சிறுகதைச் சுருக்கம் 91: பெருமாள் முருகனின் சந்தனச் சோப்பு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

Santhana Soppu Short Story by Perumal Murugan Synopsis 91 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 91: பெருமாள் முருகனின் சந்தனச் சோப்பு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

உத்திகளின் பிரம்மாண்ட தேவையைப் புறக்கணித்து எழும் பெருமாள் முருகனின் எழுத்துக்கள் நலிந்த வாழ்வின்  இடுக்குகளில் தென்படும் அபூர்வம்.  யாரும் புகத் தயங்குகிற பிரதேசங்களைக் கலாபூர்வமாக சித்தரிக்கிறார்.  

சந்தனச் சோப்பு
பெருமாள் முருகன்

அந்தப் பையனை முதலில் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.  உடல் நடுங்கக் கதறிக்கொண்டு “அண்ணா.. அண்ணா..” என்றான்.  ஈரம் நசநசத்த தரையும், வரிசையாய் இருந்த கழிப்பறைகளின் நாற்றமும், கால்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்த சிறுவனுமாய்ச் சேர்ந்து தனது அன்றைய அலுவலில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்த சதி செய்வதாகத் தோன்றியது.  சட்டைப் பையில் கைவிட்டு எத்தனை ரூபாய் என்று தெரியாத ஒரு நோட்டை எடுத்து “இந்தா வெச்சுக்க” என்று திணிக்கப் பார்த்தான்.  

பையன் பரிதாபமாக நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தான்.  “அண்ணா.. நான் உங்க ஊரு அண்ணா..” என்றான்.   விசும்பல் அதிகமாகிக் கண்கள் கசிந்து கொண்டேயிருந்தன.  அவன் அதிர்ந்து போய்ப் பையனைப் பற்றித் தூக்கினான்.  “என்னடா சொன்ன?”

“நா சரசக்கா பையண்ணா என்னயத் தெரீலியா?” பையனின் முகத்தில் சரசக்காவின் ஜாடை இப்போது தெரிந்தது.  “வாடா” என்று பையனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.  மேஜைக்கு அருகே உட்கார்ந்து காசு  வாங்கிக் கொண்டிருந்தவனை நோக்கி “அண்ணன் எங்கூரு” என்றான் பையன்.  அது தகவல் போலில்லாமல்  அனுமதி கேட்பதாயிருந்தது.  

எல்லா நகரங்களின்  பேருந்து நிலையக் கழிப்பறைகளும் அவனுக்கு அறிமுகமானவையே.  கதவுகளே இல்லாதவை, கதவுகளைப் போன்றவை, தட்டி வைத்து மறைக்கப்பட்டவை, கதவுகளின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு ஓட்டை விழுந்தவை என்றெல்லாம் பலமுகம் காட்டும்.   அவற்றின் தோற்றங்கள் அவனுக்குப் பழகிப்போனவை.  எவ்வளவு நீரூற்றினாலும் மூழ்கிப் போகாத மலக்குவியல் கொண்ட பேசினைக் குனிந்து பாராமலே தன்கடனை முடித்துக் கொண்டு வந்துவிடுவான்.  ஆனால் உள்ளே நுழைந்து ஓட்டைத் தாழை ஒருவழியாகச் செருகிக் கதவை மூடி உட்கார்ந்ததும் ‘சார், வாங்க சார் வாங்க’  என்று கூவித் தட்டும் குரல் தரும் எரிச்சல்தான் தீராது.  இந்த உள் உலகத்தில் இந்தப் பையன் எப்படி நுழைந்தான்?  அவனைப் பற்றியிருந்த கை சில்லிட்டு குளிர்ந்தது.  பேருந்து நிலையத்திற்குள் பாதிதூரம் வந்ததும் பையனைத் திரும்பிப் பார்த்தான்.  சோடியம் விளக்கொலியும் விடியலின் லேசான வெளிச்சமும் அவன் முகச் சோர்வைத் துலக்கிக் காட்டின.  

தேநீர் சொல்லிவிட்டுப் பையனை உட்காரவைக்க இடம் தேடினான்.  வட்டமான பிளாஸ்டிக் முட்டான்களைக் கடைக்காரன் வெளியே கொண்டு வந்து  போட்டான்.    பையனுக்கு இப்போது அழுகை நின்று ஆசுவாசம் கூடிவிட்டிருந்தது.  பெரியவர்கள் அணியும் அண்டர்வேர் ஒன்றை அணிந்திருந்தான்.  அதற்குப் பொருத்தமற்ற சட்டை மிகச் சிறியது.  பையனுடைய தலையை லேசாகத் தடவிவிட்டான்.  தன்னுடைய அன்பையும் ஆதரவையும் அப்படித்தான் தெரிவிக்க முடியும் என்று பட்டது.  “அண்ணா.. என்னயக் கூட்டிக்கிட்டுப் போயிருண்ணா..” பையன் குரலில் துயரத்தின்  வலி கூடியிருந்தது.  அவன் மூலமாக விடிவு கிடைத்துவிடும் என்று நம்புவதுபோலவும் இருந்தது.  பையனின் கோரிக்கை அவனுடைய பயணத் திட்டத்தைச் சீர்குலைத்துவிடும்.  கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் பையனை அணுக வேண்டும்.

