சஞ்செய் குமார் (தமிழில்:மோசஸ் பிரபு) எழுதிய "இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்கேற்பு…!" கட்டுரை | Women's Political Participation in India | www.bookday.in

சஞ்செய் குமார் (தமிழில்:மோசஸ் பிரபு) எழுதிய “இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்கேற்பு…!” கட்டுரை

“இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்கேற்பு…!” கட்டுரை

கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் அரசியலுக்கும் பெண்களுக்குமான உறவு நல்லதொரு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. பெண்கள் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையான எண்ணிக்கையில்  தற்போது வாக்களிக்கின்றனர். பல மாநிலத் தேர்தல்களில், ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையிலும் வாக்களிக்கின்றனர். ஆனால் வாக்களிப்பதில் அதிகரித்துள்ள இந்த எண்ணிக்கை மாற்றம் அரசியல் பிரதிநிதித்துவமாகவோ அல்லது அரசியல் அதிகாரமாகவோ அதே விகிதத்தில் இன்னும் முழுமையாக மாறவில்லை. பிற நாடுகளோடு ஒப்பீடும்போது இந்தியச் சூழல் ஒரு  முரண்பாட்டோடு இயங்குகிறது, அதாவது, இந்திய சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பில் சமத்துவம் இல்லாமல் இருக்கிறது ஆனால் தேர்தல் ரீதியான உள்ளடக்கத்தில் மட்டும் சில மாற்றங்கள் நிகழ்ந்துருக்கிறது.

வாக்காளர்களாகப் பெண்களின் நிலை என்ன..?

சுதந்திரத்திற்குப் பிறகு, தேர்தல் பங்கேற்பில் ஆண்-பெண் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் தெளிவாகத் தெரிகின்றன. தேர்தல் செயல்முறையில் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை இருந்தாலும், அவர்களின் வாக்குப்பதிவு விகிதம் ஆண்களை விடக் கணிசமான அளவில் குறைவாகவே உள்ளது. 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஆண்களின் வாக்குப்பதிவு விகிதம் 66.7 சதவீதமாக இருந்தது. அதேவேளையில் பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் 55.5 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் 11.2 சதவீதம் என்ற அளவில் இடைவெளி  இருந்தது. இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் 1970-களிலும் தொடர்ந்து நீடித்தன. 1971ஆம் ஆண்டில், இந்த இடைவெளி சற்று அதிகரித்து 11.8 புள்ளிகளாக உயர்ந்தது. பெண்களின் கல்வியறிவு குறைவாக இருப்பது, அவர்களின் தனி மனித சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது, குடும்பப் பொறுப்புகள் மற்றும் பெண்களை மையப்படுத்திய அரசியல் முயற்சிகள் குறைவாக இருப்பது போன்ற அடிப்படை கட்டமைப்பு ரீதியான தடைகளே இந்த இடைவெளிக்கு முக்கிய காரணமாகும்.

1980-களுக்குப் பிறகு, இந்த இடைவெளி சீராகக் குறையத் தொடங்கியது. 2009-ஆம் ஆண்டிற்குள், இந்த இடைவெளி 4.4 சதவீதப் புள்ளிகளாகக் குறைந்தது. கடந்த பத்தாண்டுகளில்தான் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்த இடைவெளி 1.5 சதவீதமாக குறைந்தது. மேலும் 2019 மற்றும் 2024 ஆகிய இரு தேர்தல்களிலும், பெண்கள் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையான விகிதத்திலேயே வாக்களித்துள்ளனர்.

