகம் எழுதியவர்:
இரா. சண்முகசாமி
புதுச்சேரி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


தங்கள் நூல் அறிமுகம் வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வுடன் வரலாற்று இலக்கிய ஆய்வுச் சான்றுகளுடன் எழுதும் நூலாசிரியரின் அனைத்து நூல்களையும் வாசிக்கும் எண்ணத்தை வரவழைக்கிறது. அருமை. நன்றி. வாழ்த்துகள்