நூல்.: சந்தைப் பொருளாதாரமும் சமூக நீதியும்
ஆசிரியர் : நிகழ் அய்க்கண்
பதிப்பகம் : உயிர் எழுத்து, 9 முதல் தளம், தீபம் வணிக வளாகம், திருச்சி, 620001
விலை : ரூ. 180
எழுத்தாளர் நிகழ் அய்க்கனின் ‘சந்தைப் பொருளாதாரமும் சமூக நீதியும்’ என்னும் நூல் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். எழுத்தாளர், மத்திய அரசு ஊழியராக இருந்தவர்; பணியின்போது தொழிற் சங்க செயற்பாட்டாளராகவும் விளங்கியவர்; களப்பணியாளர்; இவரது தந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இந்த அனுபவங்களின் விளைவால் அரசை இயக்கும் விதமாக எழுத்தாளரின் கட்டுரைத் தொகுப்பு அமைந்திருக்கின்றது இக்கட்டுரைகளை அவ்வப்போதே பல வாசகர்கள் இதழ்கள் வழி படித்திருக்கலாம். அன்றைய அரசியல் நடைமுறைகளை ஒட்டி எழுதப்பட்ட முக்கிய எழுத்தாக்கமாகும். கட்டுரை உருவாக்கத்தின் காலம் முன்னது என்றாலும் நூலாசிரியரின் கருத்து இன்றைய காலத்திற்கும் பொருந்துவது வியப்பு. கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டு மேலாதிக்கம் செலுத்தி வரும் இக்காலத்தில் தேர்ந்த கட்டுரைகளைக் கொண்டு இந்நூல் வெளிவந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
நூலில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் சமூக நீதியை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது. உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்னும் நோக்கில் 1991 –க்குப் பிறகான ஆட்சி, குறைந்தபட்சம் அரசு, அதிகபட்சம் நிர்வாகம் ( less Government More Governance) என்னும் சட்டகத்தில் இயங்கி வருகிறது. இதனால் கல்வி, மருத்துவம், விவசாயம், பொது சுகாதாரம், கிராமம் மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்திலும் தனியார்மயமும் நவதாராளமயமும் ஊடுறுவி ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. இதன்கண் மத்திய மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தனியார் நிறுவனங்களின் நலன் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கின்றன.
ஏழை பணக்காரன் இடைவெளி, தனிமனித வழிபாடு, அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்ககாத நபர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக மாறுவது உள்ளிட்ட காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அரசு என்பது கூட்டாண்மை நிறுவனங்கள் பக்கம் நின்று வெறும் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும், நுகர்வு கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தவும், மக்களாட்சி மாண்புகளைப் பாசங்குத்தனம் செய்வதற்கான வேலையை மட்டும் செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், தலித் உள்ளிட்ட விளிம்பு நிலைப் பிரிவினரின் வாழ்வாதாரம் நவ தாராளமயமாக்கலின் விளைவால் கேள்விக்குறியாக மாறிவருகிறது. இவர்களது வாழ்வு சிதறடிக்கப்படுகிறது. ஜனநாயக மாண்பு, அரசு, ஊடகம், நீதி என்னும் முக்கிய தூண்கள் புதிய பொருளாதார கொள்கையால் பலம் இழந்து வருகின்றன. இவற்றோடு ஒற்றை தேசியவாத பாசிசம் கைக்கோர்ப்பதால் அடித்தள மக்கள் மற்றும் சிறுபான்மையினர் நிலை மோசமான நிலைக்கு இட்டுச் செல்கிறது. இவையாவையும் கருத்தில் கொண்டு எழுத்தாளர் நிகழ் அய்க்கண் ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் குரலற்றவர்களின் பக்கம் நின்று எழுதிய எழுத்துகள்தான் இந்நூல்.