1990 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் இதேபோன்ற ஒரு நிலை தெளிவாகத் தென்பட்டது. 1990-களின் முற்பகுதியில், பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் ஆண்களை விடச் சராசரியாக 4 முதல் 5 சதவீதம் குறைவாகவே இருந்தது. 2000-களின் காலக்கட்டம் முழுவதும் இந்த பாலின இடைவெளி சீராகக் குறைந்து வந்தது. 2005–07 தேர்தல்களின்போது இது 1.8 சதவீதமாகவும், 2008–10 காலகட்டத்தில்   1 சதவீதமாகவும் குறைந்தது. ஆனால் 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தப் போக்கு தலைகீழாக மாறியது. பெண்கள் ஆண்களை விடச் சற்று அதிகமான விகிதத்தில் வாக்களிக்கத் தொடங்கினர். இதன் விளைவாக, சராசரி வாக்குப்பதிவு இடைவெளி அதிகரித்தது. 2011–13 காலகட்டத்தில் இது 1.13 சதவீதப் புள்ளிகளாகவும், 2015–16 காலகட்டத்தில் விரிவடைந்து 2.82 சதவீதப் புள்ளிகளாகவும் உயர்ந்தது.  அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இடைவெளி சற்று குறைந்திருந்தபோதிலும், 2020–25 காலகட்டத்தில் இது 1.6 சதவீதப் புள்ளிகள் என்ற அளவில் நீடித்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 1990 முதல் 2025 வரையிலான மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிப்பதில் பாலினங்களுக்கிடையிலான சராசரி இடைவெளியானது, தெளிவாகக் குறைந்து ஒன்றிணைந்து வருவதைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து, பெண்களின் வாக்களிப்புப் பங்கேற்பில் தொடர்ச்சியான முன்னேற்றம் அடைந்துள்ளது..

வாக்களிப்புக்கு அப்பாற்பட்ட தேர்தல் பங்கேற்பில் பெண்கள்:

வாக்காளர் வாக்குப்பதிவில் பெண்கள் சமநிலையை நெருங்கி வந்தாலும், தேர்தல் பிரச்சார அளவிலான பங்கேற்பில் ஆண்-பெண் இடைவெளியில் பெரிய மாற்றம் இல்லை. 2009 முதல் 2024 வரையிலான மக்களவைத் தேர்தல்களில், ஆண்கள் பொது அரசியல் நடவடிக்கைகளில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். தற்போதுதான் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பெண்களின் பங்கேற்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது, இருப்பினும் பாலின இடைவெளி தொடர்கிறது. தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பெண்களின் வருகை 2009 ஆம் ஆண்டு 9 சதவீதத்திலிருந்து சமீபத்திய தேர்தல்களில் சுமார் 16 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஆண்களின் பங்கேற்பு பெண்களை விட இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்தே உள்ளது.

ஊர்வலங்கள் மற்றும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதிலும் இதே போன்ற வேறுபாடுகள் காணப்படுகின்றன, அங்கு பெண்களின் ஈடுபாடு சுமார் 5–6 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக அதிகரித்ததுள்ளது, இருப்பினும் இன்னும் ஆண்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். பொது அரசியல் நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கத் தொடங்கினாலும், தேர்தல் பிரச்சாரங்களில் அவர்கள் குறைவாகவே ஈடுபட்டுள்ளனர் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் பொது அரசியல் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய காரணி அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலை சார்ந்திருப்பதுதான்.  2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பெண்கள் மற்றும் அரசியல் குறித்த லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் கணக்கெடுப்பில், அரசியல் பேரணிகளில் கலந்துகொள்வது, வேட்பாளர் கூட்டங்கள் அல்லது பிரச்சாரம் போன்ற நடவடிக்கைகளுக்கு குடும்பத்தினரின் அனுமதி தேவை என்று பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்தனர். சமூக மற்றும் குடும்ப விதிமுறைகள் தான் இந்த பாலின இடைவெளி அதிகரிக்க முக்கிய காரணம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

பங்கேற்பிலிருந்து பிரதிநிதித்துவம் வரை:

