நூல் : சன்னத்தூறல்
நூலாசிரியர் : ம.கண்ணம்மாள்
வெளியீடு: டீஸ்கவரி புக் பேலஸ், சென்னை – 2019.
விலை: ரூ.100
உலகின் செவ்வியல் தன்மை வாய்ந்த எத்தவொரு மொழியின் ஆதி இலக்கிய வடிவமும் கவிதையாகவே இருக்கிறது. தமிழ் மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. பெண் கவிதையுலககென்பது ஆதி கவி ஒளவையிடம் உருக்கொண்டு, கவி கண்ணம்மாள் வரை நீள்கிறது.
நேர்த்தியான, கட்டமைப்பில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஐம்பது கவிதைகளை உள்ளடக்கிய நூல் இது. நெடிய கவிதைப் பாரம்பரியம் மிக்க சங்கக் கவிதையாக்க மரபு, காப்பிய வளம் ததும்பும் மொழி இன்றைய படைப்பாளர்களுக்குக் குறிப்பாக கவி புனைபவர்களுக்குக் கடும் சவாலையும், அதே தருணத்தில் அதில் புதைந்துள்ள சொல்வளம் தம் கவித்துவத்தைச் சரியான திசையை நோக்கிக் கடத்தும் ஆற்றலையும் வழங்கி வருகிறது.
பழந்தமிழரின் திணைக்கோட்பாட்டுத் தடத்தில் கண்ணம்மாளின் கவிதைகள் நம் கரம் பற்றி நடத்திச் செல்வதை நூலினுள் பயணப்படும் எவருமே உணர முடியும். நம் சமகாலத்துக் கவிஞர் சேரனின் கவிதைகளைச் செவ்வியல் புறப்பாடல் பெருமரபின் நீட்சியைக் கண்டுணர முடியும். வேரைத்தேடும் அத்தகைய முயற்சி தமிழில் தமிழச்சி தங்கபாண்டியன், சக்திஜோதி ஆகியோரின் கவித்துவத்தில் காணப்படும். இத்தகு அடையாளம் தேடும் முயற்சி, குறிப்பாக அகமரபை மீட்டுருவாக்கம் செய்யத் துடிக்கும் அலைவு கண்ணம்மாளின் தொகுப்பு முழுமையும் வெளிப்படுகிறது.
“வன் பாலை நிலம் போல ஃ எம் மனம் காங்கையாய்க் காய்கிறது. என் உயிர் வருத்தியாவது ஃ உன் உறன் காப்பேன் எனக் கூறியது ஃ இன்று பிதற்றல் மொழியாயிற்று” என்னும் பொதும், “முன்பொரு சிறுசிறு நீர்ச்சுழியோடு” ஃ காவிரியின் நீர்ப்பரப்பில் ஃ கூறிய நீ” என்னும் போதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குறுந்தொகைச் சுவையை எளிதில் வாசக மனப்பரப்பில் கடத்தி விடுகிறார்.
பறவை மொழி என்றும் தலைப்பிலான ஒரு கவிதை “பறவையினம் மாறி மாறி வந்தமர்ந்திருக்கும் ஃ ஒலி எழுப்பித் தாம் வந்ததையும் அறிவிக்கும் ஃ அது எனக்கும் அவைகளுக்குமான உரையாடல் ஃ உரையாடக்குரல் கேட்காத நாளில் ஃ அலைவுற்றும் பறந்து போயினவோ! ஒரு பிடி உணவில் பறவையோடான பிணைப்பு ஃ நெஞ்சில் கதகதப்பாய்” இக்கவிதையில் ‘பறவை’ ஒரு குறியீடு. அனுபவத்தின் சாரமாக அது பரந்தலைகிறது. அனுபவங்களைச் சுமந்தலையும் மனித வாழ்வின் அடையாளமாக இக்கவிதை அனுபவம் விரிகிறது.
“நான் பெண்” என்னும் தடயத்தைப் பல கவிதைத் தலைப்புகள் உரக்க அறிவித்துக் கொண்டே உள்ளன. அன்பை நடும் பெண்ணாக, நிலத்தினாள் மொழி, நிலத்தாயாகி, பெருமகள் கூற்று, நிலத்தை அளந்தவள், நிலமாய் விரிந்தவள். நிலத்துடன் நடந்தவள், மேகத்தைப் பதுக்கிக் கொண்டவள், நீரூற்றானவள், மாயம் தகர்த்தவள் என்று இருக்கின்றன. பல பெண் கவிகளின் கவிதைகளினூடாக இத்தன்னிலை வெளிப்பாடு உரத்து ஒலித்துக் கொண்டே இருத்தல் ஒரு பொதுத் தன்மையாக உள்ளது. ஆண்களின் கவிதைப் பனுவல்களில் இத்தன்னிலை வெளிப்பாடு அருகிலேயே உள்ளது. வேர்களின் பிடிமானமற்று அலையும் ஆகாயத்தாமரை போல ஸ்திரத் தன்மை நீக்கம் செய்யப்பட்ட சமூகவெளியில் தன் இருப்பை அவள் பிரகடனப்படுத்திக் கொண்டே இருப்பது ஒரு காரணமாகலாம்.
“நீ இன்று காங்கைச் சொற்களால் வேறாகிப் போனாய் ஃ தணலின் கங்கு தீண்டுவதைத் ஃ தடுக்க வழியின்றி நிலத்தை அண்டி நிற்கிறேன் ஃ நிலத்தில் நல்லது கெட்டது உண்டா ஃ உன்னிடம் பகிர்ந்த அன்பைப்போல” தொலைந்து போன அத்தியாயங்களுக்குள்ளும், தளும்பும் ஜீவனைச் சிதறவிடாது நிலத்தோடும் காலத்தோடும் இறுகப் பிணைக்கும் திறன் கண்ணம்மாளுக்கு வாய்த்திருப்பது தனிச் சிறப்பு. கவிதைப் பரப்பு முழுவதும் “நிலம் ஒரு பிழையாத சொல் மொழி சொன்னதில்லை” என்கிறார். நிலத்தாயாகி என்னும் கவிதையில் “அவள் ஓர் நிலத்தாயாகிச் சுவரோவியச் சிற்பமாக வரையப்பட்டிருந்தாள்” என்கிறார். ஆக, நிலம் கவிஞரின் நனவிலி மனதில் தொன்மமாகப் படிந்தேவிட்டது.
“நிலத்தை உணர்ந்தவள்
உலகை உணர்ந்தவளானாள்
நிலத்தைக் கண்டவள்
பேருலகையே கண்டவளானாள்
நிலத்தை ருசித்தவள்
வாழ்வையே பூரிக்கக் கடப்பாள்
இதுபோதும் அவளுக்கென
தன் குவிந்த பஞ்சுக்கைகளுக்குள்
பொதித்துக் கொள்வாள்
நிலம் அவளுள் உறைந்து விட்டது”
நிலமென்னும் நல்லாள் தொன்மக் குறியீடாகி நிலத்துடன் இறுகப் பிணைத்த ஆதித் தாயாகிப் பற்றி எரியும் செம்பருத்தி என்னும் கவிதையில் பேயவள் காண் எங்கள் அன்னை என்று பாரதி பாடியது போல் உக்கிரம் கொள்கிறாள்;@ உயிர்த்தெழுகிறாள்.
“பாலைநிலமாய்ப் பிளவுண்டு
நெகிழ்தலற்ற சுடு மண்ணில்
செம்பூக் கைக் கொண்டு
சில்லெறிந்து ஆடுகிறாள் தமிழ் நிலத்தினாள்”
“ அடர்வனச் சிரிப்பு
பேய்ச்சிரிப்பு சிரித்தது கண்டு
கூர் முனைப்பான
சூலம் கையிலேந்தி ஆடுகிறாள்
இப்பரந்த வெளி
உணர்த்திய மெய்ம்மை ஒன்று தான்
செந்தீ கனலாகவும் மாறும்
ஒளியாகவும் மாறும்
முரண்களால் இக்கவிதை அழகு பெறுகிறது. தீ ஒளிதரும். தீ சுட்டெரிக்கும் என்னும் முரண் மிக்கதான சொல்லாடல் பெண்ணும் அப்படித்தான் என்னும் மெய்ம்மையை உணர்த்தி நிற்பதாகவேபடுகிறது.
பிரிவின் வலியைத் தாங்குவதும் சகிப்பதும் மௌனித்தலும் சில கவிதைகளின் பேசுபொருளாகி உள்ளன. தானவன் பொய்ப்பின் யானெவன் செய்கோ! என்று பரிதவிக்கும் சங்கத்தலைவியின் குரலைப் பல கவிதைகள் நினைவூட்டுகின்றன. காலங்கள் கடந்தாலும் காதலில் அதிகம் பதைப்பிற்குள் ஆழ்பவள் பெண்ணாகவே இருக்கிறாள். ஆகச்சங்கக் கவிதைத் தலைவியின் மனநீட்சியை, அதன் தொடர்ச்சியை இனங்காட்டுகின்றன.
அபூர்வமான உருவகம், உவமைகள், படிமங்கள், சன்னத்தூறல் முழுவதும் இறைந்து கிடக்கின்றன. அவற்றுள் சில.