“எப்படீடா இங்க வந்த?” என்ற சிறு கேள்வியைப் போட்டதும் பையன் விஸ்தாரமாகத் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.  பையனுடைய கதையை நான்கே வரிகளில் சொல்லி முடித்து விடலாம்.  அவனுடைய அப்பன் சம்பாதிக்கும் பொருட்டு கேரளாவுக்குச் சென்றவன்.  ஆறு மாதங்களாகத் தகவல் எதுவும் தரவில்லை.  குழந்தைகளைப் பராமரிக்க சரசக்கா கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது ஒரு இழவுக்காக காரில் வந்தார் பையனுடைய முதலாளி.  சரசக்கா அவருடைய கால்கைகளில் விழுந்து மொதலாளி ‘எம்பையனுக்கு ஏதாச்சும் வேல பார்த்துக் குடுத்து நீங்கதான் குடும்பத்தக் காப்பாத்தோணும்’ என்று மன்றாட அவரும் ரொம்ப யோசித்து ‘செரி என்னோட வரட்டும்’ என்று  பெரியமனது செய்தார்.  பெரிய ஹோட்டல், பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டாண்ட் கழிப்பறைக் குத்தகை எனப்பல தொழில்கள் செய்துவரும் முதலாளி இப்பத்திக்கு ‘இங்க இருடா அப்புறம் ஓட்டலுக்கு வந்தர்லாம்’ என்று சொல்லிக் கழிப்பறைக் கதவுகளைத் தட்ட அனுப்பிவிட்டார். 

மலம் நிறைந்த பேசின்களுக்கு இடைவிடாமல் சிறுவாளியில் நீரள்ளி ஊற்றுகையில் சுவாசிக்க வேண்டியிருக்கும்  நாற்றங்களின் கொடுமை, பார்வையில்படும் பல்வேறுவிதமான மலங்களின் தோற்றம், கழிப்பறைக்குள்ளிருந்து வருவோர் வீசியெறியும் சில்லரைகள் எனப் பலவற்றையும் விவரித்துவிட்டுச் சட்டென கால்கள் இரண்டையும் நீட்டிக் காட்டினான்.  ஈரத்திலேயே நின்று நின்று பாதங்கள் முழுக்க நொசநொசத்துக் கிடந்தன.  வெண்ணிறத்தோல் உப்பி வெடித்த புண்கள்.

“அண்ணா என்னைய எப்பிடியாச்சும் இங்கிருந்து வட்டிக்கிட்டுப் போயிரண்ணா… என்னோட ஒடம்பு முழுக்கப் பீ இருக்க மாதிரி இருக்குதண்ணா.  போட்டுக் குளிக்கச் சோப்புகூட இல்லை… சாப்பிடவே முடியல.  ஓங்கரிச்சிகிட்டு வாந்தியா வருது.  என்னயக் கூட்டிட்டுப் போயி எங்கம்மாகிட்ட உட்ரண்ணா..”  ஓரிரு நிமிடங்களில் இதுபோலப் பல விஷயங்களைச் சொல்லிக் கடைசியில் கூட்டிக்கிட்டு போயிரண்ணா என்று முடிவு கொடுத்தான். 

“மொதலாளிக்கிட்ட வந்து ஓட்டல் வேலக்கி அனுப்புங்கன்னு சொல்லட்டுமா?”

“என்னத்துக்குடா .. இதப் போயிக் கண்டவங்ககிட்டயெல்லாம் சொல்றன்னு அடிப்பாங்கண்ணா.”

“கோயமுத்தூரெல்லாம் போயிட்டு வரும்போது இந்த வழியாத்தான் வருவன்.  அப்பக்கூட்டிக்கிட்டுப் போயிர்றன்.  அதுக்கு முன்னாடி ஊர்க்காரங்க யாரையாச்சும் பாத்தன்னா உங்கொம்மாவுக்குச் சொல்லி உடறன் என்ன..”

“சரீண்ணா” என்றான்.  

“ரண்டு மூனு நாளுக்குப் பொறுத்துக்க, ஏற்பாடு பண்ணீர்றன்.”

“செரீண்ணா, எப்படியோ கூட்டிக்கிட்டுப் போயிரண்ணா.  நேரமாயிருச்சு.  காணம்னு திட்டுவாங்க.  கொஞ்ச நேரம் உட்டுட்டா தண்ணி ஊத்தாம நெறஞ்சு நொரச்சிக்கிட்டுக் கெடக்கும்.”

பையன் நகரத் தொடங்குகையில் நினைவு வந்தவனாய் அழைத்துப் பக்கத்துக் கடையில் சந்தனச் சோப்பு ஒன்றை வாங்கிக் கொடுத்தான்.  பையனுடைய பிரச்சினைக்கு எளிதான உடனடியான தீர்வாகச் சோப்பு அமையும் என்று தோன்றிற்று  அன்றைய அலைச்சலின்போது சில காட்சிகள் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டிருந்தன. கறுத்த முகத்துடன் ஒளிகூடிய சரசக்கா அவளின் அளவான முலைகள்.  அக்காமுறை ஆவுது என்று சொல்லிச் சொல்லி அடங்கிய தன் மனம்.  வாளிவாளியாய்த் தண்ணீர் ஊற்றநுரைத்து நுரைத்து எழும் மலக்குவியல். பையன் கையில் மணக்கும் சந்தனச் சோப்பு.

மூன்று மாதங்களுக்கு மேலிருக்கும்.  திரும்பவும் அவன் அந்த நகரத்திற்கு வரவேண்டியிருந்தது.  பேருந்திலிருந்து இறங்கிக் கழிப்பறை நோக்கிச் செல்லும்போதுதான் பையனின் நினைவு வந்தது.  இதற்கு முன் அந்த நினைவே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.  இடைப்பட்ட காலத்தில் ஓரிருமுறை பொறி தட்டியதுபோல பையனின் முகம் வந்திருக்கிறது.  ஊருக்குப் போகவே வாய்க்கவில்லை.

காசைக் கொடுத்தபின் பையை மேஜையடியில் வைத்துவிட்டுப் பார்த்தான்.  உட்கார்ந்திருந்த ஆள் முகத்தில் தூக்கச்சடைவு நீங்காமல் இருந்தது.  உள்ளேயிருந்து ‘சார், வாங்க சார் வாங்க’ என்ற குரல்.  அது பையனுடையதுபோலவும் இல்லை என்பதாகவும் தோன்றிற்று.  ஒவ்வொரு கழிப்பறை முன்னும் ஒன்றிரண்டு பேர்.  கதவு தட்டுகிறவன் லுங்கி கட்டியிருந்தான்.  பையன் ஓட்டல் வேலைக்குச் சென்றிருப்பான் என்று நினைக்க ஆசுவாசமாயிருந்தது.  ஒரு கதவின் முன் நின்று கொண்டான்.  அதன் முன் ஏற்கனவே ஒருவன் காத்துக் கொண்டிருந்தான்.  தகவு தட்டுகிறவன் ‘சார் வாங்க’ என்று இடைவிடாமல் கத்தினான்.  அவன் நின்றிருந்த கதவுக்கு அருகில் வந்து தட்டியபோது லுங்கிக்காரன் ஆள் இல்லை  பையன்தான் என்பது தெரிந்தது.  சாயம் போன சாதாரண லுஙகி ஒன்று ஆளையே மாற்றியிருந்தது.  பையனைக் கூப்பிடலாமா வேண்டாமா என்று ஒரு கணம் தயக்கம் கொண்டான்.  வந்த சுவடு தெரியாமலே போய்விடுவது நல்லது.

அவன் நின்றிருந்த கழிப்பறைக் கதவு இப்போதைக்குத் திறக்குமெனத் தோன்றவில்லை.  அவனுக்கு முன்னால் ஏற்கனவே ஒருவர் காத்திருந்தார்.   பையனின் சத்தம் உள்ளிருக்கும் எவரையும் அசைத்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒரு கதவு கிரீச்சிடும் சத்தம் காதைக் கிழித்தது.  நடுவறை ஒன்றிலிருந்து வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஒருவர் வெளிப்பட்டார்.   உடனே அந்த அறைக்கு அருகே பையன் ஓடினான்.  வாளி நீரை உள்ளே வீசினான்.  நீர் சுவரில் விழுந்த தரையில் விழுந்ததோ தெரியவில்லை.  அவனிருக்கும் பக்கமாகக் பையன் வந்தான்.  குரல் அனிச்சையாக ‘சார் வாங்க’ என்றும் கை கதவைத் தட்டிக்கொண்டும் வந்தன.

சற்றே எட்டிப் பையன் தோள்மேல் கை வைத்தான்.  “அவசரப்படாதீங்க சார், வந்திருவாங்க” என்று சத்தமாக கத்தியபடி அவனைப் பார்ததான்.  சட்டென அடையாளம் உணர்ந்தான் பையன்.  “அண்ணா நீங்களா? எப்ப வந்தீங்க?” பையனின் ஆச்சரியமும் வரவேற்பு வாசகங்களும் அவனுக்குச் சங்கடத்தை உண்டாக்கின.  முன்னால் நின்று கொண்டிருந்தவர் அவன் பக்கம் திரும்பி லேசாகச் சிரிப்பதாகப் பட்டது.  ஒரு கதவு மெல்லத் திறப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.  அதனருகே ஓடி நின்று கொண்டு “அண்ணா வாங்க அண்ணா வாங்க” என்று கத்தினான்.

யாரோ ஒருவர் “இதுக்குக்கூட ஆள் புடிச்சு வெச்சிருக்கறாங்கப்பா” என்று முனகுவது நன்றாகக் கேட்டது.  

கதவு திறந்து வெளியே வந்தவுடன் பையன் வரவேற்க நின்றான். சிறுவாளியைத் தண்ணீர்த் தொட்டியின்மேல் வைத்துவிட்டு “வாங்கண்ணா” என்று கையைப் பிடித்துக் கொண்டான்.  சுருட்டிய பேன்டை இறக்கிவிடத் தோன்றாமலும் மற்றவர்களைப் பார்க்கக் கூசியும் பையனோடு வெளியே வந்தான்.  பையன் கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தவனிடம் “எங்கூரு அண்ணன் வந்திருக்காரு.  அவரோட போயிட்டு வந்தர்றேன்” என்று சொன்னான்.  “கூட்டம் இருக்கறப்ப எங்கடா போற?” என்ற அதட்டலை வெகு உரிமையோடு எதிர்கொண்டு “வந்தர்றண்ணா” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு வந்தான்.

பையனோடு என்ன பேசுவது என்றே அவனுக்குத் தோன்றவில்லை.  ஊருக்குப் போகாதது, பையனுடைய அம்மாவிடம் தகவல் சொல்லாதது, வாக்குக் கொடுத்தபடி வந்து கூட்டிப் போகாதது எல்லாம் மனதில் ஒடிக்கொண்டிருக்கக் குற்ற உணர்ச்சியோடு அவன் நடந்தான்.

“இவன் பெரிய புடுங்கி.  கூட்டத்தக் கண்டுட்டான்” என்று கல்லாக்காரனைத் திட்டிக் கொண்டே வந்தான்.  பையனை ஏதோ ஒரு கடைக்குக் கூட்டிப் போனான்.  தேநீர் சொன்னான்.

“இந்தூர்ல எத்தனை நாளக்கி இருப்பீங்கண்ணா?” என்று கேட்டான் பையன்.

“இன்னக்கி மட்டுந்தாண்டா, வேலை முடிஞ்சு கௌம்பீருவன்” என்றான்.

பையன் கேட்கும் முன்பே முந்திக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் தயக்கமாக “ஊருக்குப் போவ முடியலடா” என்றான்.   பையன் சிரித்துக் கொண்டே “கஷ்டந்தான்” என்று சொன்னான்.  தேநீர் குடித்து முடித்த பின் “எப்ப வந்தாலும் வாங்கண்ணா, நா இங்கதான் இருப்பன்” என்றான் பையன்.  திடீரென நினைவு வந்தவனாய் லுங்கியைத் தூக்கி உள்ளிருந்த டிராயருக்குள் எங்கோ கைவிட்டுக் கொஞ்சம் கடும் முயற்சி செய்து உருவினான். 

“ஐநூறு ரூவா இருக்குது.  சம்பளமில்லாம நானா சேத்தது.  நீங்க போவீங்களோ அனுப்புவீங்களோ தெரியாது.  எங்கம்மாகிடப்ப போயரோனும்”.

அந்தப் பணத்தை மிகுந்த மரியாதையோடு பெற்றுக் கொண்டான் அவன்.

“ஊருக்கு வர இன்னம் ரண்டு மூனு மாசமாவும்.  அப்பச் சம்பளப் பணத்த வாங்கியாரன்னு சொல்லுங்க”.   அவன் தலையாட்டினான்.

“எங்கம்மாகிட்ட நா கக்கூஸ்லே வேல செய்றன்னு மட்டும் சொல்லீராதண்ணா” அதைச் சொல்லும்போது மட்டும் பையன் குரல் உள்ளொடுங்கி  முகம் வாடியதுபோலிருந்தது.  

“சரீண்ணா நேரமாச்சு போவோனும்,  இங்க வரும்போது கண்டிப்பா என்னயப் பாக்காம போயரக்கூடாது” என்று சொல்லிக் கொண்டே விளக்கு ஒளியில் நடந்தான்.

சற்று தூரம் போய் கொஞ்சம் சத்தமாக “நீங்க வாங்கிக் குடுத்தீங்களே அதே சந்தனச் சோப்பத்தான் போடறேன்.  நல்ல மணமா இருக்குது” என்றான்.  அப்போது பையன் லேசாகச் சிரித்தது போலிருந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.