பெண்கள் வாக்காளர்களாக சமத்துவத்தை அடைந்துள்ளனர்,  ஆனால் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவ வரலாற்றை ஆராயும்போது  சில உண்மைகளை புரிந்துகொள்ளலாம். 1952 ஆம் ஆண்டு முதல் மக்களவையில், 22 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையும் 19 ஆகக் குறைந்தது. 21ஆம் நூற்றாண்டில் மட்டுமே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் தொடங்கியது.2009 ஆம் ஆண்டில் 59 ஆக இருந்த பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 62 ஆக உயர்ந்தது, பின்னர் 2019 ஆம் ஆண்டில் 78 ஆக உயர்ந்து, 2024 ஆம் ஆண்டில் 74 ஆக சற்றுக் குறைந்தது. ஆனாலும் சதவீத அடிப்படையில் இப்போதுவரை பெண்கள் சுமார் 14 சதவீதமாக மட்டுமே உள்ளனர் வாக்காளர்களில் 50 சதவீத பங்கை செலுத்தும் பெண்கள் அரசியல் பிரதிநிதிதுவப்படுத்தில் இன்னும் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை.

வேட்புமனு தாக்கல் செய்வதில் உள்ள பாலின இடைவெளி:

வேட்புமனு தாக்கல் செய்யும் புள்ளி விவரங்களை ஆராயும்போது பாலின இடைவெளி அதிகமாக உள்ளதை காணலாம். 1957 ஆம் ஆண்டில், 45 பெண்கள் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டனர்.1996-ஆம் ஆண்டிற்குள், அந்த எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து 599-ஐ எட்டியது. அண்மைய தேர்தல்களில், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014-இல் 668 பெண்களும், 2019-இல் 726 பெண்களும், 2024-இல் 800 பெண்களும் போட்டியிட்டனர். இருப்பினும், இந்த எண்கள் அவற்றின் சூழலோடு இணைத்தே பார்க்கப்பட வேண்டும்: ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இன்றும் ஆயிரக்கணக்கில் உள்ளது. மொத்தப் போட்டியாளர்களில் பெண்கள் ஒரு  சிறுபான்மையினராகவே நீடிக்கின்றனர்.

தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பில் பெண்கள்:

பெண்கள் “தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு” என்று வாதிட்டு, அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பெண்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலேயே போட்டியிடும் வாய்ப்புகளை (nominations) வழங்குவதை நியாயப்படுத்துகின்றன. ஆனால், வெற்றி விகிதம் குறித்த தரவுகள் இந்தக் கூற்றை மறுக்கும் வகையில் அமைந்துள்ளன. 1957-இல், 33 சதவீத ஆண் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், 49 சதவீதப் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 1962-இல், ஆண்களின் வெற்றி விகிதம் 25 சதவீதமாக இருந்தபோது, ​​பெண்களின் வெற்றி விகிதம் 47 சதவீதமாக இருந்தது. அண்மைய தேர்தல்களிலும் கூட, பெண்களின் வெற்றி விகிதங்கள் ஆண்களுக்கு இணையானதாகவோ அல்லது சற்று அதிகமாகவோ உள்ளன: 2019-இல், 6 சதவீத ஆண் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், 11 சதவீதப் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 2024-இல், பெண்களின் வெற்றி விகிதம் 9 சதவீதமாகவும், ஆண்களின் வெற்றி விகிதம் 6 சதவீதமாகவும் இருந்தது. பெண்களுக்கு வேட்பாளர் வாய்ப்புகள் வழங்கப்படும்போது, ​​அவர்களால் வெற்றிபெற முடியும் என்பதையே இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சுயாட்சியும் அரசியல் சமூகமயமாக்கலும்:

சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது, வேட்பாளர் வாய்ப்புகளும் கட்சிப் பரிந்துரைகளும் குறைவாக இருப்பதை மட்டுமல்லாமல், அரசியல் சுயாட்சி மற்றும் சமூகமயமாக்கல் ஆகியவை பெண்கள் மீது கொண்டிருக்கும் கட்டுப்பாடுகளை பிரதிபலிக்கிறது. பெண்கள் இப்போது ஆண்களுக்கு ஏறக்குறைய இணையான அளவில் வாக்களித்தாலும், அவர்களின் முடிவுகள் எப்போதும் சுயாதீன முடிவாக இருப்பதில்லை. 2014-இல், 51 சதவீதப் பெண்கள் யாருடைய ஆலோசனையுமின்றி தாங்களே வாக்களித்ததாகத் தெரிவித்தனர்.  ஆனால் இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகள் கடந்தும் 2024-ஆம் ஆண்டிற்குள் சற்று குறைந்து 50 சதவீதமாக மாறியது. குடும்பத்திற்குள் அரசியல் நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுப்பது குறித்த பெண்களின் மனப்பான்மையிலும் இத்தகைய போக்குகள் எதிரொலிக்கின்றன. பெரும்பான்மையான பெண்கள் (52 சதவீதம்), தங்கள் குடும்பத்தினரின் அரசியல் கருத்துக்களையே தாங்களும் கொண்டிருப்பது முக்கியமானது என்று கருதுகின்றனர்.