ஜனநாயகம் என்பது அடித்தள மக்களை உள்ளடக்கியது. அதிகாரமயமாக்கலை நோக்கி நகர்த்துவது என்னும் கருத்தியல் தளத்தில் எழுத்தாளர் உறுதியாக இருப்பதை இக்கட்டுரைத் தொகுப்பின் நெடுக பார்க்க முடிகிறது. டாக்டர் அம்பேத்தகரின் தீண்டப்படாதவர் யார்? நூல் குறித்து தொடங்கும் கட்டுரை இறுதியாகப் ‘பொதுத்துறை நிறுவனங்கள் பன்மைத்துவத்தின் அடையாளம்’ என்னும் தலைப்பில் முடிவடைகிறது.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்அனைத்தும் வெவ்வேறு பொருண்மையில் இருந்தாலும் இந்துத்துவ பாசித்த்திற்கு எதிர் முகம் கொடுக்கும் நிலைபாட்டில் முதன்மையாக இருக்கிறது. முற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு இன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆபத்தை எழுத்தாளர் முன்னதாகவே 2003 – ஆம் ஆண்டில் வெளிவந்த புதிய கோடாங்கி என்னும் சிற்றிதழில் பதிவு செய்திருப்பது வியப்பைத் தருகிறது. கட்டுரையில் “முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கு வழங்க கருதியுள்ள இந்த இட ஒதுக்கீடானது கல்வி ரீதியிலும் சமூக ரீதியிலும் அடித்தள நிலையிலுள்ள மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூக நீதிக்கு எதிராகவே இருக்கும்”(பக்கம். 114) எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கும் வலதுசாரி பொருளியல் வல்லுநர்கள் மக்கள் நலனை விட நாட்டின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதுதான் அரசின் முக்கியக் கடமை என வாதிடுகின்றனர். பொருளாதாரம் என்பது பொருளாதாரத்திற்கே! அனைத்து மக்களுக்குமானது அல்ல என முழங்குகின்றனர். இப்படியான நடைமுறையில்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். ஆகவேதான் ஆட்சியாளர்கள் கூட்டாண்மை நிறுவனத்தின் துணை கொண்டு மரபுசார் பொருளாதாரத்தில் புது விதிகளைப் புகுத்துகின்றனர். அந்நிய முதலீட்டினை ஊக்கப் படுத்துகின்றனர். வரிச் சலுகைகளை வாரி வழங்குகின்றனர். வளர்ச்சி என்னும் பெயரில் புதிய காலனிய முறைக்கு அடிகோளுகின்றனர். இதனால் மண்ணின் மக்கள் பூர்வீக நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். இது குறித்து எழுத்தாளர் 2003 –இல் வெளிவந்த புதிய கோடாங்கி இதழில் பேரழிவை நோக்கிய ‘வளர்ச்சி’ என்னும் தலைப்பில் அப்போதே பதிவு செய்திருக்கிறார்.
பன்னாட்டு கம்பெனிகளின் நோக்கம் லாபம் மட்டும்தான். பார்ப்பனர்களுக்கே முன்னுரிமை தரும். இந்துத்துவத்திற்கும் தட்சிணையே அடிப்படையாயிருக்கிறது. தொழிற்பெருக்கம், தொழில்மயம் குறித்த போதையில் தள்ளாடுபவர்களுக்கு இந்த தேசத்தின் மண், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு, இவை மாசுபடுவது கவலைகள் இல்லை.(பக்கம். 118)எனக் கூறுகிறார்.
நூலாசிரியர் தலித் மற்றும் அடித்தள மக்களின் சிக்கல்களை வெறும் சாதியக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் சுற்றுப் புறச் சூழல், உலகமயம், புதியபொருளாதார கொள்கை, அரசு மற்றும் அரசாங்கம் சமூகத்தில் செலுத்தும் தாக்கம் என்னும் பன்முக நோக்கில் ஆராய்ந்துள்ளார். வெறும் நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக் காட்டுவதோடு நின்று விடாமல், அதற்கான தீர்வுகளைத் தக்க சான்றுகளுடன் விளக்கியிருப்பது நூலிற்குப் பலமாகும்.
விளிம்புநிலை மக்களுக்கான சிக்கல்கள் இன்று பன்முகம் காட்டி வருகின்றன. ‘இந்துத்துவ பெருமை’ (Hindu pride) என்னும் முழக்கம் இந் நிலத்தில் யார் வாழவேண்டும் யார் வாழாக் கூடாது எனத் தீர்மானிக்கிறது. இம் முழக்கம் மக்களாட்சி மாண்புகளை வலுவிழக்க வைக்கிறது; பெரும்பான்மை வாதத்தை நியாயப்படுத்துகிறது; சமூத்தில் வலிமைக் குன்றியவர்களுக்கு ஒருவித அச்சத்தைக் கற்பிதம் செய்கிறது. இதனை ஜனநாயத்திற்கு அப்பால் நின்று நாம் சீர்செய்ய முடியாது. ஜனநாயக மாண்புக்கு உள்ளடங்கி வருங்காலத் தலைமுறையினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பேணும் மக்கள் நல அரசினை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்னும் இருப்பை நமக்கு இந் நூல் உணர்த்துகிறது.
கட்டுரையாளரை தொடர்புகொள்ள: [email protected]
மிகச்சிறப்பான நூலை மிகச் சரியானேரத்தில் அறிமுக செய்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா