சென்னையில் சமீபத்தில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன்.  என்னையறியாமல் மேள வாசிப்பையும் நாதஸ்வர இசையையும் ஒரு சாதகப் பறவையைப்போல உள்வாங்கிக் கொண்டிருந்தது என் மனம். அவர்களுடனே இசையில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தேன்.  இத்தனைக்கும் ராக ஆலாபனைகள் எதுவுமே தெரியாது எனக்கு.  அதனாலென்ன?  கிராமத்திலிருப்பவர்கள் ரசிக்க வில்லையா என்ன?   இந்த லயிப்பு எதனால்?  நிச்சயமாக எஸ்.ரா வின் சஞ்சாரம் நாவலின் பாதிப்புத்தான்.

மூதூர்க் காரர்களுக்கும், பனங்குளத்துக் காரர்களுக்கும் சூலக் கருப்பசாமிக்கு யார் வில் எடுத்துக் கொடுப்பது என்ற தகராறில், கச்சேரி செய்து கொண்டிருந்த ரத்தினத்தையும் பக்கிரியையும் “இன்னும் என்னடா உக்காந்துக் கிட்டிருக்கீங்க?  செரைக்கவா ? எழுந்து போங்கடா” என்று குடிகாரன் வீரசின்னு விரட்டுகிறான். நிறைய நேரமாய்ப் பொறுத்துப் பார்த்தப் பக்கிரி – ஏற்கெனவே வீரசின்னுவிடம் அடிவாங்கிய வலியின் வேதனையில் – பதிலுக்கு வீரசின்னுவை ஒரு குத்து விடுகிறான்.  அவ்வளவுதான்.  பக்கிரியைத் துவட்டி எடுத்துவிடுகிறார்கள்.  அங்கிருந்த மரத்தில் ரத்தினத்தையும் பக்கிரியையும் கட்டிப் போட்டு விடுகிறார்கள். நள்ளிரவில் பூசாரி அவிழ்த்துவிட்டு ஓடிப்போகுமாறு சொல்கிறான். ஆத்திரத்திலும் அவமானத்திலும் பக்கிரி இரவில் பந்தலுக்குத் தீவைக்கிறான். இரவோடு இரவாக பக்கிரியின் அக்கா வீடு கொடுமுடிக்குக் கிளம்புகிறார்கள்.

லாரியில் தப்பிச் செல்லும் வழியில் அவர்கள் இருவருக்கும் ஏதேதோ நினைவுகள் வருகின்றன.  பழைய ஞாபகங்கள் கிளர்ந்து எழுகின்றன.  ஒவ்வொன்றாய் நமக்கு முன் காட்சிகளாய் விரிகின்றன.  அரட்டானம் லட்சய்யாவின் நாதத்திற்கு கல்யானை தன் காதுகளை அசைத்ததால் படையெடுத்து வந்த மாலிக்காபூர் ஊரைக் கொள்ளையடிக்காமல் திரும்பிவிடுகிறான்.  கல் யானை காதுகளை அசைத்ததோ என்னவோ?  எஸ்.ரா இந்த சாக்கில் மனிதர்களின் காதுகளை அசைக்க முயற்சி செய்கிறார்.

சஞ்சாரம் | Buy Tamil & English Books Online | CommonFolks

“ஏழு வீட்டுச் சோறு”  சுவாரசியமான கதை.  சக்கிலி கருப்பையாவுக்கு நாதஸ்வரம் கற்றுத் தந்த காரணத்தினால் கண்ணுசாமி நாயனக்காரர் படாத பாடு படுகிறார்.  கிண்ணிமங்கலம் வேணுகோபாலிடம் நாதஸ்வரம் கற்றுக்கொள்ளப் போன பக்கிரிக்கு கடைசி வரையிலும் கற்றுத் தரவேயில்லை.  அவன் சாணக்குழிக்குள் விழுந்ததுதான் மிச்சம்.  மருதூர் மடம் ராகவையாவிடம் கற்றுக் கொண்டு நாதத்தை வசப் படுத்துகிறான்.  “இந்த வாத்தியம் அசுர வாத்தியம்.  யானை மாதிரி.  பயத்துக்குக் கட்டுப் படறதில்லே.  பழக்கத்துக்குத்தான் கட்டுப்படும்”

வாசிப்பதற்காக தேர்தலில் அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொள்வதெல்லாம் படு சுவாரசியமான கதை.  இவர்களுக்குக் கிடைக்கிற சன்மானம் வெறும் அவமானம், கேவலம், அலட்சியம், சாதிய இழிபாடு.  ஆனால் எல்லாவற்றையும் இழந்தபின்னும் இன்னும் மிச்சம் இருக்கும் இடவலம் ஜமீனின் இசை ரசனையில் நாமும் கலந்துவிடுகிறோம்.  அகங்காரம் பிடித்த வாத்தியக் கலைஞனுக்கு கழுதை வெட்டை பரிசளித்த ஊமை ஐயர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

காதுகளை அடைத்துவிடுகிற திமிரி நாயனத்தை அமிர்த கானமாக மாற்றியவர் ராஜரத்தினம் பிள்ளையாம். அவரது முதல் வாசிப்பு மண்ணடியில்தான் நடந்திருக்கிறது.  தாசிகளின் ஆட்டத்துடன் சேர்ந்த நாயனம் மேளத்திற்கு மரியாதை இருப்பதில்லையென்று தனியாக வாசிக்க ஆரம்பித்த தெக்கரை சாமிநாதப் பிள்ளை முதல் காருகுறிச்சி அருணாசலம் வரை நாவலில் அவரவரும் தப்பித்துப் போகும் ரத்தினம், பக்கிரியின் நினைவலைகளாகத் தொடர்கிறார்கள்.

திடீரென்று வாத்தியக்காரர்கள் வராமல் போக கரகாட்டக்காரிகள் இரண்டு பேர் தவித்துப் போகிறார்கள்.  அப்போது காசு வாங்கிக் கொள்ளாமலே ரத்தினமும் பக்கிரியும் வாசித்துக் கொடுக்கிறார்கள்.  இயல்பிலேயே அவர்களுடனான உறவு அவ்வப்போதையத் தேவைக்கெனவே அமைகிறது.  காமம் ஒரு இயற்கை உபாதை போலக் கடக்கப் படுகிறது.  ஆனால் அவர்களிடம் இருக்கும் மகத்தான மனிதாபிமானம் வெளிப்படுகிறது.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய ...

நாவலின் முடிவு வெள்ளித்திரை கிளைமாக்ஸ் போல அல்ல.  இருவருமே பிடிபட்டுவிடுகிறார்கள்.

அக்கா கேட்பாள்…“எதுக்குடா உனக்கு இந்த வேலை.  ரெண்டு வருஷம் போட்டுரவாங்களாமே” என்கிறாள்.

பக்கிரி சொல்வான்…“சோத்துல உப்பு போட்டு சாப்புடுறோம் இல்ல”.  இது வெறும் ரோஷம் சம்பந்தப் பட்ட விஷயமில்லை.  காலமெல்லாம் கீழ்ச்சாதி என்று குத்தப் பட்ட முத்திரையின் கொடூரமான பகுதியைத் தோலுரித்துக் காட்டுகிற ரௌத்திரம்.  நாயனம் வாசிக்கிறபோது எதிரில் ஊறுகாய் சாப்பிடும் சிறுபிள்ளைகளின் மூலம் சாதியப் பாதாள சாக்கடையின் துர்நாற்றத்தை முகர்ந்து விட முடியும்.  கடவுளுக்குப் பக்கத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர்கள்தான்.  ஆனால் சாப்பிட வரும்போது தெருவில் உட்கார வைத்துவிடுகிறது சமூகம். இவர்களின் துயரத்தின் நிழலைத் தொடர்ந்துதான் கதை, கிளைக் கதை என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறார் எஸ்.ரா.

“இந்த நாவல் நாதஸ்வர இசையின் மேன்மையைச் சொல்ல முற்படவில்லை.  மாறாக, நாதஸ்வரம், மேளம் வாசிப்பவர்களின் வாழ்க்கைத் துயரத்தை, அலைக்கழிப்பை, தனிமையை, கடந்தகாலப் பெருமைகளை, மறக்கமுடியாத நினைவுகளைப் பதிவு செயவே முற்படுகிறது” என்று முன்னுரையில் குறிப்பிடுவார் எஸ்.ரா.  நாயனம் எப்படி ஓர் அசுர வாத்தியமோ அப்படித்தான் எஸ்.ரா வும். அசுர கதைசொல்லி.

புத்தகம்: சஞ்சாரம்

ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

மதிப்புரை: நா.வே.அருள்

2 thoughts on “சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன் | மதிப்புரை நா.வே.அருள்”
  1. அழகிய வடிவமைப்பு. படிக்கத் தூண்டும் வகையில் படங்கள் உள்ளீடு. ஆசிரியர் குழுவுக்கும் தோழர் சுரேஷ் இசக்கி பாண்டி அவர்களுக்கும் பாரதி புத்தகாலயத்துக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *