நூல் அறிமுகம்: சஞ்சீவி மாமா – மலம் அள்ளும் மாமாவை நேசிக்க ஓர் உலகம் – இராசகுரு கார் பாலன்.

நூல் அறிமுகம்: சஞ்சீவி மாமா – மலம் அள்ளும் மாமாவை நேசிக்க ஓர் உலகம் – இராசகுரு கார் பாலன்.

திருமணம், காதுகுத்து, புதுமனைப் புகுவிழா என விழாக்கள் எதுவாயினும், சிறுவர்களின் படங்களோடு சாதிப்பெருமையை தூக்கிப்பிடிக்கும் பிரமாண்டமான பதாகைகளுக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் வளர்ந்தவர்களுக்கு தெரியும், இங்கே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சாதி தான் முதன்மையான அடையாளம் என்று.
 சிறார்களுக்கு எழுதும் புதினத்தில், ஆடிப்பாடும் விலங்குகளும், ஆயிரம் யானைகளை வெல்லும் வலிமைமிக்க இளவரசர்களும், கேட்டதைக்கொடுக்கும் பூதங்களும் தான் கதையின் நாயகர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை, மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி கூட நாயகனாக வலம்வரலாம் என்பதை உணர்த்திய புதினம் இந்த, “சஞ்சீவி மாமா”
 இந்தியாவுக்கு நேரு மாமா…
இந்த தெருவுக்கு யாரு மாமா?”
Image
என்ற முன் அட்டையின் கேள்வியோடு நம்மை வரவேற்கிறார், சஞ்சீவி மாமா. அன்புள்ளமும், பாசமும் நிறைந்த சஞ்சீவி மாமாவின் பேச்சும் செயலும், தொடர் அடக்குமுறையால், தாழ்வுமனப்பான்மையை பல நூறு ஆண்டுகளாக தாங்கிவரும் குருதித்தொடரின் வெளிப்பாடாகவே அமைகிறது.
 பேச்சிராசு என்ற சிறுவனின் பார்வையில் சுழல்கிறது, மேற்குத்தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்த அந்த சிற்றூரில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகள் எல்லாம். அடிபட்டுக்கிடக்கும் போதும், ஆறுதல் தேடும் போதும், தீண்டாமை உள் நுழைய முயல்வதையும் அதனை மனிதம் எவ்வாறு எதிர்கொண்டு வெல்கிறது என்பதை காட்சிகள் மூலம் உணர்த்தியவிதம் அருமை.
சாதி பேதம் நிறைந்த கிராம சமூகத்தில் ‘ஏன் இந்த பேதம்?’ எனும் கேள்வியுடன் சமத்துவ சிந்தனையுடன் வளைய வருகிறான் சிறுவன் பேச்சிராசு. அவனுக்கும் தோட்டி சஞ்சீவிக்கும் இடையிலான பாசப்பிணைப்புடனும், அவனுக்குள் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுடனும் நகர்கிறது கதை. குழந்தைகளும், ஏன் பெரியர்களும்கூடத் தெரிந்துகொள்ளவேண்டிய கிராமத்துச் சொல்லாடல்களை ஆங்காங்கே விதைத்துச் செல்கிறார் ஆசிரியர். தனது சமத்துவச் சிந்தனையை தன் குடும்பத்தாரிடமும் ஊர்மக்களிடமும் கொண்டுசெல்வதில் வெற்றி அடைகிறானா பேச்சிராசு?
Image
கொ. மா. கோ. இளங்கோ.
பல்லவர்களின் வருகைக்கு முன், தமிழ்கூறும் நல்லுலகத்தில் சாதியில்லை, இராசராச சோழனிற்கு முன் வைதீக தீட்டு இல்லை, விசய நகரப்பேரரசின் காலத்திற்கு முன், இங்கே வீட்டில் மலம் கழிக்கும் வழக்கமும் இல்லை அதனை அள்ள மனிதர்கள் யாரும் பணியமர்த்தப்படவுமில்லை. விசய நகர பேரரசின் கடை நிலை ஊழியர்களாக, அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் தான் இந்த பணிக்கு அமர்த்தப்பட்டார்கள், சுல்தான், வெள்ளையன், இந்திய குடியரசு என ஆட்சியின் பெயர்களில் மட்டுமே இருந்தது மாற்றம், அவை, இந்த துப்புரவு சாதியினரின் வாழ்வை எந்தவகையிலும் மாற்றியமைக்கவில்லை.
ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் எண்ணற்ற சிறுகதைகள் எழுதியவரும், தமிழ் சிறுவர் இலக்கிய வானில் வெள்ளியாக மின்னும், அண்ணன் கொ. மா. கோ. இளங்கோ அவர்களின் படைப்புகளில், சஞ்சீவி மாமாவிற்கென தனியிடம் உண்டு. இந்த நூல், பாரதி புத்தகாலயத்தின், ‘Books for Children’ என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சென்ற ஆண்டு வெளியான தோழர். திவ்யா அவர்களின் ‘கக்கூசு’ என்ற ஆவணப்படத்தை பார்த்தபோது தான், சஞ்சீவி மாமாக்கள் இன்றளவும் அதே வேதனையோடு தான் தம் வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மை, விளங்கியது.
Image
1935ல் வெளிவந்த முல்க் ராச் ஆனந்த் அவர்களின், உலகப்புகழ் பெற்ற ‘தி அன்டச்சபிள்’ என்ற ஆங்கில புதினத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒரு படைப்பாக, சஞ்சீவி மாமாவை நான் கருதுகிறன், இவ்விரு நூல்களையும் வாசித்த பலரும் இதற்கு உடன்படுவார்கள் என்றும் நம்புகின்றேன்.
விண்வெளி அறிவியலில் சாதனைகள் பல படைக்கும் இந்திய ஒன்றியம், துப்புரவுத் துறையை முழுவதுமாக எந்திரமயமாக்கும் அந்த நாளே சஞ்சீவி, சொக்கத்தாய் போன்றோரின் அடிமைச்சிந்தனை ஊறிய குருதித்தொடருக்கான விடுதலை கிடைக்கும். நம்மிடையே மலம் அள்ளும் மாமாவை நேசிக்கும் ஓர் உலகைக் காண்பிக்கும் நூலாசிரியரை மனதார வாழ்த்தலாம் வாருங்கள். 
 நன்றி,
வெல்க தமிழ்!
 
புத்தகம்:  சஞ்சீவி மாமா
ஆசிரியர்: கொ. மா. கோ. இளங்கோ.
வெளியிடு : புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
விலை: ரூபாய் 90/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sanjivimama/

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *