சந்தாலி (Santali) – நூல் அறிமுகம்
தொன்மம், மரபு. படிமம், குறியீடு, உத்தி என அத்தனை விழுமியங்களையும் உள்ளடக்கி அதன் உணர்ச்சிகளை வாசகனுக்கும் கடத்தும்.,விறுவிறுப்பும் அர்த்தச் செறிவும் மிகுந்த நாவல்..
சமகாலத்திய நிகழ்வுகளை உள்வாங்கி, அதனை படைப்பாக புனைந்து எழுதும் கதைகளில் ஒரு பழங்குடியின் மெய் வரலாற்றை எடுத்துரைத்திருப்பது இனவரைவியல்..
பெருமிதம் பொங்கும் உள்ளூரக் குதூகலிக்கும் மரபார்ந்த செழுமைகள் எல்லா இனக்குழுவுக்கும் உண்டு.. அவை கதைகளா?? என்றால் இல்லை நம்பிக்கைகளின் நீட்சி.. அது தான் சந்தாலியில் செங்கா தோழர் செல்வராஜிடம் தன்குடி பற்றி பேசும் நிகழ்வின் இறுதியில் தன்னை மறந்து அருளாக மாறுவது.. அது அற்புதமான உளவியல்..
ஒவ்வொரு காதையின் முடிவிலும் காலம் போடும் கணக்கை முன்னூட்டமாக சொல்லி அடுத்தடுத்த காதைகளை அப்போதே வாசித்து விடத் தூண்டுவது அதிசிறப்பு..
வாசகன் யூகிக்க இயலாத முடிவை நோக்கி நகர்தலும், சுபம் என்றே முடித்துப் பழக்கப்பட்ட பெரும்பான்மை திரைக்கதைகளின் பொதுப்புத்தியிலிருந்து விலகாத புது வாசகர்களுக்கு இந்நாவல் புது விலாசம் தரும்..
சிவப்புச் சிந்தனைகள் படைப்பாளரின் தனித்த அடையாளம்.. அதனை இத்தனை பெரிய தொன்மக் கதைக்குள்ளும் செலுத்தி நிரப்பியது மட்டுமல்லாமல்.. தேசம் கடந்து வேலைபார்ப்பதில் சாதீயக் குறியீடுகள் தகர்கிறது என்ற பேருண்மையை தோழர்கள் சிந்திக்காத கோணத்தில் செங்கா சிந்தித்த அந்தத் தருணம் வர்க்கம், பேதம், சுரண்டல் மற்றும் ஆதிக்கமென வட்டத்திற்குள் வாழ்ந்து விட்ட செல்வராஜ் தோழரின் உள்ளக்கிடக்கையை படிப்போரின் உணர்வுக்கும் கடத்துவது உண்மையிலேயே படைப்பாளர் சிவப்பில் மூழ்கிய சிந்தனையாளர் என்பதை பறைசாற்றுகிறது…
கோவையின் வேலைகளை, நெருக்கடிகளை, உண்டாகும் எதிரெதிர் பிரளயங்களை கதைமாந்தர்களின் எண்ணவூடாக விவரித்து அடுத்தது என்னாகும் என எதிர்பார்ப்போடு நகர்ந்தால் அடுத்த காதைக் கதைக்களம் ஒடிசாவாய் உயர்ந்து நிற்பதும் தனி அழகு தான்.. தனி உணர்வு தான்.. இருவேறு என்றெல்லாம் பிரித்தாள முடியாதபடி கதைமாந்தரின் மனதில் எழும் எண்ண ஓட்டங்களாக படைப்பாளர் கதைத்திருப்பதே சந்தாலியின் தனிநேர்த்தி..
சந்தாலி மக்களின் பூர்வத்தை சொல்லும் வார்த்தைகள் படைப்பாளருக்கு எப்படி கைகூடியது?? கண்டு, கேட்டு இவ்வளவு உணர்வுக் குவியலாக எழுத முடியுமா?? ஆசிரியர் எப்படியோ உண்டு, உயிர்த்து, உற்றறிந்திருக்கிறார்.. போங்கோ, ஓஜோ வழிபாட்டு விவரணையில் மட்டுமல்ல சோஹர் திருவிழாவாகட்டும், விவசாய முறையாகட்டும், உணவு பழக்கமாகட்டும் ஏன்?? சித்ரமுகா வின் அழகை, காதலை வர்ணித்தலாகட்டும் அத்தனையிலும் அப்படித் தரவுகள் தெளிக்கப்பட்டு வாழ்வியல் விளக்கப்பட்ட விதம் வித்தியாசமானது மட்டுமல்ல…படைப்பாளரின் தனித்திறன் மிளிர்கிறது..
மரபணுவின் வீரியத்தை, அதன் குணத்தை வாழும் சூழல் மாற்றும் என்ற கிரிமினாலஜி தத்துவத்தை செங்கா மூலமாக வெளிப்படுத்திய விதம், வரையறுத்த வார்த்தைகள் சுள்ளென்று வாசகர்களுக்கு உரைக்கும்.. தன்மீதான வீண்பழி, தப்பித்தல், வேலை நெருக்கடி, குடும்பம் பற்றிய சிந்தனை அந்த மனிதனை அழகான மஞ்சுவின் காதலை ஏற்கக் கூட எத்தனை பாடுபடுத்தியது.. காதல் பருவத்தில் இயல்பானது என்ற புரிதலுக்கும், கூடுமா?? கடைசி வரை கைசேருமா?? என்ற தவிப்பில் ஆழ்த்தி சேர வைப்பது கதையில் காதல் ஓவியம்…
கதை முழுவதும் இரு காதல் பெருக்கெடுத்தாலும் காமம் துளியுமில்லை.. ஆனால் காமத்தின் உந்துதலே காதல் என்பதையும், எதிர்பாலின ஈர்ப்பு என்பதையும் அழகாய் சொல்லியுள்ளார்.. அதிலும் அழகர்- ராணியின் காதல் கதையச் சொல்லி கணவன் நெறிபிறழ ரவி உள்ளே வந்து பிரளயம் ஆவது எல்லா இடத்திலும் நடப்பது தான்.. குடும்பத்தில் ஆண் பொறுப்புணர்வு துறக்கையில் பெண்ணின் தடுமாற்றம் தொடங்கி பழிசுமக்கும் பாவப்பட்ட பிறவியாகின்றனர் பெண்கள்…
கடைசி 50 பக்கங்கள் அத்தனை விறுவிறுப்பு..4,5 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுணர்ந்த கொடிய கொரானாவின் தாக்கத்தை பிழைக்க வந்த தவறு வாழ வந்த வடமாநிலத்தவரின் நிலைநின்று சொல்லியது உள்ளம் உருக்கியது..மரணத்தின் வலிகள் நாவல் முழுவதும் செங்காவின் வாயிலாக வெளிப்பட்டாலும் அவனின் தொன்மக் குடியின் வீரியம் எதிர்கொள்ளும் வல்லமையைத் தந்திருப்பதை காணமுடிகிறது..
மொத்தத்தில் உழைப்பவன் அடிமையில்லை..ஊதியம் கொடுப்பவன் கடவுளில்லை என்ற சிவப்பின் சாரம் விரவிய நாவல் வடமாநிலத்தவரின் நிலை பற்றிய எனது எண்ணத்தை மாற்றியதைப் போல் வாசிக்கும் அனைவரையும் மாற்றும் என்பதில் ஐயமில்லை..
வியப்பு.. வியப்பு.. வியப்பு..
உள்ளுணர்வுகளில் உள்வாங்கியதை கதைகளாக கடத்தியுள்ளார் கதையாசிரியர் என்று கடந்து விட முடியாதபடி?? எப்படி எப்படி நம் ஊரைச் சேர்ந்த அண்ணனுக்கு இத்தனை பெரிய எழுத்து வரம் வாய்த்தது என்ற பேருவகை, பெருமிதம் முதல் பக்கத்திலிருந்து முடிவுப் பக்கம் வரை இருந்தது… எழுத்து தான் வாங்கிய வரமும் அல்ல.அதற்காக தவமும் இல்லை என்று படைப்பாளர் என்னுரையில் செவிட்டில் அடித்துச் சொன்னாலும்.. தமிழிலக்கியத்தில் இளநிலை ஆய்வு நிறைஞர் பட்டம் வரை பயின்று துய்த்த தம்பி சொல்கிறேன்.. உங்களின் எழுத்து வரம் தான்.. நீங்கள் ஊரின் வைரம் தான்.. எழுத்திலும் வார்த்தையிலும் வாக்கியத்திலும் ஒரு சிறுபிழை இல்லாதது அதிஅற்புதம்..
தொடர்ந்து எழுதுங்கள்.. விழுமியங்களின் விதைகளை விதையுங்கள்.. சிவப்பு சிந்தனையும் சிறக்கட்டும்.. எங்கள் ஊரிலும் பெரிய எழுத்தாளர் இருக்கிறார் என்ற பெருமிதத்தோடு விடை பெறுகிறேன்..
நன்றி
நூலின் தகவல்கள் :
நூல் : சந்தாலி
ஆசிரியர் : சக்தி சூர்யா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூல் அறிமுகம் எழுதியவர் :
– வழக்கறிஞர் திருமுருகன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