“நீரற்ற ஆற்றில் நீராடுதல் போல”
“நெடுங்காட்டிடை ஃ கற்றாழை தின்னும்பசு ஃ வாயசைத்தல் போல ஃ வறண்ட நாவிற்கு அன்பெனும் நீர் தந்து தேற்ற வருவாயோ”
“பின்னிரவில் கேட்கும் தெருப்பிராணியின் ஃ வேறுபட்ட ஒலி போல ஃ துடிக்கும் மனதை அடக்கினாள்”
“களிறொன்று முன்னின்று பிளிறுவது போல் ஃ நிலத்தைச் சுற்றினாள்”
“மருத நில மண்ணின் நெற்களஞ்சியம் களவு போன சொல்லாய் மாய்ந்து என்னும் உவமையும் “நீரற்ற ஆற்றில் நீராடுதல் போல” என்னும் உவமையும் அதிமுக்கியமாகப்படுகிறது. கவி கண்ணம்மாள் காவிரி நடந்து செழித்த தஞ்சை மண்ணில் தடம் பதித்து நடை கற்றவர்@ வாழ்பவர். உலகமயமாக்கல், பசுமைப்புரட்சி, நகரமயமாக்கல் என்னும் நுகர்வுப்பசி நிலத்திலிருந்த அசல் மனிதர்களை வேரோடும் நிலத்திலிருந்த அசல் மனிதர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் தொழில் மயமான நுகர்வுலகின் அகோரப்பசிக்கு நெற்களஞ்சியமும், காவிரியும் தொலைந்து போனது. பொய்யாய்ப் பழங்கதையாய் போன அந்த வேரினைத் தேடல் அம்மண்ணின் மகளுக்கு இயல்புதானே. இத்தேடலே நிலம் நிலம் என அலைவுறும் மனத்தினை வளப்பத்தினைத் தேடிப் பரிதவிக்கும் கவிதை வெளியாக விரிந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
செவ்வியல் மரபினை மீட்டுருவாக்கம் செய்யும் விழைவு@ தொன்மத்தேடல்@ அசலான தடத்தைத் தேடல்@ முதல் படைப்பு என்று கூறிவிட இயலாச் சொற்கட்டு@ செறிவான கவிநடை, இயல்பாக வந்துவிழும் படிமங்கள் சன்னத்தூறல் வாசிப்பில் ஒரு லயிப்பினை ஏற்படுத்துகின்றார். சன்னத்தூறலில் நனையும் போது உள்ளம் களி கொள்கிறது. ஆயின், நனைந்து தன்னிலை மறந்து மீண்டு எழுகையில் ஒரு வினா முகிழ்த்தலைத் தவிர்க்க இயலவில்லை.
ஓர் ஆணோடு, பெண் தன்னைப் பிணைத்துக்கொள்கிறாள் (குறிஞ்சி), ஓர் ஆணுக்காகப் பெண் காத்திருக்கிறாள் (முல்லை), சினக்கிறாள்@ பின் இணங்குகிறாள் (மருதம்) கசிந்துருகிறாள் (நெய்தல்) புலம்புகிறாள் (பாலை) என்பதை மையமாக வைத்துப் புனையப்பட்டப் செவ்வியல் அகக்கவிதையுலகு ஆணின் இருப்பை அடர்த்திப்படுத்துகிறது. பெண்ணை பேசுவது போன்றதொரு பாவனை மாயையை வாசகருக்குக் கடத்தி, ஆணை நோக்கியே குவி மைய கொண்டுள்ள தந்திரத்தை நுட்பமாகக் கட்டமைத்துள்ளது. இவ்வாறான கவிதைக் கண்ணிக்குள் ஏன் இனியும் சிக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவ்வினா.
நிலத்தின் விவரணையும் சங்கக் காட்சியுருப்படிமங்களும் புதிய சொல்லாட்சிகளும் (உயல், ஒன்றித்தில், இளக்கரி, உடறுதல்…) கண்ணம்மாளின் முதல் ஆக்கம் என்று கூறிவிடாத வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. தன்னிலை வெளிப்பாடு என்னும் தளை நீக்கம்@ விரிந்து பரந்த பொருண்மைத் தளத்திலான இடுகைகள் என இவரது அடுத்தடுத்த ஆக்கங்களில் இடம் பெறுவது கண்ணம்மாளைத் தமிழ்க்கவிதை உலகத்தின் உயரத்திற்குக் கொண்டு செல்லும். அதற்கான தகுதிப்பாடு அவருக்கு இருப்பதைச் சன்னத்தூறல் தொகுப்பு உணர்த்தியுள்ளது.
முனைவர் ஜெ.சியாமளா
உதவிப் பேராசிரியர், தமிழ்
பெரியார் அரசு கலைக்கல்லூரி
கடலூர்.