குடும்பம் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளைத் தாண்டி, அரசியல் கட்சிக்குள்ளேயே பெண்கள் பல தடைகளையும் எதிர்கொள்கின்றனர். அரசியல் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை என்றே பல பெண்கள் கருதுகின்றனர். பெண்களின் அரசியல் தொடர்புகள் குறித்து ‘லோக்நீதி–CSDS’ (Lokniti–CSDS) நடத்திய ஆய்வின் தரவுகள், பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அரசியலில் நுழைவது எளிது என்று 58 சதவீதப் பெண்கள் நம்புகின்றனர். அதேவேளையில், உயர் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு அரசியலில் பங்கேற்க கூடுதல் சாதகமான சூழல் இருப்பதாக 57 சதவீதப் பெண்கள் உணர்கின்றனர்.  அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும்போது ஆண்களையே விரும்புவதாக கிட்டத்தட்ட பாதி பேர் (44 சதவீதம்) கருதுகின்றனர், அதே விகிதத்தில் ஓட்டுப்போடும் போது வாக்காளர்களும் பெண்களை விட ஆண் வேட்பாளர்களையே அதிகம் விரும்புவதாக நம்புகின்றனர்.

அடிப்படை கட்டமைப்பு மற்றும் சமூகத் தடைகள்

பெண்களின் அரசியல் பங்கேற்பை வடிவமைக்கும் பரந்த அளவிலான சவால்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​பெண்கள் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு மற்றும் சமூகக் காரணிகளைச் சுட்டிக்காட்டினர். ஆணாதிக்கக் கட்டமைப்புகளே மிகப்பெரிய தடையாக இருப்பதாக 22 சதவீதப் பெண்கள் குறிப்பிட்டனர்; இதற்கு அடுத்தபடியாகக் குடும்பப் பொறுப்புகள் (13 சதவீதம்) மற்றும் தன்னம்பிக்கை, விழிப்புணர்வு அல்லது அனுபவமின்மை போன்ற தனிப்பட்ட அளவிலான தடைகள் (12 சதவீதம்) ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டன. கலாச்சார நெறிமுறைகள் (7 சதவீதம்) மற்றும் நிதிசார் அல்லது கட்டமைப்புசார் தடைகள் (6 சதவீதம்) ஆகியவையும் குறிப்பிடப்பட்டன.

ஆக மொத்தம் பெண்கள் தற்போது வாக்களிப்பதில் ஆண்களுக்கு இணையான நிலையை எட்டியிருந்தாலும், உண்மையான அதிகாரமும் பிரதிநிதித்துவமும் அவர்களுக்குக் குறைவாகவே உள்ளன. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்த இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு சட்ட ரீதியான வழியை வழங்குகிறது. இருப்பினும், பெண்களின் பங்கேற்பானது உண்மையான அதிகாரமாகவும் முடிவெடுக்கும் உரிமையாகவும் மாறுவதை உறுதி செய்வதே இன்றும் ஒரு சவாலாகவே நீடிக்கிறது.

(சஞ்சய் குமார்  பேராசிரியர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆவார். Lokniti-CSDS அமைப்பில் பணியாற்றும் ஒரு ஆராய்ச்சியாளர்)

13-3-26 ஆங்கில இந்துவில் வெளியான கட்டுரை

📚 எழுதியவர்:

✍️ – சஞ்செய் குமார்
தமிழில்:மோசஸ் பிரபு

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *